காணாமல் ஆக்கப்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது வழக்கின் தீர்ப்பு தவணையிடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால், இன்று(16) அறிவிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இறுதிப் போரின் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு, இன்று (16) வழங்கப்படவிருந்தது எனவும் இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று, அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது எனவும் அந்த அறிக்கை மீதான வவுனியா மேல் நீதிமன்றின் தீர்ப்பு, இன்றுவழங்கப்படுவதாக இருந்தது  எனவும் கூறினார்.

எனினும், அந்தத் தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தமக்கு அறிவித்துள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, அதன் பாதகமான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின் கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் 7 விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் அக்கடிதத்தின் ஊடாக ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டம் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்கும் அதேவேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பியோனுவாலா நி ஓலெய்ன், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் தலைமை அறிக்கையாளர் லூசியானோ ஹஸன், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் ஐரின் கான், அமைதியாக ஒன்றுகூடுதல் மற்றும் கலந்துரையாடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நியாலெற்சொஸி வோல், சிறுபான்மையினர் விவகாரங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பெர்னான்ட் டி வரேனெஸ், மத நம்பிக்கைசார் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் மற்றும் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகள் அல்லது தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நில்ஸ் மெல்ஸெர் ஆகிய எழுவர் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுடைய அரசாங்கத்தினால் வழங்கப்படும் தெளிவுபடுத்தலை வரவேற்கின்றோம். அதேவேளை மிகுந்த கரிசனைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்பயங்கரவாத்தடைச்சட்டத்தில் காணப்படும் சரத்துக்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமையினை நினைவுறுத்துவதுடன் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதனை உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உங்களது அரசாங்கத்திற்கு மீளவலியுறுத்துகின்றோம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் சிலர் பயங்கரவாத்தடைச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களை சீர்செய்வதற்கான பரிந்துரைகளை உங்களுடைய அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தனர். இருப்பினும் அந்தப் பரிந்துரைகள் செயற்படுத்தப்படாததுடன் மாத்திரமன்றி உரிமைகள் மேலும் மறுக்கப்படக்கூடியவாறான நடைமுறைகள் உள்வாங்கப்பட்டமை கவலையளிக்கின்றது.

எதுஎவ்வாறிருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை வரவேற்கின்றோம். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் உங்களுடைய சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் ஏற்புடையவகையிலும் அமைவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

மேலும் சர்வதேச சட்டக்கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டுமெனில், சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தை வழங்கல், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் கருத்துச்சுதந்திரம், கலந்துரையாடல்கள் மற்றும் மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றில் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படும் பட்சத்தில் சட்டப்பிரயோகத்தின் துல்லியம் உறுதிப்படுத்தப்படல், சுதந்திரத்தைத் தன்னிச்சையாக மட்டுப்படுத்தும் வகையிலான சரத்துக்கள் திருத்தப்படல், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்புசார் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல், நீதிமன்ற மேற்பார்வை மற்றும் சட்ட உதவியை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளடங்கலாக நியாயமான விசாரணைப் பொறிமுறை பின்பற்றப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் என்பன பூர்த்திசெய்யப்படவேண்டும்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை நாம் மீளவலியுறுத்த விரும்புகின்றோம். இச்சட்டத்தின்கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படக்கூடியவர்களின், குறிப்பாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மையினரின் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படக்கூடிய) உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான அச்சுறுத்தலும் உரியவாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதற்கான உத்தரவாதமின்மையும் இதுபற்றிய கரிசனைகள் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன. நீதிமன்றத்தின் உரியவாறான மேற்பார்வையின்மை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவான நடைமுறைகள் பின்பற்றப்படாமை என்பன அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடும்.

ஆகவே உடனடியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக மீளாய்விற்குட்படுத்தி, கரிசனைக்குரிய அனைத்து சரத்துக்களையும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறையின்கீழ் மனித உரிமைகளுக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படுவதுடன் அவை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி மேற்கூறப்பட்டவாறு அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரையில், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் கோருகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கை நெருங்கும் ஆபத்து : ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்கான முனைப்பில் தேசிய மனித உரிமைகள் சார் கட்டமைப்புக்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதுடன் பாரிஸ் கொள்கைகளுக்கு அமைவாகச் செயற்படுவதற்கு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டி ஆணைக்குழுவை ‘ஏ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்கு தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவு பரிந்துரை செய்திருக்கின்றது.

உலகநாடுகளின் மனித உரிமைகள் நிறுவனங்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவினால் ‘ஏ’, ‘பி’ என்ற அடிப்படையில் தரப்படுத்தப்படும்.

அந்தவகையில் மேற்படி கூட்டிணைவின் கடந்தகாலத் தரப்படுத்தலின்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ என்ற நிலையில் காணப்பட்டது.

இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்நிலையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை ‘ஏ’ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்குத் தரமிறக்கம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் 18.1 சரத்தின் பிரகாரம், மேற்படி ‘தரமிறக்கப் பரிந்துரை’ ஒருவருடகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படாது.

அதன்படி எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் வரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ என்ற நிலையிலேயே இருக்கும். இக்காலப்பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ‘மனித உரிமைகள் குறித்த பாரிஸ் கொள்கைகளுக்கு’ அமைவான தமது செயற்பாடுகளை தொடர்பான ஆதாரங்களையும் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்.

அதேவேளை தேசிய மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டிணைவின் ஏற்புடைமை தொடர்பான உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கையை ‘பி’ நிலைக்குத் தரமிறக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான காரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கையாளப்படும் முறைமை, ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உள்வாங்கப்படும்போது இனரீதியான பன்முகத்தன்மைக்கு உரியவாறு மதிப்பளிக்கப்படாமை மற்றும் ஆணைக்குழுவிற்குரிய ஆணைகள் செயற்திறனுடன் பின்பற்றப்படாமை என்பன தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ரவரி மாதம் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்றன.

Posted in Uncategorized

சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பாலசிங்கம் : ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமின் 15 ஆண்டு நினைவேந்தல் இன்று ஆகும்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

காரணம் அன்றைய காலத்தில் உலக நாடுகளில் இருந்த இராஜ தந்திரிகளுடன் துணிவுடனும், தந்திரோபாயத்துடனும், உறுதியாகவும் பேசக் கூடிய ஒருவராக தமிழர்கள் தரப்பில் விளங்கினார்.

அன்ரன் பாலசிங்கம் திறமையை பேச்சுவார்த்தை மேசையில் எதிர்த் தரப்பினரே வியந்து பார்த்த சந்தர்ப்பங்கள் உண்டு. உண்மையாக பாலசிங்கமின் மரணம் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்வியில் வெளிநாட்டு நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் தரப்பில் இன்றுவரை இராஜதந்திர இடைவெளி வறிதாகவே தொடர்கின்றது. ஈடு செய்ய முடியாதா நிலை காணப்படுகின்றது .

தீர்க்கமாக முடிவுகளை பூகோள இராஐதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப எடுக்கும் வல்லமை கொண்டவராக இலங்கை ஆட்சியாளரின் எந்த சக்திகளுக்கும் விலைபோகாத இனப் பற்றாளனாக தன்னை தியாகம் செய்தவர் தேசத்தின் குரல் .

அந்த வகையில் தமிழர் தேசத்தின் குரலாக ஒலிப்பதற்கு பாலசிங்கத்தின் மரணத்திற்கு பின்னர் தமிழர்கள் தரப்பில் சிறந்த இராஐதந்திரி இல்லை என்ற வேதனையை அவரது நினைவு நாளில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல இன்று சில சின்னத்தனமா அரசியல்வாதிகள் அன்ரன் பாலசிங்கத்தை ஓப்பீடு செய்து பேசுவதும், இனத்தின் அடிப்படை வரலாறு தெரியாத தரகர்களை இராஜதந்திரிகள் என்று கத்தும் ஊழையும் தான் பெரும் அவலமாக தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு – ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் இரண்டாம் கட்ட கூட்டம் இம்மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளில் ஓரங்கமாக, அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும், அதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கும் கடந்த நவம்பர் 2ஆம் திகதி யாழில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே செல்வம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஆளுந்தரப்பிலிருந்து 13 ஐ ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளாகும்.

Posted in Uncategorized

தனிப்பட்ட விஜயமாக டுபாய் சென்றார் நிதி அமைச்சர் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுடன் அவரது மனைவியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என அறியமுடிகின்றது.

நள்ளிரவு 12.55 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் EK-649 இல் இருந்து டுபாய்க்கு புறப்பட்டனர் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தனிப்பட்ட வருகை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

சமையல் எரிவாயு வெடிப்பு – இலவச சட்ட உதவி வழங்குவதாக சஜித் தெரிவிப்பு

எரிவாயு தொடர்பான வெடிப்பு மற்றும் தீ விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 600 எரிவாயு தொடர்பான வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரை 600-க்கும் மேற்பட்ட எரிவாயு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நான்கு குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ளனர், ஒரு கணவன் மனைவியை இழந்துள்ளார். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு? எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு இன்று அரசாங்கத்தால் முறையான தீர்வை வழங்க முடியவில்லை.

எரிவாயு ஊழலில் நம் நாட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் இந்த எரிவாயு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் நாங்கள் இலவச சட்ட உதவிகளை வழங்குகிறோம்.

