அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வீரம் உள்ள தோழர்களே!

வீழ்ந்து கிடப்பது தமிழ் அல்ல

மீண்டெழும் தமிழ் இனத்தின் தீரமான உங்கள் வலிமையும் வளமும் இம்மண் விழிமேல் காத்து நிற்கின்றது இப் புத்தாண்டு உங்களை வரவேற்கின்றது.

தமிழ்த் தாய் அழைக்கின்றேன் ஒற்றுமையுடன் வாருங்கள்.என் உயிர்க் குழந்தைகளே என் கையில் இடப்பட்டுள்ள அடிமை விலங்கை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க இன்று நான் மெலிந்து போகவில்லை இன்றும் நிமிந்து நிற்கின்றேன் துணிந்து வாருங்கள் உன்
தாய் தன் தலைமேல் சுமந்து நிற்கும் பழுவை இறக்கி வைக்க புத்தாண்டு உங்கள் மனங்களில் புதுமைகள் படைக்கட்டும்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையாவிட்டால் மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை-எம்.எஸ்.எஸ். அமீர் அலி

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றிணையாவிட்டால் ஜனாதிபதியோ, அரசாங்கமோ பதவி விலகப்போவதுமில்லை. மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் (14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டிருக்கும் நிலையிலும்,மக்கள் வாழ்க்கை செலவுகளை தாங்க முடியாமல் வரலாறு காணாத போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதை பார்க்கிலும் தங்களது கட்சி அரசியலையும் தமக்கான செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளவே ஒவ்வொரு அரசியல் இயக்கமும் முன்டியடித்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளமை கவலையளிக்கிறது.

ஒட்டு மொத்த நாடும் கொழும்பு காலிமுகத்திடலிலே ஒன்று கூடி அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோருகின்ற போதும் இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்றும் இன்னும் 69 இலட்சம் மக்களும் எம்மோடுதான் உள்ளனர் என்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் மார்தட்டுகின்றனர்,எதிர்க்கட்சிகளும் மக்களின் குறை தீர்க்க இந்த நேரத்திலும் கூட ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாகவே காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் எதிர் வரும் நாட்களில் சிற்சில சலுகைகளை மக்களுக்கு அறிவிப்பதனூடாக மக்களின் போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மக்களின் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யப்படுவதனூடாக மீண்டும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள ஆளும் தரப்பு காய்நகர்த்திக் கொண்டிருப்பதால் ஜனாதிபதியோ,அரசாங்கமோ பதவி விலகப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்நிலையில் அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களுக்கிடையே உள்ள கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து மக்களையும் ஒன்றிணைத்து இப் போராட்டத்தை ஒன்றாக முன்னெடுப்பதனூடாகவே இந்த தோல்வியடைந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பவும், மக்களுக்கு நிவாரணமளிக்கவும் முடியும் என்றும் மேலும் கூறினார்.

தமிழர்கள் பேரம்பேச வேண்டிய தருணம் இதுவே- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.

“கொழும்பில் ஒற்றுமை” என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு சிங்கள சிந்தனைக் குழுவின் உத்தியாக கூட இது இருக்கலாம். வடக்கு கிழக்கில் எந்தவொரு தமிழர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்று பலவீனமாக உள்ளது, உணவுஇல்லை, பணம்இல்லை, பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு சந்தைப்பங்கை இழக்கிறது.இலங்கையால் வெளிநாட்டு கடனை செலுத்த முடியவில்லை. இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற பணக்கார நாடுகளில் தங்கியுள்ளது.

எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் பொது வாக்கெடுப்பு அல்லது சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டும்.வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இந்த நாடுகளிடம் கேட்க வேண்டும். தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு, இந்த நாடுகள் இலங்கையுடன் பேரம்பேச இதுவே சிறந்த தருணம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அல்லது அவர்களின் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தமிழர்கள் சார்பில் வாதாடக்கூடிய சில புதிய துணிச்சலான இளைஞர்களை கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Posted in Uncategorized

இலங்கை : ஜனாதிபதி, பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை-சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் உட்பட நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் இன்றைய கருத்து என்றும் பொதுமக்கள் தமது குறைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சமவுரிமையை உறுதி செய்யும் வரை சிங்கக் கொடியின் கீழ் நிற்க முடியாது – சபா குகதாஸ்

ஈழத்தமிழர்களுக்கான சமவுரிமையை அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாத வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிங்கக் கொடியின் கீழ் நிற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் சிங்கக் கொடியுடன் முன்னெடுக்கப்படும் ராஐபக்ச அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள பொது மக்களின் போராட்டங்களில் வடகிழக்கு தமிழர்கள் பங்குகொள்ள முடியாது. காரணம் இலங்கைத் தீவில் பூர்வீக தேசிய இனமாக வாழும் ஈழத் தமிழர்களுக்கான சமவுரிமையை சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையாகும்.

