புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு நாளை!

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை (21) பதவியேற்கவுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை முற்பகல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை இவர் பதவியேற்ற பின்னர், புதிய பிரதமர் நியமனமும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கையுடனான பேச்சுக்களை துரிதப்படுத்த ஐஎம்எப் எதிர்பார்ப்பு

இலங்கையுடனான நிதி மீட்புப் பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார் . இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து செயற்பட்டது போதும்; அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனாதிபதி அழைப்பு!

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது. நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும்.

நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம்- என்றார்.

Posted in Uncategorized

பண்டாரநாயக்க சிலை அருகே ஒன்றுகூடல்களுக்கு தடை!

கொழும்பு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்ததை அடுத்து, கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பண்டாரநாயக்க உருவச்சிலையை சேதமாக்குவதற்கு சிலர் தயாராவதாகக்  கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் இது குறித்து நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கமைய, பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான், பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்க தடை விதித்துள்ளார்.

Posted in Uncategorized

”ஜனாதிபதி தெரிவு விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை”: மறுக்கும் தூதரகம்!

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது இந்தியாவின் தலையீடுகள் இருந்தாக வெளியாகும் செய்திகளை இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் வழங்கப்பட்டதாக ஆதாரமற்றதும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த ஊடக அறிக்கைகள் முழுக்க முழுக்க பொய்யானதென நாம் திட்டவட்டமாக மறுக்கின்றோம். சிலரது கற்பனையின் தோற்றப்பாடாகவே இவ்வாறான அறிக்கைகள் அமைகின்றன.

ஜனநாயக வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றுக்கு அமைவாக தமது அபிலாஷைகளை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தி கூறப்படுகின்றது.

இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா?

யதீந்திரா?
ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தற்போது அவற்றிலிருந்து வெளியேறியிருந்தாலும் கூட, தங்களால் எவ்வேiளையிலும் அரசாங்கத்தை முடக்க முடியுமென்பதே அவர்கள் கூறமுற்படும் செய்தியாகும். அவர்களின் அடுத்த இலக்கு நாடாளுமன்றமாகும்.

விடயங்களை தொகுத்து நோக்கினால், கிளர்சியாளர்களின் இலக்கு ராஜபக்ச ஆட்சியாளர்களை அகற்றுவது மட்டும்தானா அல்லது இலங்கைத் தீவின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதா – என்னும் கேள்வி எழுகின்றது? ஏனெனில் கிளர்சியாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பல நடைமுறைக்கு சாத்தியமானவைகள் அல்ல. மாறாக, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மூலம் நடைமுறைப்படுத்த முடியாதவை. இதனை தெரியாமல் முன்வைக்கின்றனரா அல்லது அரசியல் கிளர்ச்சியை தொடர்வதற்கான ஒரு உபாயமாக முன்வைக்கின்றனரா?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை கண்டிருக்கின்றது. 1971 மற்றும் 1989இல் ஜே.பி.வி இரண்டு முறை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது. 1971 கிளர்ச்சியை அடக்குவதற்கு அப்போதைய சிறிலங்காவின் தலைவர், சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியாவின் உதவியை நாடியிருந்தார். இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் ஜே.வி.பி கிளர்சியாளர்களை இராணுவ ரீதியில் அடக்க முடியாமல் போயிருக்கும். தோல்வியடைந்த ஜே.வி.பியினர் மீளவும் 1989இல், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, இந்திய எதிர்ப்பே ஜே.வி.பியின் பிரதான இலக்காக இருந்தது. இரண்டு கிளர்ச்சிகளின் போதும் மோசமான தோல்வியை சந்தித்த, ஜே.வி.பி, பின்னர் தங்களை ஜனநாயகரீதியானதொரு கட்சியாக உருமாற்றிக்கொண்டது. ஜே.வி.பியினர், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதில் ஆரம்பத்திலிருந்தே பிரதான கவனம் செலுத்திவந்திருக்கின்றனர்.

இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலில்தான் தற்போதைய கிளர்ச்சியும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி தலைவர் ருகுணு விஜயவீர தலைமையிலான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினரும் இதில் பிரதான பங்கு வகிக்கின்றனர். கோல்பேஸ், கோட்டா கோ கோம் எதிர்ப்பு அணியில் பல தரப்பினரும் இருந்ததாக சொல்லப்பட்டாலும் கூட, தற்போது இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில், முற்றிலும் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்களே பெருபாண்மையாக இருக்கின்றனர். ஒரு வேளை கொழும்பு மைய சிவில் சமூகக் குழுக்களோ அல்லது அரசுசாரா நிறுவனங்களை சேர்ந்தவர்களோ இதில் முன்னணியில் இருந்திருந்தால், ரணிலால் அவர்களை இலகுவாக கையாண்டிருக்க முடியும். அத்துடன் அவ்வாறானவர்கள் இந்தளவிற்கு துனிகரமாக இதனை முன்னெடுக்கவும் மாட்டார்கள். கிடைக்கும் தகவல்களின்படி, இந்த கிளர்ச்சியின் பின்னாலிருப்பவர்களில், முதன்மையானவர்களாக, குமார் குணரட்ணம் தலைமையிலான முன்னணி சோசலிச கட்சியை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். இதனை குமார் குணரட்ணமும் மறுக்கவில்லை அத்துடன், இடதுசாரி சிந்தனைகளை வரித்துக் கொண்டிருக்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் பிரதான பங்குவகிக்கின்றது. பல தொழிற்சங்கங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. தென்னிலங்கை தொழிற்சங்கள் அனைத்துமே பெருமளவிற்கு இடதுசாரித்துவ அதே வேளை இந்திய எதிர்ப்பு சிந்தனைப் போக்குடையவையாகும். அதே வேளை ஜே.வி.பியின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு அணியினரும் இதன் பின்னாலிருக்கின்றனர். ஆனால் புரட்சிகர அரசியல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்னுமடிப்படையில் செயற்படக்கூடிய, அனுபமுள்ளவராக குமார் குணரட்ணமே இருக்கின்றார்.

