பசளையை இறக்குமதி செய்தால் கஞ்சியையாவது மக்கள் குடித்து வாழ்வார்கள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இனிவரும் காலங்களில் பட்டினி சாவுகள் வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது.

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது.

அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம்.

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுப்பதன் ஊடாக நெல் உற்பத்தி பெருகும். அதேபோல் தோட்டங்களை செய்கின்ற போது மரக்கறிகளை செய்கின்ற வாய்ப்புக்களும் ஏற்படும்.

அரசாங்கம் பசளையை விவசாயிகளுக்கு இறக்கி கொடுப்பதன் ஊடாக தான் பட்டினியில் இருந்து மக்களை மீட்க முடியும்.

இந்திய பாரத பிரதமர் இவ் விடயத்திலே கவனம் செலுத்தி உடனடியாக பசளையை தந்துதவுமாறு கேட்டிருக்கின்றேன். பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் – ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமான நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார்.

எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம், உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் பங்கு பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அதிரடி உத்தரவு – இலங்கையை விட்டு வெளியேறிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள், விலாதிமிர் புட்டின் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று ( 5) பிற்பகல் 12.50 மணிக்கு நாட்டிலிருந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணித்தனர்.

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ரஷ்யா திரும்புவதற்காக இன்று ( 5) கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகளில் பலர், விமான நிலைய உள் நுழையும் பகுதியில் வைத்து ஊடகங்களிடம் பேசினர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யர்களை உடனடியாக நாடு திரும்புமாறு தமது அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன்படியே சுற்றுலாவை இடை நடுவே முடித்துக்கொண்டு நாடு திரும்ப, இறுதி விமானத்துக்கு விமான நிலையத்துக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய எலோனா மெசன்கோவா எனும் சுற்றுலா பயணி கருத்து தெரிவிக்கையில்,

‘ 14 நாட்கள் சுற்றுலா பயணமாக நாம் இலங்கை வந்தோம். எனினும் 7 நாட்களில் நாம் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் ஹிக்கடுவையில் இருந்தோம்.

அப்போது தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் எம்மை நாடு திரும்புமாறு எமது அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது.

முன்னதாக எமக்கு எமது அரசாங்கம், இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்ல முடியும் என கூறி எம்மை ஊக்குவித்தது. அரசாங்கமே எம்மை இவ்வாறு இங்கு சுற்றுலா பயணத்துக்காக அனுப்பினர்.

எரிபொருள், மின்சார பிரச்சினைகளிடையேயும் நாம் மிக விருப்பத்துடன் சுற்றுலா பயணத்தை அனுபவித்தோம். எனினும் திடீரென ஏற்பட்ட இந் நிலைமையை எம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமும் கவலையடைகிறோம்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளால், இலங்கைக்கு அந்திய செலாவணி மெருமளவு கிடைத்தது. எனினும் இப்போது இந்த நடவடிக்கையால் அது சாத்தியமற்று போயுள்ளது.

இந்த விமான தடை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நினைக்கின்றேன். இவ்வாறான நிலையில் தான் சுற்றுலா பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்புமாறு அரசாங்கம் எமக்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தால் எதிர் காலத்தில் கூட ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் வர பின்வாங்கலாம்.

ரஷ்யாவின் விமானங்கள் எந்த காரணத்துக்காகவும் கைப்பற்றப்பட மாட்டாது அல்லது தடை செய்யப்படமாட்டாது என இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எழுத்து மூல உடன்படிக்கை இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்காக, ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை அசெளகரியப்படுத்தியது புதுமையளிக்கிறது.

எதிர்கால சுற்றுலாத் துறையையே சவாலுக்கு உட்படுத்தி இலங்கை தனது அந்திய செலாவணி மார்க்கத்தையே மூடியுள்ளமை வியப்பாக உள்ளது.

ரஷ்யாவுக்கு செல்லும் இறுதி விமானத்தில் நாமும் செல்வதற்காகவே வந்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

ரஷ்ய மொழியில் ஊடகங்களிடம் பேசிய அவரின் கருத்துக்களை, எலேனா மெசன்கோவா உள்ளிட்ட சுற்றுலா குழுவின் வழிகாட்டியா செயற்பட்ட முதித்த மெவன் குமார சிங்கள மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.

முன்னதாக ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்ட நிலையில் அதில் பயணிக்க தயாராக இருந்த 191 பேர் அருகே உள்ள ஹோட்டல்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், ரஷ்யாவிலிருந்து நேற்று (4) வெறுமையாக வந்த எஸ்.யூ. 289 எனும் விமானம் அந்த 191 பேர் உள்ளிட்ட 275 சுற்றுலா பயணிகளை தனது நாட்டுகே அழைத்து சென்றது.

