பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதெடர்பாக அமைச்சர் மேலும் தெnரிவிக்கையில், குறித்த சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அமைதியாக நடந்து கொள்வதற்கும் மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனினும் அண்மைய வன்முறை சம்பவத்திற்கு மத்தியில் திட்டமிட்ட இலக்குடனான செயற்பாட்டினால் 72 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளை இழக்க நேரிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இந்த கொடூரமான சட்டத்தின் ஊடாக கைது செய்யும் நபர்களை நீண்ட  காலம் தடுத்து  வைப்பதற்கான அதிகாரம், நிறைவேற்றதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுத்து  வைக்கும் உத்தரவுகள், அடிப்படை சட்டங்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமைந்தாலும், பொதுவான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதை போன்றல்லாது இந்த கைதுகள் முறையான நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படாது என  சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற கண்காணிப்பு இன்றி ஒருவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பது சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பாதுகாப்பு தரங்களுக்கு முரணானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதன் மூலம் கைதி துன்புறுத்தப்படுவதற்கும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயப்படுத்தக்கூடிய பயங்கரவாத போக்கு காணப்படும், ஆதாரங்களுடன் கூடிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சு

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடலில் மற்றொரு சுற்றுக்கலந்துரையாடலை நடத்துவதற்கும், எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசையிகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர்

டுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டைக் காப்பாற்றிய தலைவர் கோட்டாபய நாட்டை விட்டு துரத்தப்பட்டு நாடு விட்டு நாடு செல்கிறார்.கடுமையான பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு தலைவருக்கு நன்றி செலுத்தாத இந்த தேசம் மிகவும் நன்றியற்றது.

கருணை காட்டுவதில் நமக்கு முதல் பாடம் கற்பித்தவர் புத்தர். புத்தராக வருவதற்கு அடைக்கலம் தந்த போதியில் ஒரு வாரம் பூஜை செய்து நன்றியறிதலின் மதிப்பை உலகுக்கு எடுத்துரைத்தார். ஆனால் நம் மக்கள் நன்றி மறந்துள்ளனர்.

வயல்களை உழுவதற்குப் பயன்படும் மண்வெட்டியைக் கூடக் கும்பிடும் எமது மக்களுக்கு இந்த நாட்டை விடுவித்த தலைவன் மீது அவ்வளவாக மரியாதை இருந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கோட்டாபயராஜபக்சவை  நாட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர்.

கோட்டாபய சொல்வது சரி என்று நான் நிரூபிக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் முக்கிய ஆட்சியாளராக, அவருக்கு பல குறைபாடுகள் உள்ளன.

ஆனால் முப்பது வருடங்களாக நீடித்து வந்த புலிகளுடனான  கொடூரமான பயங்கரவாத யுத்தத்தில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு அவர் முன்முயற்சி எடுத்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரை நாட்டை விட்டு விரட்டுவது கேவலமான செயல்.

கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து நமது நாட்டை விடுவித்த ஒரு தலைவரைப் பாராட்ட முடியாத அளவுக்கு நமது தேசம் நன்றி கெட்டது.

அரசியல் சித்தாந்தங்கள் ஒருபுறம் இருக்க, இதுபோன்ற நிகழ்வுகளால் நான் ஏமாற்றம் அடைகிறேன். கலாசாரம், இனம், மதம் ஆகியவற்றை மதிக்காதவர்களால்தான் இவை நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை!

ஜுலை 9 ஆம் திகதி நடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் சந்தேகநபர்கள் இன்று  நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சம்பவத்தின் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றில் இன்று அறிவித்தனர்.

வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் நீதிக்கு முரணான நடைமுறை கையாளப்படுகின்றது – பா.உ. கலையரசன் கண்டனம்

தமிழ் முஸ்லீம் உறவு ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான நடைமுறைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். ஏனெனில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முரணான நடைமுறையைக் கையாள்வது கசப்பான விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் இணையத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு அம்பறை மாவட்டத்தில் 19  பிரதேச செயலகங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்திலே தொடர்ச்சியாகத் தமிழர்களின் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் அதிகார நிருவாக நடைமுறையை முடக்குவதுமான நடவடிக்கைகளை முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனூடாக இன்று அம்பாறை மாவவட்டத்திலே பல தமிழக் கிராமங்கள் அழிவுற்ற கிராமங்களாக இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திராய்க்கேணி, அட்டப்பளம், நிந்தவூர், ஆளங்குளம், மீனோடைக்கட்டு, பொத்துவில்லில் பல பகுதிகள் உட்பட பல பிரதேசங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது பழம்பெரும் கிராமங்கள் பலவற்றின் பெயர்கiளைக் கூட நீக்குகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை மையமாக வைத்துப் பல நகர்வுகளை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்முனை வடக்குப் பிரதேசத்தின் காணிப்பதிவு அலுவலகம் நீக்கப்பட்டது. இது தொடர்பில் தற்போதை நாட்டின் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு நாங்கள் இதனைக் கொண்டு சென்றோம். அவர் பிரதமராக இருக்கும் போது நாங்கள் நேரடியாகச் சந்தித்து இவ்விடயத்தைக் கூறியபோது தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இற்றைவரைக்கும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு 33  வருடங்களாக இயங்கி வந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முடக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக காணிப் பதிவு அலுவலகம் மாற்றப்பட்டது அதன் அடுத்தபடியாக தற்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கப் பிரதேச செயலகத்துடன் 20 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்ட விடயம் தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் நீக்கப்பட்டு 19 பிரதேச செயலகங்களாகக் காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்திலே தமிழர்களை முற்றாகத் துடைத்தெறிகின்ற செயற்பாடுகளில் முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களும், அரசியலல்வாதிகளும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்ற உண்மை மேலும் நிரூபணமாகின்றது.

குறிப்பாகத் தமிழ் முஸ்லீம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் கூறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான வார்த்தைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி எந்தவொரு நல்ல நோக்கத்தையும் தமிழர்கள் மீது இதுவரை காட்டவில்லை.

கல்முனை வடக்கை மையப்படுத்தி முஸ்லீம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்டுகின்ற செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே பாரியதொரு பிரிவினையையே ஏற்படுத்தும். எந்த அரசாங்கம் அமைந்தாலும் ஒரு கொள்கையற்ற ரீதியில் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களை இல்லாதொழிக்கின்ற வரலாறே இருந்து கொண்டிருக்கின்றது.

1990களிலே அரச படைகளுடன் சேர்ந்து எமது மக்களை அழித்த வரலாறுகள் உண்டு. இவ்வாறான கடந்த கால வடுக்களை எல்லாம் மறந்து எதிர்காலத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழர்கள் இருந்தாலும், சில முஸ்லீம் அரசில்வாதிகளிடம் அவ்வாறான சிந்தனைகள் இல்லை. மத ரீதியாகவும், இன ரீதியாகவும் கையாளுகின்ற தன்மையே அவர்களிடம் இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகவே கல்முனையில் நடக்கின்ற விடயங்கள் இருக்கின்றன.

இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பதும், முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறையைக் கையாள்வதும் ஒரு வேடிக்கையானதும், கசப்பானதுமான விடயமாகும். பொது நிருவாகத்திற்குப் பொறுப்பாகப் பிரதமர் இருக்கின்ற போதும், காணிப்பதிவகம் பிரதமர் வசமிருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நீதிக்கு முறனாக இடம்பெறுவது வேடிக்கையானது.

அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்ற இந்தக் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் நிருவாக நடைமுறைகளைக் குழப்புகின்ற வேலைகள் கட்டம் கட்டமாக கையூட்டல்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது உரிய அமைச்சருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்படுகின்றதா? என்கின்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. ஏனெனில் ஒரு அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை இன்னுமொரு அமைச்சரவைத் தீர்மானத்தினூடகவே வலுவிழக்கச் செய்ய முடியும். ஆனால் கல்முனையைப் பொருத்தவரையில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லை. அவர்கள் நினைத்தபடி கல்முனை வடக்குப் பிரதேசத்தைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளும் மேற்கொள்வது மனவேதனையானதும், கண்டிக்கப்படுகின்றதுமான விடயம். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் இந்த இரண்டு இனங்களும் பாதுகாக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். எதிர்வரும் 29ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன்போது உரிய அமைச்சர், திணைக்களம் என்பவற்றுடன் கலந்துரையாடி இதற்குரிய விரைவு நடவடிக்கைளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் உறவுகளின் உதவியை பெறுவதற்கு இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Ranil Wickremesinghe

புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைப்பதுடன் தனது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றில் நேற்று(23) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும், அதேபோன்று புலம்பெயர் தனிநபர்கள் சிலரின் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நம்பகத்தன்மை தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் பணியாற்றும் சில கட்சிகளும் அமைப்புகளும் இதனை வரவேற்றுள்ள அதேவேளை, பலர் இந்த அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

ரணில் மற்றும் மைத்திரி அரசாட்சியின் போது, இந்தத் தடைகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் மீண்டும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க, ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற காலங்களில், இலங்கை அரசாங்கம் இவ்வாறான சில அறிவித்தல்களை வெளியிடுவதும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது.

இலங்கை இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.

அவ்வாறான நிதி நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதும் அதேசமயம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றைத் திருப்திப்படுத்துவதும் இலங்கைக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றது.

ஆகவே, புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவே தோற்றம் அளிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலில் பின்வாங்கியிருக்கின்றது.

தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதும், இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்து வைத்ததன் பின்பாக, அந்த ஒப்பந்தத்தின் பல சரத்துக்களை ஒருதலைப்பட்சமாகவே விலக்கிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், 13ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்களையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். ஒருசில அமைப்புக்கள் மீது நீக்கப்பட்ட தடையை, வரப்போகின்ற புதிய அரசாங்கம் விலக்கிக்கொள்ளமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்த நாட்டிலிருந்து மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்குக் காரணமாக இருந்த தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை. அரசாங்கம் தனக்குத் தேவையான நேரங்களில் சில தற்காலிக ஏற்பாடுகளினூடாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சித்து வருகின்றது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு
இந்த விடயங்களை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் புரிந்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும். மிக நீண்டகாலமாக இருக்கக் கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை முன்வைப்பதுடன், இந்த நாட்டில் சம பங்கைக் கொண்டுள்ள தமிழ் மக்களை சமத்துவமாக நடத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், கொடுக்கப்பட்ட உரிமைகளையே மீளப் பறித்தெடுப்பதும் என்ற போக்கு தொடர்ச்சியாகவே நிலவி வருகின்றது.

ஆகவே, ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கின்ற போக்குக்கும், அரசியல் சாசன விடயங்களை மேவிச் சென்று அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுக்கின்ற போக்குக்கும் தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்குமாக இருந்தால், அந்த ஒத்துழைப்பு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஊடாக நடக்க முடியுமே தவிர, கொழும்பை நம்பி அந்த ஒத்துழைப்புகள் வரமாட்டாது என்பதையும் இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புதல்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களும், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் இடம்பெற வேண்டும்.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்ற அரசாங்கம் மேற்கண்ட விடயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆனால், வெளி உலகத்துக்கு ஒரு பேச்சும், உள்ளார்ந்த ரீதியாக அதற்கு எதிரான போக்கையும் கடைப்பிடிப்பதையே எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுவது போன்ற எத்தகைய செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற போக்கிலேயே செயற்படுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் தாமதமின்றி கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

என்று ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி கூறியதாக ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தின் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

Posted in Uncategorized

பிரித்தானிய சுற்றுலாப் பயணியை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய சுற்றுலாப் பயணியை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கெய்லி பிரேசரின் இல்லத்திற்கு சென்ற குடிவரவு அதிகாரிகள் குழுவொன்ரூ அவரது பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு  அறிவுறுத்தியது . குடிவரவு அதிகாரிகள் அவரது இல்லத்தில் விசாரணை நடத்துவது வீடியோவாக எடுக்கப்பட்டு பல தளங்களில் வைரலாகி, காலி முகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில்,குறித்த சுற்றுலாப்பயணி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை  நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தமக்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும்  காவல்துறையினரையும்  கோரியுள்ளது.