பாராளுமன்ற சபை அமர்வு தொடர்பான அறிவித்தல்

பாராளுமன்ற அமர்வை நாளையதினம் (08) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் ஏற்றப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பிரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை 6 இலச்சம் பேரில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலச்சத்து 11 ஆயிரம் பேர்.

எனவே, 3 இலச்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ளது இருந்தபோதும் நாளை 25 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிரிகள் பிரிவு காரியாலயங்களில் ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலை திறப்புக்கு ரெலோ வினோ எம்பி எதிர்ப்பு! ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு இன்று மாலை அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஹைர்டறாமணி ஆடைத் தொழிற்சாலையானது இன்று வரை இலங்கையின் கோவிட் -19 தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதம் அவ் ஆடைத்தொழிற் சாலையில் பணிபுரியும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அதில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியிருந்தமை அறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதனால் இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் ஆடைத்தொழிற்சாலையும் உடன் மூடப்பட்டது.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறைகள் கடந்த 31ம் திகதியுடன் நிறைவடைந்தன. ஆனால் இன்று வரை ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசம் உட்பட மாவட்டத்தின் 9 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவில்லை. தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள், பொதுப்போக்குவரத்து உட்பட்ட பயண நடவடிக்கைகள், ஒன்றுகூடல்கள், நடமாட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கொவிட்-19 சட்ட நடைமுறையாகும்.

மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன் நீதிமன்றிலும் அரசாங்கத்தினால் வழக்கும் தாக்கல் செய்ய முடியும். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பது கிராமசேவையாளர் பிரிவுகள் இன்னமும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். தனிமைப்படுத்தல் நீக்கப்படாமையினால் அது நீடிக்கப்பட்டதாகவே அர்த்தமாகும்.

இருந்தபோதும் நாளைய தினம் குறித்த ஆடைத்தொழிற்சாலை திறக்கப்பட இருப்பதாகவும் பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வர வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்ட கிராமத்தினுள் குறித்த தொழிற்சாலை இயங்க அனுமதிப்பதானது சட்டத்துக்குப் புறம்பானதோடு சட்ட மீறலாகும்.

அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தங்களின் கொள்கைக்கும் நேர் மாறான உதாரணமாகும். முல்லைத்தீவு மாவட்டத்தின் தொற்று அதிகரிப்புக்கு இவ் ஆடைத் தொழிற்சாலையும் முக்கிய காரணமாகும்.

இன்றுவரை 600க்கு மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தலுடன், பயணத்தடையினாலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் உங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பிரதேசங்களின் தனிமைப்படுத்தலை நீக்கும் வரை அவ் ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என தங்களை அவசரமாகவும், வினயமாகவும் கேட்டுக் கொண்கின்றேன் என குறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச?

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார். அதேபோல் நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் உட்பட ஜனாதிபதியின் நேரடியான கட்டுப்பாட்டில் செயற்படுத்தப்படும் பல முக்கிய வேலைத்திட்டங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் உட்பட மக்களுடன் சம்பந்தப்பட்ட பல பொறுப்புகள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பல மாவட்டங்களில் இணைப்புக்குழுக் கூட்டங்களை நாமல் ராஜபக்சவே கண்காணித்து வருகிறார். இவற்றின் ஊடாக அவர் வேலை செய்ய முடியும் என்ற திறமையை வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக கடந்த வார இறுதியில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் தொழிற்நுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவியானது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கக் கூடிய அமைச்சாக அமைந்துள்ளது. இதனை தவிர நாமல் ராஜபக்ச சீனாவின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர் என்பது இரகசியமான விடயமல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு் இடையிலான நேரடியான அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் மாநாடு ஒன்று அண்மையில் இணையத்தளம் வழியாக நடைபெற்றதுடன் அதற்கு நாமல் ராஜபக்சவே தலைமை தாங்கினார்.

மறுபுறம் நாமல் ராஜபக்சவின் இந்த வேகமான அரசியல் பயணம் தற்செயலாக நடந்தது அல்ல. ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக, அந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தை சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் நாமல் ராஜபக்ச குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. இதனடிப்படையில் அரசியல் துறையினல் தற்போது பேசப்பட்டு வரும் இந்த வதந்தி உண்மையாக மாறுவதற்காக சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதுடன் சாதகமான அடையாளங்களும் காணப்படுகின்றன.

Posted in Uncategorized

பயணத் தடை நீக்கப்படுமா! – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2500க்கு மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கோவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டைத் திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில்முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவேதான் 7ம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வார காலம் நீடிக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல. நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய,கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே 14 நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும்.