தற்போது இடம்பெற்று வரும் கிளச்சியை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. ஆரம்பத்தில் ராஜபக்சக்களை அகற்றுதல் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்போது அவர்கள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் எவையுமே ஆரம்பத்தில், அவர்களிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இம்மாதம் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர்தான், அவர்களில் சில மாற்றங்கள் தெரிந்தன. தங்களை தவிர்த்து அரசியல்வாதிகள் எவரும் இயங்க முடியாதென்னும் நிலைப்பாட்டிற்கு தாவினர். ஜனாதிபதி மாளிகை கிளர்சியாளர்களின் கைகளில் விழுந்ததை தொடர்ந்தே, கோட்டபாய ராஜபக்ச பதவி விலகும் முடிவை எடுத்திருந்தார். அதுவரையில், தனது பதவிக் காலம் முடியும் வரையில், தான் வெளியேறப் போவதில்லையென்னும் முடிவிலேயே இருந்தார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியை தொடர்ந்து, கோட்டபாயவின் அனைத்து கனவும் கலைந்தது.

இந்த இடம்தான் கிளர்சியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியிருக்க வேண்டும். கோட்டபாயவை வெளியேற்றும் அவர்களின் முயற்சியின் போது இராணுவம் குறுக்கிடவில்லை. இத்தனைக்கும் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்த ஒரு இராணுவ வீரன் என்னும் தகுதியே கோட்டபாயவின் பலமாக இருந்தது. ஆனால் அவ்வாறான ஒருவருக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் ஒன்றுதிரண்ட போது, இராணுவம் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. தப்பியோடச் செய்வதன் மூலமே கோட்டபாய பாதுகாக்கப்பட்டார். கோட்டபாய தப்பியோடிமையானது, அதுவரையான கிளர்ச்சி நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இடதுசாரிச் சிந்தனைகளின் வழியாக அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது சோவியத் கால, உலக ஒழுங்கிற்குட்பட்ட ஒன்று. இலங்கைத் தீவில் இடம்பெற்ற சிங்கள மற்றும் தமிழ் ஆயுத கிளர்சிகளில் இடதுசாரி சிந்தனைகள் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. சோவியத் பாணி சோசலிச சிந்தனைகளின் வழியாகவே, ஜே.வி.பியானது, தென்னிலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுத கிளர்சியை முன்னெடுத்திருந்தது.

இதே போன்று, தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆயுத விடுதலை இயக்கங்களில், விடுதலைப் புலிகள் மற்றும் டெலோ தவிர்ந்த இயக்கங்கள், தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஈரோஸ் ஆகியவை தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் டெலோ ஆகியவை தங்களை கருத்தியல் அடிப்படையில் அடையாளப்படுத்தவில்லை. ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட பிரதான இயக்கங்கள் அனைத்துமே, பிற்காலத்தில், இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சியை பெற்றுக்கொண்டன. இதற்கு பின்னர் இயக்கங்களின் மத்தியில் இடதுசாரி வலதுசாரி என்னும் பிளவுகள் கரைந்துபோயின.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் இடதுசாரித்துவ செல்வாக்கு என்பது தொடர்ந்தும் இருந்துவருகின்றது. குறிப்பாக சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இடதுசாரித்துவ ஈர்ப்பு கணிசமான செல்வாக்கை பெற்றிருக்கின்றது. ஆனாலும் சிங்கள இடதுசாரித்துவத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினம். குறிப்பாக விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து ராஜபக்சக்களால் தலைமை தாங்கப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாதம் தென்னிலங்கையை முற்றிலுமாகவே ஆக்கிரமித்திருந்தது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்போது சிங்கள பௌத்த தேசியவாதம் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், இடதுசாரித்துவ செல்வாக்கிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் மீளவும் முன்னணிக்கு வந்திருக்கின்றனர். இந்த பின்புலத்தில்தான் ஒரு கேள்வி எழுகின்றது – அதாவது, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கிளர்சியின் இலக்கு என்ன? 1971 மற்றும் 1989இல் ஜே.வி.பியால் முடியாமல் போனதை இவர்கள் மீளவும் புதியதொரு வழிமுறையால் சாதிக்க முற்படுகின்றனரா? இந்தியாவின் கொல்லைப்புறத்தில் இடம்பெறும் இவ்வாறானதொரு கிளர்ச்சி தொடர்பில் இந்தியா எதுவரையில் அமைதியாக இருக்க முடியும்?

இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்கள், இந்தியாவின் உள்ளக அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி எதுவரையில் செல்லும்? கிளர்ச்சியாளர்கள் அனைத்தையும் தங்கள் வசப்படுத்தினால், அது தெற்காசிய அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? அதே வேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டிருக்கும் முறைமையானது, தெற்காசியாவின் ஏனைய நாடுகளிலும் தொற்றலாம். இந்த நிலையில், இந்தியாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகின்றது? இலங்கையின் தென்பகுதியின் கிளர்ச்சியில் ஈழத் தமிழர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர். இது பிறிதொரு செய்தியாகும்.

ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு – நான்கு வாக்குகள் செல்லாதவை

ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.இந்த நிலையில் நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் – முன்னாள் சபாநாயகர்

நாளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் மனசாட்சியுடன் முடிவை எடுக்க வேண்டும் என்பதால், அவர்கள் எந்தவித டீலையும் செய்ய கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்கார்களும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தொந்தரவு செய்ய கூடாது என கேட்டுக்கொண்டார்.

ரணிலோ, டலஸோ எந்த உறுதிமொழியையும் இதுவரை வழங்கவில்லை – ஸ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று மாலை 5மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதன் பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது டலஸ் அழகப்பெருமாவோ தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எந்தவித உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு  முடிவை எடுக்கவேண்டும் – ஈரோஸ் ஜனநாயாக முன்னணி

புதிய ஜனாதிபதி தெரிவில் வடக்கு கிழக்கு மலையகம் இஸ்லாமிய தமிழர்களின் பிரதிநிதிகள் மிகநிதானமாகவும் பொது இணக்கப்பாட்டுடனும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டும் சரியான முடிவை எடுக்கவேண்டும் இவ்வாறு ஈரோஸ் ஜனநாயாக முன்னணி பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாக முறைமையினால் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆரமபித்த இளைஞர்களின் போராட்டாம் மக்கள் போராட்டமாக எழுச்சி பெற்று நாட்டின் ஜனாதிபதி தப்பியோடி இராஜிநாம செய்யுமளவுக்கு வீரியமடைந்ததோடு நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யுமளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளமையானது இலங்கையின் வரலாற்றுப் பதிவாகும்.
நாட்டில் கடந்த 100நாட்களுக்கும் மேலாக மிகப்பலமான போராட்டமொன்று தொடர்கின்றது இப்போராட்டத்தில் தமிழர் தரப்பு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி தங்களுடைய ஆதரவை சில பிரதேசங்களிலும் முழுமையாகவும் சில இடங்களில் பரவலாகவும் தெரிவித்திருந்தனர் குறிப்பாக மலையக பெருந்தோட்ட உழைப்பாளர்கள் தங்களுடைய நாட்சம்பளத்தை தியாகம்செய்து வேலைநிறுத்த போராட்டங்களிலும் பங்குகொண்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் மலையக மக்கள் உட்பட தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடாமை கவளையளிக்கின்றது நாட்டின் நெருக்கடிக்கான தீர்வு என்பது “தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்கானாது முழுமையடையாது” ஆகவே போராட்டக்காரர்கள் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவர்களின் அறிக்கையில் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வு தொடர்பாகவும் உள்ளடக்கவேண்டும்
மேலும் தற்போதைய ஜனாதிபதி தெரிவு மக்களுடைய பங்குபற்றலுடன் நடைபெரப்போவதில்லை மாறாக பாராளுமன்ற உறுப்பிணர்களே ஜனாதிபதியை தெரிவுசெய்யப்போகின்றனர் ஆகவே இந்த பா.உறுப்பிணர்கள் மனச்சாட்டியுடன் நடந்துக் கொள்ள வேண்டும் 225 இலட்சம் மக்களின் பிரதிநிதியாக வாக்களிக்கப்போகும் 225 பாராளுமன்ற உறுப்பிணர்களான நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களுடைய பணியை நிறைவேற்றவேண்டும் அதிலும் வடக்கு கிழக்கு மலையக இஸ்லாமிய தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சமூகபொருப்பு இருக்கின்றது ஆகவே பணப்பரிமாற்றத்திற்கும் சூழ்ச்சிகளுக்கும் விளைபோகாது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ளக்கூடிய பிரச்சிணைகளுக்கு தீர்வுகாண துணிந்துமுடிவெடுக்கக்கூடிய நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் ஆற்றலுள்ள நாட்டிலுள்ள துறைசார்ந்த நிபுணர்களை இணைத்துக்கொண்டு முழுமையாக சிவில்நிருவாகமொன்றிற்கூடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒருவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு உங்கள் வாக்கை பயன்படுத்தவேண்டும்.

Posted in Uncategorized