இலங்கையில் அவசரநிலை பிரகடனம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய ஒருநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. அதிகபட்சமாக, வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன.

பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனாரத் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கவும் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவில் வெளியானது.

நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேகநபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும்.

இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என வழக்குரைஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், பொதுமக்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தற்போது குறைபாடுகள் காணப்படுவதாக கூறிய அவர், அதை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இதனூடாக பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

ஒரு விதத்தில் இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் இந்த சட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நானே: சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது தொடர்பாகவே 3 கட்சிகிளின் தலைவர்களும் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி என, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற நீண்ட விமர்சனங்கள் சுமந்திரன் மேல் உள்ள நிலையில், இந்த கருத்தும் வெளியாகியிருந்தது.

எனினும், அவரது கருத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்திருக்கிறார்.

மாவை சேனாதிராசாவை தமிழபக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது,

கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியும் வெளியேற வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. எந்த கட்சியையும் வெளியேற்ற நடவடிக்கையெடுக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றே நாம் கலந்துரையாடி வருகிறோம். இந்த விவகாரங்களை பகிரங்கமாக பேசி வீணாண சிக்கல்களை ஏற்படுத்த முனைபவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எந்த ஒரு கட்சியையும் வெளியேற்றி, கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை பற்றி நாம் சிந்திக்கவில்லை. பேசவும் இல்லை என்றார்.

தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் –   ரெலோ தலைவர் செல்வம்  

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற  எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒருநபருக்கும் அருகதை இல்லை. தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்   செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) வெளியேறுவது சந்தோஷம் என்றும்இதையே  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ  விடுதலை இயக்கம் டெலோ கட்சியின்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) மன்னாரில் உள்ள அலுவலகத்தில்ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் 124 வது பிறந்த நாள் நிகழ்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (31) கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கருத்து தெரிவித்த போது தமிழ் ஈழ  விடுதலைஇயக்கம்  (டெலோ) தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து   விலகினால் தான் சந்தோசப் படுவதாகவும் தமிழரசுகட்சியும் அதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்பதை நான் இந்தநேரத்தில் கூறிக்கொள்கின்றேன். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு தான் சுமந்திரன் இந்தகூட்டமைப்புக்குள் வந்து செயல்பட தொடங்கி இருக்கிறார்.கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது அவருக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கூட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.பல தடவைகள்கொச்சைப்படுத்தி இருக்கின்றார்.

அப்படி இருக்கும் போது விடுதலைப் புலிகளுடைய செயற்பாட்டில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகிஇருக்கின்றது. வன்முறையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய சுமந்திரன் புலிகள் உருவாக்கிய இந்தகூட்டமைப்பில்  இவ்வாறு தொடர்ந்தும் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்க முடியும்?

இவருடைய கருத்துக்கள் தமிழர்களின் போராட்டத்தை மலினப்படுத்துவதாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

தமிழ் இனத்துக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் எத்தனையோ உயிர்களை தியாகம் செய்த எமது இயக்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆசைப்படும் நபர் இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருப்பதற்கு அருகதை அற்றவர்.

மாவை  சேனாதிராஜா அண்ணன் அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். வெளிப்படையாக பதில் கூறவேண்டும். தமிழரசு கட்சி இதை விரும்புன்கிறதா? சுமந்திரன் சொன்ன கருத்தை தமிழரசுக் கட்சி ஒட்டுமொத்தமாகஆதரிக்கின்றதா? என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் அவர்கள்   சுமந்திரனுடைய கூற்றை நீங்கள்ஆதரிக்கிறீர்களா? என்பதனையும் வெளிப்படையாகக் கூற வேண்டும்.

சுமந்திரன் கூறுவது தான் தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா? என்பதைவெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும். இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்திற்கு பாரிய பங்கு இருக்கிறது. இதைநாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். அது உறுதிப்படுத்த பட்டிருக்கின்றது.

ஆனால் தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரனுக்கு சொந்தமான அமைப்பு என்று நினைத்துக்கொண்டு அவர் கருத்து சொல்ல முடியாது. எனவே இந்த விடயங்களுக்கு சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா  அண்ணனும் பதில் சொல்லியாகவேண்டும்.

சுமந்திரனுடைய கருத்துதான் தமிழரசுக்கட்சியின் கருத்தா? சுமந்திரன் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின்கருத்தாக சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு வெளிப்படையான பதில் தரவேண்டும்.

தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற   எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒருநபருக்கும் அருகதை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில்எங்களுடைய பங்கு இருக்கின்றது.

சுமந்திரன் அடிக்கடி எம்மை சாடுகின்ற போது  நாங்கள் மௌனம் காத்து வந்தோம். ஏனென்றால் மாறி மாறி அடிபடுகின்ற நிலை ஏற்படக் கூடாது என்று பொறுமையாக இருந்தோம்.ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் அவ்வாறு பொறுமை காக்க முடியாது.

தொடர்ச்சியாக எமது போராட்டத்தை மலினப்படுத்தி வரும் சுமந்திரன் தமிழ் ஈழ  விடுதலை இயக்கத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்வது சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரிய விடயமாகஇருக்கிறது. அதை விட சிறி அண்ணாவையும் முப்படைகளை கொண்ட தலைவர் பிரபாகரனையும் இதில் இணைத்து பேசிஇருக்கிறார்.

