காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் – அமெரிக்கத் தூதுவர்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு எத்தனை அநீதி நடந்தது என்பது இன்னும் இந்த உலகத்துக்கு வெளிச்சமாகவில்லை. ஆனால் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக அநீதிகளையும் புறக்கணிப்புக்களையும் தாண்டி வேறேதும் நிகழ்ந்துவிடவில்லை. என்றோ ஓர் நாள் தன் மகனையோ, கணவனையோ, அண்ணனையோ, தம்பியையோ பார்த்த நினைவையும் அவர்களின் நிலைமை என்னவென்று அறிவதற்காகவே பல படிகள் ஏறியிறங்கிய புகைப்படங்களையும் மட்டுமே ஆதாரமாக கொண்டு இன்னும் கண்ணீரோடு காத்திருக்கின்றனர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த 20 ஆம் திகதி இரண்டாண்டு பூர்த்தியானதைத்தொடர்ந்து கிளிநொச்சியில் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

2000 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட மகனை 21 வருடங்களாக தேடிவரும் 61 வயதான தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி தன்னுடைய மகனுக்கு என்ன நடந்து என்று தெரியாமலேயே உயிரிழந்தார்.

இது முதல் முறையல்ல. தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தேடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே 75 உயிர்கள் ஏக்கங்களோடு மண்ணில் இருந்து மறைந்தன.

தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி

இந்நிலையில் யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து அதிருப்தியடைவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான சுபலக்ஷ்மி, ஷியாமளா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“உங்களுடைய மகனையோ, கணவனையோ இழப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

இதுவே யுத்தத்தால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை. ஒரு பொறுப்பான அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பரிந்துரைகளை அவர்களின் வலிகளை ஆற்றுவதற்காகவாவது மதிப்பளித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் அவர்களின் குடும்பங்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே இன்னமும் இலங்கை முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறது. நாட்டின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறானவையாக இருந்தாலும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு உள்ளது.” என்றார்.

இது குறித்து நேற்று அவரோடு சந்திப்பினை மேற்கொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினரொருவரை தொடர்பு கொண்டு வினவிய போது

“2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது என்னோடு வந்த என்னுடைய மகனை இராணுவத்தினர் வந்து அழைத்துச்சென்றனர். மறுநாள் முகாம் ஒன்றில் வந்து சந்திக்கும் படி என்னிடம் சொல்லி விட்டு அழைத்துச்சென்று விட்டனர்.

மறுநாள் முகாமிற்கு சென்ற பொழுது நான் வெளியேயிருந்து அவனுக்கு கைகாட்டினேன். ஆனால் அவன் என்னைப் பார்த்தானா இல்லையா என்பதுகூட தெரியாது. அதற்கு பின்னர் அவனை அந்த முகாமில் காணவில்லை. பின்னர் ஓமந்தையிலுள்ள ஒரு முகாமில் அவனைப் பார்த்ததாக எனக்குத்தெரிந்த சிலர் சொன்னார்கள். அதற்குப்பின்னர் அவனை யாரும் பார்க்கவில்லை. அவனுக்கு என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. இதனை நாங்கள் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தோம்.

காணாமல் போன எங்கள் உறவினர்கள் பற்றி தெரியும் வரை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்த அவர் உண்மையைக் கண்டறிந்தால் மட்டும் போதுமா? இல்லாவிட்டால் இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டுமா? என்று எம்மிடம் வினவினார்.

ஆனால் எங்களுடைய பதில் ஒன்று தான். அவர்களுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை வேண்டுகோளாக உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் நாங்கள் எங்கள் ஒவ்வொரு நாளையும் மிகுந்த ஏக்கத்தோடு கடந்து வருகிறோம்.

அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதை மட்டுமாவது தெரியப்படுத்துங்கள். உயிரோடு இல்லையென்றால் அவர்கள் உயிரிழந்த தினத்தை சொல்லுங்கள். அநியாயமாக கொல்லப்பட்ட அவர்களின் ஆன்மா சாந்தியடைய கிரியைகளைச்செய்வதற்கு ஒரு நாள் கூட இல்லை என்பது எத்தனை துன்பமானது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள மறுக்கிறது.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஆணைக்குழுக்கள் பல வந்து போய் விட்டன. இன்னும் எத்தனை பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதைக்கூட எந்த ஆணைக்குழுவுக்கு சரியாக தெரிவிக்கவில்லை.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இதுவரை மன்னாரில் வெறும் 333 பேரே காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும் சரியான தரவுகளை தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

காணாமலாக்கப்பட்டவர்கள் யார் என்று இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்கள் அவர்களுக்கு என்ன ஆனது என்பதை எப்போது தேட ஆரம்பிக்கப் போகிறார்கள்.

இந்த ஆணைக்குழுக்களாலும் அலுவலகங்களாலும் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. அப்படியொன்று நடக்குமாக இருந்தால் அது என்றோ நடந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தமிழ் தேசிய பேரவை உருவாக்கம்; தமிரசு கட்சிக்குள் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் – இரா. சம்பந்தன்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் தமிரசு கட்சிக்குள் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவிற்கு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தமிழ் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றாத நிலையில், தமிழ் தேசிய பேரவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில், மத்திய குழுக் கூட்டத்தில் பேசி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

Posted in Uncategorized

யாழ்.தீவக மின்திட்ட விவகாரம்: சர்வதேச ஏல விதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனம்

வடமாகாணத்தின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறியளவிலான மின்னுற்பத்தி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்றாம் தரப்பினரால் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறியிருக்கும் சினோசோர் ஹைபிரிட் (பீஜிங்) டெக்னோலொஜி லிமிடெட் நிறுவனம், அதன் உண்மைத்தன்மை தொடர்பிலும் விளக்கமளித்திருக்கிறது.

இது குறித்து சினோசோர் ஹைபிரிட் (பீஜிங்) டெக்னோலொஜி லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள 3 தீவுகளில் சிறியளவிலான மின்னுற்பத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கிலான ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரமளிக்கப்பட்டது.

எனினும் அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக பொய்யான கருத்துக்களைக்கூறி, மூன்றாம் தரப்பொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாக அறியமுடிகின்றது. இது ஒப்பந்தம் மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதோடு, அது வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.

வடக்கில் அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் நோக்கிலும் புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி மின்னுற்பத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவொன்று கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்களை மிகவும் குறைந்த செலவில், சூழலை மாசுபடுத்ததாக வகையில் உற்பத்தி செய்து, மின்சாரத்தை நிலையாக வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கடனுதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மின்சாரசபை இதனை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்ரானுடனான ஹக்கீம், றிசாத்தின் சந்திப்பு ரத்து – பாதுகாப்புத்தான் காரணமாம், அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லையாம் – அமைச்சர் கெஹெலிய

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ரவூப்ஹக்கீம் ரிசாத் பதியுதீன் உடனான பாக்கிஸ்தான் பிரதமரின் சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களிற்காகவே இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான முடிவுகளை இருநாடுகளையும் சேர்ந்த அரசியல்குழுவொன்றே எடுக்கின்றது அரசாங்கத்திற்கு இதில் தொடர்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் சந்திப்பு இடம்பெறும் பகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு கரிசனைகளை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

USA: இலங்கையின் முகவராக செயற்பட்ட நபருக்கு சிறை

2014ம் ஆண்டு, இலங்கை தொடர்பாக நிலவிய கருத்துக்களை மாற்றியமைக்கும் நிமித்தம் அமெரிக்காவில் பாரிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முகவராக நியமிக்கப்பட்டிருந்த நபருக்கு 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இமாத் சுபேரி என அறியப்படும் குறித்த நபர் மீது வரி மோசடி மற்றும் வெளிநாட்டு முகவராக செயற்பட்டு அமெரிக்க அரசியலுக்குள் கருத்துக்களை விதைத்தல் மற்றும் வெளிநாடுகளின் பணத்தை அரசியலில் முதலிட்டமை போன்ற பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வழக்கில், இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை உருவாக்க இமாத் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டிருந்தமையும் இலங்கையிடமிருந்து குறித்த நபர் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பாக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம்

இலங்கை தொடர்பாக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம்திங்கள் பெப்ரவரி 22, 2021

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனத்தை செலுத்துவதற்காக பிரிட்டன் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப அமர்விற்கான அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையையும் சிரியாவையும் பிரிட்டிஸ் அரசாங்கம் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ள டொமனிக் ரப் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவனத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்போம் எனவும் அவர்n தெரிவித்துள்ளார்.

