சிங்கள மக்களின் கோபம் அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன்.

அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பேசுவது என்பதே ஓர் அரசியல்தான்.
இந்த அடிப்படையில் பார்த்தால் நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை அதன் அரசியல் பரிமாணத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்கு நிரந்தரத் தீர்வை அரசியல் ரீதியாகத்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த அடிப்படையில்தான்,அரசாங்கம் தேர்தல் காலங்களிலும், தேர்தல் வெற்றிகளுக்கு பின்னரும் நாட்டின் மக்களுக்கு வாக்குறுதி அளித்த எல்லாவற்ரிலிருந்தும் பின்வாங்கி வருகிறது.இந்த தலைகீழ் மாற்றங்களின் தொடக்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தமைதான். அரசுத்தலைவர் கோட்டாபய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு முன்னும் பின்னும் தன்னை மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் பணியாத ஒருவராகவே காட்டிக் கொண்டார். இந்தியாவுடன் செய்துகொண்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கான உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கினார். தன்னை தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஒருவர் என்றும் சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்றும் கூறிக் கொண்டார்.

ஆனால் வைரஸ் அவரைப் பணிய வைத்திருக்கிறது. வைரசின் விளைவாக மேலும் சரிந்த பொருளாதாரம் அவரைப் பணிய வைத்திருக்கிறது. இந்தப் பணிவின் தொடக்கம் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமிப்பது என்று முடிவெடுத்ததுதான். அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை நிராகரித்த ஓர் அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவரை நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் மாற்றத்தின் முதல் சமிக்கையைக் காட்டியது. அதிலிருந்து தொடங்கி பசில் ராஜபக்ச வெளியுறவு அணுகுமுறைகளில் உத்தி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்.ஜி எல் பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.மஹிந்த சமரசிங்க அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதமாக்கப்பட்டது. இவ்வாறாக வெளியுறவு அணுகுமுறை.மாற்றத்தை பிரதிபலிக்கும் நியமனங்கள் வேகமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அதோடு ஐநாவை நோக்கி அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியது. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது ,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தொகுதிக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு வடிவிலான ஒரு பொறி முறைக்கு தயாராக காணப்பட்டமை, ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை அவற்றின் நலிந்த நிலையிலும் தொடர்ந்து பேணியமை. அக்கட்டமைப்புகளுக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை, யாப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவை நியமித்தன்மை,இந்தியாவுடன் புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை போன்ற பல விடயங்களிலும் அரசாங்கம் வெளியுறவு உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக கிடைத்த வெளியாதரவுகளின் தொகுக்கப்பட்ட வெற்றிதான் வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். சில அரச பிரமுகர்கள் கூறுவது போல படையினரின் கையில் வைரசுக்கு எதிரான போர் கொடுக்கப்பட்டதால் கிடைத்த வெற்றி அது அல்ல. மாறாக வெளியுறவுப் பரப் ப்பில் அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வெளிநாடுகள் வழங்கிய உதவிகளின் திரட்டப்பட்ட விளைவே வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறாக வைரஸை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்திய அரசாங்கம் வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளிலிருந்து தப்ப முடியவில்லை. வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பசில் ராஜபக்ச வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தார்.எனினும் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இலங்கைத் தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.பேரரசுகள் கை கொடுத்தால் அதை இலகுவாக நிமிர்த்தலாம். ஆனாலும் கடந்த சில மாதங்களாக பேரரசுகள் செய்த பெரும் உதவிகளால் இலங்கைத் தீவுக்கு மூச்சுவிடும் அவகாசம்தான் கிடைத்திருக்கிறதே தவிர,பொருளாதாரம் நிமிரவில்லை.இதனால் பசில் ராஜபக்சவே அதிகம் விமர்சிக்கப்படுகிறார். அவரை பதவிக்கு கொண்டு வந்த பொழுது அவர் பல தலைகளைக் கொண்ட மந்திரவாதி போல கட்டப்பட்டார். அவர் ஒரு மந்திரவாதி அல்ல என்று எனது கட்டுரைகளில் ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன். எந்தப் பெரிய மந்திரவாதி வந்தாலும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் நிமிர்த்த முடியாது.பஸில் மட்டுமல்ல போதிசத்துவரே நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாலும் பொருளாதார விடயங்களில் மந்திர மாயங்களைச் செய்ய முடியாது.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் யாவும் பசில் ராஜபக்ச என்ற தனிமனிதனின் தோல்விகளாக ஒரு பகுதி சிங்கள விமர்சகர்களால் காட்டப்படுகின்றன. ஆனால் இது பசில் ராஜபக்சவின் அல்லது அவரது சகோதரர்களின் தனிப்பட்ட தோல்வியல்ல.அவை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அரசியல் தோல்விகளிலிருந்து தொடங்குகின்றன. அதைவிட ஆழமான பொருளில் சொன்னால் தோல்விகள் யாவும் இனவாதத்திலிருந்து தொடங்குகின்றன.
இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.ஆனால் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் முடிவுகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடங்கும்.அதனால்தான் அரசாங்கம் கூட்டமைப்போடு பேச முன் வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்கிறது.