சிங்கக் கொடி மீது தமிழர்களுக்கு தனிப்பட்ட வெறுப்புக்கள் இல்லை. அதனைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் இனவாத மதவாத ஆக்கிரமிப்பும் தமிழர்களின் உரிமைகளை சிங்கக் கொடியின் உதவியுடன் பறிப்பதும் தொடர் கதையாக இருப்பதால் சிங்கக் கொடியின் கீழ் நின்று போராட முடியாது.

இதுவரை தமிழர் மனங்களில் சிங்கக் கொடி என்றால் ஆக்கிரமிப்புக் கொடி என்ற மன எண்ணமே நிறைந்துள்ளது.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒருமித்து குரல் கொடுப்பது கட்டாயம் என்ற உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுப்பதனால் தான் நாடு தொடர் பின்னடைவை சந்திக்கிறது என்ற உண்மையை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் ஒரு கொடியின் கீழ் பல்லினங்களும் ஒன்றிணைய சமவுரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்.

தமிழர்களின் சமவுரிமை சட்டரீதியாக அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுமாயின் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதியாக பயணிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புத்தாண்டிலும் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மத்தியிலும் அந்த ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. இதில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இந்தியா!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.

சீனாவை விட இலங்கைக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட உலக வங்கி!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பது முக்கிய காரணிகளில் ஒன்று என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூர் வருவாய் வழிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அறக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்பு

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்போன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime 2020) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் சிறு கைத்தொழில், நுகர்வோர் மற்றும் தொழிலாளர் சந்தைகளிற்கான அமைச்சரும், சட்டன் மற்றும் சீம் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய, மதிப்பிற்குரிய போல் ஸ்கலி உடனான உயர்மட்ட சந்திப்பு ஒன்று செவ்வாய் (12/04/2022) மதியம் 12 மணியளவில் மெய்நிகர்வழி (zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் கஜன் ராஜ், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார், The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார பணிப்பாளர் மெலிசா றிங் (Melissa Dring), மற்றும் அதன் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது,

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 140,000 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருப்பதையும், அதுபோல் தற்போதும் தொடரும் கடத்தல்கள் சித்திரவதைகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களாக இலங்கையில் கடந்த இரு வருடங்களிற்குள் சித்திரவதைக்குள்ளாகிய 200 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலான அறிக்கையை (ICPPG) சமர்ப்பித்திருப்பதையும் குறிப்பிட்டு, இருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் விசனமடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கோரி வருவதாகவும் திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, SLC அமைப்பின் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் உரையாற்றும் போது,

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைக்கு சவேந்திர சில்வா மீதான தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்ப கட்டமாக இருக்கும் என்றும் தொடரும் சித்திரவதைகளை தடுக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் செயலாளர் கஜன் ராஜ் கருத்துத் தெரிவிக்கும் போது,

தாங்கள் பல தடவைகள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவினை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமென கோரியும் இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் தடைசெய்யும் நடவடிக்கை தாமதிப்பது ஏன் என FCDO இனை வினவுமாறும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இதனை செய்ய தவறும் பட்சத்தில், பிரித்தானியாவுக்கு ஐநா மனித உரிமை சபையில் தலைமை தாங்கும் அருகதை உள்ளதா என சந்தேகிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அம்பிகை கே செல்வகுமார்,

இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு இதுவரை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நாட்டப்படவில்லையெனவும் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சாட்சிகளின் நேர்காணலில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சமுற்ற நிலையில் இருப்பதனையும் இங்கு கூட சிலர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதனையும் அறியக்கூடியதாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2019 இலிந்து இன்றுவரை, ஊடகங்களால் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 800 மனித உரிமை மீறல் சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தி இருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 200 கடத்தல் மற்றும் சித்திரவதை இடம்பெற்றதுக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தாம் மீண்டும் மீண்டும் FCDO இனை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்காததினையும் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை வெளிவிவகார அமைச்சர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும் அதற்குப்பின்னரும் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தையும், அமெரிக்கா சவேந்திர சில்வாவை தடை செய்தமையை போன்று பிரித்தானியாவும் தடை செய்யவேண்டும் என்று மெலிசா றிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

மேலும் கீத் குலசேகரம் தனது தொகுப்புரையின் போது,

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு (EDM 64) ஆதரவை வழங்குமாறும் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட ஆதாரங்கள் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மேல்முறையீடு (Appeal) அல்லது சட்டமீளாய்வு (Judicial Review) கோரி விண்ணப்பதற்கு குறித்த சட்டத்தில் இடம் உண்டா என்பதையும் தெளிவுபடுத்தும்படி வெளிவிவகார அமைச்சிடம் கேட்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான நிலக்ஜன் சிவலிங்கம் மற்றும் லக்ஸ்மன் திருஞானசம்பந்தர் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய அமைச்சர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணத்தை கேட்டு பதில் தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

”முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்”: வீரவன்ச!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீரக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் 113 ஆசனங்களை கொண்டு எதனையும் செய்ய முடியும் என்று ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டிருப்பது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புதிய பிரதமரின் கீழ், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும் என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.