அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது: K.V.தவராசா அறிக்கை

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி முதல் நடந்த அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து, தகுந்த தண்டனையைப் பரிந்துரைக்க, உரிய அதிகாரங்களைக் கொண்ட ‘உண்மை ஆணையத்தை’ நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் கேலிக்கூத்து முயற்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி வெளியே வந்தார்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.இதன்படி இன்று பிற்பகல் அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.அவரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் சென்றார்.

இதன்பின்னர் விகாரைக்கு சென்று அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2017  ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12  ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு

23 ஆவணி 2022 மாலை 6.30 மணி அளவில் ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் திருமதி சபின் சிட்லர் மற்றும் இலங்கைக்கான விசேட அதிகாரி திரு. மரியோ கியோரி ஆகியோருடனான முக்கிய சந்திப்பு ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஏற்பாட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவஞானம் ஸ்ரீதரன், கோவிந்தன் கருணாகரம், ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரத்தியேக காரணங்களால் பங்குபெற்ற முடியவில்லை.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னராக, ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய நாடாகவும், ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாகவும் இருக்கும் உலக வல்லரசுகளில் ஒன்றான ஜெர்மனியுடன் நடாத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரதான நாடாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி, தமிழ் மக்கள் சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் 46/1 அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட பிரகாரம் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப் படுத்துவதற்கான கோரிக்கையை ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் கட்சித் தலைவர்களால் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

ஐநாவில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என்று தமிழ் கட்சித் தலைவர்களால் சுட்டிக் காட்டப் பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை, புனர் வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நிலை என்ற பல அவசரமான பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகம் உட்பட தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தாலும் இலங்கை அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் நோக்கங்களில் அர்ப்பணிப்பு அற்ற நிலையே தொடர்ச்சியாகக் காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய திருமதி சபின் சிட்லர் அவர்கள், நீதிப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் பிரதான நாடுகளுடன் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநா பொறிமுறைக்கு வெளியிலும் குறிப்பாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இலங்கைக்கான நிதி வழங்கல் என்பவற்றினூடாக தாங்கள் இலங்கையை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

எதிர்வரும் செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை ஜெர்மனிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் பிரதான மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா காண அலைகடலெனத் திரண்ட அடியவர்கள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் இன்று காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

தேர்த்திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆசார சீலர்களாக அதிகாலை முதல் ஆலயத்தின் நாலா புறங்களிலுமிருந்து வருகை தந்தனர்.

அடியாளர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும் அடி அழித்தும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், நூற்றுக் கணக்கான காவடிகளும் வருகை தந்திருந்தன.

Posted in Uncategorized

மே 9ஆம் திகதி பஸ்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முறைப்பாடு

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் பஸ்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 2.03 சதவீதத்தால் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 183.16 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,828.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2.10 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது சுவிட்சர்லாந்து அரசாங்கம்

இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குளிர்காலத்தில் சுவிஸ்டர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிரித்து, இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்களைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனை வழங்கியிருந்தது.

அத்துடன், இலங்கை விவகாரத்தில் சமூக வலைத்தளங்கள் உட்பட அரசியல் கலந்துரையாடல்களைத் தவிர்க்குமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தமது குடிமக்களுக்கு சுவிஸர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இலங்கைக்கான பயணத்திற்கு முன்னரும், பயணத்தின் இடைநடுவிலும் சமகால சூழ்நிலை, ஊரடங்குச் சட்டங்கள் குறித்து ஊடகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஆராயுமாறும் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வு இதுவாகும் எனவும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளதாக தெரிவித்த தமிழக முதல்வர், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.