அது காலத்தால் பிந்திய ஞானம். தவிர அரசாங்கத்தால் தன்னுடைய முன்னைய பிரகடனங்கள் இருந்து முற்றிலுமாக பின்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை கொடுக்க முடியாது. அதுபோலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதிலும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காக புலம் பெயர்ந்தார்களோ அக்காரணம் நீக்கப்படாத ஓர் அரசியல் சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்யத் துணிய மாட்டார்கள்.

ஆனால்,சிங்கள மக்கள் தமது பொறுமையை இழந்து விட்டார்கள். எந்த ஒரு இரும்பு மனிதர் தமக்குத் தேவை என்று கூறி அமோகமான வெற்றியை கொடுத்து அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ, அவரை வீட்டுக்கு போ என்று கேட்டு அவருடைய தனிப்பட்ட வாசஸ்தலத்தை முற்றுகையிடும் ஒரு நிலை. இலங்கைத்தீவின் இதற்கு முன்னிருந்த எந்த ஒரு ஜனாதிபதிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்ததில்லை. இதற்கு முன்னிருந்த எந்த ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாசஸ்தலம் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இவ்வாறு முற்றுகையிடப்பட்டதுமில்லை.

வெல்லக்கடினமான ஒரு யுத்தத்தை வென்று கொடுத்ததற்காக தாம் தலையில் வைத்துக் கொண்டாடிய ஒரு வெற்றி வீரரை “வீட்டுக்கு போ” என்று சிங்கள மக்கள் கேட்கும் ஒரு நிலைமை. ஆனால் அவ்வளவு இலகுவாக அவர் வீட்டுக்குப் போகக் கூடியவர் அல்ல. அவரை அவ்வாறு வீட்டுக்கு அனுப்ப இப்போது எந்த எதிர்க்கட்சியாலும் முடியாது.
மனோ கணேசனின் வார்த்தைகளில் சொன்னால் அரசாங்கம் எப்பொழுதோ தோற்றுவிட்டது. ஆனால் அந்தத் தோல்வியை தம்முடையதாக சுவீகரித்துக் கொள்ள எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவு..மூன்று இனத்தவர்களின் வாக்குகளை கவர தேவையான ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.அதுதான் ராஜபக்சக்களின் பலம்.

இது ஆட்சி மாற்றத்தை விரும்பும் வெளித் தரப்புகளுக்கும் விளங்குகிறது. ராஜபக்சக்களை இலகுவாக வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பது அவர்களுக்குத் தெரிகிறது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ஆளை மாற்றி அதன் மூலம் நமக்கு அனுகூலமான ஓர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று சில நாடுகள் யோசிப்பதாக தகவல்கள் உண்டு. அந்த ஆள் பசில் ராஜபக்ச என்றுதான் பொதுவாக வெளிநாடுகள் நம்புவதாகவும் தகவல் உண்டு.