21 நாட்களுக்குப் பின்னரும் பயணத்தடை நீடிக்குமா? தளருமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன் அறிவிப்போம். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும்.ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான அஜித்ரோஹண விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி உப வீதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலர் உணவுப்பொருட்கள் , துரித உணவுப் பொருட்கள் , மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது , விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பிரதான வீதிகளை மாத்திரமே பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பிரதான வீதிகளில் இன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பொருட்களை கொள்வளவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் இவ்வாறு விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பகுதியில் மாத்திரம் பொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதால் , அந்த பகுதிகளில் மக்கள் ஒன்றுக்கூடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும். இதேவேளை இவ்வாறு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.

2009 மே 18, அன்று இலங்கையில் போர் முடிவடைந்து 12 ஆண்டுகளை அங்கீகரித்து, இழந்த உயிர்களை கௌரவித்தல் மற்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, இலங்கையில் நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதிப்படுத்துவதற்கான நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு மற்றும் மறுசீரமைப்புக்கான ஆதரவை வெளிப்படுத்துதல் எனும் தலைப்பில் , ஜனநாயக கட்சின் வட கரோலினா மாநில காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரொஸினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு, பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான, பில் ஜோன்சன், டானி டேவிஸ், பிரட் ஷேர்மன், கதி மன்னிங், ஆகியோரும் இணை அனுசரணை வழங்கியிருக்கின்றனர். இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதன் முன்நகர்த்தல் செயற்பாடுகளை உடனடியாக இடை நிறுத்துமாறும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலைமை தொடர்பில் தனித்தனியாக சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனிடத்தில் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு,

சம்பந்தன் கூறுகையில், இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். ஆகவே ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்திற்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில் தான் அமெரிக்கா காங்கிஸால் இலங்கை பற்றிய முன் கூட்டத் தீர்மானம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும்.

அரசாங்கம் இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும்காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம் என்றார்.

விக்னேஸ்வரன் கூறுகையில், உறுப்பினர் ரொஸ் தம் சார்பிலும் மற்றைய உறுப்பினர் நால்வர் சார்பிலும் இந்தக் முன்கூட்டத் தீர்மானம் முன்வைத்து அது வெளிநாட்டலுவல் குழுவிற்குத் தற்போது பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாம் நடத்திய “பறிபோகும் எமது வடகிழக்குக் காணிகள்” பற்றிய மெய்நிகர்கூட்டம் கூட தீர்மானத்தினை முன்னிலைப்படுத்த உதவியிருக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனென்றால் ரொஸ் குறித்த மெய்நிகர் கூட்டத்தை மிக உன்னிப்பாகச் செவிமடுத்தார் என்று அறிகின்றேன். இந்தத் தீர்மான வரைவு நடந்ததையே வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அரசாங்கம் செய்வதாக வாக்களித்துப் பின்னர் நடைமுறைப்படுத்தாதவற்றையே குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் சபையின் 2017மே, ஆண்டின் 30/1 தீர்மானம் முன்னர் ஸ்ரீலங்கா செய்வதாக வாக்களித்தவற்றையே மேலும் உறுதிப்படுத்தியது. அவையாவன –

1. பொதுநலவாய நாடுகளின் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் மேலும் விசாரணையாளர்களைக் கொண்டு பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஒரு பொறிமுறையாக விசேட நீதிமன்றமொன்றை உருவாக்குவது.

2. உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை உருவாக்குவது.

3. காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகத்தை உருவாக்கல்.

4. மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் பற்றிய அலுவலகத்தை உருவாக்கலும் நிறுவன ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதும்.

5. முரண்பட்டிருக்கும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்தல்

ஆகவே இவை பற்றி அப்போதிருந்த அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பின்னர் புதிய அரசாங்கம் வந்த பின் குறித்த 30/1 தீர்மானம் இலங்கையால் கைவாங்கப்பட்டது.

இதுபற்றிக் கூறி புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் குறித்த தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. போர்க்குற்றம் இழைத்தவர்கள் அரசாங்கத்தால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை.

2. நீதிமன்றங்களால் போர்க்குற்றம் புரிந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு அளித்தமை.

3. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதியின் கைகளுக்கு அதிகாரம் முற்று முழுதாகச் சென்றடைய வழிவகுத்துள்ளமை.

4. போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணை செய்யாது தடுத்து வைத்துள்ளமை.

