அரசாங்கத்தின் மீது வெறுப்பு அதிகரிப்பு : நாட்டையும், மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டுவதே சிறப்பு – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைவடையவில்லை.

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதே மிகுதியாகியுள்ளது.

அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வற்றோரை காண்பது அரிதாகவுள்ளது என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்., பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை. சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை.

அரசியல் முரண்பாடுகளை துறந்து அனைத்து தரப்பினரது யோசனைகளையும் ஒன்றினைத்து சிறந்ததிட்டத்தை வகுக்குமாறு குறிப்பிட்டுள்ளோம்.

எமது கருத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் நாம் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை . அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிராத பொது மக்களை காண்பது தற்போது அரிதாகவே உள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சித்து பொது மக்கள் முகப்பு புத்தகத்தில் விடயங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.

பதிவில் எனது பெயரையும் ,புகைப்படத்தையும் இணைத்து ‘ மதகுருவே தற்போது மகிழ்ச்சியா ‘ என பதிவிடுகிறார்கள். பொது மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் எந்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் பாதுகாக்க வேண்டும் என . இறுதியில் வேண்டியக் கொள்ளும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

Posted in Uncategorized

வன்னியில் கால் நடை தீவனம் தொடர்பில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் எம்.பி அவசர கடிதம்!

வன்னி மாவட்டத்தில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான தீவனத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.

பசு மாடுகள் வளர்ப்பின் நலன் கருதி அவற்றிற்கான தீவனத்தினை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி வன்னி மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க அதிபர்களுக்கு குறித்த அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் வீட்டில் கால் நடைகளை வளர்த்து வரும் கால் நடை பண்ணையாளர்கள் குறிப்பாக பால் தரும் நல் இன பசு மாடுகள் வளர்ப்பினை வாழ்வாதாரமாக கொண்டு அதனூடாக பெறப்படுகின்ற வருமானத்தினையே நம்பி அதிலே தங்கி தங்களது நாளாந்த வாழ்க்கையை நடாத்தி வருகின்ற மக்கள் இந்த பயணத்தடையின் மூலமாக இவ் கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாமையால் சிரமத்தையும் பல விதமான கஸ்டங்களையும் எதிர் நோக்குகிறார்கள்.

தீவனக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதனால் இவர்களுடைய கால் நடைகளுக்குரிய குறிப்பாக மாடுகளுக்குரிய தீவனத்தினை பெற முடியாதுள்ளது.

இதனால் கால்நடை உயிரினங்களுக்கு உரிய உணவினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய தீவனத்தினை கால் நடைகளுக்கு வழங்க முடியாமையினால் உரிய பலனை பெற முடியாத நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இவ்வளவு காலமும் கிடைத்த வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் விளைவாக உரிமையாளர்கள் தங்களுடையதும் தங்களை சார்ந்து வாழ்பவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த பயணாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதினால் அதனூடாக ஈட்டப்பட்டு வந்த வருமானம் அறவே இல்லாமல் போயுள்ளது.

ஆகவே இவ் தீவன விற்பனையாளர்கள் இதனை பயனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய வகையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யலாம் அல்லது மக்கள் அத்தியாவசிய தேவைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது போன்று இவ் தீவன நிலையங்களையும் திறந்து பொருட்களை விற்பனை செய்ய உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டால் சாலச்சிறந்ததாக அமையும் என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தினால்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியவற்றுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பிற்கு அமைய,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது முதல் கட்டமாக சவிரி குளம், வங்காலை, தலைமன்னார் பியர் போன்ற பகுதிகளில் வசிக்கும் 107 குடும்பங்களுக்கு 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்த் வழங்கி வைத்தார்.

