”அமைச்சர்கள் பதவி விலகியது போலியான நாடகம்” – அரசியலமைப்பை தெளிவூட்டினார் சாலிய பீரிஸ்

அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வசமே கையளிக்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.

எனினும், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்தமையானது, முறையற்ற செயற்பாடு என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியிடமே பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டுமே தவிர, பிரதமரிடம் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், அரசாங்கத்திற்குள் தற்போது காணப்படுகின்ற நிலைமையை தெளிவூட்டுவது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பொறுப்பு எனவும் சாலிய பீரஸ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, ​​இவ்வாறான நிச்சயமற்ற நிலையை சில நாட்களுக்கு ஒத்திவைப்பது பொருத்தமான நடவடிக்கையல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் நேற்றைய தினம் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்திருந்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக்குழுவைக் கூட்டுமாறு ரெலோ கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்த்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதற்கான கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனுக்கு கடிதம் மூலம் இன்றைய தினம் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நீண்ட காலமாக நடைபெறவில்லை என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் முடிந்தளவு விரைவாக நாளை 05.04.2022 இக்கூட்டத்தைக் கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஒழுங்கு செய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சுமந்திரனைக் காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா? – ரெலோ

கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரச்சார செயலாளர் சொக்கன் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய இனத்தின் தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியான சர்வதேச உள்ளக பொறிமுறையை வென்றெடுப்பதற்கும் தமிழ் தேசிய மக்களின் பேராதரவுடன் கட்டி வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதன் உருவாக்கம் பற்றி தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அது தான் உண்மையும் கூட. தாங்கள் வவுனியாவில் ஆற்றிய உரையில் “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி அளிக்கும்”என்று கூறினீர்கள்.  அந்த அதிரடியான நிகழ்ச்சித் திட்டத்தை ரெலோ மீது சுமத்தினால் உங்கள் கட்சிக்குள் இருந்து ஏற்படும் பூகம்பத்திற்கு என்ன முடிவு?

சுமத்திரன் ஐயா நீங்கள் புத்திசாலிதான். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ் ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முதன்முதல் தாய் இயக்கம்.  தமிழ் ஈழ விடுதலை இயக்கம். தங்கத்துரை, குட்டிமணி, தம்பி பிரபாகரன் கூட இவ்வமைப்பின் வழித்தோன்றலே. தேசிய தளத்திலேயே அன்றுதொட்டு இன்றுவரை ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் பெருமைக்குரிய உரிமை கொண்டாடக் கூடிய ஒரு இயக்கம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
தமிழ் தேசிய விடுதலை மீது தீர்க்கதரிசன மிக்க செயற்பாடுகள் பட்டறிவு கொண்டு நெறிப்படுத்தி நிற்கும். தமிழ் தேசிய சிந்தனை உங்கள் சந்தையில் விலை போகாததால் நீங்கள் சிந்திய சீறிய ரெலோவின் மகிழ்ச்சியான செய்தி உங்களை தரம் உயர்த்தும் என்று, நப்பாசையை தூக்கி எறிந்து தமிழ் மக்கள் மத்தியில் உங்கள் மீது உள்ள வெறுப்புணர்ச்சியை மெருகூட்டும்.  உங்களின் அநாகரிகமான வெளிபாடுகளுக்கு நாகரீகமாக பதில் அளிப்பது சிறந்தது.

எமது அமைப்பு கட்டுக்கோப்புடன் இருந்து முடிவுகளை எடுப்பதால் தலை இருக்க வால் ஆடுவதில்லை. கொள்கை ரீதியில் தாய் இயக்கமான ரெலோ தமிழ் இனத்தின் விடுதலை இயக்கமான ரெலோ தமிழ் தேசிய அரசியலில் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையையும் காட்டி தப்பிக்கும் விலாங்கு அல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பிக்க அந்த ஆரம்பப் புள்ளியை உருவாக்க ஆயுதப் போராட்ட அமைப்புக்களை ஒருங்கிணைக்க நாம் பட்ட துன்பங்களையும் அங்கு ஏற்பட்ட வேதனை வலிகளை அந்நேரம் அப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தான் தெரியும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நோக்கமும் தியாகமும் பணியும் பணிவும் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு என்றும் தொடரும்.

