அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்கி 41 வருடங்கள்

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்(01) 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

புதைத்தாலும் முளைத்து எரித்தாலும் உயிர்க்கும் வரலாற்றை அழித்தல் அத்தனை எளிதன்று.

கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகர முடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக் கீற்றை இன்று போன்றதோர் நாளில், காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ, சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெரு விருட்சமாய் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

புராதனம் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்…

1800-களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தை பற்றின.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

நூலகம் எரியூட்டப்பட்ட வேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன.

இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்டு, சாம்பராகியமை வேதனைக்குரியதே.

காயங்களை ஆற்றும் காலம், நூலகத்தின் உருவை இன்று மாற்றியுள்ளது.

யாழ். பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், வாசகர்களின் அறிவுப்பசியினை போக்கி வருகின்றது.

Posted in Uncategorized

IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலைப் பயிற்சி மையத்தை நிறுவ மலேசியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசியாவில் வேலைவாய்ப்பினை இலக்காகக் கொண்டு ஒரு விசேட பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை தொழிலாளர் அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அமைச்சர் நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகர் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்து உரிய காலத்தில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் மலேசியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தவுடன் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு அமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக உற்பத்தித் துறை வேலைகளுக்கு அதிகளவிலான தொழிலாளர்களை அனுப்புவது குறித்தும், அவர்கள் தொடங்கவிருக்கும் மலேசியப் பயிற்சி மையம் மூலம் விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மலேசிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச சம்பளத்தை உள்ளடக்க முடியும் என மலேசிய உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கை-அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றதாக தகவல்

இலங்கையில் இன்று  நிலவும் அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றன என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம்   தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என நிறைவேற்றுப் பணிப்பாளரான மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியின் தீவிரம் தற்போது உணரப்பட்டு வருவதாகவும், எனினும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்கவை அல்ல. குறிப்பாக அரசியல் தலைமையினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் துரிதமான சீர்திருத்தங்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை விரைவாகக் குறைக்க முடியும் என்றும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்க முடியும் என்றும்  எனினும் நீதியமைச்சரும் பிரதமரும் ஜனாதிபதியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே 21வது திருத்தச் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு உரம் வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம்!

இலங்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத்தருவதற்கு,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கவுள்ள உரத் தொகையை 20 நாட்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, உமா ஓயா மற்றும் மொரகஹகந்த செயற்றிட்டங்களை இவ்வருடம் நிறைவு செய்வதனூடாக பெரும்போகத்தில் சிறந்த பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என ​தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வௌிநாட்டு நிதியினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட உரைக்கு தயாராகும் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவர் அதன்போது தகவல்களை வெளியிடவுள்ளார்.

தற்போது அரச வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டங்களை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்கள், சேவைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறும் பெருமளவிலான மக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே அதற்கு காரணமாகும்.வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாடுகளில் திரும்ப அழைப்பதன் காரணம் விமான நிலையம் பரபரப்பாக இயங்குவதாகவும் மக்கள் பாரிய அளவில் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இலங்கையில் உள்ள நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகாரங்களையும், வளங்களையும் பெற்றுக் கொடுக்க நான் தயார்

தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த முன்மொழிவுகள் இன்று (01) முற்பகல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

11 அடிப்படை விடயங்களைக் கொண்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த சில நாட்களுக்குள் அடுத்த கலந்துரையாடலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு துறைகளில் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல குழுக்கள் தயாராக இருப்பதாகவும், அந்த குழுக்களின் சாதகமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களையும் மற்றும் வளங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டம் வருடாந்தம் அனைத்து அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும், காலாண்டுக்கு ஒருமுறை அந்த இலக்குகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்குகளை அடையத் தவறிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அப்பதவிகளில் இருந்து நீக்குவதன் அவசியமும் இம்முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் வண. பாத்தேகம ஞானிஸ்ஸர, சாஸ்திரபதி வண. வித்தியல கவிதஜ தேரர்கள் மற்றும் தேசிய கொள்கைக்கான தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வைத்தியர் அசோக ஜயசேன, சட்டத்தரணி நெலும் வேரகொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு போராட்டத்தில் தொடர்புடைய தொழில் வல்லுனர்கள் மற்றும் இளைஞர் குழு ஒன்றும் இதில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மூலம் அளவிடப்பட்ட மே மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம்  39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என, இலங்கை மத்திய வங்கி, இன்று (31) அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 29.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் மேயில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரலில் 46.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 57.4 சதவீதமாக அதிகரித்துள்ள அதேவேளை, உணவில்லாப் பணவீக்கம் 22 சதவீதத்திலிருந்து 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என, மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுகை பெறும் சவேந்திர சில்வா

ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவியில் இருந்து இன்று விடுகை பெறுகிறார்.

நாளை (01) முதல் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக அவர் செயற்படவுள்ளார்.

இராணுவத் தளபதியாக செயற்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமிப்பதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று வழங்கினார்.

இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுகை பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் படையினரை சந்தித்தார்.

இதன்போது, 23 ஆவது இராணுவத் தளபதியாக தான் பணியாற்றிய காலத்தில், தனது சேவையில் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள், நெகிழ்வுத்தன்மை, அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விடயங்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை என சவேந்திர சில்வா குறிப்பிட்டார்