இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட குழு நியமிப்பு

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தற்போது சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3,800 பேர் மாத்திரமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

ஐ.நா. சபையில் கூறிய கூற்றை ஜனாதிபதி மறுத்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலே ஐநா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐநாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆகவே பிரதமராக இருந்து ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றது எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து.

ஆகவே ஜனாதிபதி அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ஜனாதிபதி நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

அதை விட ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, ஏன் இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை அவர் செய்து கொண்டு இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தவகையிலே இந்த சட்டங்களின் ஊடாக ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அந்த மக்கள் இந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள்.

தற்போது புதிய ஜனாதிபதியாக ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான். ஆகவே மகிந்த குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலேதான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது இந்த சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அந்தவகையிலே இந்த விடயத்திலே மக்களினுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அரசாங்கத்துக்கு ட்ரான்ஸ்பேரன்சி அமைப்புக் கண்டனம்

நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் அந்நிறுவனம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடம்

சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீடு அளவில் உலக பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கடைசி மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா பிரபல நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. நடப்பாண்டில் 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது.

ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் இந்த சதவீதத்தை எட்ட முடியவில்லை என சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளது.

குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இங்கிலாந்தில் விரைவில் ஆட்சி தலைமை மாற உள்ளது. தற்போது அங்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்து உள்ளதால் புதிதாக பதவி ஏற்க உள்ள பிரதமருக்கு இது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார பின்னடைவு 2024-ம் ஆண்டு வரை நீடிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Posted in Uncategorized

மார்ச்சில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

Posted in Uncategorized

”இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்”: சீனா!

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன சீன வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும்” – மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் மற்றும் நிறைவு விழா நேற்று மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மத்திய செயற்குழு கூட்டத்தில்  அனுமதி வழங்கிய கட்சியின் யாப்பு திருத்தத்திற்கு அகில இலங்கை செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

சிரேஷ்ட உப தவிசாளர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கட்சியின் கொள்கைக்கு  முரணாக ஒழுக்கத்தை மீறுவோரை கட்சியில் இருந்து நீக்குதல் தொடர்பிலான திருத்தமும் இதில் உள்ளடங்குகிறது.

‘எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ ) அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில்தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்கள் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு இன்று காலை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரனம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அரசியல் கைதிகள்

”முதலாவதாக குரல் அற்றோர் குரல் அமைப்பினரின் வேண்டுகோளை சுட்டிக்காட்டி கையளிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விபரம் இச் சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

24 கைதிகள் தண்டனை வழங்கப்பட்டு இருப்பதனாலே நேரடியாக ஜனாதிபதியின் உத்தரவில் விடுதலை செய்யப்பட முடியும் என்றும் கால தாமதம் இன்றி அவர்களை விடுவிக்குமாறும் கோரப்பட்டது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 22 கைதிகள் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பினால் விடுதலை செய்ய முடியும்.

தண்டனை வழங்கிய பின்னர் தான் விடுதலை செய்ய முடியும் என்ற அரசியல் யாப்பு நிலைப்பாட்டை கருத்தில் கொள்வதாக இருந்தால் இனி வழக்கு தொடுத்து தீர்ப்புகள் வழங்கப்படுவது இவ்வரசியல் கைதிகளின் விடுதலையில் காலதாமதத்தையே ஏற்படுத்தும்.

அதேநேரம் நல்லாட்சி அரசின் காலத்தில் புனர்வாழ்வு அளிக்கும் முறைமையின் கீழ் கைதிகளை விடுதலை செய்யலாம் என்ற திட்டத்தை அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி நடைமுறைப்படுத்த முற்பட்டதும் நினைவு கூரப்பட்டது.

குரல் அற்றோர் குரல் அமைப்பினர் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்யும் பொறிமுறை, அது குறுகிய காலப் புனர் வாழ்வின் அடிப்படையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை வழங்கப்பட்ட 24 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றவர்களுடைய விடுவிப்பு சம்பந்தமாக நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலதிகமாகத் தடுப்பில் உள்ள முப்பத்து எட்டு அரசியல் கைதிகளுக்கு எதிராக எந்த குற்றங்களும் இல்லாததனால் ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரையின் படி அவர்களை விடுவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

இரண்டாவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றி பேசப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு சர்வதேச மேற்பார்வை உடனான பொறிமுறையே அவசியம் என்பதை கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அதையே வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையற்ற நிலையில் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பொறிமுறையே காணாமல் ஆக்கப் பட்டவர்களுகான நீதியை பெற்றுத் தரும் என தொடர்ந்தும் கோரி வருகிறோம்.