மனிதஉரிமைகளை திட்டமிட்ட அடிப்படையில் மீறுபவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் வலுவான சர்வசே அமைப்பினை நாங்கள் விரும்புகின்றோம் மனித உரிமை பேரவை தனது பணியை முழுமையாக செய்யவேண்டும் அல்லது அதன் நற்பெயர் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரேரணை பற்றி பிரித்தானியாவுக்கு ரெலோ கடும் விசனம் தெரிவிப்பு

எதிர்வரும் மாசி 22 ல் ஆரம்பிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட  இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்குமுகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை  என்பதில் ரெலோ கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு தனது இங்கிலாந்து கிளையின் ஊடாக நேற்று முன் தினம் அனுப்பி வைத்துள்ளது.

அந்தச் செய்தியில்,  தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட மாதிரி பிரேரணை கிடைக்கப்பெற்றது.  உங்கள் முயற்சிக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரேரணையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் பிபி7 ஓபி 6 சரத்துக்களை பாராட்டும் அதேவேளையில்  மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12-01-2021 திகதியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும்,  இங்கு இணைக்கப்பட்டுள்ள நாம் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்து கைச்சாத்திடப்பட்டு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும், ஆக்கபூர்வமானதும் முடிவானதுமான  சரத்துக்களை உள்ளடக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2009இல் நடந்துமுடிந்த யுத்தத்தில் எமது மக்கள் முகம் கொடுத்த சர்வதேச ரீதியாக அட்டூழிய குற்றங்கள் என்று கருதப்படும் இனப்படுகொலை உட்பட யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமது இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள  முறைகளை கோரி நாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம் என்பதை  நன்கு அறிவீர்கள்.

பொறுப்புக்கூறலும்  இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான சர்வதேச பொறிமுறை  அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ அதற்கொப்பான பொறிமுறை அல்லது  விசேட தீர்ப்பாயத்திற்கு பாரப்படுத்துதல்

சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை  ஒன்று உருவாக்கப்பட்டு மேற்படி நீதி வழங்கலுக்கு உதவியாக ஆதாரங்கள் திரட்டப் படல்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பிரதிநிதிகள் இலங்கையில் அமர்த்தப்பட்டு இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் அறிக்கையிடப்படல்

எமது மக்களிளுடைய  அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான நமது சுயநிர்ணய உரிமையைமையையும் வடக்கு கிழக்கு பூர்விக தாயகத்தையும் அங்கீகரிக்கும் நீண்டகால கோரிக்கையான அரசியல் தீர்வினை சர்வதேச மத்தியஸ்த தோடு நிறைவேற்றுதல் என்பனவாகும்

மனித உரிமை ஆணையாளருடைய அறிக்கையில் பெரும் நம்பிக்கையோடு இருந்த எமக்கு இந்த மாதிரி வரைவு வலிமையிழந்த நிலையிலே இருப்பதையும்  அறிக்கையில் இடப்பட்ட விடயங்களிலிருந்து அதிக தூரம் விலகி செல்வதோடு கடந்தகால பிரேரணைகளான 30/1, 34/1, 40/1  ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு இருப்பதையும் அவதானிக்கிறோம்.

