இலங்கைக்கு நிதியுதவி கிடைக்குமா கிடைக்காதா?:முடிவு ஐரோப்பிய நாடுகளின் கைகளில்…!

இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திற்கு கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை முன்வைத்தாலும் உடனடியாக நிதியம், நிதியுதவிகளை வழங்காது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அப்போது அவர், கோரிக்கைகள் அடங்கிய யோசனைகளை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க உள்ளார். எனினும் கோரிக்கைகளை முன்வைத்தாலும் உடனடியாக நாணய நிதியம் நிதியுதவிகளை வழங்காது.

அதற்கு நீண்ட செயற்பாடுகள் இருக்கின்றன. அத்துடன் கடந்து செல்ல வேண்டிய சில தடைகளும் இருக்கின்றன. இதில் முதல் தடை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு இலங்கை உட்பட வேண்டும் என்பதாகும்.

வாக்கெடுப்பில் இலங்கை குறைந்தது 50 சத வீத வாக்குகளை பெற வேண்டும். இலங்கை 11 உறுப்பு நாடுகளில் வாக்குகளை பெற்றாக வேண்டும்.

தற்போது காணப்படும் சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளான சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வாக்குகளை பெறுவது இலங்கை சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை சம்பந்தமாக எப்படியான பிரதிபலிப்பை வெளியிடும் என்பது சிக்கலுக்குரியது. இந்த நாடுகள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவதா இல்லையா என்று தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கை மக்களை ஏமாற்றும் அரசின் மோசமான செயல்! ரகசியங்களை அம்பலப்படுத்தும் பிரமுகர்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55,000 மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனந்த பாலித சுட்டிக்காட்டினார்.

கூட்டுத்தாபனத்தில் உள்ள கிடங்குகளில் 20,000 மெட்ரிக் டன் பெட்ரோல், 7,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் மற்றும் 6,000 மெட்ரிக் டன் சூப்பர் பெட்ரோல் இருந்ததும் விநியோகிக்கப்படவில்லை.

எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்த எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கம் விலை அதிகரிக்கும் வரை விநியோகிக்கப்படவில்லை.

கறுப்புச் ந்தை வியாபாரி கூட இவ்வாறு செய்ய மாட்டார் என மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலுக்கு முக்கிய பதவியை வழங்க தயாராகும் கோட்டாபய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சபையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த பொருளாதார சபை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதி அமைச்சின் செயலாளர், ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பு – மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கும் செக் வைத்த பசில்

அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் மட்டத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் உள்ளார். இதனால் பசில் ராஜபக்ஷ கடும் சீற்றம் அடைந்துள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டு தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ராஜதந்திரிகளின் விஜயத்திலும் முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை வரும் அதிகாரிகள், எதிர்வரும் திங்கட்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க பசில் ராஜபக்ஷ தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் ஊடாகவும் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவுரை

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்சுகு அசகவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்ததுடன் அன்றைய தினமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது சமூக, நிதி மற்றும் கடன் ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து வழங்கும் என்று அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கை விஜயம் குறித்துத் கருத்து வெளியிட்டுள்ள அவர் ‘இலங்கைக்கு மீண்டும் வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் கிமிமஸா றருமிசுவுடன் கடந்த 1991 ஆம் ஆண்டில் முதன்முறையான இந்த அழகிய நாட்டிற்கு வருகைதந்திருந்தேன். அப்போது நான் அவரது சிரேஷ்ட ஆலோசகராவேன்.

சுமார் 30 வருடங்களின் பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எமது வருடாந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு இலங்கை தயாராகின்றது. அந்தவகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் என்ற ரீதியில் நான் இப்போது இலங்கை எனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குச்சென்று அதனைப் பார்வையிட்ட அவர், ‘ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்தக்கூட்டம் இங்குதான் நடைபெறவிருக்கின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதன்முறையாக பிராந்திய அதிகாரிகள் நேரடியாக இங்கு வருகைதரவிருக்கின்றார்கள்.

அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டம் தெற்காசியாவின் நடைபெறும் இரண்டாவது முறை இதுவாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நுண்பாகப்பொருளாதாரத்தை உரியவாறு மறுசீரமைத்து, முகாமைசெய்வது அவசியமாகும். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலைத்தொடரந்து உருவான பல்வேறு சவால்களை உரியவாறு கையாள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்திருக்கின்றது.

பணவீக்கத்திற்கு மத்தியில் நிதி மற்றும் வெளியக இருப்பை சரியான மட்டத்தில் பேணுவதற்கென எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருக்கின்றது என்று அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்தக்கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ‘கொவிட்-19 தொற்றுப்பரவலுக்குப் பின்னரான உலகத்தில் காலநிலை மாற்றத்திற்கு இசைவான மீள்தன்மையுடைய பசுமைப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு; வினோ நோகதாரலிங்கம்!

அரசு ஆபத்தில் இருக்கும்போது அரசை காப்பாற்ற ஜனாதிபதி தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடு இன்று மிகவும் இக்கட்டான் நிலையில் இருக்கின்றது.

விலைவாசிகள் ஒவ்வொருநாளும் விடிய விடிய ஏறிக்கொண்டே இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மிக மோசமாக இருக்கின்றது. வரிசை யுகத்தினை மீண்டும் சந்திக்கும் நிலை வந்துகொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்க வேண்டுமாக இருந்தாலும் வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டியுள்ளது.

எரிபொருளின் விலை வானலாவ உயர்கின்றது. எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு, சீமெந்தை பெற முடியாதுள்ளது. 2000 ருபா வரைக்கு செல்லும் நிலை உள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தபாய தற்போது மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. அவர் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. அவருக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவரை துரத்தியடிக்க வேண்டும் அவர் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர் என சொல்லும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.

இந்த நாடு வெளிநாடுகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இனிமேல் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலையில்தான் நாட்டை ஆட்டம் காண செய்து விட்டு நாட்டை அதாலபாதாழத்திற்குள் தள்ளிவிட்டு தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் பேச முடியாத நிலையில் இருந்துகொண்டு ஐ. நா. மனித உரிமை பேரவையில் கேள்வி மேல் கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் இந் நிலையில் தன்னையும் இந்த அரசாங்கத்தினையும் தப்ப வைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சிறிநகர் கிராம மக்களின் 25 வருட கோரிக்கையான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

வவுனியாவில் சிறிநகர் மக்களின் 25 வருட கோரிக்கையாக இருந்த விளையாட்டு மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா சிறிநகரில் ரெட்ஸ்ரார் விளையாட்டு மைதானம் இன்று (12) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான குறித்த விளையாட்டு மைதானம் கடந்த 25 வருடங்களாக பல்வேறு தரப்பினரின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டது.

இங்குள்ள வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து கடந்த காலங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர் .

நிலையில் இன்று அவர்களின் தேவையான விளையாட்டு மைதானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை குழு உறுப்பினருமான வினோநோகதாரலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் ரெலோ மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன் , தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் யோகராசா , இந்து மத குருமார் , பிரதேச சபை உறுப்பினர் , அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க புலனாய்வு அறிக்கை – கூறுவது? ஈழநாடு Editorial

அமெரிக்க தேசிய புலனாய்வு பணியகம் ஒவ்வோர் ஆண்டும்
வெளியிடும் உலகளாவிய அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை (Annual Threat Assessment of the U.S Intelligent Community) வெளியாகி யிருக்கின்றது. இந்த அறிக்கையின்படி – சீனாவே முதல் அச்சுறுத்தலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ரஷ்யா இரண்டாம் நிலையிலும், ஈரான் மூன் றாம் நிலையிலும் மதிப்பட்டிருக்கின்றது. வடகொரியா நான்காவது நிலை யில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்த நிலையில் உலக சுகாதார நிலைமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

