மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போதே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற்றினார்.

மேலும் அவர் ஒருமுறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அப்புத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலில்!! தமிழ்தேசிய முண்ணனி!! வினோ எம்பி குற்றச்சாட்டு!!

திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் உண்மையை ஆதாரத்துடன் உலகத்துக்கும் நாட்டுக்கும் தெரியப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. தமிழ்தேசத்தின்பால் பற்றுக்கொண்டு, ஊடகவியலாளர்கள் உழைத்துக்கொண்டிருந்த சமயம் அது தங்களது அரசியல் நடவடிக்கைக்கு சர்வதேச ரீதியாக குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதற்காக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட தொடர்ச்சியான வரலாற்றை நாங்கள் பார்க்கின்றோம்.

அரசாங்கம் தமிழ் மக்களையும் தமிழ் கட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாங்கள் சர்வதேச ரீதியான ஆதரவை பெற்றால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான நியாயமான, நீடித்து நிற்க கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். நாங்கள் பிளவு பட்டிருந்தால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாகவே அமைவதுடன் வாழ்நாள் முழுவதும் போராடும் நிலையே ஏற்படும்.

நாங்கள் பிளவுபட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில் சாத்தியமான யதார்த்தபூர்வமான தமிழ் மக்களின் தற்போதைய தேவையை நிலை நிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வினை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனைத்துக்கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு விடயத்தை அனுப்புயிருக்கின்றோம்.

அதனை குழப்புவதற்காக ஏதோ ஒரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை நாம் பார்க்கின்றோம். அதற்கு கூட்டமைப்பில் இருக்கின்ற, ஒற்றுமைப்பட்ட இந்தகட்சிகளில் இருக்கின்ற ஒரு பிரிவினரும் மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலை இருக்கிறது.

குறிப்பாக தமிழரசுக்கட்சியில் இருக்கின்ற ஒருபகுதியினர் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றனர். எதற்காக, அங்கே ஒருமுகம்! இங்கே ஒருமுகம்! சம்பந்தன் ஐயா மாவைசேனாதிராஜா ஆகியோர் குறித்த வரைபில் கையொப்பம் இட்டே உள்ளனர். அதற்கு எதிராக அதேகட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் முண்னணியின் நிலைப்பாட்டினை ஒத்து இப்படியான விந்தையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடியும். இது தான் தமிழ்மக்களின் சாபக்கேடு.

நாம் எப்போதுதான் ஒன்றுபடப்போகின்றோம். ஆயினும் மிகப்பெரிய பலமான ஒரு கூட்டை உருவாக்குவதற்கான முயற்சியினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அந்த ஒற்றுமை முயற்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் தடைகள் வருகின்றன. அவற்றை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஒற்றுமையை குழப்பி இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே எடுத்தார்கள். ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து முதலாவது முயற்சியில் நாங்கள் வெற்றிகண்டிருக்கின்றோம். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து எமது மக்களின் உண்மையான விடுதலைக்காக உழைப்போம்.என்றார்.

Posted in Uncategorized

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீள திறப்பதில் தாமதம் ஏற்படலாம் – எரிசக்தி அமைச்சு

எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்தின் 12 வருட பூர்த்தியையிட்டு அவரது மனைவி மொட்டையடித்து வழிபாடு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

தனது கணவனுக்காக கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில் இந்து ஆகம முறைப்படி முடி இறக்கி வேண்டுதலில் ஈடுப்பட்டார்.

தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவர் காளி கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.இதே வேளை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். இந்த நிலையில் தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உள்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக குறித்த வழக்கு தொடரபட்டது.

2006ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

வழக்கில் தயா மாஸ்டர் சார்பாக சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கில் தயா மாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை  செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான்  கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

மலையக மக்களின் பிரஜாவுரிமையும் பிரேமதாஸவும் எம்.எஸ்.எம். ஐயூப்

வரலாற்றில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. பெரும்பாலான விடயங்களை, பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதனால், அரசியல்வாதிகள் மக்கள் முன் வந்து, நடந்ததை நடக்கவில்லை என்றும் நடக்காததை நடந்தது என்றும் கூறி அரசியல் இலாபம் அடைய முடிகிறது.

சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக வேண்டும் என்ற சட்டம், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. இதனை வைத்து, பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள், “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இனப்பிரச்சினைக்கான அத்திவாரத்தை இட்டது” என்று குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், ஐ.தே.கவுக்கு அவ்வாறு குற்றஞ்சாட்ட தார்மிக உரிமை இல்லை.

1954ஆம் ஆண்டு, வடபகுதி விஜயத்தின் போது, அப்போதைய ஐ.தே.கவின் தலைவர் சேர் ஜோன் கொத்தலாவல, கொக்குவிலில் நடைபெற்ற கூட்டமொன்றில், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரசகரும மொழிகளாக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தெற்கில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையும் ஸ்ரீ ல.சு.க சிங்கள மொழியை மட்டும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துவோம் என்று கூறி வந்ததையும் அடுத்து, ஐ.தே.க தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

அதன்படி, 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், களனியில் நடைபெற்ற ஐ.தே.க மாநாட்டின் போது, சிங்கள மொழி மட்டுமே அரச கரும மொழியாக வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதனை மக்கள் மறந்துவிட்டார்கள்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு, தமது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பிரஜாவுரிமையை வழங்கியதாக, சஜித் பிரேமதாஸ, நுவரெலியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதுவும் வரலாற்றைத் திரிபுபடுத்தும் கருத்தாகவே தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது, 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதியதொரு கட்சியாகும். அதற்கு முன்னர் அக்கட்சியின் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஐ.தே.கவிலேயே இருந்தார்கள். எனவே, 2020ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐ.தே.க செய்த நன்மையான காரியங்களின் பெருமையிலும் செய்த கொடுமைகளின் அபகீர்த்தியிலும் ஒரு பங்கு ஐக்கிய மக்கள் சக்தியையும் சென்றடைகின்றது.

இந்தவகையில், ஐ.தே.கவின் வரலாற்றில் நடைபெற்ற சில விடயங்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியும் வெட்கப்பட வேண்டும். அதில், 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்தமை, மிகவும் முக்கியமான கொடுமையாகும்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை – இந்திய காங்கிரஸின் ஏழு பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆளும் கட்சியை அல்லாது, பிரதான எதிர்க்கட்சியான லங்கா சமசமாஜ கட்சியையே ஆதரித்தனர்.

இதைத் தமது அரசியல் எதிர்க்காலத்துக்கான ஓர் அச்சுறுத்தலாகவே, டி.எஸ் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐ.தே.க கருதியது. எனவேதான், 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம், மலையக மக்களின் பிரஜாவுரிமையை ஐ.தே.க அரசாங்கம் இரத்துச் செய்தது. இதற்கு, ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் ஆதரவளித்தது.

இது இன்று வரை, இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை, வெகுவாகப் பாதித்து வந்துள்ளது. அக்காலத்தில் நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியைச் சம்பாதித்துக் கொடுத்த அம்மக்களுக்கு, இந்தப் பிரஜாவுரிமைப் பிரச்சினையால், திறைசேரிப் பணத்தில் பாடசாலைகளையோ மருத்துவமனைகளையோ பெற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

இந்த விடயத்தில், அவர்களுக்கு சில சட்டச் சிக்கல்களும் இருந்தன. அதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பின்னரும் அவர்கள் நாட்டில் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு என்று எதை எடுத்தாலும் உரிமைகளற்ற, தோட்டக் கம்பனிகளால் ஒடுக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்களாகவே அவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னரும் வாழ்ந்து வந்துள்ளனர். ஏனெனில், சுதந்திரத்துக்குப் பின்னரும் பல தசாப்தங்களாக அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்கவில்லை.

பின்னர், இடம்பெற்ற பல்வேறு அரசியல் நெருக்குதல்கள் காரணமாக, நான்கு கட்டங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி 1967ஆம் ஆண்டு இல. 14க் கொண்ட ‘இந்திய-இலங்கை ஒப்பந்தம் (நிறைவேற்றல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டமை அதன் முதல் கட்டமாகும்.

1974ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்வுக்கும் இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையில் ஏற்பட்ட மற்றுமோர் ஒப்பந்தத்தின் படி, மேலும் ஒருசாரார் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் ஸ்ரீ ல.சு.க ஆட்சிக் காலத்திலேயே கைச்சாத்திடப்பட்டன.