எமது தலைவருடைய சிந்தனைகளைக் கொண்டு நான் செயற்படுவதில் என்ன தவறு? அதேபோல். நாங்கள்ஏற்றுக்கொண்ட முப்படைகளை  கட்டி ஆண்ட தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இன்றைய நிலையில் அந்த இரண்டு தலைவர்களும்  இருந்திருந்தால் என்ன முடிவை எடுப்பார்களோ? அதையேஇன்று எமது கட்சியும் எடுத்துள்ளது.

நாங்கள்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்திக்க வரவில்லை என்பதற்காக சுமந்திரன் ஆத்திரப்பட கூடாது.

இந்த இரண்டு தலைவர்களும் இப்பொழுது என்ன சிந்திப்பார்களோ  அதன் அடிப்படையில் தான் தமிழ் ஈழ  விடுதலைஇயக்கம் செயல்படும்.

சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

எனவே இது விடயம் தொடர்பாக மாவை அண்ணன் அவர்களும் சம்பந்தன் ஐயாவும் எமக்கு வெளிப்படையானபதிலைத் தர வேண்டும். அதே நேரத்தில் தமிழ் ஈழ  விடுதலை இயக்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்துவிலகிச் செல்லாது. மேலும்  சுமந்திரன்  சுரேஸ் பிரேமச்சந்திரன் , கஜேந்திரகுமார் , விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களை மீண்டும்கூட்டமைப்பில் இணைய சொல்லி இருக்கின்றார்.

ஒற்றுமைக்கு தான் தடையில்லை என்றார்.  இப்படிச் சொல்லும் சுமந்திரன் எதற்காக  தமிழ் ஈழ விடுதலை இயக்கம்தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்? இது முன்னுக்குப் பின் முரணைகொண்டு சுமந்திரன் செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொழும்பு: உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு − காவல்துறையினர் அறிவிப்பு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பிரிவுகளுக்கு காவல்துறையினரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தும் உள்ளனர். இதில் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றனது.

இலங்கையில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் நேற்று மாலை தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில், கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

அவர்களை கலைக்க வந்த காவல்துறையினருடன் பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாகனங்கள், தாக்கப்பட்டதோடு வாகனங்களுக்கு போராட்டக்கார்களால் தீ மூட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்கொண்டு வர காவல்துறையினர் குறித்த பகுதிகளில் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Posted in Uncategorized

மாபெரும் கண்டன பேரணிக்கான ஆதரவு-#P2P இயக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.03) அன்று சிறீலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது, தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள, வயோதிபப் பெண்கள் மீது சிறீலங்காவின் காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி அவர்களைக் காயப்படுத்தியமையை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் இச்சம்பவத்தைக் கண்டித்தும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மாபெரும் கண்டன போராட்டத்தை எதிர்வரும் 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் நடாத்த இருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
மேலும் நீதிக்கான இப்போராட்டத்தில் மக்கள் இயக்கங்கள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கிராமமட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மீனவர் சம்மேளனங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கரவண்டிச் சங்கங்கள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள், ஊடகவியலாளர்கள் என அனைத்து அமைப்புக்களையும் மக்களையும் பெரும் எழுச்சியாக பங்குபற்றுமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றது.

Posted in Uncategorized

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடிய போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகளை செய்வதற்கு அனுமதிக்குமாறு இதன்போது மு.க..ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதரார நெருக்கடி நிலைகாரணமாக இலங்கையில் வாழமுடியாது படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகளை செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியதோடு தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Posted in Uncategorized

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்! கரு ஜயசூரிய அழைப்பு

நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக விழுந்துள்ள பாதாளத் திலிருந்து மீண்டு நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்று வதற்கு நாட்டிலுள்ள அனைத்து முன்னணி அரசியல் சக்திகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளவை வருமாறு,

இன்று அரசாங்கம் தோல்வியைடந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டை பின்னடை யச் செய்துள்ளனர். அதை உட னடியாக நிறுத்த வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக அரசியல் செய்வது எமக்குப் பிரச்சினை அல்ல.

ஆனால் நாடு விழுந்துள்ள இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒருமித்த பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும். இன்று நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சி னையல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது.

நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண் டும். அதே சமயம் நாடாளுமன்றம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனவே, இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் தனிமனித அதிகாரத்தை இல் லாதொழித்து மீண்டும் நாடாளு மன்ற மரபுக்குத் திரும்ப வேண்டும்.

அதற்குப் பொதுவான ஒருமித்த கருத்துடன் தெளிவான வேலைத்திட் டத்தை நோக்கி நகர வேண்டும். எந்த அதிகார நோக்கமும் இல்லாமல், மிகுந்த நேர்மையுடன் அதற்காக நாங்கள் நிற்கிறோம். அத்துடன் நாட்டுக்குள் ஏற்பட் டிருக்கும் அரசியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைக்கு 20 ஆவது திருத்தச் சட்டமும் காரணமாகும். அதனால், துரிதமாக நாடாளுமன் றத்துக்கு பூரண அதிகாரம் வழங்க வேண்டும். 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என்றார்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புலிகளுடன் இணைந்து கூட்டமைப்பை நாமே உருவாக்கினோம்; கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தகுதி சுமந்திரனுக்கு உள்ளதா?: ரெலோ சுடச்சுட பதிலடி!

விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார்.

தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிரு;தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.

எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிச் சென்றதாகவும் அந்த இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.