CEYPETCO எரிபொருளின் விலையை அதிகரித்தது

பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை அதிகரித்துள்ளது.

நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.

இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தவறு செய்து விட்டேன் – விலக மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற முறையில் கூடுதல் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

மேலும், உங்கள் கீழ் உள்ள நிறுவனங்களை ஊழலற்ற, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுங்கள். பல அரச நிறுவனங்கள் இன்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவை சரி செய்யப்படுவது மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைச்சுப் பதவிகள் கிடைத்தவுடன், தமக்குக் கிடைக்கும் அமைச்சுக்களிலும் நிறுவனங்களிலும் தொழில் வழங்குவதற்குத் தயாராகி வருவதை நாம் அறிவோம்.

இத்தகைய சூழ்நிலையில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைச்சுக்கள் உண்மையில் செய்ய வேண்டியது தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதுதான்.

மக்கள் கோரிய முறைமையை (System Change) மாற்ற இன்றைய நெருக்கடி ஒரு நல்ல சந்தர்ப்பம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த இளைஞர்களிடம் அதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கொவிட் தொற்றுநோய் அதேபோன்று கடன் சுமை போன்ற விடயங்கள். அவ்வாறிருந்தாலும் எங்களாலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். அவற்றை சரி செய்து கொண்டே நாம் முன்னேற வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்திற்கு இதற்கு முன்னர் சென்றிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதே போன்று, இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும், அசௌகரியமும், கோபமும் மிகவும் நியாயமானது.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும். எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

World Express Services
இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

நாம் எப்போதும் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மக்களிடம் யதார்த்தத்தை மறைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் பெறும் தகவல்களைப் பற்றி அறிவுபூர்வமாக விசாரித்து உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சினையை புரிந்து கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் அவசியம்.

இன்று நமது நாடு கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையையும் கடன் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் எங்களிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவசர அந்நியச் செலாவணி தேவைகளுக்குப் பணம் தேட வேண்டும்.

குறுகியகால வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள எங்களின் சிரமத்தை நாங்கள் ஏற்கனவே கடன் வழங்கியவர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதன்படி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எனது பொருளாதார முகாமைத்துவக் குழு ஏற்கனவே எமது நட்பு நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர்.

எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம். மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம்.

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என சந்தேகித்து மக்களால் பெருமளவில் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை ஆகும். இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மக்கள் படும் இன்னல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பல் ஒன்றும் உருவாகி உள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்தவும் அரசு தலையிட்டு வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில், இவ்வாறான விடயங்களை தவிர்க்குமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்வுகள் மற்றும் தீர்மானங்களையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். நாம் அவற்றைச் செயற்படுத்தி வருகிறோம்.

அண்மைக்காலமாக நீண்டகால மின்வெட்டுக்கு மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமையே காரணம் ஆகும்.

சிக்கல்களுக்கு மத்தியிலும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டு, எதிர்வரும் காலத்தில் மின்வெட்டை இரண்டு மணித்தியாலங்களாக மட்டுப்படுத்திக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.

குறுகியகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேடுவதோடு, இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பல தசாப்தங்களாக காலதாமதமாகி வரும் சில தீர்மானங்களை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை சரியான திசையில் வழிநடத்தி, நமது எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இப்போது நமக்கு உள்ளது.

இன்று நாம் எதிர்கொள்ளும் கடுமையான சவாலை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களைப் போன்று நட்பு நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மட்டுமே அந்த ஒத்துழைப்புகளைப் பெற முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். மேலும், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதில் எங்களுடன் இணையுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் அண்மையில் அழைப்பு விடுத்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று எங்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

இந்த கடினமான காலங்களில், அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும், சர்வதேச சமூகத்தை கையாளவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிக்க நான் முடிவு செய்தேன். புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தாமாக முன்வந்து அமைச்சரவையில் இருந்து விலகியதன் மூலம் இளைஞர்கள், படித்தவர்கள் என ஒரு புதிய குழுவுக்கு இடம் கொடுத்துள்ளனர்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் இலங்கையும் ஒன்று. அனைத்து குடிமக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் அரசியலமைப்பின்படி செயற்படும் ஜனநாயக ஆட்சிமுறையில் தங்கியுள்ளது.

சமூகத்தின் மிகவும் சுறுசுறுப்பான பகுதியினரான இளைஞர்கள் தங்கள் அழுத்தத்தை அவர்களுக்கே உரிய வழியில் வெளியிடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும், போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தமது போராட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்லும் போது, ஒழுக்கத்துடன் கடமையாற்றும் பொலிஸார், முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை குறிப்பாக நான் பாராட்டுகின்றேன்.

உங்களுக்குத் தெரியும், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான் போராட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்து இருந்தேன். சுதந்திரம் வழங்கியுள்ளேன். என் அலுவலகத்திற்கு அருகில் வந்த போராட்டக்காரர்களை கலைக்கக்கூட நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக முன்வருவதை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாகவும் பார்க்கிறேன்.

இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறுகளை திருத்தி நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகின்றார்கள், நாட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன். எனவே, உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை வன்முறைப் பாதையில் திசை திருப்ப சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று இந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர், மதகுருமார்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த ஆலோசனைகள் அனைத்தையும் நான் உணர்வுபூர்வமாகக் கேட்கிறேன்.

அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். எனது பதவிக்காலத்தில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். அதன்படி, தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை. அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன. நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவே அன்றி அதிகார தேவைக்காக அல்ல. எனது வாழ்நாளில் முப்படையில் அதிகாரியாக 20 ஆண்டுகள் இந்த நாட்டிற்கு சேவை செய்துள்ளேன். நான் வெற்றிகரமாக சேவை செய்துள்ளேன். அத்துடன், பாதுகாப்புச் செயலாளராக நான் இந்த நாட்டுக்கு வெற்றிகரமாக சேவையாற்றியுள்ளேன். நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுகின்றேன்.

நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. எனவே, அரசியலமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அவசியமான ஒத்துழைப்பை எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்.

அதற்கிணங்க, நாட்டின் அதியுயர் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன், மேலும் இது தொடர்பாக மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். மேலும் மக்கள் எதிர்பார்ப்பது போல் நேர்மையாகவும், திறமையாகவும், தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

21 ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம்   ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு   இடம்பெற்றது.

  1. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

3. அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க

4. லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

6. இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

7. சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

8. சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

9. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

10. சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

11. பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

12. டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

13. டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

16. அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

17. கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

19. கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

20. கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

21. சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

காலி முகத்திடலில் தொடரும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், கலைஞர்கள் என பலரும் இந்த தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் லலித் நந்தகுமார ஹேமாரத்ன நேற்று(17) ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று(18) காலை நிறைவிற்கு வந்தது.

அதன்பின்னர் விளையாட்டு வீரர் சஜித் மதுரங்க 24 மணித்தியால சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று(18) ஆரம்பித்தார்.

அரசியல் தலையீடுகள் இன்றி பெருமளவிலானவர்கள் இன்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது; கோவிந்தன் கருணாகரம்!

சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த எட்டு தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும்,ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது.எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கிநிமிர்த்தக்கூடிய நிலையில்லை.இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தர்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி சிங்கள மட்டும் சட்டத்தினை கொண்டுவந்தபோது தமது மொழி உரிமைக்காக இதே காலிமுகத்திடலில் ஜுன் மாதம் 05ஆம் திகதி தமிழ் தலைமைகள் சத்தியாக்கிரக போராட்டம் செய்தார்கள். அப்போராட்டத்தின்போது சிங்கள காடையர்கள் ஏவிவிடப்பட்டு தமிழ் தலைமைகளின் மண்டைகள் உடைக்கப்பட்டதுடன் காதுகள் கடித்து துப்பப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு தெரியும்.

தமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் இந்த போராட்டத்தினை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை ஒப்படைத்த,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்று ஒரு சில தமிழ் தலைமைகள் அறைகூவல் விடுக்கின்றனர்.இவ்வாறு அறைகூவல் விடுக்கும் அந்த பிரதிநிதிகள் வடகிழக்கில் தமது உறவுகளை தேடி போராடும் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைப்பதற்கு எந்தவித அக்கறையும் அற்றவர்களாகவேயிருந்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினால் இன்று மின்சாரத்திற்கும்,எரிபொருளுக்கும்,பால்மாவுக்கும் போராடுகின்றார்களே தவிர இந்த பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான எந்த முயற்சியும் காட்டப்படவில்லை.

Posted in Uncategorized

எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது : தாய்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பலத்துடன் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும். அது எம்மால் முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். சுயநலத்திற்காக கோபமும் , விரோதமும் தலைதூக்குகியிருக்கிறது.

இலங்கைக்குள் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை நாம் என்று மாற்றப் போகின்றோம்? நாம் என்று புதியதொரு தொடக்கத்திற்குச் செல்லப் போகின்றோம்? அது தொடர்பில் சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது.

ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எம்மால் தொடர்ந்தும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைவரையும் ஊழல்வாதிகளாகவே காண்கின்றோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி , அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாகவுள்ளனர். 74 ஆண்டுகளுக்குள் எமது அழகிய தாய் நாடு சீரழிந்துள்ளது.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் , பொய் மற்றும் ஊழல் என்பவற்றின் உச்சகட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்களை எதிர்கொண்ட விதமும் , அவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறைமையுமாகும்.

முழு நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. எம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர். நாம் நேர்மையாக செயற்பட வேண்டும்.

வரலாற்றில் பல தவறுகளை இழைத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் – நசீர் அஹ்மட்டுக்கு முழு அமைச்சுப் பதவி (முழு விபரம் உள்ளே)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது.

இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்

பிரசன்ன ரணதுங்க – பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து

கனக ஹேரத்- பெருந்தெருக்கள்

விதுர விக்ரமநாயக்க – தொழில்

ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்பாசனம்

செஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன யாபா – நீர் வழங்கல்

விமலவீர திசாநாயக்க – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

காஞ்சன விஜேசேகர – எரிசக்தி, மின்வலு

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நாலக கொடஹேவ – ஊடகம்

சன்ன ஜயசுமன – சுகாதாரம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதால் குழப்பம்!

இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.

எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.

எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!

Posted in Uncategorized