IMF ஒப்பந்தம் கைசாத்திடப்பவில்லை – சுசில்

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே எட்டியுள்ளதாகவும்   ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”அரசாங்க அதிகாரிகள் அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர்”

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர்.
உண்மையான நிர்க்கதியான மக்களுக்கு, இந்திய அரசு, தமிழக அரசு, உலக நாடுகள், ஐநா அமைப்புகள் கொடையாக வழங்கும் நிவாரணங்கள் முறையாக கிடைப்பதில்லை. எனவே நிவாரண நன்கொடைகள் நேரடியாக நிர்க்கதியான மக்களை சென்று அடைவதை உறுதிப்படுத்த அவற்றை சிவில் அமைப்புகள் மூலமாக சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். அவை கண்காணிக்கப்பட வேண்டும். நிவாரணம் பெறுகின்றவர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முன்வைத்த இடைக்கால பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறை சாத்தியம் அற்றவை. கணிசமான யோசனைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. துண்டு விழும் தொகையை ஒருபோதும் நிதியமைச்சர் ஜனாதிபதியால் சரி செய்ய முடியாது. ஏற்கனவே அரச கஜானா காலி. ஆகவே எங்கே இருந்து நிதி வரப்போகிறது என்று கேட்க விரும்புகிறேன்.

இதனால்தான் நான் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, எனது அக்கறை, அவதானம் ஆகியன ஆக, பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத்திரம் இருக்கிறது என கூறினேன். அதிலும், பின்தங்கிய மக்கள் யார் என்பதை அறிவதில் அதிக கண்காணிப்பு வேண்டும் என கூறினேன்.

ஏற்கனவே, சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கின்ற பெயர்கள் தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. அங்கே நிவாரணம் பெற தகைமையற்ற வசதியானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அங்கே நிவாரணம் பெற வேண்டிய நிர்க்கதியான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர் பெயர்களை அங்கே திணித்துள்ளார்கள். எனது தொகுதி கொழும்பில் வாழும் “ஹர்பன் புவர்” என்ற நகர பாமரர்களின் பெயர்கள் முறையாக அங்கே இல்லை. குறிப்பாக சொந்த வீட்டில் வாழவில்லை என்ற காரணத்தால் பலரது பெயர்கள் இடம்பெறவில்லை. இது எப்படி? சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகள் மண்ணை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டுமா? அடையாள அட்டையை பார்த்து கஷ்டப்படும் எல்லோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசியல் காரணமாகவும், தமிழர்கள் என்ற காரணத்தாலும், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தபடுவதை நான் இலங்கைக்கு உதவும் உலக சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். இன்னமும் சொல்வேன்.

அடுத்தது, பெருந்தோட்டங்களில் வாழும் பாமர மக்கள். உழைக்கும் மக்கள். இன்று கோதுமை, பாண், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால் விழி பிதுங்கி போயிருக்கும் பிரிவினர். நாட்சம்பள தொகையை 25 ஆல் பெருக்கி மாதம் இவ்வளவு சம்பளம் எனக்கூறி அவர்களை சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில், பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் சேர்ப்பதில்லை. இந்த மாத சம்பளம், காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. தேவையான அளவு நாட்கள் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மாத சம்பளமும் கிடைப்பதில்லை.

இங்கேயும் தமிழர் என்ற இனவாத நோக்கில், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து வந்த பொருட்களை இலங்கையில் துன்பத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் கொடுங்கள் என நான்தான் முதன் முதலில் சொன்னேன். பாராளுமன்றத்திலும் சொன்னேன். அதையிட்டு தமிழக முதல்வரும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

ஆனால், அரசாங்கம் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்த பெருந்தொகை பொருட்களை உணவு ஆணையாளரிடம் கொடுத்து விநியோகம் செய்தது. இதில் நமது மக்களின் பிரதிநிதிகள் தொடர்பு படவில்லை. ஆகவே இந்த பொருட்களை அரசு அதிகாரிகள் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விநியோகம் செய்தார்கள்.

இவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். நம் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு என உலகம் தரும் நன்கொடைகள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்பது எனது குரல். அது யாருக்கு கேட்க வேண்டுமோ அவர்களுக்கு கேட்கும்படி நான் செய்வேன்.

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார். குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார். அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும்.அங்கு அகழ்வுகளின்போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அன்று விடுதலைப்புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது. இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

போராட்ட செயற்பாட்டாளர் நடிகை தமிதாவுக்கு விளக்க மறியல்!

கைது செய்யப்பட்டுள்ள போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (07) பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமிதா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

நல்லூர் மந்திரிமனையினை புனரமைக்கும் செயற்றிட்டம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகிறது!

தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கின்றது.

இச் செயற்றிட்டம் தொடர்பில் கலாநிதி. நிலான் குரேக்கும் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. மந்திரிமனையினை புனர்நிர்மானம் செய்து பாதுகாப்பது தொடர்பிலான முழு செயற்றிட்ட வரைபடத்தையும் தயாரித்துக் கொண்டு பின்னர் நவ்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் அதன் பழமை மாறாமல் அதன் தனித்துவத்தை பேணிக் கொண்டடு பகுதி பகுதியாக புனர்நிர்மானம் செய்வதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் முதலில் மந்திரிமனைக்கு மேல் ஆறு அடி உயரத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றினை அமைத்து மந்திரி மனையினைப் பாதுகாத்துக் கொண்டு மந்திரிமனையின் உள்ளகப் பணிகளை பகுதி பகுதியாக ஆரம்பிப்பது என்றும் அதில் முதலாவதாக மந்திரிமனையின் கூரை வேலைகள் மற்றும் மந்திரிமனையின் முகப்பு ஆகியவற்றினை அதற்கே உரிய தனித்துவம் மாறாமல் செயற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