பிரஜாவுரிமை விடயத்தில் இந்தியா மீதும் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மீதும், மலையக அமைப்புகள் ஏற்படுத்திய நெருக்குவாரத்தைப் பார்க்கிலும், கடுமையான நெருக்குவாரத்தை வட பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆயுதக்குழுக்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தின.

1980களில் இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக, இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா நினைத்தது. அதற்கு, இந்திரா காந்தி இலங்கையின் இனப் பிரச்சினையை பாவித்தார். அதன் ஓர் அம்சமாகவே இந்தியா 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது.

அதில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளும் இயக்கங்களும், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை இன்றும் திம்புக் கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இலங்கையில் வாழும் சகல தமிழர்களினதும் பிரஜாவுரிமை மற்றும் மனித உரிமைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது அவற்றில் நான்காவது கோட்பாடாகும்.

அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்எப் போன்ற தமிழ் அமைப்புகள் மலையக தமிழர்களையும் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தன. அதன்படியே இந்தக் கோட்பாடு மற்றவையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதனை அடுத்து, இந்தியா இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் அக்காலத்தில் பிரஜாவுரிமை விடயத்தில் குரல் கொடுத்தது. இந்த நிலையிலேயே கடும்போக்குவாதியான ஜனாதிபதி ஜே ஆர். ஜயவர்தனவால் 1986ஆம் ஆண்டு இல. 5க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இது இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டமாகும்.

இதனை நிறைவேற்றும் போது எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக, 1988ஆம் ஆண்டு இல. 39க் கொண்ட ‘நாடற்ற நபர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான (விசேட பிரமாணங்கள்) சட்டம், நிறைவேற்றப்பட்டது. அது மூன்றாவது சட்டமாகும்.

இந்த இறுதி இரண்டு சட்டங்களும் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டங்களாகும். அப்போது ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்தமை உண்மையாயினும் அவரது முயற்சியால் அவை கொண்டுவரப்படவில்லை. ஆனால் அவை அக்காலத்திலேயே நிறைவேற்றப்பட இந்திய நெருக்குதலே காரணமாகியது. ரணசிங்க பிரேமதாஸ அதற்காக விசேடமாக எதனையும் செய்தாரா என்று வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது தெரிவதில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த 2003ஆம் ஆண்டு மீண்டும் இந்த விடயத்துக்காக மற்றொரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அது இல. 35க் கொண்ட ‘இந்திய வம்சாவளி நபர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்டம்’ ஆகும். இது இந்த விடயத்துக்காக நிறைவேற்றப்பட்ட நான்காவது சட்டமாகும்.

எனவே மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் விடயத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு உரிமை கோர ஏதாவது ஒரு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இதனால், மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமாகாது. கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பாலான மலையக மக்கள், சஜித்தின் கட்சியை ஆதரித்தமை பிழையென்று கூற நாம் முற்படவுமில்லை.

கடுமையாக இனவாதத்தை தூண்டிக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் புறக்கணித்து, சிறுபான்மை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தமை விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஆனால் வரலாறு திரிபுபடுத்துப்படக் கூடாது.

Posted in Uncategorized

இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை -யதீந்திரா

ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாறானதொரு சூழலில்தான், பிரதான தமிழ் கட்சிகள் ஒன்றாக இந்தியாவையே நோக்கி சென்றிருக்கின்றன.

இந்த இடத்தில் இதன் பின்னணி பற்றி சிறிது பார்ப்பது பொருத்தமென்று எண்ணுகின்றேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றும் – தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியுமான, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்த முயற்சியை ஆரம்பித்திருந்தது. இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக டெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி செயற்பட்டிருந்தார். பின்னர், டெலோவின் முயற்சியுடன் கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான, சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளாட்) இணைந்து கொண்டது. இது தொடர்பான முதலாவது சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில், கூட்டமைப்பில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குகொள்ளவில்லை. அதே வேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் டெலோவின் முயற்சியை பொது வெளிகளில் விமர்சித்திருந்தார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியாது என்னுமடிப்படையில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ஆனால் பின்னர் தமிழரசு கட்சியும் டெலோவின் முயற்சியுடன் இணைந்து கொண்டது.