எனவே அதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐ. நா அமர்வுகளுக்கு பின்னராக நீதி அமைச்சருடன் அதற்கான குழு ஒன்றை அமைத்து தமிழர் தரப்புடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

மூன்றாவதாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற வேலைத்திட்டத்தை இனிமேலும் பின் போடாது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே நல்லாட்சி காலத்தில் அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது.

அது நிறைவேற்றப்படாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஒரு நிர்வாக ரீதியான தரம் உயர்த்தலுக்கு அரசியல் காரணங்களைக் காட்டிப் பின் போடுவது அந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதாக அமையுமே தவிர எத்தரப்புக்கும் நன்மை பயக்காது என்று எடுத்துரைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி விரைந்து அதை செயல்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு

நான்காவதாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் குறிப்பாக வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள், தொழில் செய்ய முடியாமல் படும் தொடர் துன்ப நிலையும் அவர்களுடைய பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தாங்கள் முன்மொழிந்த சலுகைகளை வரவேற்கிறோம்.

அதேநேரம் விதைப்புக் காலம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், ஏற்கனவே உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளினாலும் எரிபொருள் விலையேற்றத்தினாலும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது அவர்களுக்கான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவை சரியான நேரத்திற்கு வழங்கப்படாத விடத்து எதிர்வரும் போகத்தில் பாரிய சிக்கலை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தப் போகத்தில் விவசாயம் பாதிக்கப்படுமாக இருந்தால் நாடு ஒட்டுமொத்தமாக உணவுப் பஞ்சத்தில் வீழ்ந்துவிடும்.

சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமாவது உதவிகளைப் பெற்று இந்த பிரச்சினைக்கு அவசர முடிவு காண வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் என்பவற்றை பிரஸ்தாபித்த பொழுது காணி கையகப்படுத்தல் உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் இராணுவ பிரசன்னத்தை பாதுகாப்புச் சபையின் ஊடாக கட்டங்கட்டமாக குறைக்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்குவதோடு, புலம்பெயர் முதலீட்டாளர்கள் சம்பந்தமான அரசியல் அதிகார ரீதியான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே அவர்களை நம்பிக்கை கொள்ள வைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் எல்லா விடயங்களுக்கும் அவசியமான மற்றும் அவசரமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஏன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்?

ஐம்பதுக்கும் அதிகமான நாட்களின் பின்னர் அவர் மீண்டும் வந்துள்ளார்.

இலங்கையிலிருந்ததப்பியோடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது.

இலங்கையை ஒரு காலத்தில் இரும்புபிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண்ட விதம் காரணமாக சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவரது உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து அங்கிருந்து ஜூலை 13ம் திகதி மாலைதீவிற்கு தப்பியோடியபின்னர் அதிகளவில் கவனத்தை ஈர்க்காத வண்ணம் வாழ்ந்தார்.

நாட்டில் காணப்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் அவர் ஏன் மூன்று ஆசிய நாடுகளிற்கு சென்றார் என்பது குறித்து அவர் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

ஏன் தான் திரும்பிவர தீர்மானித்தார் என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

சில செயற்பாட்டாளர்கள் கோட்டாபய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் ஆனால் அவரின் சகாக்கள் ஆட்சியில் உள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டிற்கான அவரது மீள்வருகை மேலும் ஆர்ப்பாட்டங்களை தூண்டுமா என்பது நிச்சயமற்ற விடயமாக காணப்படுகின்றது.

மாலைதீவு சிங்கப்பூர் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருந்த பின்னர் அவரை அனுமதிப்பதற்கான நாடுகள் இல்லாத நிலையை அவர் எதிர்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் அவரது வாழ்க்கை முறையை தொடர்வதற்கான செலவும் ஒரு காரணம் என விடயமறிந்த வட்டாரங்கள் 23ம் திகதி ரொய்ட்டருக்கு தெரிவித்தன,தனிப்பட்ட விமானம் மெய்பாதுகாவலர்கள் ஜனாதிபதிக்கான தங்குமிடம் போன்றவை. இவற்றிற்காக அவர் பெரும்பணத்தை செலவிட வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவிற்கான வீழ்ச்சி என்பது தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் பிரிவினைவாதிகளை தோற்கடித்தமைக்காக மக்கள் அவரை போர் அரசன் என வழிபட்ட நிலையிலிருந்து ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவரின் வீழ்ச்சிக்கு நான் எனும் அவரது அகங்காரமே காரணமாகயிருக்கலாம் என தெரிவிக்கின்றார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.