5. பெரும்பான்மையினரின் அதிகாரங்களைப் பெருக்கி வைத்து தனித்துவமாக அவர்கள் சார்பில் அரசாங்கம் நடத்தி வருவது.

6. பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் சதா கண்காணித்து வர நடவடிக்கைகள் எடுத்துள்ளமை.

7. படையினரைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும்.

இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் இந்தக் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இதுகாறும் கொடுத்து வந்துள்ள உறுதி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியே இந்தக் கூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதால் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படலாம், சமாதானம் நிலைநாட்டப்படலாம் என்றும் கருதப்பட்டுள்ளது.

தீர்மானத்தில், போர் முடிந்து 12 வருடங்கள் ஆகிவிட்டுள்ளமை பற்றியும், போரில் இறந்தவர்களை நினைவுறுத்தி வாழும் மற்றவர்களின் மீள் நிர்மாண முயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளமை பற்றியும், 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் 46/1 ஆம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியே மேற்படி கூட்டத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விசாரணைகள் நடைபெறாத வரையில் தம்மைப் பற்றி தமக்கு எதிரானவர்கள் அநியாயமாகப் பழி சுமத்துகின்றார்கள் என்று தொடர்ந்து கூறி வரலாம். ஆனால் விசாரணைகள் நடந்தால் உண்மை புலப்பட்டு விடும். அதனால்த்தான் சாட்சிகள் இன்றி போர் நடத்திய அரசாங்கம் விசாரணைகளுக்கும் சர்வதேச மக்களின் கண்டனங்களுக்கும் அஞ்சுகின்றது.

உண்மையில் இலங்கை போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மனிதாபிமான முறையில் தனது மக்களை, முக்கியமாகத் தமிழ் மக்களை, நடத்தி வந்திருந்தால் அது ஏன் இவ்வாறான கூட்டத் தீர்மானங்களுக்குப் பயப்பட வேண்டும்? எதற்காக சீனா போன்ற நாடுகளிடம் மன்றாடித் தஞ்சம் புக வேண்டும். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கின்றது.

நான் குறித்த கூட்டத் தீர்மானத்தை வரவேற்கின்றேன். காலக்கிரமத்தில் இலங்கை சர்வதேச குற்றவியல் மன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் வாக்கெடுப்பு விரைவில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு முன்னோடியாகவே மேற்படி கூட்டத் தீர்மானத்தைப் பார்க்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

சிவகுமாரனின் நினைவேந்தலுக்கு பொஸிசார் அனுமதி மறுப்பு -ரெலோ தவிசாளர் தனித்து அஞ்சலி

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளளது.

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியாவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத்தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தாம் தடையேற்படுத்துவதாகத் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து பொது இடத்தைத் தவிர்த்து பிரத்தியேக இடத்தில் விளக்கேற்றி தவிசாளரால் அஞ்சலிக்கப்பட்டது.

இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் சயனட் அருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய முதல் வித்து பொன் சிவகுமாரனின் 47 ஆவது நினைவு தினம் ஆகும். இத்தினத்தினை உத்தியோகபூர்வமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை வருடாவருடம் அனுஸ்டித்து வருகின்றது.

இந்நிலையில,நேற்றைய தினம் பொன் சிவகுமாரனின் சிலை மற்றும் நினைவுத்தூபி உள்ள பகுதிகள் பிரதேச சபையினால் சிரமதானம் செய்யப்பட்டது. பகிரங்க நினைவேந்தலினை, கோவிட் அபாய பயணத்தடைகள் நீக்கத்தின் பின்னர் பிரிதொரு தினத்தில் உரிய ஏற்பாடுகளுடன் மேற்கொள்ள சபையின் கட்சித்தலைவர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் சிலைக்கு இன்றைய தவிசாளர் விளக்கேற்றி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில,; தவிசாளர் இன்று காலை உரிய சிலை அமைந்துள்ள இடத்திற்கும் நினைவுத்தூபி அமைந்துள்ள இடப்பகுதியிலும் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தவிசாளர் எவரையும் பொருட்படுத்தாமல் நினைவேந்தலுக்கான பொருட்களை எடுத்துச்சென்ற போது பொலிஸார் தவிசாளரைச் சூழ்ந்து கொண்டனர். விளக்கு ஏற்ற முடியாது என பொலிஸ் தரப்பும் அஞ்சலிப்பதை தடுக்க முடியாது என தவிசாளரும் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள், அரசின் பகிரங்க பயணத்தடை உள்ள நிலையில் நாம் அத்தியாவசிய சேவைகளை சகலரும் அனுமதிக்கப்பட்டுள்ளோம். விளக்குக் ஏற்றுவது அத்தியாவசிய சேவை கிடையாது.

