தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்வதாக தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை இந்நாட்டுக்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.

Share

Posted in Uncategorized

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு பல மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Posted in Uncategorized

பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.

இந்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.

அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது.

இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கைக்கு இறக்குமதிகளை செலுத்துவதற்காக கடனைப் பெற உதவுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்தச் சரத்தின் திருத்தமானது சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதால் அது சீனாவுக்குப் பயனளிக்கும் என்று இலங்கைத் தரப்பு தெரிவித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மகா பருவத்துக்கான இரசாயன உரத்தை கடனில் கொள்வனவு செய்வதற்கு பல சீன நிறுவனங்களுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எம்.பிக்களுடன் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை வழஙகினார்.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன் முன்வைக்க அனுமதிக்கும் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

எதிர்க்கட்சி சார்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார் வெல்கம, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி நடவடிக்கை முறைமைகள் பற்றி எடுத்துரைத்தனர். கற்றுக் கொண்ட பாடத்திலிருந்து தாயகத்திற்கு பொருத்தமான தாம் உருவாக்கிய முறைமை பற்றி விளக்கமளித்தனர்.

உற்பதிக்குழுக்கள், நுண் சமூகம், கூட்டு மூலதன உருவாக்கம், சமூக மூலதனத் திட்டம், சமூக நிறுவன வடிவம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு சபையில் முவைக்கப்பட்டது. இவை தமது பரீட்சார்த்த முயற்சிகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை இணைத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் விளக்கினர்.

மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து இக்கட்டமைப்பு இயங்கவைக்கப்படுகின்ற போதும் ஏனைய உற்பதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. மேலும் கூட்டத்தில் தம் அமைப்பு (Tamil Diaspora Alliance) புலம் பெயர் தேசத்திலும் தாயகத்திலும் முன்னெடுக்கும் பல்வேறு வகையான செயல் திடங்களையும் முன்வைத்தனர்.

தம்மோடு இணைந்து இந்த பொருளாதார மீட்சிக்கு பயணிக்க விரும்பும் அமைப்புகள் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே முப்பத்தி ஆறு அமைப்புகள் தங்களது கூட்டில் பல்வேறு பணிகளில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சசி, சங்கீத், காயத்திரி, வேந்தன், ராகேஷ் மற்றும் கௌரிபரா ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர். பொருளாதார நெருக்கடியின் அரசியல் பற்றி சிறப்பு பேச்சாளராக குணா கவியழகன் உரையாற்றினார்.

கல்முனை கடற்கரை சூழலில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணி

கல்முனை கடற்கரை சூழலில் மாநகர சபை உறுப்பினர் என்ற கென்றி மகேந்திரனின் ஏற்பாட்டில் கல்முனை 3 கோயில் வீதி தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு தாழவெட்டுவான் எல்லை வீதி வரை உள்ள 2 km கடற்கரை அதனை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் இயந்திரங்கள், ஊழியர்கள் , சமுத்தி பயனாளிகள் ஆகிய வளங்கள் பங்கெடுத்தன.

கடந்த சனிக்கிழமை இந்த சிரமதான பணியை திறன்பட செய்து முடிக்க சகல விதத்திலும் உதவிகள், ஒத்தாசை வழங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், சமுத்தி முகாமையாளர் இதயராஜா, கிராம உத்தியோகத்தர், அருள்ராஜா, சமுத்தி அதிகாரிகள், சமுத்தி பயனாளிகள், கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவு அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர் செலஸ்றினா , ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வேலை திட்டத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உதவியமைக்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் நன்றிகளைத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

விசாயத்தினைப் பாதுகாக்க அரசாங்கம் தவறுவது  ஒட்டுமொத்த மக்களையும் அபாயத்திற்குள் தள்ளிவிடும் – அச்சுவேலி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு முட்டாள் தீர்மானங்களை விடுத்து சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி புதன்கிழமை (15.06.2022) காலை அச்சுவேலி சந்தையில் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

அப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்,

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டக்கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் உணவுப்பொருட்கள் கிடைக்கிமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் உணவுப் பாதுகாப்பினையும் அத்தியவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பினையும் நிறைவேற்ற தவறியுள்ளது. அடிப்படையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.

இத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு உரக்கொள்கை போன்ற விடயங்களில் அரசாங்கம் பின்பற்றிய தவறான நடவடிக்கைகள் பிரதான காரணமாகும். நாம் இயற்கை வழி உரப்பாவனையுடன் கூடிய விவசாய முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேவேளை குறுங்காலத்தில் இயற்கை உரப்பாவனையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தினை நாட்டில் வெற்றியடையச் செய்ய முடியுமா என படித்தவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் ஜனாதிபதி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்கவேண்டும்.

இன்று எமது நிலங்களில் நாம் விவசாயத்தினை முன்னெடுப்பதற்கு உரிய தடைகள் இன்றி எரிபொருளை விநியோகிக்கக் கோருகின்றோம். காரணம் விவசாயிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வற்கான குறைந்த பட்ச எரிபொருள் விநியோகத்தை ஏனும் பெற முடியாது திண்டாடுகின்றனர் என்பதை வெளிப்படுத்தவதற்காகவே திரண்டுள்ளோம்.

விவசாயிகள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் விவசாய உற்பத்தியாளர்களை மாத்திரம் பாதிக்கும் தொழில்சார் பிரச்சினை கிடையாது. மாறாக அத்தனை மக்களது வயிற்றுப்பசியைப் போக்குவது சார்ந்த பிரச்சினையாகும். அரசாங்கம் தாமதமின்றி இவ்விடயத்தில் பொறுப்புச் சொல்லவேண்டும்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் உரிய அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது அல்லது தேர்தலுக்கு செல்வது அத்தியாவசியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு Quad நாடுகள் உதவி செய்ய வேண்டும்-அமெரிக்கா

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations Committee) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken, ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோருக்கு செனட் சபை உறுப்பினரும் வௌியுறவு தொடர்பிலான செனட் குழுவின் தலைவருமான Bob Menendez அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் பங்கை பாராட்டுவதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.