குட்டி ஜனாதிபதிகளாக மாகாணங்களை ஆட்சி செய்யும் ஆளுநர்கள் -ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக இன்று(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்குத் தான் மாகாணசபை முறைமை வந்தது. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்காக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின், கையை முறுக்கித்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது.

அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குப்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 2015 இற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளூர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்குக் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம். எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13, மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையில் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுநர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இன விகிதாச்சார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது.

அந்த வகையில் நாங்கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன் பேசி தமிழ் மக்கன் ஒருவரைக் கிழக்கில் முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு.

அதன்பிரகாரம் நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்.

இந்நிலையில் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார்.

இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை- அக்கரைப்பற்று,  சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து நேற்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, உறவுகளுடன் இணைந்துள்ளதாக  குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர், கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் அவர்கள் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும், உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இரசாயன பசளையை நிறுத்தி சேதன பசளை மூலம் இலங்கையில் உற்பத்தியை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறித்த முயற்சி முழுமையாக தோல்வியடைந்து விவசாயிகள் தற்போது வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சேதன பசளையும் இல்லை.

விவசாயிகள் நெல் விதைக்கும் ஆரம்ப கால பகுதியில் பசளை இல்லாமல் எவ்வாறு விதைப்பது என்று உள்ளனர். விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் உள்ள விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு பசளை வழங்காத நிலையில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கு பசளையை கொடுத்து உள்ளூர் உற்பத்தி யை ஊக்குவித்து நாட்டு மக்களுக்கு அரிசி வழங்க முயற்சி எடுப்பதா? அல்லது பசளையை நிறுத்தி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதா? என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

தற்போது அரசாங்கம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அல்லது அவர்கள் தங்களுடைய சொந்த இலாபத்திற்காக அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு பசளையை வழங்கி இருந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை.

எனவே அரசாங்கம் உடனடியாக விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது. யுத்தத்திற்கு பிற்பாடு இந்திய இழுவைப்படகுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் வட கடல் பகுதிக்குள் அவர்களின் மீன்பிடி ஆதிக்கம் காணப்படுகின்றது.

இந்தியாவின் இலுவைப்படகுகளினால் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் காத்திரமான ஒரு செயல்பாட்டை முன்னெடுப்பது இல்லை.

கடந்த அரசாங்கத்தில் இருந்த போது எங்களுடைய தொடர்ச்சியான அழுத்தங்களால் பல இந்திய படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதோடு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது மன்னார், முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கும் அளவிற்கு இந்திய இழுவைப்படகுகள் வந்து செல்கிறது.

கடற்றொழில் அமைச்சரும், அரசாங்கமும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.

இதற்கு பிரதானமான காரணம் இந்தியாவிற்கு பயந்து அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடமும் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன்.

அரசாங்கத்திடமும் பல முறை பாராளுமன்றத்தில் கதைத்துள்ளேன். ஆனால் இவ் விடயத்தில் கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

அண்மைக்காலமாக மிக மோசமாக இந்திய இழுவைப்படகுகள் வந்து வட கடலில் இருக்கின்ற எமது மீனவர்களின் வலைகளையும், படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதனால் எமது மீனவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் கடல் தொழில் அமைச்சு மௌனமாக இருப்பதை விட கடல் தொழில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.

வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக இருந்தும் கூட வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் அவர் மௌனமாக இருப்பதை விட சிங்களவர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்தால் எமது அழுத்தத்தின் காரணமாக ஓர் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கடற்றொழில் அமைச்சின் தற்துணிவு இல்லாத நிலையே வட பகுதி மீனவர்கள் இந்திய இழுவைப் படகு மூலம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் மற்றும் பொருட்களின் விலை ஏற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இந்த வருட இறுதிக்குள் எமக்கு கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

அனைத்து தேர்தல்களையும் ஒரே முறையின் கீழ் நடத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் நாம் ஆலோசித்து வருகிறோம்.

இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

ஒன்று கலப்புமுறையில் தேர்தலை நடத்தவேண்டும். இல்லையெனில், 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் இல்லாது செய்யப்பட்ட தேர்தல் முறைமையை மாகாணசபைத் தேர்தலுக்கு மட்டும் மீளப் பயன்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

அப்படியாயின் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருகிறோம்.

Posted in Uncategorized

நிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை!

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பரஸ் வெளியிட்ட தகவலுக்கு அமைய, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் இவரது கணவரின் பெயரும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் பல இரகசிய நிறுவனங்கள் மூலம் செய்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களும் பண்டோரா பேப்பரஸ் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி திருக்குமார் நடேசனின் சொத்துக்களின் பெறுமதி 160 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வொரு அரசியல்வாதிகளும் எமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் அறிவிப்பு!

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள்  அறிவித்துள்ளனர்.

முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.

அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்  என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடு மூடப்படுவதற்கு முன்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழர் சீனாவை நாடுவதாக இந்தியா கவலை

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து  புலம்பெயர் தமிழர்கள்  சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி ​வெளியிட்டுள்ளது.

இலண்டனில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லையென்று புலம்பெயர் தமிழர்கள் கூறியதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்தன.

வட இலங்கையில் சீனர்கள் தம் பிரசன்னத்தை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தாக இருக்கும் என்பதையே மாநாட்டின் மூலம் அறிய முடிந்தது.

இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சீனா இலங்கையில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தது.  இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதென்று இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்ததாக ஹிந்து பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வட இலங்கையில் சீனர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி இருப்பதற்கு அவர்கள் இத்தகைய முயற்சிகளை   வரவேற்பார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்களுக்கு உதவுவதைத்தவிர வேறு வழியில்லை.

சீன அறிவுஜீவிகளை தமது கருத்துக்களுக்கு சாதகமாக கவர்ந்திழுக்கும் வகையில் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் உலகலாவிய தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும்  நம்பப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு கபிலன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று (10.10.21)மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது. என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.