தொற்று தொடர்பான பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் தாங்கள் பொது இடத்தில் செயற்படுவது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டனர். இதற்குத் தவிசாளர் “நினைவேந்தல் பிரச்சினை கிடையாது. ஆனால் பொதுமக்கள் நன்மை கருதிய சுகாதார நோக்குடைய பயணத்தடை மட்டுமே காரணம் ஆயின் நாம் முரண்படவில்லை என்றார்.

பொலிஸாரும் அமோதித்த நிலையில், பயணத்தடை நீக்கத்தின் பின்னர் நாம் பொது இடத்தில் மேற்கொள்வோம்” என தவிசாளர் வெளியேறிச் சென்றார்.

இதன் பின்னர் பொது இடத்தினைத் தவிர்த்து உரும்பிராயில் பிரத்தியேக இடத்தில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. பின்னர் கருத்துரைத்த தவிசாளர், அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்கும் நோக்குடனேயே செயற்படுகின்றது.

அதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் நாட்டில் உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது. அப் பொறுப்புணர்வை நாம் மீறியதாக இருக்கக்கூடாது என்பதற்காக பிரத்தியேக இடத்தில் அஞ்சலித்தேன். தொற்று அபாயநிலை கட்டுப்பாட்டுக்குள் வரும்போது பொதுஇடத்தில் ஏனையோருடன் சிவகுமாரனின் அஞ்சலி நிகழ்வு திட்டமிட்டவாறு இடம்பெறும் என்றார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு மட்டும் நினைவேந்தல் செய்ய அரசாங்கம் தடை! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர்கள் மட்டும் நினைவேந்தல் செய்ய முடியாத அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் மட்டுமே தங்களது இறந்த, படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவேந்துவதற்கும் அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் ஆளும் ஆட்சியாளர்கள் தடை விதித்து அடக்குமுறைகளை இரும்புக் கரம் கொண்டு மேற்கொள்கின்றனர்.

கொரோனாவை தற்போது காரணம் காட்டி நினைவேந்தலை உறவினர்கள் செய்வதற்கு கூட மறுக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் மட்டுமே இவ்வாறான பாகுபாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் உறவுகளுடன் நடைபெறுகின்றன. அதற்கு எவ்வித தடைகளும் இல்லாது பொலிசார் கை கட்டி பார்த்த வண்ணம் உள்ளனர்.

வடக்கு கிழக்கில் புலனாய்வாளர்கள் மறைமுக அச்சுறுத்தல், பொலிசார் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் குவிக்கப்பட்டு தடுத்தல் மற்றும் நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை எடுத்தல் போன்ற ஐனநாயக அடக்குமுறைகள் சொல்லில் அடங்காது.

கடந்த காலங்களில் தமிழர் தாயகப்பகுதியில் பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டன அதன் தொடர்ச்சி தற்போதும் தொடர்கிறது தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுச் சிலை ஐந்து தடவைகள் கடந்த காலத்தில் உடைக்கப்பட்டது.

அதே போல தமிழாராச்சிப் படுகொலை நினைவுச் சின்னம் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டன பின்னர் தியாகி தீலிபனின் நினைவு தூபி உடைக்கப்பட்டது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டது மேலும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் மே 13 இல் உடைக்கப்பட்டது. இதனை விட என்னும் பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

உண்மையில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை படுகொலை செய்தது மட்டுமல்ல அவர்களது நினைவுச் சின்னங்களையும் உடைத்தார்கள் தற்போது நினைவேந்தலை செய்வதற்கும் அரச இயந்திரத்தின் மூலம் தடை செய்கின்றனர் இது ஐனநாயகம் என்ற பெயரளவு ஆட்சியில் நடைபெறும் அராஐகம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் -வெளிவிவகார அமைச்சு கருத்து

யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன கட்டுமான நிறுவனத்தின் கட்டிடத்திலேயே சீன கொடி காணப்பட்டதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விசேட நிகழ்வுகளின் போதே தேசியகொடிகள் ஏற்றப்படலாம்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த சம்பவம் உள்ளுரில் பொறுப்பாக உள்ள உள்ளுராட்சியின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்தில் நிகழ்வு ஏதாவது இடம்பெற்றுள்ளதா சீன கொடியை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் உள்ளுராட்சிஅமைப்பிடம் அனுமதி பெற்றதா என பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உள்ளுராட்சி அமைப்பு இது குறித்து விசாரணை செய்யவேண்டும் வெளிவிவகார அமைச்சில்லை எனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.