இந்த நிறுவனங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். வெடிப்புக்கு காரணமானவர்கள் பற்றிய தகவல்களை கட்சி தலைமையகத்திற்கு வழங்கியுள்ளோம்.

Posted in Uncategorized

யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசியல் பொருளாதார ரீதியாக ஒரு தேர்தலை நடத்தக்கூடிய நிலையில் அரசாங்கமம் இல்லை – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் தற்போது நாட்டில் இருக்கின்றது. ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தற்போது நான்கு வருடங்களுக்கு மேலாகின்றது. வடக்கு மாகாணசபையும் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகின்றது. அதேபோன்று அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, சுகாதர நிலைமை என்பன வெளிப்படையான விடயம்.

நாட்டின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் நாட்டின் தற்போதைய நிலையாக இருக்கின்றது. வரவு செலவுத் திட்ட விவாதம் நடக்கும் போது நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டிய நிலையில் அவர் கடன் கேட்டு வெளிநாடு செல்கின்றார்.

கடந்த வருடம் இந்த நாட்டை விட படுமோசமாக இருந்த பங்களாதேசிடம் இலங்கை அரசாங்கம் கடன் வாங்கியிருக்கின்றது. இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலையோ இன்னுமொரு தேர்தலையோ வைக்கக்கூடிய நிலைமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.

வருகின்ற வருடம் மார்ச் மாதத்துடன் உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்படலாம். சிலவேளைகளில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் உள்ளுராட்சி சட்டத்தின் படி ஒரு வருடங்கள் நீடிக்கக் கூடிய நிலைமையும் ஏற்படலாம் அல்லது உள்ளுராட்சி மன்றங்களையும் கலைகத்து விட்டு உறுப்பினர்களுக்கான நிதியையும் மீதப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆணையாளர், செயலாளர்களுக்குக் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கொண்டு வரலாம். எதுவும் எந்த நேரமும் நடக்கும்.

ஆனால் ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் பலமிழந்த நிலையில் இருக்கின்றது. அந்த விடயம் அரசாங்கத்திற்கே தெரியும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில் இருக்கின்ற சில அமைச்சர்கள் கூட இதனை ஒத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் அரசாங்கம் தேர்தலுக்குச் செல்லாது.

ஆனால் மகாணசபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம். நேற்றைய தினம் கூட வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகள் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்றும் 13வது திருத்தச் சட்டத்தை இனப்பிரச்சனைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொண்ட கட்சிகள் கூடிக் கலந்துரையாடியிருந்தோம்.

இந்தியா மூலமாக மகாணசபைத் தேர்தல் தொடர்பில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும், மாகாண சபைகளுக்கு உரிய முழுமையான அதிகாரங்களைக் கொடுத்து அந்தத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினையும் இந்தியாவிற்கு விடுத்திருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மாகாணசபை முழு அதிகாரங்களுடன் இருக்குமாக இருந்தால் எமது ஊழியர்கள் இவ்வாறு ஐந்து, ஆறு வருடங்கள் தற்காலிய, அமைய தொழிலாளர்களாக வேலை செய்யக் கூடிய நிலைமை இருக்காது. மாகாணசபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் மாகாணசபை நினைத்தால் கூட ஊழியர்களை நிரந்தரமாக்க முடியாது. ஏனெனில் மாகாணசபைகளின் ஊழியர்களுக்கான சம்பளம் மத்திய அரசின் திறைசேரியில் இருந்து தான் வர வேண்டும். திறைசேரியின் அனுமதியைப் பெற்று நியமனம் வழங்கக் கூடிய விதத்திலேயே தற்போதைய மாகாணசபையின் அதிகாரம் இருக்கின்றது.

எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு எவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தனவோ அந்த அதிகாரங்கள் அனைத்தையும் உள்வாங்கி அதிகாரங்களைப் பரவலாக்கி இந்த மாகாணசபைத் தேர்தல் வைக்கப்படல் வேண்டும். அவ்வாறான தொரு நிலைமை வருமாக இருந்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு-வவுனியாவில் போராட்டம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்திப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அந்த தகவலின்படி இதுவரை நேரமும் அவர்கள் வருகை தரவில்லை. எந்தவித ஆணைக்குழுக்களும் தேவையில்லை, உள்ளக விசாரணைகளும் தேவையில்லை சர்வதேச விசாரணையே தேவையென 12 வருடமாக போராடி வருகின்றோம்.
எத்தனையோ ஆணைக்குழுக்கள் வந்தும் பதிவுகளை மேற்கொண்டு செல்கிறார்களே தவிர, எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக அதே வேலையை தான் செய்கின்றார்கள். எங்களுக்கு நீதியே கிடைக்க வேண்டும்” என்றார்.