பல கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகின்ற போது, பலருடைய கருத்துக்களையும் உள்வாங்க வேண்டியது ஒரு ஜனநாயக நெறிமுறையாகும். அந்த அடிப்படையில்தான், தற்போது இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையும் கடிதத்தில் இருக்கின்றது 13ஜை மட்டும், ஓரு கோரிக்கையாக முன்வைக்கக் கூடாதென்று வாதிட்ட தமிழசு கட்சியின் சொற்களும் கடிதத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சி எந்த இலக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ, அந்த இலக்கு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெலோவின் முயற்சி வெற்றிபெற்றிருக்கின்றது.

அண்மைக்காலமாக, இந்தியாவை தவிர்த்துச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் தீர்மானங்கள் அமைந்திருந்தன. சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்ததாக இந்தக் கட்டுரையாளர் கருதவில்லை. அதே வேளை, சுமந்திரனின் தூண்டுதலால் இது நிகழ்ந்ததாகவும் இந்த கட்டுரையாளர் கருதவில்லை. சுமந்திரன் அரசியலுக்கு முற்றிலும் புதியவர். கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு அவருக்கு முதல் முதலாக கிடைத்த போது, அது அவருக்கு ஒரு பரவசத்தை கொடுத்திருக்கலாம். அவர்களுடன் உரையாடி விடயங்களை மிகவும் இலகுவாக வெற்றிகொள்ளலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சுமந்திரன் மிகவும் வீறாப்பாகவே ஊடகங்களை எதிர்கொண்டிருந்தார். தீர்வை நெருங்கிவிட்டதான ஒரு பார்வையே அவரது பேச்சுக்களில் தெரிந்தது. இறுதியில் என்ன நடந்தது? ஆனால் இந்தக் கட்டுரையாளர் உட்பட பலரும் எதிர்வு கூறியதற்கு அமைவாகவே விடயங்கள் நடந்தேறின.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தீர்மானகரமான சக்தி. இது தொடர்பில் எனது பத்தியில் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்திருக்கின்றேன். இலங்கையின் உடனடி அயல்நாடாக இ;ந்தியா இருப்பதும் – ஏற்கனவே இந்த பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்து, இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு விடயத்தை முன்வைத்திருப்பதும் பிரதான காரணங்களாகும். இதனை சாதாரணமாக புறம்தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களால் எக்காலத்திலும் செயற்பட முடியாது. இது நமது விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக, இந்த பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தின் அடிப்படையில்தான் விரும்பமில்லாமிட்டாலும் கூட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் தலையீட்டை அனுமதித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் பின்னர், ஜே.ஆர் டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் – அதாவது, இந்தியா இந்த பிராந்தியத்தின் முதன்மையான சக்தி. நாங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாங்கள் இந்தியாவுடன் செல்ல வேண்டும் அல்லது பிறிதொரு வலிமையான சக்தியோடு செல்ல வேண்டும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் சென்றுவிட்டது. இந்தக் காலத்தில், இலங்கைத் தீவிலும், ஈழத் தமிழர் அரசியலிலும், உலகளாவிய அரசியல் போக்குகளிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதற்கான பிரகாசமான எந்தவொரு தெரிவையும் காண முடியவில்லை. மீளவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நோக்கியே திரும்ப வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியா ஒரு பிராந்திய சக்தியென்பதும் – அது எப்போது வேண்டுமானாலும், இலங்கை விடயத்தில் தலையீடு செய்யும் வல்லமையை கொண்டிருக்கின்றது என்பதிலும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது.

இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. பனிப் போர் காலத்தில் – அமெரிக்கா, சோவியத் யூனியனை முடக்குவதற்காக, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியது. இன்று சீனாவை ஒரு வறையறைக்குள் முடக்குவதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியா இருக்கின்றது. உலக அரசியலில் முன்னர் சோவியத் யூனியன் இருந்த இடத்தில், இப்போது சீனா இருக்கின்றது – சீனா இருந்த இடத்தில் இப்போது, இந்தியா இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவை விலத்திக் கொண்டு ஈழத் தமிழர்களால் எங்கு ஓட முடியும்?