இந் நிலையில் இன்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகலை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின் முதல் பிரதிவாதியான ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு கடந்த 2 ஆம் திகதி தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார்

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தது.

இந் நிலையிலேயே ரஷ்யா இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதுவரையும் அந் நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தது. இதற்கு ஒரு படி மேலாகவே, இலங்கையிலிருந்து சுற்றுலா பயணிகளையும் ரஷ்யா உடனடியாக நாட்டுக்கு அழைத்துக்கொண்டுள்ளது.

Posted in Uncategorized

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நாளை உரும்பிராயில் 10 மணிக்கு அஞ்சலி

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் அவைத்தீர்மானத்தின் பிரகாரம், பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைக்கவுள்ளதுடன் அகவணக்கம், மலரஞ்சலி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஏற்பாடாக பொன் சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

மே 9 முதலான தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் கடிதம்

மே 9 ஆம் திகதி மற்றும் அதன் பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கசார்பற்றதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்குமாறு சட்ட மா அதிபரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸாரின் விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கசார்பற்றதாகவும் எவ்வித தலையீடுகள் இன்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பக்கசார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதால், மக்களின் நம்பிக்கை பாரிய அளவில் பாதிக்கப்படும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது

  •  குற்றச்செயல் இடம்பெற்றபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்படாது, ஏனைய இடங்களில் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டமை
  •  அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமைய கைதுகள் இடம்பெறுகின்றமை
  •  2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் கைதுகள்
  • அடையாள அணிவகுப்பிற்கு முன்னர் சந்தேகநபர்களை நிழற்படம் எடுத்தல், அந்த நிழற்படங்களில் உள்ளவர்கள் சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்படுவதாக சந்தேகம்

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பயன்பாட்டுக்கு உட்படாத நிலையில் காணப்படும் நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட தோட்டக் கம்பனிகளிடம் 9 ஆயிரம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு பயப்பாடு இன்றி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

23 கம்பனிகளுக்குச் சொந்தமான குறித்த இடங்களில் ஏற்ற பயிர்களை இனங்கண்டு அவற்றை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று (3) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

’டொலர்களை சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன’ – எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதின் ஊடாக, அதிக டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

“வகுப்பறைகளுக்கான கணினி தொழில்நுட்ப பலகைகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் ஒரு நிகழ்வு அவிஸ்ஸாவலையில் நேற்று (3) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டார்.

டொலர்களை சம்பாதிக்க பல்வேறு சிறந்த வழிகள் உள்ளன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று அரசாங்க நிதி பின்புலம் வெற்றாக உள்ளதாகவும்,இன்று வக்குரோத்தான அரசும், வக்குரோத்தான நாடுமே உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சர்வதேச தரப்புடன் மேற்கொண்டுள்ள  பேச்சுவார்த்தைகளில் பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியேனும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் அமைச்சரவைக்கு அறிவுரை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும், நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நெருக்கடியை தவிர்க்க பல்வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டியுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் போதும் இலங்கையின் சார்பில் முன்வைக்கவுள்ள பரந்துபட்ட வேலைத்திட்டம் குறித்தும், பொது இணக்கப்பாடுகள் குறித்தும் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும், தொழிநுட்ப  பேச்சுவார்த்தையை  அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்ட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்களில் அறிய முடிகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குறைந்தபட்சம் 3 தொடக்கம் 4  மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியாக வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளாராம். எனினும் தொழிநுட்ப பேச்சுவார்த்தைகள் முடிவியும் வரையில் இது குறித்து உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில் உணவுப்பஞ்சம் ஒன்றினை நாடு எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயத்தை உடனடியாக மீட்டெடுக்க தேவையான உர மானியங்களை உலக வங்கியிடமும், இந்தியாவிடமும் கோரியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். குறிப்பாக பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரத்தினை வழங்க  உலக வங்கி இணங்கியுள்ளதாகவும், சிறுபோகத்திற்கு தேவையான உரம் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

ரஸ்ய விமானம் தடுத்துவைப்பு: இலங்கைத் துாதுவரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்த ரஸ்யா

ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தினை இலங்கை தடுத்து வைத்துள்ளமை குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் திகதி ரஸ்யாவிற்கான ஏரோஃப்ளோட் விமானத்தை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்க வேண்டும் என நீதி மன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து இலங்கை துாதுவரிடம் வெளிவிவகார அமைச்சு தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானத்தின் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ஏரோஃப்ளோட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மொஸ்கோவில் இருந்து வந்த குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.