46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தேசிய நேரத்திற்கு அமைய 12.30 அளவில் அமர்வு ஆரம்பமாகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீப் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது சபையில் கருத்துரைக்கையிலேயே 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது இலங்கையை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற பெண்களை மிகவும் மோசமாக சோதனையிட்ட அதிகாரிகள் :ரெலோ தலைவர் செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இனவாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கைதிகள் தினத்தை முன்னிட்டு தங்களது உறவுகளை சிறைச்சாலைகளில் பார்வையிடச் சென்ற சொந்தங்கள் மிக மோசமான முறையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் வன்மையபான முறையில் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.

அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்கள். சிறைச்சாலையில் உள்ள தேவாதாசன் என்பரை பார்க்கச் சென்ற அவரது மகளை மிக மோசமாக பரிசோதனை செய்த நிலையில் அந்த சகோதரி அதற்கு எதிர்ப்பை காட்டிய போது அவர்கள் சிங்களத்தில் இது எங்களது சிங்கள நாடு எனக் கூறியுள்ளார்கள். மிகவும் இனவாதத்தோடு மோசமாக சிறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளார்கள்.

சிறைச்சாலை தினம் என்பது எல்லோரும் வந்து பார்வையிடும் ஒரு தினம். நவீன முறையில் பல சிறைச்சாலைகளில் பரிசோதனை முறைகள் உள்ளன. அதைவிடுத்து இனதுவசத்தோடு மிகவும் மோசமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய தீர்வினையும், அவர்களது உணர்வுகளையும், சரி செய்வது என்பது கேள்விக் குறிசியாகவே உள்ளது. ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேணட்டும் எனக் கூறுகின்றார். ஆனால் அதற்கு நேருக்கு மாறாக பல விடயங்கள் நடந்து வருகின்றது.

நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் விடுதலை கேள்விக்குறியாகவுள்ளது. அவர்கள் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது ஆதரவு உண்டு. அவர்களது விடுதலைக்காக நாங்கள் முயற்சிப்போம். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.

சிறைகைதிகளின் விடுதலை நடைபெறவில்லை. பார்வையிடச் செல்பவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலங்களை அபகரிக்கும் நிலை தொடர்கிறது. பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசத்திற்காக குரல் கொடுத்தவர்கள் என பலரை ரிஐடி அழைத்து விசாரணை செய்கிறது. வடக்கு, கிழக்கில் 15 பேருக்கு மேல் அழைக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் உரையாற்றியுள்ளோம். எதற்காக இந்த விசாரணை. இது தேவையற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்ய புலம்பெயர் உறவுகளை முதலீடு செய்ய அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வரும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நொண்டி சாட்டுக்களை சொல்லி அதனை பறிக்கப் பார்க்கிறார்கள். இதனை தமிழ் தரப்பு தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

தமிழ் மக்களை நசுக்கிக் கொண்டிருந்தால் இந்த நாடு பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. எனவே எமது மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

மனித உரிமை உயர்ஸ்தானிகரின் உறுதியான அறிக்கைக்கு தமிழ் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடே முக்கிய காரணம்- சுரேந்திரன் ரெலோ

இன்று 12 செப்டம்பர் மாதம் 2022 ஆரம்பித்துள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் இலங்கை மீதான உத்தியோக பூர்வ வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இவ்வறிக்கையில் கூட்டாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த செப்டெம்பர் 2021ல் இருந்து முன்வைத்து வந்த அநேக விடயங்கள் உள்வாங்கப் பட்டிருந்தன.

உதாரணமாக முக்கிய பிரச்சினைகளாக நாங்கள் சுட்டிக் காட்டி வந்த

– அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் உட்பட நிர்வாகங்களை இராணுவ மயப்படுத்தல் குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அரச நிர்வாகம், சட்ட ஒழுங்கு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகமாக ராணுவமே ஈடுபடுவது

– கட்டுமீறிய இராணுவச் செலவீனங்கள், நிதி ஒதுக்கீடுகள்

– குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கும் அதீீத ராணுவப் பிரசன்னத்தை குறைத்தல்

– காணி அபகரிப்பை நிறுத்தி இராணுவ வசமுள்ள காணிகளை விடுவித்தல்

– மொழி மதரீதியான பெரும்பான்மை சிந்தனையோடு செயல் ஆற்றுதல், ஆதிக்க சிந்தனையோடு எழுப்பப்படும் மத சின்னங்கள்

– குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், புனர் வாழ்வழிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை, புலனாய்வுப் பிரிவுகள், இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் பற்றிய
விடயங்களுடன் மேலும் பல விடயங்களை நாம் அறிக்கையிட்டு இருந்ததை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் உள் வாங்கியுள்ளார். மிக விபரமான உறுதியான அறிக்கையாக அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐ நா கவனத்தில் கொண்டுள்ளதை நாங்கள் அவதானிக்க வேண்டும். நாம் எழுதிய கடிதங்கள் ஐநா வினால் கரிசனை கொள்ளப்பட மாட்டாது என்றும் ஒரு சிலருடைய கையெழுத்துக்களை மாத்திரம் ஐநா கரிசனை கொள்ளும் என்றும் சிலர் சொல்லிவந்த கருத்தினை இவ்வறிக்கை பொய்ப்பித்துக் காட்டியுள்ளது.

ஐநா என்பது ஒருசிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல. அது பாதிக்கப்பட்டவர்கள் உடைய குரலுக்கே செவிசாய்க்கும் என்பதை இவ்வறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

இப்போது மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்று அனைத்து தமிழ் தரப்பினரும் ஒருமித்த ஒன்றிணைந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை, மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் கொண்டுவர இருக்கும் பிரேரணையில், உள் வாங்க வைக்கும் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஒருமித்த நிலையில் தொடர்ந்தும் செயல்படுவது வலுச் சேர்க்கும்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் பெரும் செல்வாக்கு செலுத்தும்.

நாம் கோரி நிற்கும் நீதியை பெற்றுக் கொள்ள, கோரிக்கை முன்வைத்த அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் ஒருமித்து செயலாற்றுவது அவசியம்.

Posted in Uncategorized

திருக்கோணேஸ்வரத்துக்கு ஆபத்து? Elanadu Editorial

தட்சண கைலாசம் என்று அழைக்கப்படும் இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உல்லாசத் துறை அபிவிருத்தி என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் தங்களின் ஆக்கிரமிப்பு வேலைத் திட்டங்களை கச்சிதமாக முன்னெடுத்துவரும் தொல்பொருள் திணைக்களமானது தற்போது திருக்கோணேஸ்வரத்தின்மீதும் கண்வைத்துவிட்டது.

இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையோடு தொடர்புகொண்டு ‘ஈழநாடு’ விடயங்களை ஆராய்ந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவருகின்றது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது, ‘மொட்டு’ அணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அட்மிரல் சரத்வீரசேகரவின் ஆவேச உரை தொடர்பான செய்தியொன்று கண்ணில்பட்டது.

அதாவது, இது சிங்கள- பௌத்த நாடு.

இங்கு தூபிகளை பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெறவேண்டியதில்லை.
அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறானதோர் அச்சுறுத்தும் தொனியில்தான் திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரியும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையிடம் தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய திட்டங்களை அமுல்படுத்த உங்களின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை.
ஒரு தகவலுக்காவே இதனை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

ஒரு காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகரமென்று அழைக்கப்பட்ட திருகோணமலையோ இன்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன், கடந்த இரண்டு வருடங்களாகத் திருகோணமலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் சிங்கள தரப்புக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எவ்வித தடையுமின்றி எடுக்கக் கூடிய நிலையிலிருக்கின்றனர்.

இதற்கப்பால், ஆளுநரின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆலய பரிபாலன சபை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, திருகோணமலை அழகான நகரம்.

ஆனால் இன்றோ, இலங்கையிலேயே மிகவும் மோசமான அழகற்ற இடமாக திருகோணமலையே காணப்படுகின்றது என்றவாறு ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் திட்டத்தை ஆளுநர் ஆசீர்வதிக்கின்றார் என்பது தெளிவு.
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மிகவும் உறுதியாக இந்த விடயத்தை எதிர்க்கின்றது.
அதாவது, அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் ஆலயத்துக்கு சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் எவ்வித திட்டங்களையும் அனுமதிக்க முடியாது. இது ஒரு புனித இந்து ஆலயம்.

உல்லாசப்பயணம் என்னும் பெயரில் இதன் புனித தன்மையை சீரழிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாதென்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் அரசியல் பலமில்லாத நிலையில், ஆலய பரிபாலன சபை அச்சமடைந்திருக்கின்றது.
இது வெறுமனே திருகோணமலை இந்து மக்களின் பிரச்னை மட்டுமல்ல.

உலகம் தழுவிவாழும் அனைத்து இந்து மக்களின் பிரச்னையாகும்.

எனவே, இந்த விடயத்தில் அனைவரும் உடனடி கவனத்தை செலுத்து வேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு வரலாற்று இந்து ஆலயம் திட்டமிட்டு சிதைக்கப்படுவதற்கு நாம் அனைவருமே உடந்தையாக இருக்கின்றோம் என்னும் வரலாற்று பழியே மிஞ்சும்.