இந்த பின்னணியில்தான் இந்தியாவின் ஈடுபாட்டை மீளவும் தமிழர் பிரச்சினையில் ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் தேசிய கட்சிகள் இந்த வரலாற்று நகர்வை மேற்கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டு வருடங்களாக அரசியல் தீர்வு நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்ற நிலையில்தான், இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான கோரிக்கையொன்றுடன் புதுடில்லியை ஈழத் தமிழர்கள் அணுகியிருக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு இறுதியான அரசியல் தீர்வாக கட்சிகள் முன்வைக்கவில்லை. உண்மையில் இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமே அல்ல. இது அடிப்படையில் இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற – இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் பயணிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஒரு தந்திரோபாய முன்னெடுப்பாகும்.

தமிழ் கட்சிகள் இவ்வாறானதொரு முடிவுக்கு சடுதியாக வரவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேற்குலகத்தை நோக்கி பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவை முன்வைத்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என்போர் ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் – இதுவரையில் எட்டு பிரேரணைகள் இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 2012இல் அமெரிக்க அனுசரனையுடன், இலங்கையின் மீதான முதலாவது பொறுப்பு கூறல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது.

ஆனாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் என்ன முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன? சிலர் கூறலாம் கூட்டமைப்பு விடயங்களை சரியாக கையாளவில்லையென்று. ஆட்சி மாற்றத்தை கூட்டமைப்பு உச்சளவில் பயன்படுத்தியிருக்கலாம் என்னும் கருத்தில் இந்த கட்டுரையாளருக்கு முழுமையான உடன்பாடுண்டு. ஆனால் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கு கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்றால் அது தவறானது. ஏனெனில் சமஸ்டித் தீர்விற்காக சிறிலங்கா அரசை இறங்கிவரச் செய்யக் கூடிய எந்தவொரு பலமும் கூட்டமைப்பிடம் இல்லை. அதே வேளை சர்வதேச நீதிப் பொறிமுறையை கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை என்னும் விமர்சனத்திலும் உண்மையில்லை. ஏனெனில், கூட்டமைப்பு என்னதான் உரத்துப் பேசியிருந்தாலும் கூட, இப்போது இருக்கின்ற நிலைமைக்கு மேல் பெரிதாக எதுவும் நடந்திருக்காது. ஆனால் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்தி எடுக்கக் கூடியதை எடுத்துக் கொள்வது என்னும் தந்திரோபாய அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்று கூறினால் அது சரியானது.

தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி கோரிக்கை முன்வைத்ததை ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஸைகளை முடக்க முற்படுகின்றனர் என்பதுதான் அவர்களது விமர்சனத்தின் அடிப்படையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே இவ்வாறான விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது, இந்தியாவிற்கு உரித்தான விடயமொன்றுடன் செல்வதுதானே சரியானது. இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் கொண்வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுக்க வேண்டியிருக்கின்றது. பிரதமர் மோடிக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்ற கட்சிகள் மிகவும் தூரநோக்குடனும், தந்திரோபாயமாகவும்தான் இந்த விடயத்தை கையாண்டிருக்கின்றன. ஆனால் இந்த விடயத்தை விமர்சனம் செய்வோரிடம் ஒரு அடிப்படையான தவறுண்டு.

அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கூறுவோரை, விமர்சிப்பவர்கள்- சர்வதேச அழுத்தங்களின் அச்சாணியாக கருதப்படும், ஜெனிவா பிரேரணைகள் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்துவதை வசதியாக மறந்துவிடுகின்றனர். இந்த உண்மையை மக்கள் மத்தியில் திட்டமிட்டு மறைக்கின்றனர். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக கொண்டுவரப்பட்ட 46ஃ1 தீர்மானத்திலும் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை மாகாண சபைகள் இயங்குவதற்கான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இந்த பிரேரணைகளையுமல்லவா தமிழர் தரப்புக்கள் நிராகரிக்க வேண்டும்? எனவே இங்கு அடிப்படையில் பிரச்சினையாக இருப்பது, 13வது திருத்தச்சட்டமா அல்லது, இந்தியாவை நோக்கி செல்வதா?

