ரஞ்சன் அமெரிக்கா பயணம்

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தடை நீக்கப்பட்டதையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (29) அதிகாலை அமெரிக்கா சென்றதாக விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் ஊடாக KR-663 இல் கட்டாரின் டோஹாவிற்கு புறப்பட்டார்.

அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 10 இசை நிகழ்வுகளிலும், கனடாவில் 05 இசை நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று முன்தினம் (27) இரவு அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக மீண்டும் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized | Tagged

அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது

மலையகத்தில் ஒரு காலகட்டத்தில் அடாவடி அரசியலே இடம்பெற்று வந்தது. அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது. மக்கள் நலன்சார் விடயங்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கடந்த காலங்களில் நான் பங்கேற்கவில்லை. ஏனெனில் நான் கலந்துகொண்டால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்களின் நலனை கருதி நானும் அமைதியாக இருந்தேன். ஒரு சில பாடசாலைகளுக்கு மட்டும் செல்வதுண்டு.

இப்படியான அடாவடி அரசியல் கலாச்சாரமே இங்கு இருந்தது. ஆனால் தற்போது அந்நிலைமை இல்லை. நாடாளுமன்றத்தில் வைத்து நாங்களும், ஜீவனும் பேச்சு நடத்தினோம். அவர்களின் அரசியலை அவர்கள் முன்னெடுப்பதற்கும், எங்கள் வழியில் நாங்கள் பயணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் நலன்சார் விடயங்களின் போது இணைந்து செயற்படவும் இணக்கத்துக்கு வந்துள்ளோம்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து கூலித்தொழிலாளியாக இருக்க முடியாது. அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எமது ஆட்சியில் நிச்சயம் முன்னெடுக்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில பாடசாலையொன்று அவசியம். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நல்லாட்சியின் போது எடுத்திருந்தோம். ஆனால் கைக்கூடவில்லை . சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் செய்வோம் என்றார்

கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடும் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் பதவிக்கு போட்டியிட கட்சியின் தலைமைத்துவமும் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக முஜிபுர் ரஹ்மான் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் சாதகமான நிலைமை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியில் பலர் கருதுகின்றனர்.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பதற்கான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவே வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை சூசகமாக கூறியிருந்தார். கொழும்பு மாநகர சபையின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிவடையவுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனு, வேட்பாளர் ஒருவர் தொடர்பான சிக்கல் காரணமாக நிராகரிக்கப்பட்டது

கோவிட் தொற்றால் ஏற்பட்ட நிலைமை மாற இன்னும் 3 வருடக் காலப்பகுதி தேவை! மைத்திரீ விக்ரமசிங்க

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும் இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட் தொற்று நிலைமை காரணமாக பாரிய பின்னடைவு சகல துறைகளிலும் காணபட்டுள்ளன. அவ்வாறான நிலையினை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

அதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையாக இருக்கின்றது என ஜனாதிபதியின் பாரியார் மைத்திரீ விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சர்வதேச ஆய்வு மாநாட்டு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை உரையாளராக, இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்ரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியாக பண்புபற்ற வதிவிடங்களை உருவாக்க மனிதாபிமான உதவிகள் மேம்படுத்தப்படும். கடந்தகாலத்தை பின்பற்றாது எதிர்காலத்தில் வலுமையுள்ள சமூக கட்டமைப்பினை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது – என்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும்,12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இதில் கொழும்பு, களனி, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விப் புலமையாளர்கள், மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி -ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங் ,யாழ் இந்தியத் துனைத்தூதர் ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP – அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP – திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB – அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி), ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA – டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) , டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தூதரக அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

கலந்துரையாடலில் பங்கு கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வடமாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்திரமான பங்கை வகிப்பதுடன் விரைவில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவித்தனர்.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் – அரசாங்கம்

இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தின் பிரச்சனைகள் இங்கு வருவதை விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசுகளின் போட்டியிலிருந்து இலங்கை எப்போதுமே விலகி இருக்கும் என்றும் இந்தப் போட்டிகள் எதுவும் இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கு வழிவகுக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

காவல்துறை கட்டளைச் சட்ட பயன்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

அரசியலமைப்பின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவல்துறை கட்டளை சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுத்து மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 14 (1) அ, மற்றும் ஆ சரத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், காவல்துறை கட்டளைச் சட்டத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை அனைத்து பிரஜைகளுக்கும் உள்ளதென, குறித்த சர்த்துகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டியே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி வைப்பு

உலக வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்தினால் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 60 புதிய அம்புலன்ஸ்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அண்மையில் சுகாதார அமைப்புகளுக்கு கையளிக்கப்பட்டன.

நாட்டின் சுகாதார அமைப்பின் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட இந்த அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் பெறுமதி 24.4 மில்லியன் ரூபாவாகும், அதன்படி நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளின் மொத்த பெறுமதி 1464 மில்லியன் ரூபாவாகும்.

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்தா, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பிரதி பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) சிசிரகுமார, பணிப்பாளர் (போக்குவரத்து) ஏ.சி.எச்.எஸ். ஜிசாந்த, உலக வங்கியின் பொது சுகாதார சேவைகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தீபிகா ஆர்ட்டிகல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், பேராயருடன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் பயோலா பம்பலொனி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, மனித உரிமைகள் நிலைவரம், சட்ட மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதேவேளை இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தல், ஆட்சிநிர்வாகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன்றைய தினம் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ள பயோலா பம்பலொனி, இலங்கையிலுள்ள மதச்சிறுபான்மையின மக்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு – திஹாகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றநிலை

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து திஹாகொட பொலிஸ் நிலைய வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.