தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் இடைக்கால அரசாங்கம் அமைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .

இதேவேளை எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து நன்மை பயக்கும் சீர்திருத்தங்களுக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின் பின்னர் பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனிக் கட்சி அமைக்கும் பொன்சேகா – கூட்டணி அமைக்கும் டலஸ்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனிக் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஏற்கனவே ஜனநாயக கட்சியை அமைத்திருந்த நிலையில், பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு அந்தக் கட்சியை கலைத்தார்.

பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பாராளுமன்றம் வந்தார்.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் காரணமாக அவர் தனிக் கட்சியை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுவினரையும் மற்றைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்‌ஷக்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிவரும் நிலையிலேயே இவர் இந்தக் கூட்டணியை அமைக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்‌ஷ குடும்பத்தில் இன்னுமொருவர் பதவி விலக முடிவு!

ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருக்கடி நிலைமையில் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ஜுன் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்னுமொரு ராஜபக்‌ஷ எம்.பி பதவியை துறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஷசிந்திர ராஜபக்‌ஷ ஆகியோரோ தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் பதவி விலகவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இராணுவத்தின் ஒத்துழைப்பில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுவந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் முப்படையினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவருவதாகவும் இதற்க்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி சட்டதரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்த 45 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க முதல் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யயப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களுக்கு அமைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை

1956 ஆ் ஆண்டு முதல் 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1980 ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், வருடத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வீதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சம்பந்தமான இரங்கலை வெளியிட்டு உரையாற்றும் போதே அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.

Posted in Uncategorized

எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது – பசிலை கடுமையாக சாடிய சனத்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.இது சிரிக்கும் விஷயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, இதற்காக நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள் என அவர் டுவீட் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய, இந்த ஊடக சந்திப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஊடக பிரதானிகளிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்தார்.

நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

நிலுவையில் உள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நிலைமையின் உண்மையான படத்தை முன்வைக்க அரசாங்கத்திற்கு உதவுமாறு ஊடக உரிமையாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தேவையான போது ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அதேவேளை பொறுப்பான அறிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் விளக்கினார். எவ்வாறாயினும், நிதி மற்றும் பெளதீக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். சமூக நலனோம்பலுக்காக 200 பில்லியன் நிதி திரட்டப்படுகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார் .

ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த வரவிருக்கும் மாதங்களில் நாட்டுக்கு உதவ ஊடக நிறுவனங்களின் ஆதரவில் தான் தங்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கல்வி அமைச்சு சென்ற மாணவர்கள் கண்ணீர் புகையடித்து விரட்டியடிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் கல்வி அமைச்சுக்கு முன்னால் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியதுடன், உள்ளே சென்று அதிகாரிகளை சந்திக்கவும் முயற்சித்தனர்.

இவ்வேளையில் அவர்களை பிரதான நுழைவாயிலில் மறைத்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர்.

Posted in Uncategorized

இலங்கை உரப் பிரச்சினைக்கு தீர்வு – இந்தியாவுடன் ஒப்பந்தம்

நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியது.

இது சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வரியை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.

உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த கடன் வசதி எதிர்வரும் சிறுபோக பருவத்தில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 1, 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதத்தில் 1, 920 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இதன் பகுதிகளில் ஒன்றான வெளிநாட்டு நாணய இருப்புக்கள், ஏப்ரல் மாதத்தில் 1, 602 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன் மே மாதத்தில் 1, 805 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏனைய உறுப்பு பகுதிகளான சிறப்பு வரைதல் உரிமைகள் 115 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 21 மில்லியன் அமெரிக்க டொலராக சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது . இரண்டு மாதங்களுக்கு இடையில் 29 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு விகிதம் மே 13 முதல் இந்த வாரம் வரையில் அதிகரித்துள்ளதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம், டொலர்களை மாறியதில் இருந்து பெறப்பட்ட வருமானம், திறந்த கணக்குகள் மீதான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் மூலம் பெறப்பட்ட வருமானம் மூலமம் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வருமானங்கள் இன்னும் தேவைப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)