சுமந்திரனால் வெளியிடப்பட்ட வெட்கக்கேடான வார்த்தைகளை வேதனையுடன் பரிசீலிக்க வேண்டியது தமிழ் இனத்தின் எதிர்கால விடிவுக்கு மட்டுமே.

விடுதலை நோக்கம் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பாக உலகில் சித்தரிக்கப்பட்ட புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு பேராதரவுடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஜனநாயகக் குரல் தமிழ் தேசிய கூட்டமைப்பு,  ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் ஆணிவேராக மாறியது.

ஐயா சுமந்திரன் அவர்களே 2010ஆம் ஆண்டு நீங்களும் வேதனையும் வலியும் இன்றி தேசிய பட்டியல் மூலம் அந்தக் கப்பலில் பயணிக்க தொடங்கி விட்டீர்கள். இது உங்களுக்கு கிடைத்த முகவரி. கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா?

இந்தக் கப்பலில் நீங்கள் ஏறியபின் தமிழ் தேசிய ஒற்றுமை தனம் எவ்வளவு தூரம் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்வீர்களா?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பம் முதல் இன்றுவரை அகரம் போல் விளங்கும் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆரம்ப கல் என்பதை மறந்து விடாதீர்கள்.
ரெலோ தனது பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லும்.

இறுதியாக சிங்களப் பெரும்பான்மை மூலம்தான் தனது வெற்றி உறுதியானது என்றும் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை மட்டுமே உண்டு என்றும் அது தீர்க்க முடியும் என கூறிய ஜனாதிபதி 2/3 பெரும்பான்மை பலத்துடன் மூன்று வருடங்கள் இருந்தபோதும் தமிழ் தரப்புடன் பேச விரும்பவில்லை.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழ் தேசிய இனத்தின் குரல் இலங்கை பாராளுமன்றத்தில் உலகளாவிய ரீதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் முன் நகர்வுகள் கிடப்பில் கிடப்பதை எண்ணிக் கூடப் பார்க்காத ஜனாதிபதியினை ஆதரித்த பெரும்பான்மை மக்களே தற்சமயம் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அவரின் அரசியல் பலமும் பலவீனமடைந்து வரும் நிலையில் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலிலிருந்து சர்வதேசத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் ஈர்க்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச அழைத்த தமிழ் தரப்பு களால் முன்வைக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தியத்தை இல்லாதொழிப்பதும் குறிக்கோளாக வைத்த அரசின் செயற்பாட்டை அரசின் வெளிப்பாடற்ற அழைப்பையும் தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதியை சந்திப்பது சாலச் சிறந்ததல்ல என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலியுறுத்தியமை தங்களின் வவுனியா கூட்டத்தின் வெளிபாடாகும்.

தலைவர் பிரபாகரனுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அஸ்திவாரம் இட்ட தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்றும் தயாராக இருக்கின்றது. அதற்கான வழிகளை உங்கள் பேச்சும் செயல்பாடும் தெளிவுபடுத்தும் மகிழ்ச்சியான செய்திக்கு காத்து நிற்கின்றேன்.

பிரதமர் மஹிந்தவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Share

சுதந்திர சதுக்கத்திற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயற்சித்த போதிலும் பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடிய அவர்கள் இன்று காலை 11 மணியளவில் நெலும் பொக்குண திரையரங்கிற்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

எனினும், அவர்கள் சுதந்திர சதுக்கத்தை அடைந்ததும், அதற்கு முன் இருந்த பாதை முற்றாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்தனர்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (3) முற்பகல் 11 மணியளவில் மஹரகம நகரில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, லக்ஷ்மன் நிபுணராசாச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

பேராதெனிய பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!

பேராதெனிய பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கண்டிக்கு பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று(03) மாலை 3.30 மணிக்கு நீக்கப்படும் – தொழில்நுட்ப அமைச்சு

தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 3.30 முதல் மணி முதல் இவ்வாறு வழமைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு அறிவிப்பு – மக்களின் அவலநிலை!

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில்,நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

Posted in Uncategorized

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” எனத் தெரிவித்து கோட்டாபய அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்ட சர்வதேசத்திலுள்ள சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கையர்களாலும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலையை கண்டித்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ன் மற்றும் பேர்த் போன்ற நகரங்களில் கூடிய சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.