கடந்த வாரம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பின்னணியில் பசில்தான் இருந்தார்.அவருடைய உழைப்பின் விளைவாகத்தான் அந்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன.அந்த உடன்படிக்கை களின்மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அச்சங்களை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணித்திருக்கிறது. இந்தியா இனப்பிரச்சினையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கையாள முடியாதபடிக்கு பசில் ராஜபக்ச இந்தியாவை திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஐநாவின் விடையத்திலும் அமெரிக்காவின் விடையத்திலும் அவர் அவ்வாறுதான் காய்களை நகர்த்தி வருகிறார். இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக வெளியுறவுப் பரப்பில் நாட்டை நோக்கி வந்த அழுத்தங்களை அவர் பெருமளவுக்கு குறைத்திருக்கிறார். ஆனால் நாட்டுக்குள் நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிகளை அடைந்துவிட்டன.
பசில் ராஜபக்சே முன்னெடுக்கும் ஆகிய அணுகுமுறைகளில் பொருளாதார விளைவுகளை நாடு அனுபவிப்பதற்கு காலம் எடுக்கும்.பொருளாதார மாற்றங்கள் மாயாஜாலக் கதைகளில் வருவது போல திடீரென்று நடக்கக் கூடியவை அல்ல. பொருளாதாரத்துக்கு அதற்கான விதிகள் உண்டு. அரசியல் பொருளாதாரம் அதன்படிதான் மாற்றங்களை அடையும். மந்திரத்தால் மாங்காய் பிடுங்க முடியாது. ஆனால் அதற்கிடையில் சிங்கள மக்களை சாந்தப்படுத்த ராஜபக்சக்களிடம் எதுவும் இல்லை. யுத்த வெற்றிதான் அவர்களுடைய பலம். அதுதான் அவர்களுடைய அரசியல் முதலீடு. யுத்த வெற்றி எனப்படுவது 2009க்குப் பிந்திய சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அப்டேட் செய்யப்பட்ட ஒரு வடிவம்தான்.

பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து தேர்தல் வெற்றிக்காக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் உள்நாட்டு மூலகங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை அதன் முதற்கட்ட உச்சத்துக்குக் கொண்டு போனார். ராஜபக்ச குடும்பம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அதன் இரண்டாம்கட்ட உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது அந்த வெற்றி நாயகர்களை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. இது கார்ல் மார்க்ஸின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. “வரலாற்றில் சில சம்பவங்கள் இரண்டு தடவை நடக்கின்றன. முதல் தடவை அது அவலச்சுவை நாடகமாக முடியும். இரண்டாவது தடவை அது நகைச்சுவை நாடகமாக முடியும்”.

அவசரகால நிலை குறித்து விசேட கூட்டம் !

நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது .
மேலும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஊரடங்கை மீறிய 644 பேர் கைது

நாட்டில் நேற்று ( சனிக்கிழமை) மாலை 06 மணி முதல் ( திங்கட்கிழமை ) காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 644 பேர் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று (ஞாயிற்க்கிழமை ) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைது சம்பங்கள் இடம்பெற்றுள்ளது.

Posted in Uncategorized

வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் நடமாடுவதாயின், பாதுகாப்பு அமைச்சின் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை அமுல்படுத்துவது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலப்பெட்டபெந்தி ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தில் இருந்து இ.தொ.கா வெளியேறும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில்,

“ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். அந்தவகையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் மிரிஹான வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இது தவறான செயலாகும். என்னதான் வதந்திகள் பரவினாலும், முறையான விசாரணையின்றி மக்களை கைது செய்து, துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் நாளைய தினம் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை . ஏனெனில் சமையல் எரிவாயு, எரிபொருள் இன்றி மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். இதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர். அதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாம் ஆதரவு.

மிரிஹான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் கண்டிக்கின்றோம்.  அது நியாயமற்ற செயலாகும். மக்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசுக்கு எமது எதிர்ப்பை காட்டிவிட்டோம். சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்தோம். ஆனால் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் இ.தொ.கா. இப்படி செயற்பட்டது என சிலர் வதந்தி பரப்பினர்.

