நெருக்கடியின் விளிம்பில் இலங்கை- நாட்டைவிட்டு வெளியேறத் தயாராகும் நுாற்றுக்கணக்கானவர்கள் -ஏபிசி தகவல்

இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நிலையில், நுாற்றுக் கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பணயங்களை மேற்கொள்ள தயாராகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதால் 300க்கும் அதிகமான இலங்கையர்கள் அவுஸ்திரேயாவிற்கு புறப்பட தயாராகியுள்ளனர். புதிய தொழில் கட்சி அரசாங்கம் காரணமாக படகில் உள்ளவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்கடத்தல்காரர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அனேகமான படகுகளை இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, முடிவடையும் நிலையில் மருந்துகள் உணவுப் பொருட்கள் எரி பொருட்கள் காணப்படுவதால் மேலும் பலர் அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் நிறைந்த படகுகளை கடலில் இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தும் காட்சிகள் ஏபிசிக்கு கிடைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தொழில்கட்சி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்குத் ஒப்பான கொள்கைகளேயே பின் பற்றுகின்ற போதிலும் புதிய அரசாங்க மாற்றத்தை ஆட்கடத்தல்காரர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் கொள்கை உறுதியானது என அவுஸ்திரேலிய எல்லைப்படை ஏபிசிக்கு தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க  அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய எல்லை காவல்படை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை தலைவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அதானி கவலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு மின்னுற்பத்தி திட்டங்களை வழங்கியதாக இலங்கை மின்சார சபை தலைவர் தெரிவித்த கருத்து தொடர்பில் அதானி குழுமம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என அதானி குழுமம் கூறியுள்ளது.

அண்மையில், இலங்கையில் இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்ததாக மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ, கோப் எனப்படும் பொதுமுயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,எம்.எம்.சீ.பெர்டினண்டோ மன்னிப்பு கோரியிருந்ததுடன் தமது பதவி விலகல் கடிதத்தையும் எரிசக்தி அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுன கூட்டணியை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்கும் கட்சிகள்!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய தீர்மானித்துள்ளன.

இதன்படி இலங்கை மக்கள் தேசிய கட்சி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, முற்போக்கு மக்கள் சேவையாளர் கட்சி, ஶ்ரீ டெலோ, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், ஐக்கிய இலங்கை முன்னணி, இலங்கை ஐக்கிய சமாதான கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்றுள்ளது.

நாட்டிற்கு பயனுள்ள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க குறித்த கட்சிகள் இணக்கம் தெரிவித்தாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட சிங்கள பெண்கள்! சிவில் உடையில் இராணுவம்-ரெலோ வினோ

சிவில் உடை அணிந்திருந்த பெருமளவிலான இராணுவத்தினர் பௌத்த மதத்தினை தழுவும் பெருமளவிலான பெண்களை காரணமே தெரியாமல் முல்லைத்தீவிற்கு அழைத்து வந்துள்ளதாக ரெலோ தலைமை குழு உறுப்பினரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

Posted in Uncategorized

சமூகப் பாதுகாப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் – மிச்செல் பச்லெட்!

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சில உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிற நெருக்கடிகள் காரணமாக மனித உரிமைகள் மீதான கவலைக்குரிய விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை வழங்கி உதவி செய்யுமாறும், மீள்எழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும் அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதியை முன்னெடுப்பதற்கும் ஆழமான கட்டமைப்பு சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோடியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி பதவி விலகல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தொடர்பாக கருத்து வெளியிட்டு பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்த எம்சிசி பெர்டினன்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, சமீபத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆனால் மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் எம்சிசி பெர்டினன்டோ தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது, வல்லரசுகளின் ஆதரவு வேண்டும் – பிரதமர்

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை கூறியது போல, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆகவே உலக வல்லரசுகளின் ஆதரவு இலங்கைக்கு தேவை என்பதோடு நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்ற, நிதி நிலைமையை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை ஸ்திரப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை

வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று(13) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட உரை ஆற்றவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றும் வகையில் வௌிவிவகார அமைச்சரின் உரை அமையவுள்ளது.

இன்று(13) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.

இலங்கைக்கான அமெரிக – சீனத் தூதுவர்கள் திடீர் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் சீனத் தூதுவர் Qi Zhenhong க்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சிநேகபூர்வமான சந்திப்பில் வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலிலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும்.

இந்த காலப்பகுதியில் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized