அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி போட்ட உத்தரவு!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு செலவு செய்தால் அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையின் விதிமுறைகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது!

சீனாவில் இருந்து புறப்பட்ட சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது.

குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி அமைத்த குழு!

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுவார்கள்.

இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், நியாயமான காரணங்களுடன் இந்தக் குழுவிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பித்து முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன் உடன்பாடுகளின்றி, அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவ்வப்போது விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கைகள் மற்றும் சில முறைசாரா நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார். அதற்கான அடிப்படையை அரசு உருவாக்க வேண்டும் – மனோ கணேசன்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.  ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல்,இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால்,இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை.  சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று  பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட  இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது  தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

Posted in Uncategorized

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நேபாளம், இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! ரெலோ சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு புதியவை அல்ல அத்துடன் இந்த தடை நீக்கம் நிரந்தரமானதும் அல்ல இதனை அத்தனை தமிழர் புலம்பெயர் அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் நிரந்தர தடை நீக்கம் கிடைக்கும் அதுவரை மாறி மாறி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக தடை போடுவார்கள் தடை நீக்குவார்கள்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் சர்வதேச அரங்கில் தங்களை நம்ப வைப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ளுதல் அதன் அடிப்படையில் தான் உள் நாட்டிற்குள் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக இருக்கும் போது அவற்றுள் கரிசனை செலுத்தாது புலம்பெயர் அமைப்புக்களை தடை நீக்க முன் வந்துள்ளது.

தடை நீக்கத்தின் பின்னர் உள் நாட்டில் சிங்கள ஆட்சியாளர் பலரின் இனவாத கோரமான மன வெளிப்பாடுகள் வெளிக்கிம்பி உள்ளன அவை இனக் குரோத சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் பேரப்பலத்தை உறுதி செய்ய முடியும் இல்லாவிட்டால் இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பேரப்பலத்தை அழித்து விடுவார்கள் கடந்ந நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்ததை நல்ல பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை மறந்தால் சர்வதேச நீதிப் பொறிமுறை கால நீடிப்பு என்ற கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு நீர்த்துப் போகும் அபாயத்தையே உருவாக்கும்.

பொருளாதார மீட்சியால் மட்டும் இலங்கையை நிரந்தர அமைதியான நாடாக மாற்றிவிட முடியாது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை ராஐதந்திரமாக கொண்டு காய்நகர்த்த ஒற்றுமையாக முன்னெடுக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தயாராக வேண்டும்.

Posted in Uncategorized

இலங்கை – இந்தியா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது – ஜனாதிபதி ரணில்

இலங்கை மற்றும் இந்தியா என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒரே குணாம்சங்களைக் கொண்ட நாடுகளாகும். எனவே இவ்விரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி , அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுவது பொதுவான குணாம்சங்களாகும். இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை.

வரலாறு இந்தியாவையும் இலங்கையையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடான இலங்கை, உலக வல்லரசாக முன்னேறி வருகின்ற இந்தியாவின் வகிபாகத்தை அவதானித்துக் கொண்டிருக்கிறது.

எனவே அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் திறன் அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன. இந்தியா, இராமனை மாவீரனாகக் கருதும் நிலையில் , இலங்கை இராமன், இராவணன் இருவரையும் மாவீரர்களாகக் கருதுகிறது என்றார்.

கடந்த 2018 ஜனவரி 9 ஆம் திகதி, புதுடில்லியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து இரண்டு டோனியர் ரக கடல்சார் கண்காணிப்பு விமானங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பின்னர், இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது. புதிய விமானம் தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

இந்த முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில், புதிய டோனியர் 228 கடல்சார் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு மற்றொரு புதிய விமானத்தை இந்தியா வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கியஸ்தர்கள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் ரோரி முங்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய இயக்குனர் டேவிட் வில்லியம் மெக்லாக்லான் ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்

ரோரி முங்கோவன் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை வரவுள்ளார். David William McLachlan நாளை மறுதினம் செவ்வாய்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரை ஐ.நா அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக ஜயநாத் கொலம்பகே

ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் ஒருவரை நியமிக்க உயர் பதவிகள் பற்றிய குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக அட்மிரல் (பேராசிரியர்)ஜயநாத் கொலம்பகேவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமாரவின் நியமனத்திற்கும், வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.சி.எம் ஹேரத்தின் நியமனத்திற்கும்,நிதி,பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளராக எம்.சிறிவர்தனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளராக எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த,தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சின் செயலாளராக ஆர்.பி.ஏ. விமலவீர ஆகியோரின் நியமினத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்

சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

நாளை(16) முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.

Posted in Uncategorized