நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணைைவழி சந்திப்பு

17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீதரன் கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்தா அவர்கள் கலந்துகொண்டு இருந்த பொழுதிலும் உடல்நிலை காரணமாக கூட்டத்தில் தொடர்ந்தும் பங்குபெற்ற முடியவில்லை.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சமாதான நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வத்தோடு கடந்த காலங்களில் பங்கு பற்றி இருந்த பொழுதிலும் 2009 யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் அவர்களின் பங்களிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து தமிழ் மக்களிடமிருந்து எட்டி இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவதானிக்கப் படுவதாக தமிழ் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

அதற்கு பதில் அளித்த ஆன் கிளாட் அவர்கள், சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு தாங்கள் சர்வதேச சமூகத்தால் முன்னிலைப்படுத்த பட்டதாகவும் அது தோல்வியடைந்த பின்னர் நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக வேலைத்திட்டங்களில் சர்வதேச சமூகத்தோடு தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது எந்த கருத்து தமிழ் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல அவசரமாா பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை அரசியலில் குறைவாகவே காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஆன் கிளாட் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டுள்ள சீன கப்பலால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Posted in Uncategorized

சீன கப்பல் விவகாரம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?

லங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதால் உருவாகியுள்ள சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர்சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலில் என்ன நடந்தாலும் எங்கள் பாதுகாப்பு மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய என்ன சூழ்நிலை உருவானாலும் அது எங்களின் கரிசனைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நலன்கள் மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய எந்த விடயத்தையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என எங்கள் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தாய்லாந்தில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார அமைச்சர் விளக்கம்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் தற்போதையை பொருளாதார, அபிவிருத்தி மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள வௌிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை சந்தித்து வௌிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது வௌிவிவகார அமைச்சர் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பிலான விடயங்களில் மேலும் முன்னேற்றமடையும் வகையில், ஒருமித்த கருத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவையுடனான ஆக்கபூர்வமான செயற்பாட்டை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Posted in Uncategorized

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், மாணவன், மாணவி தற்கொலை முயற்சி!

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார்.

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது.

சீனா,இந்தியா எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்?

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன.

இந்த சீன கப்பல் பற்றி சமீப வாரங்களில் மிக அதிகமாகவே சர்வதேச ஊடகங்களும், இந்திய, இலங்கை ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளன. உண்மையில் அந்த கப்பலில் எத்தகைய வசதிகள் உள்ளன என்பதும், அதன் அறிவியல், தொழில்நுட்ப திறன்களும் முழுமையாக அறியப்படவில்லை.

சீன கப்பலுக்கு நிகரான வசதிகளை கொண்ட கப்பல் இந்தியாவிலும் உள்ளதா என்று பலரும் சமூக ஊடகங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை பகுதியளவில் ‘ஆமாம்’ என்பதே. ஆனால், அந்த கப்பல் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக இல்லை.

சீனாவில் ‘செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘யுவான்வாங்-5’ கப்பல், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறனையும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங்’ கப்பல் இலங்கைக்கு வந்தது

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?

அதுபோல, இந்தியாவில் கடந்த ஆண்டு கடற்படை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் துருவ். இது கடல் பகுதியில் இருந்தபடி இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வடிவங்களில் யுவான்வாங் கப்பல்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள யுவான் வாங் – 5 கண்காணிப்புக் கப்பல்

யுவான்வாங் என்ற சொல்லுக்கு சீன மொழியில் “நீண்ட பார்வை” அல்லது “தூர நம்பிக்கை” என்று பொருள் கூறப்படுகிறது. யுவான்வாங் என்பதற்கு நீடித்த ஆசை என்ற பொருளும் இருக்கிறது. சீன அரசாங்கம், கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது. அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு டிஷ்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆன்டனாக்கள், ராடார் மற்றும் ஸ்கேனர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.

உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன.

சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஷென்சோ விண்வெளி திட்டத்தின் அங்கமாக அதன் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக யுவான்வாங் கப்பல்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவதற்காக வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. அந்த வகையில், 1977ம் ஆண்டிலேயே இந்த ரக கப்பல்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை தமது சொந்த கடல் பரப்பைத் தாண்டி பிற கடல் பிராந்தியங்களில் இருந்து கொண்டு சர்வதேச செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்க 1986க்குப் பிறகு பயன்படுத்தப்பட்டன. அப்போது யுவான்வாங் 1, 2 ரக கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.