நயினாதீவு வருடாந்த ஆலய உற்சவம் பிற்போடப்பட்டது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்துவதற்கு முன்னர் தீர்மாணம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ரணில் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகளை வன்மையாக கண்டிப்பதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவதென்ற பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது இத்தகைய போலியான ஊடக பிரசாரத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், சம்பிக ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித்த சேனாரத்ன,அசோக அபேசிங்க ஆகியோர் ஆமோதித்ததோடு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை, அதன் ஆதரவு கட்சிகளுடன் முரண்பாடு இருப்பதுபோன்ற போலியான செய்திகளை பரப்புவதன் பின்னால் மக்களால் நிராகரிக்கப்படும் அரசாங்கத்தையும், நிராகரிக்கப்படும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் டீல் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். குறிப்பாக கடந்த அரசாங்க காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் டீல் வைத்துக்கொண்டிருந்தவர்களே இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்படுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை பிளவுபடுத்தும் திட்டத்திலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அழுத்தம் கொடுத்திருக்கின்றார். ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை சுகம் விசாரிக்க சென்றிருந்த வேளையே மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்ற விடயங்களும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துக்கொண்டு, அவர் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்கும் நோக்கத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக உழைப்பதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமானதாக நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அதிகபட்ச நிவாரணங்கள், சலுகைகளுடன் துறைமுக நகரில் முதலீடு செய்யுங்கள்: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சர்வதேச சமூகத்திடம் இன்று முன்வைத்தார்.

2021 இலங்கை முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இந்த மாநாட்டில் 65 நாடுகள் இணையவழியில் இணைந்துகொண்டன.

இந்த மாநாட்டில், 2030 ஆம் ஆண்டளவில் தனிநபர் நிகர உற்பத்தியை 8000 டொலர்கள் வரை அதிகரிப்பதற்குத் தேவையான துரித பொருளாதார மாற்றத்திற்கான திட்டம் உள்ளதாகவும் அதற்கான நிலையான பொருளாதார கொள்கையைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தை உலகின் துரித அபிவிருத்தி பிராந்தியமாகவும் சேவை வழங்கும் மத்திய நிலையமாகவும் மாற்றுவதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி, முதலீடுகளுக்கு இடையூறாகவுள்ள கொள்கைகளை சீரமைத்து, வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் போன்றே சுகாதாரத்திற்கு ஏற்புடைய விவசாய முறைமையில் முதலீடு செய்யவும் ஏனைய நாடுகளுக்கு மாநாட்டில் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

தமது அரசாங்கம் மசகு எண்ணெய் பயன்பாட்டை குறைத்து மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 2030 ஆம் ஆண்டளவில் தேசிய எரிசக்தி தேவைப்பாட்டின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக ஈடு செய்ய முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன் பொருட்டு, பாரியளவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை துறைகளில் முதலீடு செய்ய முன்வருமாறும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உற்பத்தி கைத்தொழில் துறையின் முதலீடுகளையும் நாம் ஊக்குவிக்கின்றோம். குறிப்பாக இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் தயாரிப்புத்துறை போன்றவற்றை ஊக்குவிக்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு அனுப்பி வெற்றிகொள்ள எதிர்பார்க்கின்றோம். பூகோள அமைப்பு ரீதியாக இலங்கை மில்லியன் கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை பிறப்பிக்கும் கடல் கேபிள் கட்டமைப்பு அருகே அமைந்துள்ள நாடாகும். ஆகவே, பிராந்தியத்தின் தவல் தேவைகளை நிறைவேற்றும் தரவு மத்திய நிலையத்தின் எல்லையாக அமைகிறது. அந்த சந்தர்ப்பத்தை மேலும் விரிவுபடுத்த தனிப்பட்ட தகவல் காப்பு குறித்த புதிய சட்டங்கள் வழிவகுத்துள்ளன. இந்த விதிமுறைகள் இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது

என ஜனாதிபதி மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரதமர் மஹிந்த – இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று(07) சந்தித்து பேசியுள்ளார்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து, ஒரு மாத இடைவெளியில் இருவரும் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்து கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் பிரதேச சபை உப தவிசாளர் ரெலோ ஜெனமேஜயந் உள்ளிட்ட பத்து பேர் கைது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளருமான ஜெனமேஜயந் உட்பட 10 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்குடியிப்பு ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை இன்றைய தினம் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலை வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதியின் கருத்து

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

1,700 ஐ கடந்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் (06) நாட்டில் 2,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 205,333 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,172 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 167,304 ஆக அதிகரித்துள்ளது.