மே 18 ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரியுங்கள் – வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் வேண்டுகோள்

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு – கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். என வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது.

இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும்.

இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிக் கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்கு சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் உயிரிழந்தவர்களை கண்ணீரோடு நினைவுகூரும் நாளாகும். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது.

படுகொலை செய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் விடுதலை வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுநிற்கின்றோம்.

அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே 18 2021 செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணி – ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்புதல் மக்களை செபிக்க அழைத்தல்.

ஈகைச் சுடர் ஏற்றுதல் இரண்டு நிமிட அக வணக்கம் இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம். மாலை 06.15 மணிக்கு இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஓலித்தல் (கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும்) இவ்வேளையில் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும் செபிக்கவும் அறிவுறுத்தவும் என்றுள்ளது.

இவ்வாண்டும் மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்

முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது .

முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல, எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது. கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண்.

மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என்ற வாஞ்சை ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்றது. எமது வளங்களை ஒன்றிணைத்து , கடந்த கால பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்று கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அழைப்புவிடுக்கின்றது.

சிங்கள-பௌத்த அரசு முள்ளிவாய்க்கால், இனப்படுகொலையை நிராகரித்து, இறுதிப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரித்து வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி வந்துள்ளது.

இறுதிப் போரை சிங்கள பௌத்ததிற்கு கிடைத்த வெற்றியாக பிரதிபலித்து மகாவம்ச வரலாற்றியலில் சிங்கள வரலாற்றியலில், சிங்கள பௌத்த தேச அரச கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக முன்னெடுத்து வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் மையத்தை வலுப்படுத்துவதன் ஊடாக, அதிகாரப் பரவலாக்கத்தை நீர்த்துபோகச் செய்து தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து வருகின்றது. தமிழரகளின் தாயகமான வடக்கு கிழக்கை துண்டாடி, ஆட்புல கட்டுறுதியை உடைப்பதன் ; வழியாக தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. இராணுவமயமாக்கலை வடக்கு கிழக்கில்

செறிவாக்கி அரசிற்கெதிரான எதிர்ப்பை அடக்கிவருகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் நினைவு கூரலை சிங்கள அரசு தொடர்ந்தும் ஈழத்தமிழர்களுக்கு மறுத்தே வந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டு தார்மீக உரிமையான நினைகூரல் பல ஆயிரம் ஆண்டுகளைக்கொண்ட பாரம்பரியம்.

இந்நினைவுகூரலுக்கு முஸ்லிம், பெரும்பான்மை முற்போக்கு அமைப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு தொடர்ந்து குரல் கொடுத்து நீதிப் பயணத்தில் இணைய அழைக்கப்படுகின்றார்கள். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்று (12) அதிகாலை 3.15 மணிக்கு பசில் ராஜபக்ஸ புறப்பட்டுச் சென்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு!

நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனை தெரிவிததார்.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொர்ந்தும் இடம்பெறும் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று (12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

இந்த மண்ணில் தமிழர்களுக்கு ஒருநீதியும்,சிங்களவர்களுக்கு ஒரு நீதியும்-ரெலோ விஜிந்தன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என இராணுவத்தளபதியிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் ஊடகங்கள் ஊடாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று (11.05.21) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இராணுவத்தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கு பற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது நல்லவிடையம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30 மேற்பட்ட புத்த பிக்குகளும் இராணுவத்தளபதிகள் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது?

Posted in Uncategorized

குருந்தூர் மலையில் இராணுவப் பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல் செயற்பாடு தீவிரம்!

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

காவல்துறையினருக்கோ, மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ, சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர், தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி, அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும்

குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

2009 இல் நடந்தது இனப்படுகொலையே: ரெலோ மதுசுதன் கடும் காட்டம்

உலகம் முழுவதும் இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டில் இனப்படுகொலை புரிந்தது என்பதை வெளிப்படையாக கூறுவதற்குத் தயங்குகின்ற காலத்தில் தமிழினப் படுகொலையே நடந்தது என்பதைப் பல இடங்களிலும் அங்கீகரித்து வருகிறார்கள் என ரெலோ நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(11) சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே-18 அண்மித்துவிட்டது. எங்கள் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாள். இன்று மே-11. இந்தநாட்களில் முள்ளிவாய்க்காலிலும், வன்னிப் பெருநிலப்பரப்பிலும் எங்கள் உறவுகள் வகை தொகையாக கொன்றொழிக்கப்பட்டார்கள். இந்த மாதத்தில் நாங்கள் வழமையாக ஒன்றுகூடி நினைவு கூருவதுண்டு.

எனவே, மே-18 அன்று நல்லூர் பிரதேச சபையின் விசேட கூட்டத்தைக் கூட்டி நினைவஞ்சலியை நிகழ்த்துவதற்கு நான் பரிந்துரைக்கின்றேன்.

1915 ஆம் ஆண்டில் ஆர்மேனியப் படுகொலை இனப் படுகொலை என உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலைக்குப் பின்னர் இந்திராகாந்தி அம்மையால் இந்தியப் பாராளுமன்றத்தில் இனப் படுகொலை எனக் கூறப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டு சட்டசபையில் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். வடமாகாண சபையிலும் இது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர். அதேபோன்று கனடா நாட்டின் ஒரு உள்ளுராட்சி மன்றத்திலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை அங்கீகரித்துள்ளனர்.

எங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி அமைதியான முறையில் எங்கள் சபையில் மே-18 நாளை நாங்கள் நினைவு கூர வேண்டும் என்பதை இந்தச் சபையின் தாழ்மையான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். எனவே, மே-18 அன்று எங்கள் இனம் சார்பான கோரிக்கையாக விசேட கூட்டத்தை நினைவு அஞ்சலிக் கூட்டமாக கூட்ட வேண்டும் என அன்புடன் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவிக்கையில், மதுசுதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுத்த பின்னர் பதில் வழங்குகின்றேன் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை – நாமல்

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை (digital vaccine identity card) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டை தடுப்பூசி திட்டத்தை சீராக செயற்படுத்த உறுதி செய்யும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடையாள அட்டையில் தடுப்பூசி பெற்ற நபரின் விபரங்கள், தடுப்பூசியின் வகை, பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியின் விபரங்கள், வழங்கப்பட்ட திகதி மற்றும் இரண்டாவது ஜப் வரவிருக்கும் திகதி மற்றும் தடுப்பூசி செயன்முறை தொடர்பான ஏனைய தகவல்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை இன்று நள்ளிரவு தொடக்கம் இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார்.

எனினும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றுமொரு மாகாணத்திற்கு அரச சேவைக்காக பயணிக்கும் ஊழியர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவையும் இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.

ரயில்வே பொது முகாமையாளரின் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேல் மாகாணத்திற்குள் அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று சேவையில் ஈடுபடும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை, அலுத்கம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவுக்கு பின்னர் அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் 48 ரயில்களும் இன்று நள்ளிரவின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இன்று நள்ளிரவின் பின்னர் மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.