1995இல் யுவான்வாங் 3 ரகத்தில் இரண்டு கப்பல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் பிறகு 1999இல் யுவான்வாங் 4 கப்பல் சீன செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007இல் யுவான் வாங் ரகத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் யுவான்வாங் 5 மற்றும் 6 ரக கப்பல்கள் ஷென்சோ திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பெருங்கடல்களின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், யுவான் வாங் கண்காணிப்பு கப்பல்கள் “மூன்று பெருங்கடல்களுக்கு” செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனை முறையிலான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அனுப்பப்படுகின்றன.

கடல் எல்லைகளைக் கடக்கும் யுவான்வாங் கப்பல்கள்

பாக, மேற்கு பசிஃபிக் பெருங்கடல், தெற்கு பசிஃபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியாவின் மேற்கு இந்திய பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல் ஆகியவற்றுக்கு இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த ரக கப்பல் முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நம்பரில் பெருங்கடல்களுக்கு செலுத்தப்பட்டன. அப்போது அதன் முதலாவது, இரண்டாவது வரிசைகள் பசிஃபிக் கடலுக்கு அனுப்பப்பட்டன. யுவான்வாங் 4 ரக கப்பல் இந்திய பெருங்கடலுக்கும் ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமான்டல் துறைமுகத்துக்கும் அனுப்பப்பட்டது. யுவான்வாங் 3 ரக கப்பல், டர்பனுக்கும் பிறகு அங்கிருந்து அட்லான்டிக் கடல் பகுதிகளுக்கும் அந்த கப்பல் செலுத்தப்பட்டது.

இதில் யுவான்வாங் 4 கப்பல், 2007ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அது பயிற்சிக்கான இலக்கு கப்பலாக மாற்றப்பட்டது. 2010இல் நடந்த சோதனையின்போது ஜியாங்யின் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது டிஎஃப்21 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையின் மூலம் இலக்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

முன்னதாக, 2007இல் யுவான்வாங் 5 மற்றும் யுவான்வாங் 6 ரக மூன்றாம் தலைமுறைக்கான கப்பல்களை சீன கப்பல் கட்டுமான தொழில் கழகம் உருவாக்கியது. இதில் யுவான்வாங் 5 ரக கப்பல் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஏவுகணை செலுத்தும் கப்பலாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. யுவான்வாங் 6 ரக கப்பல், இன்டர்நெட் சேவைக்கு பயன்படும் கடலடி கண்ணாடி இழை வடம் அமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அதன் கசிவுகளை தடுக்கும் திறன்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வரை வசிக்கக் கூடிய நகருக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த வரிசையில் யுவான்வாங் 7, யுவான்வாங் 21, 22 ஆகிய கப்பல்கள் உள்ளன. அவை சீன செயற்கைக்கோள் கடல்சார் கண்காணிப்புத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. யுவான்வாங் 21, 22 போன்ற கப்பல்கள், சீனாவின் லாங்மார்ச் ராக்கெட்டுகளை சுமந்து வர பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடமாட்டம் மற்றும் சேவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

நோக்கம் என்ன?

இதில், சீனாவின் யுவான் வாங்-5 செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்தான் இப்போது, இலங்கையின் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அங்கு அந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு வார காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் நீளம் 220 மீட்டர். அகலம் 25.2 மீட்டர். 25 ஆயிரம் டன் பொருட்களை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும். பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது.

சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ ஷென்ஸோ ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 ரக கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை. இது அடிப்படையில் ஒரு போர் கப்பல் கிடையாது. ஆனால், போர் கப்பல்களுக்கு மூளையாகவும் தொழில்நுட்ப ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் திகழ்கிறது.

அந்த நாட்டைப் பொறுத்துவரை, இதுவொரு வழக்கமான பரிசோதனை அளவிலான கடல் வழி பயணம் என்றே ஆரம்பம் முதல் கூறப்படுகிறது.

இந்தியாவின் துருவ் – சிறப்பம்சங்கள் என்ன?

சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக ‘ஐஎன்எஸ் துருவ்’ உள்ளது.

இந்த கப்பல் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது முழுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டியெழுப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை, என்டிஆர்ஓ, டிஆர்டிஓ ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு இயக்கி வருகிறது.

இந்த கப்பலில் டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன ரேடார் (ஏஇஎஸ்ஏ) சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஸ்கேன் செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது.

ஐஎன்எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது.

சென்சார்கள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ ஆன்டெனாக்களின் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 டன் ஆகும். முதல் முறையாக இந்த கப்பலின் திறன் 2018ஆம் ஆண்டில் விரிவாக சோதிக்கப்பட்டது.

இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும். இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை கூறுகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.725 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பற்றிய அலுவல்பூர்வ தகவல்களை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

இத்தகைய வசதிகளுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது. துருவ் ஒரு போர் கப்பல் கிடையாது. அது போர் கப்பல்களுக்கும் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்ப ஆதாரவை மட்டுமே வழங்கும்.

BBC

Posted in Uncategorized

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மௌனம் காத்து தடை செய்த அமைப்புகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (16.08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் கால சூழ்நிலையில் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றிற்கும், தனி நபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என்பது தமிழர் அரசியல் நலன் சார்ந்த ஒன்று அல்ல அது பேரினவாத அரசியல் நலன் சார்ந்தது. தம்மால் பொருளாதார இருளுக்குள் வீழ்த்தப்பட்ட நாட்டை மீண்டும் உயிர்பிக்கும் சர்வதேச தந்திர உபாயமாகும் என்பதை தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளும், நபர்களும் புரிந்து கொள்வதோடு இத்தகைய நரி தந்திரத்திற்குள் வீழ்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு புகழ் பாடுவோரும் தங்கள் அரசியல் நலன்களுக்காக தமிழர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்கள் மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படல் வேண்டும் என குரல் எழுப்பிய போதும் அது தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே.

பேரினவாத ஆட்சியாளர்களின் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டின் யுத்த நீட்சியும் அவர்கள் மேற்கொண்ட பொது சொத்துக்களின் கொள்ளையிடலாலுமே நாடு இத்தகைய வீழ்ச்சிக்கு காரணமாயுள்ளது. தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மீளாதவர்கள் தேசத்துரோக செயற்பட்டார்கள் என அடையாளப்படுத்தியவர்களை தற்போது விடுவிப்பது என்பது சர்வதேச தேச ரீதியில் அவர்களை தமிழர்களுக்கு எதிராக பாவிக்க திட்டமிடுகின்றார்கள் என்பது தெரியும்.

தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளையும் நபர்களை மட்டும் அல்ல இதற்கு சார்பாக ஜனாதிபதிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நன்றி கூறி கூஜா தூக்கும் அரசியல்வாதிகளையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சர்வ தேசத்திலும், உள்ளூரிலும் தமிழர்களின் அரசியல் அவிலாசைகளை நீர்த்துப் போக செய்வதும் இதன் இன்னுமொரு நோக்கம். அடுத்ததாக தமிழர் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி என நாட்டுக்கு தேவையான டொலர்களை அள்ளிக் கொள்வதே அடுத்த இலக்காகும்.

இலங்கை ஆட்சியாளர்களையும் படையினரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழர்கள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழர்களை பிரித்து, தமிழர்களின் அரசியலை சிதைத்து, நீதி குரலை நசித்து அழிக்கும் மும் முனை செயற்பாட்டின் அரங்கேற்றமே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை எதிர்க்கும் தமிழர்களை தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது மட்டுமல்ல பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யவும் எத்தனைகாலம்.

சொத்துக்களை இழந்தும், சொந்தங்களை இழந்தும், உயிரோடு உறவுகளை இராணுவத்திடம் கையளித்தும், சித்திரவதைகள் அனுபவித்தும், சிறைகளில் வாடியும், வலிகளை சுமந்தும் தமிழரின் தேசியம், ஜனநாயகம் உரிமை, சுதந்திரம் என்பவற்றுக்காக தமிழர்கள் தேசத்திலும், சர்வதேசத்திலும் தொடர் போராட்டம் நடாத்துவோரை இழிவு படுத்தவோ அதற்கு துரோகம் இழைக்கவோ நினைப்பவர்கள் ஜனநாயக ரீதியில் தூக்கி எறியப்படுவார்கள்”. என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும் – விமல் வீரவன்ச

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள சீன இராணுவத்தின் யுவான் வாங் 5 கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கிறது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்கு சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனை பேணவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். யுத்த களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சிலர் இதனை உளவு கப்பல் என்றனர். நாம் இதனை தொழில்நுட்ப கப்பல் என்கிறோம்.

சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்கு கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

நாம் எதனை செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.

இந்த சந்தர்ப்பங்களில் கடன்களை விட முதலீடுகளால் அதிகம் சீனா எமக்கு உதவுமென நாம் எதிர்பார்கிறோம்.
இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும், ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச்செல்லமுடியும் என நாம் நம்புகிறோம் என்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த ஜப்பான் நிறுவனம் தீர்மானம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியதையடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அதன்படி, நிதி நிலைமை நன்றாக இல்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலக்குக் கோரும் திறன் உள்ளது.