இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது -மோகன் பகவத்

இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வம் காட்டியபோது இந்தியா மாத்திரமே உதவியதாக இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம் என்பது “இந்தியாவின் ஆன்மா” என ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய அமைப்பான பாரத் விகாஸ் மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் வர்த்தக வாய்ப்புகளை கண்டதும் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை பிரச்சனையில் இருக்கும் போது, ​​இந்தியா மாத்திரமே ஆதரவு அளிக்கிறது என்றார்.

Posted in Uncategorized

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு பலரும் எதிர்ப்பு!

நீதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிடப்படுவதாக சிவில், அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி, நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்  என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள்,  நாசகார செயலில்  ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செய்வதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய விமானப்படை, கடற்படை, இராணுவத்தின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி  சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின்  பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்றி குறித்த பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடுவதாக அமையும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலமே நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் – காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஸ்ணமூர்த்தி ஹாங்ஜோன்சன் உட்பட 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்

குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து ம் அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

குறிப்பிட்ட கடிதத்தில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தனது 77 அமர்விற்காக கூடுகின்ற இந்த தருணத்தில் இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர்உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாயாளருடன்இணைந்து செயற்படுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் எனகுற்றம்சாட்டப்படுபவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கு தடைகள் உட்பட இராஜதந்திர சாதனங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

தசாப்தகாலயுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால்பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் பரிகாரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாத்திரம் இலங்கை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காணமுடியும்.

2009 இல் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலிகளிற்கும் எதிரான 27 வருட கால போரில்ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்;டனர் காணாமல்போயினர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

13 வருடங்களிற்கு பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என சமீபத்தைய செப்டம்பர் 22 – ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

2020 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல கடந்த கால குற்றங்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு இலங்கை இன்னமும் தீர்வை காணவில்லை என்றஅடிப்படை பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்இஅனைத்து சமூகத்தினரும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியற்று காணப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுப்பதில் அமெரிக்கா முக்கியமான நாடாக காணப்படுகின்றதுஇ2015 இல் இலங்கை இணை அனுசரணை வழங்கிய தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா முன்னிலையில் காணப்பட்டது.

2021 இல் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பது நீதியை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை வழங்கியது.

எனினும் 2019 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் உறுதிமொழிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்வாங்கினார்.

அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைமாற்று நீதி செயற்பாட்டை முன்வைக்கவில்லை.

குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும்.

இலங்கையின் மூன்று அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார்- மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் .

இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை அவர் சந்திக்க உள்ளமை குறிப்பிடதக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கு கடன் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம்: IMF

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தங்கியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னரே அது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தலைவர் Peter Breuer மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki ஆகியோர் ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அனுமதி தேவைப்படுகிறது.

அதற்காக, இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், இந்த வேலைத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு செலவாகும் காலம், கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான காலத்தை உறுதியாகக் கூற முடியாது என Peter Breuer, Masahiro Nozaki ஆகியோர் கூறியுள்ளனர்.

Posted in Uncategorized

கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஜனாதிபதி பிலிப்பைன்ஸில் தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபையின் 55 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இன்று நடைபெற்றது.

கொரோனா தொற்று நிலைமைக்கு பின்னரான உலகின் காலநிலை மாற்றத்திற்கு அமைய, பசுமையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.

மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், வங்கியின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் குழுவின் வர்த்தக அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு இலங்கையின் கடன் வழங்குநர்களும் கடன் பங்குதாரர்களும் ஆதரவளிப்பார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Ferdinand R. Marcos-ஐ மணிலாவில் சந்தித்தார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை முன் நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

22 ஆவது அரசியலமைப்பு மீதான விவாத்திற்கான நாள் குறிப்பு

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவர் நிரோஷிற்கு எதிரான மாவீரர் தின நினைவேந்தல் வழக்கு முடிவுறுத்தப்பட்டது

கடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

மல்லாகம் நீதிமன்றில் கடந்த ஆண்டு மாவீரர் தினம் அனுஷ்டிப்புத் தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 28 ஆம் திகதி புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளபட்டது.

அவ் வழக்கில, அச்சுவேலி பொலிசாரின் மேலதிக அறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சட்டம் ஒழுங்கை மீறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மல்லாகம் நீதிமன்றம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை விடுவித்தது.

கடந்த (2021) மாவீரர் தினத்திற்கு முன்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக அவர் உள்ளிட்டவர்கள் குற்றவியல் சட்டக் கோவை சரத்து 106 , பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் கொவிட் தொற்று சட்ட ஏற்பாடுகளையும் அறிவுறுத்தல்களையும் மீறி மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் எனத் தெரிவித்து, அதற்குத் தடை விதிக்குமாறு (வழக்கு இல AR 1577/21) மன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதனை ஆட்சேபித்து கடந்த ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தலைமையில் சட்டத்தரணி திருக்குமரன் உள்ளிட்ட குழாம் எதிர்த்து வாதிட்டிருந்தது.

அவ் வழக்கில், (கடந்த ஆண்டு) குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைப்பதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது எனவும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவுறுத்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்க வேண்டியவர்கள் எனவும் தெரிவித்திக்கப்பட்டிருந்தது.

மேலும், எவராவது சட்டத்தை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் பொலிசாருக்கு மன்று தெரிவித்திருந்தது. அவ்வாறு நீதிமன்று தெரிவித்திருந்த நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு கடந்த 14 ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 14 திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கில் நிரோஷ் சட்டம் ஒழுங்கை மீறியுள்ளாரா என பொலிசாரிடம் நீதிபதியினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந் நிலையில் அடுத்த தவணையான நேற்று புதன் கிழமை வழக்கு அழைக்கப்பட்ட போது மேலதிக அறிக்கையினை அச்சுவேலி பொலிசார் தாக்கல் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கு இனி அழைக்கப்படமாட்டாது எனத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பிற்கு முதலீடு செய்கிறது அவுஸ்திரேலியா

இலங்கை கடல் எல்லையில், அவுஸ்திரேலியாவினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிகப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைகழகத்தின் தலைமையில், நாட்டின் சில நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கடல்சார் எதிர்வுகூறல கட்டமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீன்பிடி, கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சமுத்திரவியல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பிரதிபலிப்பாக குறித்த திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் கொண்டாடத் தயாராகும் அமைச்சர்கள்- கொழும்பு பேராயர் கண்டனம்

தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

மட்டுமாகலை புனித இருதய தேவாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கிறிஸ்துமஸ் வரவுள்ளது. சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையின் தலைவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு நகரை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்தேன். பயன் என்ன? மக்களின் பொக்கெட்டுகள் காலியாக உள்ளன. உலகில் எல்லா நாடுகளிடமும் பிச்சை எடுக்கும் நாடாக இலங்கை மாறிவிட்டது.
தலைவர்களுக்கு ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள், மாறாக மக்களிடம் சென்று அவர்களின் வலிகள் மற்றும் துன்பங்களை விசாரிப்பார்கள் . எவ்வாறாயினும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடமையை புறக்கணித்து பாராளுமன்றத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

“மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், தலைவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி குழந்தைத்தனமாக நடந்து கொள்கின்றனர். இன்று உணவின்றி நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள், குழந்தைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால் நோய்வாய்ப்படுகிறார்கள். எனினும், தலைவர்கள் மக்களின் துயரங்களைக் கண்டும் காணாதது போல் செயற்படுகின்றனர்” என பேராயர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏராளமானோர் வேலை வாய்ப்பையும், வருமான ஆதாரங்களையும் இழந்துள்ளனர். இலங்கையில் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் கணிசமானோர் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்என பேராயர் மேலும் தெரிவித்தார்..