வழமையாக தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல் என்னும் அடிப்படையில் தலையீடுகளை மேற்கொண்டுவந்தவர்கள், இப்போது, நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உல்லாசத்துறை அபிவிருத்தி என்னும் பெயரில் திருக்கோணேஸ்வர ஆலய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

Posted in Uncategorized

தேர்தலை ஒத்திவைக்க தயாராகிறது அரசாங்கம்

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தலை ஒத்திவைப்பதற்கு தாம் ஆதரவாக இல்லை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் இறைமைக்கு பாரிய சேதம் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் 20ஆம் திகதிக்குப் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐ.நா பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறும் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடுதல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான நிபுணர் பொறிமுறையை தயாரிக்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கருத்து!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நாட்டில் உள்ள 14,000 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதன் நன்மை சென்றடையும்““ என்று குறிப்பிட்டார்.

22ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கிறோம். நிர்வாகத்திற்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்நோக்குகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஐந்து இளைஞர் பிரதிநிதிகள் இவற்றுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தலைவர் மூலம் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு. உலகில் முதன் முறையாக இவ்வாறானதொரு நடைமுறை முன்னெடுக்கப்பட இருக்கிறது. இளைஞர் பாராளுமன்றத்தை சட்டபூர்வமாக்க இருக்கிறோம். பொருளாதாரக் குழுக்களை அதிகரிக்க இருக்கிறோம்.

அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, வங்கி மற்றும் நிதி பற்றிய குழு என பல குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களுக்கு, நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம், மேலும் பெண்கள் சமத்துவம் தொடர்பான சட்மூலமொன்றை தயாரிக்குமாறு பெண்கள் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை எதிர்க்காது. இதற்கு தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். விவாகரத்து சட்டங்களை இலகுபடுத்தி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய வாய்ப்பளிக்கப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் தமிழ் தரப்புடன் பேசினோம். தடுப்புக் காவலில் இருந்த காலம், அவர்கள் அனைவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்பவற்றை கருத்திற்கு கொண்டு, அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் சில எம்.பிகளின் கொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்கள் தவிர ஏனையவர்கள் தொடர்பில் இதன் கீழ் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வு பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன். குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, இந்த முழு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இங்கு வருமாறு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால் மறைகரம் இருந்ததா? அப்படியானால், அந்த மறை கரம் யாருடையது? சிலர் அமெரிக்கா என்கிறார்கள். சிலர் இந்தியா என்கிறார்கள். இன்னும் சிலர் சீனா என்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தான் என்கிறார்கள். அதனால் மறைகரம் எதுவென்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மேலும் விடுவிக்கக் கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீர்வு காண துரிதப்படுத்தப்படும். புனரமைப்புத் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு துரிதப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், வடக்கு பாரிய பொருளாதார மையமாக மாற்றப்படும். அபிவிருத்திகள் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விட எமக்கு அப்பகுதிகளில் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, உகந்த தேர்தல் முறை தொடர்பாக மக்களிடம் விருப்பத்தை கோருவேன். அரசியல் கட்சிகளால் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராம மட்டத்தில் மக்கள் சபை அமைப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மக்கள் சபைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் எதிர்பார்க்கிறோம் 2048 நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி 2023இல் இருந்து 25 வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியாமானது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஜனாதிபதி பைடன் செலுத்து வரும் அக்கறைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று வருகை தந்தததற்கு சமந்தாவுக்கும் நன்றிதெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடமும் இலங்கை வருமாறு அழைப்பை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமபந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர மற்றும் திறந்த இந்து- பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுத்தினார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி – சமந்தா பவர் இடையே சந்திப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் இன்று(11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று(10) முற்பகல் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தை 2023 ஜூலை இறுதிக்குள் மூட நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கான நோர்வேயின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா, கொசோவோவில் உள்ள நோர்வே தூதரகங்கள் மற்றும் ஹூஸ்டன் அமெரிக்காவிலுள்ள துணைத் தூதரகங்களும் 2023 இல் நோர்வே வெளியுறவு சேவையின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக இரண்டு நாள் விஜயமாக சமந்தா பவர் இலங்கை வருகை

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.இதேவேளை ஒன்றிணைந்ததும், சுபீட்சமானதும், பாதுகாப்பானதுமான சுதந்திர இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் பூரண ஆதரவையும் அவர் இதன்போது உறுதிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்தா பவர், கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.