”ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும்”

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Posted in Uncategorized

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

தவிர்த்தது இந்தியா : எதிர்த்தது சீனா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, இதற்கு ஆதரவாக 20 நாடுகளும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர்.  20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டன. இந்தியா வாக்களிப்பில் இருந்து விலக்கிக்கொண்ட நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இலங்கையின் ஈடுபாடு அவசியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம்,  இலங்கை அரசாங்கம் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த முழுமையான அனைவரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களிற்கு முழுமையான ஆதரவளிப்போம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை மீதான தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள், நிறுவனங்களில் மாற்றம்

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் நிறுவனங்களில் மாற்றம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர், கைத்தொழில் அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் கீழான ஒரு சில பணிகள் பொறுப்புகளே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, ஆட் பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய நிறுவனங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்! முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுமாறு மீண்டும் அழைப்பு

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
ஜப்பான்-பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
கடன் வழங்கி உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி, கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமெனவும் இங்கு குறிப்பிட்டார்.
அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும் தென்கிழக்காசியாவுடனான நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

விவசாயத் துறை தொடர்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் கடந்த போகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அறுவடையை பெற முடிந்ததாகவும், அடுத்த பெரும் போகத்தை எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் என்பன தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்.

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) முற்பகல் கூடிய போது, புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

22 ஆம் திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைப்பு!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்தத் திருத்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இன்றும் (06) நாளையும் (07) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு கடந்த 29 ஆம் திகதி தீர்மானித்திருந்தது.

Posted in Uncategorized

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை 4இடம் மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற மீனவர்கள், கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் , சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் முந்நூறு பேர் முல்லைத்தீவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தாக்க குறித்த மீனவர்கள் முற்ப்பட்டபோது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் “அமைதியான முறையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களான தம்மீது, சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளின் ஆதரவோடு ஈடுபட்டுவரும் மீனவர்கள் இன்று தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளார்கள் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத தொழில்களுக்கு எதிரான மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Posted in Uncategorized