எங்களுடைய நீதிக்கான கோரிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளமையையம்  மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உறுப்புரிமை நாடுகளின் மீதான எம்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக இருப்பதையும் உணர்வதால்,  சமர்ப்பிக்கப் பட இருக்கின்ற பிரேரணையை,  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் முகமாக அமைய வேண்டுமே தவிர குற்றவாளிகளை தப்பிக்க இடமளிப்பதாக  இருக்கக் கூடாது   என்பதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Posted in Uncategorized

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உத்தியோகபூர்வ ‘So Sri Lanka’ என்ற சுற்றுலா குறிச்சொல் வரியை கேலி செய்து, ‘I’m Sri Lanka, I’m So Genocide, என்று பலூன்களில் அச்சிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என நம்பகத் தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை.

இலங்கைப் படையினரைத் தற்போதைய எதிர்கால அச்சுறுதல்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாற்றுவதில் இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதன்மூலம் பிராந்தியத்தினதும் உலகினதும் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் அது விளங்குவதை உறுதி செய்ய விரும்புகின்றது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது தொடர்ந்தும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தும். இது எங்கள் பயிற்சி உதவி மற்றும் ஈடுபாடுகள் தொடர்பில் அடிப்படையான விடயம்.

இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம். படையினர் கொள்கைகள், இராணுவக் கலாசாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக ஆராய்வோம் .

அத்துடன் மனித உரிமைகளை நிலைநாட்டுவது, நம்பகத் தன்மை மிக்க பொறுப்புக் கூறல் மற்றும் நீதி நடைமுறைகளுக்கான இராணுவத்தின அர்ப்பணிப்பையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும்.

தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் இலங்கையில் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது.

பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பது சர்வதேச சட்டத்தை உறுதி செய்வது ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் முக்கிய சோதனையை எதிர்கொள்கின்றது.

மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும்.

2005 முதல் 2015 வரை அவரது சகோதாரர் அரசாங்கத்திற்கு தலைமை வகித்தவேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார்.இந்த காலப்பகுதி மோசமான மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாக காணப்பட்டது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கொல்லப்பட்டனர் சித்திரவதை செய்யப்பட்டனர் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பும் பல யுத்த குற்றங்களிற்கு காரணம். யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கைபடையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான எறிகணைதாக்குதல்களை மேற்கொண்டனர்,விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகப்படுபவர்களை கொலை செய்தனர்.

புதுப்பிக்கப்பட்டுள்ள அச்சங்கள்

2015 இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தவேளை புதிய நம்பிக்கைகள் காணப்பட்டன,அதிகளவு கருத்துச்சுதந்திரம் காணப்பட்டது,தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் காணப்பட்ட ஒடுக்குமுறை மிகுந்த இராணுவமயப்படுத்தபட்ட சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

அவ்வேளை புதிய அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியது,
ஆனால் மீண்டும் அச்சம் திரும்பியுள்ளது,வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தினர் அதிகரிக்கும்

துஸ்பிரயோகங்களை சந்தித்துள்ளனர்,கடந்த வருடம் முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசியகீதம் பாடப்படுவது கைவிடப்பட்டுள்ளது.

சிறுபான்மை தமிழர்களின் மத உரிமைகள் தாக்குதலிற்கு உட்பட்டுள்ளன,இந்து ஆலயங்கள் தலையீடுகளை சந்திக்கின்றன.

2015 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை 2020 இல் ராஜபக்ச அரசாங்கம் கைவிட்டது.

2015 தீர்மானத்திற்கு ஆதரவளித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களை அது அச்சுறுத்துகின்றது.

முன்னைய அரசாங்கத்தின் அரசியல்பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மனித உரிமைதுஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளது.
யுத்த குற்றங்களுடன் தொடர்புபட்ட பலர் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் பொறுப்புக்கூறல் குறித்த முழுமையான வெறுப்பை வெளியிட்டுள்ளது,கடந்த செப்டம்பரில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிரான மனித உரிமை பேரவையின் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் அற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை – அவைநீதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்படுகின்றன என்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கு புதிய தீர்மானம் அவசியம், மிகமோசமான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கவேண்டும்.

இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்கால ஆபத்துக்களை குறைப்பதற்காக இந்தியா ஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புநாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்.

Posted in Uncategorized