உரிய பராமரிப்பின்றி காணப்படும் தமிழரின் முக்கிய மரவுரிமைச் சின்னமாகிய நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனை இம்முறை மழைகாலத்தில் இடிந்து விழக்கூடிய அபாயநிலை தொடர்பிலும் அதனைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்பது தொடர்பிலும் யாழ்ப்பாண மரவுரிமைச் மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மாவுரிமைச் மையத்தின் உறுப்பினரும் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியதை அடுத்து கிடைக்கப்பெற்ற நிதிகளில் இருந்து இச் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு யாழ்ப்பாண மரவுரிமை மையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தமிழர் தயாகப் பகுதிகளில் காணப்படும் மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் முன்வரவேண்டும் என்பதுடன் யாரிடமாவது மந்திரிமனை தொடர்பான பழைய புகைப்படங்கள் ஆவணங்கள் மற்றும் வீடியோ இருப்பின் jaffnaheritagecentre@gmail. com எனும் இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோருகின்றோம்.

மந்திரிமனையினை பாதுகாப்பது தொடர்பிலான ஆரப்ப மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரித்தல் போன்ற ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில்; புனர்நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்படவும் உள்ளது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு ஐ.நா ஆணையாளர் வலியுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் காணப்படும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் இராணுவம் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் அங்கு நிலவும் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் (Michelle Bachelet) வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாக்கவும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் புதிய அரசாங்கம் தேசிய கருத்தாடலுக்கு செல்ல வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், புதிய பிரவேசத்திற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிறுவனங்களையும் பாதுகாப்பு பிரிவையும் மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தராதரம் இன்றி நாட்டின் அனைவரையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளதாகவும் அதில் இருந்து மீள்வதற்கு ஊழலை ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடுமையான பாதுகாப்பு சட்டங்களில் தங்கியுள்ளமை மற்றும் அறவழி போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாடுகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்யவும் பொதுமக்களின் போராட்டங்களை அடக்கவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் வகையில் சட்டங்களை வகுக்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டங்களை வகுக்கும் செயற்பாடு உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுயாதீனமாகவும் செயற்றிறனாகவும் செயற்பட அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை, இம்முறை அமர்வுடன் நிறைவிற்கு வருகின்றது.

பிரித்தானியா தலைமையிலான ஒருங்கிணைந்த நாடுகள் இந்த பிரேரணையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்ததுடன் அந்த தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

மாணவி குமாரசாமி கிருசாந்திக்கு நடந்தது என்ன?

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் செம்மணி பகுதியில் இன்று (07) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் நினைவு கூறப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா மாணவியின் சகோதரனும், யாழ். பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் இல்லை!

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தாய்மார்களும், உறவுகளும் சர்வதேச விசாரணை மட்டுமே எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று புதன்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என கோரி நாங்கள் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சர்வதேசத்திடம் கோரி வருகிறோம். இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லாத நிலையில் காணாமல், ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

ஆனால் 13 வருடங்களாகியும் எமது கோரிக்கை நிறைவேறவில்லை. எமது கோரிக்கை நிறைவேறும் நிலையில் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்கின்ற அமைச்சர்களும், அரசு சார்பாக செல்கின்றவர்களும் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்நாட்டு விசாரணை வேண்டும் என்று கூறுகின்றனர்.

எதிர்வரும் 51 வது ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்நாட்டு விசாரணை போதும் என வலியுறுத்த உள்ளார். எனினும் உள்நாட்டு விசாரணையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எத்தனையோ ஆணைக்குழுக்கள் இங்கே வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்களின் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நாங்கள் சுமார் 2 ஆயிரம் நாட்களுக்கு மேல் வீதியில் நின்று போராடி வருகிறோம். நீதிக்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

நிதிக்காக போராடவில்லை. எமது உறவுகள் குறித்து உண்மையும், நீதியும் எமக்கு தேவை. தற்போதைய வெளிவிவகார அமைச்சராக உள்ள அலி சப்ரி, நீதி அமைச்சராக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிதிக்காக எங்களுடன் கலந்துரையாடினார்.

அவர் நீதிக்காக ஒருபோதும் எங்களுடன் கலந்துரையாட வில்லை. இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதும் என்று கூற அவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் தான் நிற்கின்றோம். எங்களுக்கு சர்வதேச விசாரணை மடடுமே வேண்டும் என்று.

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தாய்மார்களும், உறவுகளும் சர்வதேச விசாரணை மட்டுமே எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர்.

இலங்கையின் கடன்கள் ஸ்திரமான நிலையில் இல்லை – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்

இலங்கையின் கடன் நிலைவரம் ஸ்திரமான தன்மையில் இல்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் நிதியியல் இடைவெளி இல்லாமல் போயிருப்பதாகவும் சுமார் 25 சதவீதமான சந்தைகளின் கடன் நிலைவரம் ஸ்திரமான நிலையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கை குறித்து சிந்தித்துப் பார்ப்பதுடன் பெரும்பாலான நாடுகள் அதனையொத்த நிலையிலேயே இருக்கின்றது. கானா போன்று மிகவும் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற நாடுகள்கூட ஏனைய வெளியகத்தாக்கங்களால் சந்தைகளை நாடுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

அதேவேளை வறிய நாடுகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை கடன்களை மீளச்செலுத்தமுடியாத அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வாரம் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் இது இலங்கை முன்நோக்கிப் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர் மேற்குறிப்பிட்டவாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Paris Club அங்கத்தவர்கள் அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அமைய, நிதிச்சான்று வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த நடவடிக்கைகளுடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்காவின் ஏனைய நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.