பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் விஜிந்தன் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்கப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர்,21ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

“நாளை முல்லைத்தீவு“ எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன், அவரின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் முகநூல் பதிவுகளை அனுப்பி மொட்டை கடிதம் அனுப்பியிருந்தனர்,முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனூடாக ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாடுகளை முடக்க எடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடித்து அவரின் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முயற்சியால் ஏழு நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரெலோ அமைப்பின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் திருவுருவச்சிலை நாளை திறந்து வைக்கப்படும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனைத்து போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும்  அறியத்தருவது எதிர்வரும் 23.06.2024  (ஞாயிற்றுக்கிழமை)   அன்று மாலை 4.00 மணியளவில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் அடலேறு சிறி சபாரத்தினம்  அவர்களின் திருவுருவச்சிலை வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்க இருப்பதனால் அனைவரும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

இன மத பேதங்களை கடந்து இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

“ஈழப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது” -சிறி சபாரத்தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வவுனியா மாவட்ட நிருவாகம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன்

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் இன்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார்.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு ஏற்கனவே இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் திடீரென அத்திகதியில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த மாதம் 02ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.

இதனால் குழப்பமடைந்த யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாணம் வரையுள்ள பாதயாத்திரிகர்களும் பொது அமைப்புக்களும் ரெலோ அமைப்பினர் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அடைக்கலம் செல்வநாதன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார்.
இதன் அடிப்படையில் உரிய திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதி கதவு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் உரிய அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் கௌரவ ஆளுநர் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர் மூலம் வெளியிடப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை – சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களின் நலன்களை விற்க வேண்டாமென சுமந்திரனிடம் சி.வி. விக்கினேஸ்வரன் எம்.பி கோரிக்கை

எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறிவருவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஏன் அதைச் சிலர் எதிர்க்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வினாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 2011 அளவில் இருந்து கூறி வந்தவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள். அக்கோரிக்கை அப்பொழுது தமிழ் மக்களால் ஆழமாகச் சிந்திக்கப்படவில்லை. நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றிருந்தாலும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதியாக தமிழ் மக்களால் அரங்கேற்றப்படவில்லை.

ஆனால் 2009இன் பின்னரான வடகிழக்கு அரசியற் களம், மத்திய அரசாங்கம் வடகிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்டுவந்த விதம், நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட விதம், முதலமைச்சராக நான் பெற்றுக்கொண்ட அனுபவம், இவையாவும் என்னைச் சிந்திக்க வைத்தன.

உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அவரின் அழைப்பின் பேரில் சுமந்திரன் அவர்களும் முதலமைச்சராக அப்போதிருந்த நானும் சந்தித்தோம். எமது மாகாணசபை சார்பான நடைமுறைக் கோரிக்கைகள் யாவை என்று அவர் கேட்டிருந்தார். நாம் அவற்றை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்தோம்.

சுமார் பத்து பன்னிரண்டு விடயங்களைக் கோரியிருந்தோம். எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்து எமக்கு அவற்றை நாம் கோரியவாறு நல்குவதாக அவரும் அவரின் செயலாளரான லலித்வீரதுங்கவிடம் பொறுப்பெடுத்தனர். நாமும் மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டோம். ஆனால் நாம் கோரிய எதுவும் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு அப்போதிருந்த சிங்கள இராணுவ ஆளுநரை மாற்றி ஒரு தமிழ்ப் பேசும் சிவில் சமூக பிரமுகரை அந்த இடத்திற்கு நியமிக்கும்படி கோரியிருந்தோம்.

அப்போதிருந்தவரின் காலம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் எமது கோரிக்கை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். நாம் ஜூலை வரை காத்திருந்தோம். திரும்பவும் அதே இராணுவ அலுவலரை ஜனாதிபதி மஹிந்த ஆளுநராக நியமித்தார். இவ்வாறு எமது கோரிக்கைகளுக்கு நேர்மாறாகவே மத்திய அரசாங்கம் நடந்து வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன்.

இந்நாட்டில் ஒரு இனவழியாட்சி நடைபெற்று வருவதை நான் அவதானித்தேன்.

இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும், மற்றும் வெளிக் கொண்டுவரும் ஒரு களமாக தமிழ் பொது வேட்பாளர் நிலையை நாம் மாற்றலாம். முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது மக்கள் தீர்ப்பை சர்வதேச வழி நடத்தல் ஊடாகப்பெற எத்தனிக்கின்றார்கள் என்ற கருத்தை ஊரறிய நாடறிய உலகறிய பறை சாற்ற தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். வடகிழக்கு தமிழ் மக்களின் மனோநிலை என்ன என்பதை வெளிக் கொண்டு வர மக்கள் தீர்ப்பானது உதவும். அதனை சர்வதேசம் நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளிக் கொண்டுவர தமிழ் பொது வேட்பாளர் உதவுவார்.

அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை எம்சார்பில் திசை மாற்றலாம். சிங்கள வேட்பாளர்கள் எவ்வெந்தக் கருத்துக்களை மக்கள் முன்வைத்தாலும் தமிழ் மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள், குறிக்கோள்கள், எதிர்பார்ப்புக்கள் இவை தான் என்ற கொள்கை விளக்க அறிவிப்பை உலகறியச் செய்யலாம். எமது கொள்கை விளக்க உரைகள் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஒளி, ஒலி மூலமாக எதிரொலிக்கும். வடகிழக்கினுள் சிறைபட்டிருக்கும் எமது சிந்தனைகள் உலகெங்கிலும் சிதறடித்துப் பறக்க தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார்.

தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை. போட்டி முடிவு அவருக்கு முக்கியமல்ல. போட்டியில் கலந்து கொண்டு மக்களை ஒன்றிணைப்பதே அவரின் கடமையாகும். இன்னாரை ஒரு பொது வேட்பாளராகத் தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற உண்மையே சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எது எதனைத் தருவார்கள் என்ற அவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வர உதவும். அவற்றை வைத்துப் பேரம்பேச நாம் முனையக்கூடாது.

அவர்களின் இரட்டை வேடம் வெளிக்கொண்டுவரப்படலாம். ஆனால் பொதுவேட்பாளரின் பங்கு யாவர்க்கும் எமது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்புக்களையும் இந்தத் தேர்தலைத் தளமாக வைத்துத் தெரியப்படுத்துதலேயாகும்.

எமக்கு பிரிவினையோ சமஷ்டி கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டி கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி.

உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வட கிழக்கு மக்களின் மக்கள் தீர்ப்பைப் பெற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டியை கோரிக்கையை வலுவற்றதாக்கும்?

நாம் சமஷ்டியைக் கோரி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை அகில உலகிற்கும் எடுத்துரைக்க உள்ளோம். “சமஷ்டியை தா” என்று தமிழ் பொது வேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன்.

அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார்.

ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் , செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அன்னியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டாவது பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் அதன் பின் மக்களுக்குப் பேச இடமில்லை என்று நினைக்கின்றார்.

சுமந்திர அக்கருத்துப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் தோன்றித்தனமாய் நடந்து கொள்ளலாம் என்பதேயாகும்.

இன்று மக்களும் தமிழ் அரசியல்த் தலைவர்களும் சேர்ந்தே பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஒத்திசைக்க எண்ணி தமது மக்களைப் புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவதாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன் கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த நடைபெற்றது.

ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கொவிட் பெருந்தொற்று காராணமாக இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன், முன்கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது. அதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக ஒன்பது பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநர் அவர்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செயற்பாட்டிற்கான முழுமையான திட்ட முன்மொழிவை சமர்பிக்குமாறு இதன்போது ஆளுநர் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை இராணுவத்தின் யுத்தக்குற்றங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது – சரத் வீரசேகர

இந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு வருடங்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் அவரது தலைமையில் கூடியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு யுத்தக் குற்றம் இழைத்ததாக சாட்சி கிடைத்திருக்கும் இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்வதற்கு ஏற்கனவே சில நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வெளியகப் பொறிமுறை வெளிவிவகார அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ள போதும், இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமையாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம் அன்றி தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தமாக அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வெளியகப் பொறிமுறைக்கு வாய்ப்புக் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த நடைமுறையானது இராணுவ வீரர்களின் சுயமரியாதைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், இவர்கள் மீது ஏனைய நாடுகள் போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படும் நாடுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எத்திருப்பதாவும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தர்ஷன வீரசேகர இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்,

வலுவான தேசிய பொறிமுறையொன்று காணப்பட்டாலே வெளியகப் பொறிமுறையினால் சேகரிக்கப்படும் சாட்சிகளைத் தோற்கடிக்க முடியும் என்றும், இது தொடர்பில் எல்.எல்.ஆர்.சி அறிக்கை மற்றும் பரணகம அறிக்கையில் உள்ள விடயங்களை உள்ளடக்கியதாக தேசிய தகவல் கோப்புத் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்நாட்டுக்கு எதிராக செயற்படும் வெளியகப் பொறிமுறையை மேலும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமையும் என்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேக தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் அன்றையதினம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்களுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் இந்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதம் என்ற பதம் சரியாக அர்த்தப்படுத்தப்படவில்லையென்றும் பல பயிற்சிகளின் விளைவாக பயங்கரவாதியொன்று உருவாவதால், இந்தப் பயிற்சிகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் ஆரம்பிக்கும்போது போது பயங்கரவாதியைப் பிடிப்பதற்கு எந்த முறையும் இல்லை என்பது தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் போது ஏன் பிரச்சினைகள் எழுகின்றன? சஜித் கேள்வி

“எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

“எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம்” – என்றும் வலியுறுத்திய அவர், “கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும” – என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன.?

நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது.

ஆகவே, சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

அதே போன்றே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர்.

அவ்வாறே முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறை – தேசிய மக்கள் சக்தி

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடையாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும். நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர். எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழ முடியும்.” – என்றார்.