தற்போது ஒரு நேர்கோட்டில் சந்தித்திருக்கும் பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் காலத்தை சரியாக விளங்கிக் கொண்டு செயற்பட்டிருக்கின்றன. ஆனால் இத்துடன் கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உண்டு. அதனை விளங்கிக்கொண்டு புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களையும் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது- தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

‘வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை. ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை,பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.
ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்.

‘’இல்லை, இல்லை” என்ற கூக்குரலை விட இந்நாட்டில் இன்று எதுவும் இல்லை என்றாகி விட்டது. எண்ணெய் இல்லை. எரிவாயு இல்லை. பால்மா இல்லை. உரம் இல்லை. மருந்துகள் இல்லை. எதுவும் இல்லை. சொல்லப்போனால் இந்நாட்டில் இன்று அரசாங்கமே இல்லை.

உரம் இல்லை என்று கையை விரித்து மன்றாடும் விவசாயிகளிடம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, “உங்கள் நிலங்களில் நெல் விளைவிக்க முடியாவிட்டால், பாசிபயறு விளைவியுங்கள்” என்று கூறுகிறார். இது, “பாண் இல்லாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்று சொன்ன பிரான்ஸ் நாட்டு கொடுங்கோல் அரசியை ஞாபகப்படுத்துகின்றது.

வெள்ளைபூண்டு ஊழலை கண்டு பிடித்து, அம்பலப்படுத்திய முன்னாள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் துசான் குணவர்தன, வெளிநாடு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது என்ன கோலம்? குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையை எடுத்த நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்று இங்கே “ஊழல் எதிர்ப்பு குழு என்று ஏன் முன்னாள் அரசாங்க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்” என என்னை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் வாபஸ் வாங்கி விட்ட நிலையில், ஊழல் செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும் போது, ஏன் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள் என இவர்கள் என்னை கேட்கிறார்கள்.

நான் மனோ கணேசன். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவன். எங்கள் கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான, தைரியமுள்ள சுதந்திரமான கட்சி. இது மக்களின் கட்சி. எம்மை எவரும் பயமுறுத்த முடியாது. நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம்” என அவர் தெரிவித்தார்.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : எவரையும் நழுவிச்செல்ல விட மாட்டோம் – கர்தினால்

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையோ பொலிஸாரையோ நழுவிச் செல்ல விட மாட்டோம்.

இந்த விவகாரம் தொடர்பான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வரும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொரளை சகல புனிதர்கள் தேவாலய சங்கிரிஸ்டியனான முனி மற்றும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே கர்தினால் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை வேளையில் சி.சி.டி.வி. காணொளிகளை பார்வையிடும் படி நான் எமது குருவானவர்களுக்கு அறிவுருத்தியிருந்தேன்.

ஏனெனில், இந்த குண்டை வேறு யாராவது கொண்டு வந்து வைத்தார்களா என தேடிப்பார்க்க வேண்டும் என கூறினேன். இதன்படி, இந்த குண்டை யார் ஆலயத்திற்குள் வந்து வைத்தார்கள் என என்பதை எங்களால் கண்டறிய முடிந்தது.

மேலும், குண்டை வைத்தவர் ஆலய சங்கிரிஸ்டியனான முனி என்பவர்தான் என கூறி அவர் மீது பலியை சுமத்துவதற்கு பொலிஸார் முயற்சித்தனர். இதைத்தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்த சம்பவம் மட்டுமல்லாது நாரஹேன்பிட்டி வைத்தியசாலையிலும் குண்டு வைத்தமைக்கு முனி என்பவர் மீது பலியை போட முயற்சித்தனர்.

இது போன்ற விடயங்களை நடத்துவதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ யாராக இருப்பினும் இந்த சம்பவத்திலிருந்து எவரையும் நழுவில் செல்ல விட முடியாது.

முனி என்பவருக்கும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு நீதியை வழங்க வேண்டும். இந்நாட்டில் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆகவே, எமக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அதற்குத் தேவையான சகல வேலைகளையும் நாம் முன்னின்று செயற்படுவோம்.

பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கண்‍டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவகாரம் தொடர்பிலான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம்.

இந்த அரசாங்கமும், பொலிஸாரும் இணைந்து நாடகமொன்றை நடத்தி வருகின்றமை தெளிவாகத் தெரிகிறது. இதன் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்போம் ” என்றார்.

Posted in Uncategorized