இராணுவத்துக்காக 10 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடமும் உள்ளடங்குகின்றது. இதனை நாம் எதிர்த்தோம்.

மக்களுக்கு வேலை நடக்கனும், நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.  மக்களுக்கு சார்பான முடிவையே நாம் எடுப்போம்.  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனால் அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறும்.  இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும்.” – என்றார்.

Posted in Uncategorized

மறுக்கும் இந்தியா

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது, என இணைய ஊடகங்களில் செய்தி வெளியாயிருந்தது.இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது

Posted in Uncategorized

சமூக ஊடகங்களை முடக்கிய கோட்டா அரசாங்கம்

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது யூரியூப், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்க சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மக்களின் தேவைகளைப் புறக்கணித்து பொறுப்பில்லாது உணர்வற்று சுயநலமாக செயற்படுகின்றது அரசாங்கம் – பேராயர்

நாட்டின் அரசியல் தலைவரை மாற்றி அமைத்தால் மாத்திரம் போதாது. எமது நாட்டிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் வியூகங்கள், கொள்கைகள் என அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாடு இன்று எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாரியளவில் சிக்குண்டு அல்லறும் மக்கள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்காதிருக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதுடன், ஜனநாயக ரீதியாகவும் , அகிம்சை வழியிலும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் மக்களின் முயற்சிகளை ஒடுக்காமல் இருக்குமாறும் மக்களுக்கான தேவைகளை தங்களது பொறுப்புணர்ந்து அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பலரும் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பது எனது தார்மீகக் கடமையாகும்.

நீண்ட காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து வருகின்ற அரசாங்கமானது, பொறுப்பற்றதும் உணர்வற்றதுமான சுயநலமான விதத்தில் செயற்பட்டு வருகிறது.

மக்கள் பல்வேறு விதமான சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், கத்தோலிக்க திருச்சபையானது துன்பப்படுகின்ற மக்களுக்கும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் என்றென்றும் ஆதரவாக இருக்கும்.

அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நீண்ட வரிசைகளில் மக்கள் தவித்து வருகின்றமை கவலையளிக்கிறது. இந்த துரதிஷ்ட வசமான சூழலிலும், லஞ்சம், ஊழல் என்பன தொடர்ந்து கொண்டே உள்ளன.

பொதுச் சொத்துக்கள் , தேசிய வளங்கள் கண்டுகொள்ளப்படாமல் விற்கப்படுகின்றன. மக்களிடம் கருத்துக்களைகூட கேட்பதில்லை.

பொது மக்கள் பலரும் மனச்சோர்வடைந்து வாழ்க்கைச் சிக்கல்களால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், ஆட்சியாளர்கள் சூழ்நிலையை உணர்ந்து விரைவில் தீர்வொன்றை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

சுதந்திர அரச நிறுவனமான மத்திய வங்கி, அரசியல் தலைவர்களது கைக்கூலிகளாக மாறியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நியாமற்ற மற்றும் தன்னிச்சையான ஆட்சியையே இன்று நாம் பார்க்கின்றோம்.

அனைத்து அரச நிறுவனங்களையும் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும். இதில், அரசியல்வாதிகளின் கூட்டாளிகளை அகற்றி, துறைசார் நிபுணர்களை நியமித்து அரச நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க செய்ய வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், தன்னிச்சையான துன்புறுத்தல்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களது கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டியது அவசியமாகும் ” என்றார்.

எதிர்ப்பு தெரிவிக்க இலங்கையர்களுக்கு உரிமை உண்டு: அமெரிக்க தூதுவர்

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

“நான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன், மேலும் வரும் நாட்கள் அனைத்து தரப்பிலிருந்தும் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன், அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது மிகவும் தேவையானது” என்று அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நிலையிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இதனைத் தெரிவித்துள்ளார்.

US ambasy