அவர் தங்கியிருப்பதற்கான இடத்தை கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது( வெளிநாட்டில்) என தெரிவித்த அம்பிகா சற்குணநாதன், அவர் கற்பனை செய்ததை விட அது கடினமாக காணப்பட்டது என்கின்றார்.

இவர் ஒருகாலத்தில் கடவுளின் சக்தி பொருந்தியவராக கருதப்பட்ட அரசியல்வாதி; பொறுப்புக்கூறலிற்கு உட்படும் அனுபவம் பழக்கம் அவருக்கில்லை எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லல்

ராஜபக்ச முதலில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றார்- கொழும்பிலிருந்து 90 நிமிடங்களில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றுவிடலாம்.

அவரது விமானம் தரையிறங்குவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்- தற்போது சபாநாயகர் தலையிட்டார் அதன் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது என உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இலங்கையர்கள் மகிழ்ச்சியடையவில்லை பலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிருந்து அவரை தூக்கி எறியுங்கள் மாலைதீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரின் கையில் காணப்பட்ட பதாகை தெரிவித்தது,அன்பான மாலைதீவின் நண்பர்களே குற்றவாளிகளிற்கு இடமளிக்கவேண்டாம் என உங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளுங்கள் என மற்றுமொரு பதாகை வேண்டுகோள் விடுத்தது.

இதற்கு 48 மணித்தியாலத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச சவுதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

தனிப்பட்ட விஜயம் காரணமாக அவருக்கு நாட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு ஜூலை 14 ம் திகதி உறுதி செய்தது.

அவர் புகலிடம் கோரவில்லை நாங்கள் புகலிடமும் வழங்கவில்லை என அவ்வேளை சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதன் பின்னர் ராஜபக்ச சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடும் என பல செய்திநிறுவனங்கள் தெரிவித்தன ஆனால் அது இடம்பெறவில்லை.

அவர் ஏன் சவுதி அரேபியா செல்லவில்லை என்பதற்கான விடைகள் இதுவரை கிடைக்கவில்லை.

எனினும் 2020 இல் கோட்டாபய அறிமுகப்படுத்திய கடும் விமர்சனத்திற்குள்ளான கொவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை காரணமாகயிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நடைமுறை இஸ்லாமிய மத கொள்கைகளிற்கு முரணாணது என 2020 டிசம்பரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனம் தெரிவித்திருந்தது,சவுதி அரேபியாவும் இதில் ஒரு உறுப்பு நாடு,முஸ்லீம்களின் நம்பிக்கையை அடிப்படையாக உடல்களை புதைக்கும் நடைமுறை மதிக்கப்படவேண்டும் என ஓஐசி வேண்டுகோள் விடுத்திருந்தது.

பின்னர் அந்த கொள்கையை கைவிட்ட ராஜபக்ச எனினும் கொவிட்டினால் இறந்த முஸ்லீம்களின் உடல்களை தொலைதூரத்தில் உள்ள இடமொன்றில் குடும்ப உறுப்பினர் மத அனுஸ்டானங்கள் இல்லாமல் புதைக்கவேண்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

சிங்கப்பூரிலிருந்து அவர் இலங்கையின் தலைவர் என்ற பதவியிலிருது தனது hhஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்தவேளை கோட்டாபய ராஜபக்ச , இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்காக குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் சாத்தியப்பாடு காணப்பட்டது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் சட்டத்தரணிகள் ஜூலை 23ம் திகதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைதுசெய்து விசாரணை செய்யவேண்டும் என கோரும் மனுவை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தாக்கல் செய்தனர்.

இனி என்ன நடக்கப்போகின்றது

இலங்கை வியாழக்கிழமை பொருளாதார ஸ்திரதன்மையை நோக்கிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது,2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

மோசமான உணவு எரிபொருள் மருந்து தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் அரசாங்க வருமானத்தை அதிகரித்து அதன் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் இலங்iயின் ஸ்திரதன்மையை உறுதி செய்வதே இந்த நான்கு வருட திட்டத்தின் நோக்கம்.

எனினும் சர்வதேச நாணயநிதியம் இன்னமும் கடனிற்கான அனுமதியை வழங்காத நிலையில் பொருளதார மீட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் இலங்கை பயணிக்கவேண்டியுள்ளது.

ராஜபக்சவின் வருகை மீண்டும் நாட்டில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 21 ம் திகதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர்.

சிலர் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை உட்பட பல குற்றங்களிற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்,இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகளும் எதிர்கட்;சிகளும் கண்டித்துள்ளன.

நிச்சயமாக அச்சமொன்று உள்ளது என்கின்றார் மனித உரிமை சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்,மேலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமா என்பதை தெரிவிப்பது கடினமான விடயம் ஆனால் வாழ்க்கை செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுகின்றன பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது என்கின்றார் அவர்.

மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்தும் உணவு எரிபொருளை பெறமுடியாத நிலையில் உள்ள அதேவேளை இலங்கை திரும்பியவுடன் ராஜபக்ச வாழவுள்ள வசதியான வாழ்க்கை மீண்டு;ம் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்த உள்ளது.

இதுவே எனது மக்களை வீதிகளிற்கு கொண்டுவருகின்றது இந்த ஏமாற்று- நடவடிக்கைகளால் அவர்கள் சீற்றமடைகின்றனர் என்கின்றார் அம்பிகா.சற்குணநாதன் .

முன்னாள் தலைவர் யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கின்றார் உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா.

அரசியல்வர்க்கம் அவரை பாதுகாக்கும் அவர் தப்பியோடியபோதிலும் அவருக்கு தேவையான அவசியமான கட்டமைப்புகளும் அப்படியே உள்ளன என தெரிவிக்கும் ஜஸ்மின் சூக்கா ஆர்ப்பாட்ட இயக்கம் உடைந்து அச்சமடைந்து சிதைவடைந்ததாக காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார்.

துணிச்சலா சிவில் சமூக குழுவொன்று அவருக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்வதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் சட்டமா அதிபர் திணைக்களமும் காவல்துறையும் அதற்கு அனுமதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எப்போதும் உள்ளது என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.

நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளகூடாது கோட்டாவை உரிய விதத்தில் இலங்கை கையாள்வது எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை உலகிற்கு தெரிவிக்கும் என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.

Source:CNN

பாராளுமன்ற செங்கோலுக்கு இல்லாத மரியாதை சீனாவின் உளவுக் கப்பலுக்கு வழங்கப்படுவதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம் – பா.உ.  ஜனா

இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது. அதைவிட வேதனையான விடயம் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து மரியாதை கொடுக்காத தேரர் சீனக்கப்பல் வரும் போது மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமாக கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் உள்ளது. ஏனெனில் அம்மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே இடைப்போக வேளாண்மையை முடித்து தற்போது பெரும்போகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதால் அவர்கள் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியானது இல்லை. இததனை விவசாய அமைச்சர் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாதீட்டு விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் விவாதித்துக் கொண்டிருக்கையில் சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்டத்தில் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க முன்வந்திருப்பதையிட்டு ஓரளவுக்கு இந்த நாடு மூச்சு விடக்கூடிய நிலைமைக்கு வரும் என்பது எல்லோருடையதும் எதிர்பார்ப்பு. அதே வேளையில் அவர்கள் சில நிபந்தனைகளைக் கூட வைத்திருக்கிறார்கள். வரியைச் சரியாக பேணிப்பாதுகாப்பது, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம்,  ஊழல் அதுதான் இந்த நாட்டில் மலிந்து கிடப்பதும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானதும், அதைவிட மேலாக இலங்கைக்குக் கடந்த காலங்களில் கடன் கொடுத்த நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும்.
நேற்றைக்கு முதல் நாள் மத்திய வங்கியின் ஆளுனர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அவர் குறிப்பிடும் போது இந்த நாடு சுதந்திரமடைந்த காலமிருந்து தன்னிறைவடையவில்லை. கடன்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன்களைப் பெற்றிருப்பதாகச் சொன்னார். அதே வேளையில் 80 ஆண்டுகளில் பெற்ற கடன்களில் இந்த நாட்டை முன்னேற்றுவதாகக் கூறயிருந்தார்.
மகாவலி அபிவிருத்திக்கும் நீர் மூலமான மின்சார உற்பத்திக்குமாக கடன்களை அந்தக் கடன்கள் பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் மகாவலி அபிவிருத்தி ஊடாக அரிசியில் தன்னிறைவடைந்திருந்தாலும் மகாவலி அபிவிருத்தி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான குடியேற்றங்களை மையப்படுத்தியே அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீர் மூலமாக 60 வீதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் ஏனைய தற்போதைய ஊழலின் மத்தியில் டீசலில் இயக்கம் ஜெனரேற்றர்கள் மூலமாகவும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களிலும் ஊழல்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவித வருமானத்தையும் ஈட்டாத முதலீடுகளுக்காக கடன்களைப் பெற்று அதன் மூலமாக மில்லியன் கணக்கான டொலர்களை தரகுப் பணமாகப் பெற்றிருக்கின்றார்கள் என்பதனையும் அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.
80 காலகட்டத்தில் மகாவலி மூலமாக அரிசியில் தன்னிறைவு அமைந்திருந்தாலும் தற்போது என்னுடைய மாவட்ட நெல் உற்பத்தி, விவசாயம் சம்பந்தமாகப் பேசவேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன் நெல் விலையைத் தீர்மானிப்பதும் பசளை இறக்குமதி செய்வதும் பொலநறுவை, அனுராதபுர விவசாயச் செய்கையைப் பொறுத்தே செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு போகங்களில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நஸ்டத்தையடைந்திருக்கிறார்கள். ஒரு அந்தர் யூரியாவை 43ஆயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். களை நாசினிகளுக்கு 20ஆயிரத்துக்கும் மேல் கொடுத்திருக்கிறார்கள். இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சபைக்கு நெல்லைக் கொடுத்தவர்கள் தற்போது வரை பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் நெல் விலை 7000 ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது 8000 ரூபாவாக மாறியிருக்கிறது. ஆனால். அந்த நெல்லை விவசாயிகள் வைத்திருந்திருந்திருந்தால் 8000 ரூபாவுக்கு விற்றிருப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்த நெல்லுக்கு பணம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் டீசல் பற்றாக்குறை, களை நாசினி பற்றாக்குறை, யூரியா பற்றாக்குறையினால் மாவட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து வேளாண்மை செய்கை பண்ணியிருந்தார்கள். ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியைச் செய்திருந்தார். கடன் தள்ளுபடி செய்ததும் கூட ஏனைய மாவட்டங்களின் அடிப்படையில் அந்தத் தள்ளுபடியைச் செய்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு அம்பாரைப் பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே வேளாண்மை செய்தவர்கள் என்பதால் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியில்லை. ஏனெனில், அந்தப் போகத்துக்குரிய கடனைச் செலுத்திவிட்டால்தான் அடுத்து போகத்துக்கு கடன் பெறமுடியும். எனவே விவசாய அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தடவை பெரும்போகச் செய்கைக்கு முன்னர் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட விவசாயிகளுக்கான யூரியா பசளைகளை ஏற்கனவே கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்குரியவை ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாக அறிகின்றோம். எங்களுடைய மாவட்டத்திற்கும் நேரகாலத்திற்கு முன்னர் யூரியா பசளையை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 இலட்சம் ஏக்கர் பெரும்போகம் செய்யும் மக்கள் இம்முறை செய்கை பண்ணமாட்டார்கள் என்ற ஒரு முடிவை மாவட்ட செயலக மட்டத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதனை மிக வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் பெற்ற கடன்களினால் அம்பாந்தோட்டடைத் துறைமுகமாக இருந்தாலும் சரி, மத்தள விமான நிலையமாக இருந்தாலும் சரி, ராஜபக்ச விளையாட்டரங்காக இருந்தாலும் சரி, தாமரைக் கோபுரமாக இருந்தாலும் சரி இந்த நாட்டுக்கு எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பதாக இல்லை. எங்களைவிடச் சிறிய நாடான மாலைதீவிலிருந்து நாங்கள் கருவாடை இறக்குகின்றோம். மாசியை இறக்குகின்றோம். மீன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குகின்றோம். இப்படியான வருமானத்தைத் தராத முதலீடுகளைச் செய்ததற்குப் பதிலாக இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இலங்கையைச் சுற்றிக் கடல் இருக்கின்றது. கடற்தொழில் செய்வதற்கான பயிற்சியும், அதற்கான படகுகளையும் வாங்கிக் கொடுத்திருந்தால் கூட மீன்களிலே, கருவாட்டிலே தன்னிறைவடைந்திருக்கும். வெளிநாடுகளுக்குக் கூட அதனை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று அதளபாதாளத்துக்குள் இந்தப் பொருளாதாரம் சிக்கிக் கிடக்கின்றது.
இந்த நெருக்கடிக்குள் எமது நாட்டுக்கு உதவிய நாடு நமது அயல்நாடு இந்தியா மத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியில் 4 பில்லியன் கடன்களை வழங்கியிருக்கின்றது. குறைந்த வட்டியில் 800 மில்லியனை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக வழங்கியிருக்கிறது. கடன் அடிப்படையில் 700 மில்லியன் எரிபொருளுக்காக வழங்கியிருக்கிறது. விவசாய உரத்துக்காக 55 மில்லியன் டொலர் உதவியிருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணை. அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு, பால்மா, மருந்துப் பொருட்கள் இங்கு கிடைத்திருக்கின்றன. இந்தியா இந்தக் காலகட்டத்தில் உணவுக்கப்பலை அனுப்புகிறது. உதவிக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது.
ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்க முடியாத தேரர் சீனக்கப்பல் வரும் போது அதற்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்கிறார். இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா என்று கேட்கின்றேன் என்று தெரிவித்தார்.