29 பக்கங்களை கொண்டிருக்கும் இந்த புலனாய்வு அறிக்கையில்,
28ஆவது பக்கத்தில், தெற்காசிய நிலைமைக்ள தொடர்பில் சுட்டிக்காட்டப்
படுகின்றது. தெற்காசியாவை பொறுத்தவரையில், முதலாவது அச்சுறுத்த
லாக ஆப்கானிஸ்தான் நிலைமைகள் குறிப்பிட்டிப்பட்டிருக்கின்றன.
இதற்கு அடுத்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலைமை
சுட்டிக்காட்டப்படுகின்றது. அடுத்ததாக, இந்தியாவிற்கும் – சீனாவிற்கும்
எல்லைப்புறங்களில் காணப்படும் பதற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்
கின்றன. இலங்கை தொடர்பிலோ ஏனைய தெற்காசிய நாடுகள் தொடர்
பிலோ எந்தவொரு தகவலும் குறிப்பிட்ட அறிக்கையில் இல்லை. அடிப்
படையில் தெற்காசியா தொடர்பான அமெரிக்க அவதானம் இந்தியாவை
மையப்படுத்தியிருப்பது தெளிவாகின்றது. இந்தியாவை அடிப்படையாகக்
கொண்டு ஏற்படும் முரண்பாடுகள் பதற்றங்களின் அடிப்படையிலேயே,
அமெரிக்காவின் தெற்காசியா தொடர்பான முடிவுகள் அமைந்திருக்கின்றன
என்பதையும் குறித்த அறிக்கை தெளிவாக பதிவு செய்கின்றது.

சர்வதேச அரசியலில் இலங்கை ஒரு விடயமே அல்ல என்பதை
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உலகமே
இலங்கையை அவதானித்துக் கொண்டிருப்பதான ஒரு தோற்றம் நமது
சூழலில் வலிந்து திணிக்கப்படுகின்றது. தேர்தல் காலங்களில் உலக
அதிகாரமான அமெரிக்காவும் பிராந்திய சக்தியான இந்தியாவும் ஈழத்
தமிழர்களை அண்ணார்ந்து நோக்கிக் கொண்டிருப்பதான ஒரு கதை
சொல்லப்படுவதுண்டு. கடந்த பொதுத் தேர்தலின்போது, பிராந்திய
சக்தியான இந்தியா தங்களுக்கு பின்னால் இருப்பதாக கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன், தெரிவித்திருந்தார். ஒரு பிராந்திய சக்தி கூட்டமைப்
புக்கு பின்னால் இருந்திருந்தால் – ஏன் கூட்டமைப்பால் எதனையும்
சாதிக்க முடியவில்லை? மக்கள் இப்படி கேள்வி கேட்கமாட்டார்கள்
என்னும் துணிவில்தான் தேர்தல் காலத்தில் இவ்வாறான பிரசாரங்களை
அரசியல்வாதிகள் துணிந்து கூறுகின்றனர்.

ஓர் உலகளாவிய அணுகுமுறை என்னும் அடிப்படையில், இலங்கை
யின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் அமெரிக்கா
அதன் கரிசனையை வெளிப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில்
தான், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கையின்மீது
கொடுக்கப்படும் அழுத்தங்களில் அமெரிக்கா அக்கறை செலுத்திவருகின்
றது. இதுதவிர, இலங்கையை ஒரு பிரதான விடயமாக அமெரிக்கா
கருதவில்லை. அதற்கான உலகளாவிய அவசியங்களும் இல்லை.
தெற்காசியாவில் ஏனைய சிறிய நாடுகளை நோக்குவது போன்றுதான்,
இலங்கைகையும் நோக்குகின்றது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அமெரிக்காவின் தெற்காசியா
தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள், இந்தியாவின் கரிசனைகள்,
ஆர்வங்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. ஏனெனில்,
இந்தியாவை அடிப்படையாகக் கொண்டுதான் அமெரிக்கா தெற்காசியா
வின் ஏனைய நாடுகளின் விடயங்களை உற்று நோக்குகின்றது. பொது
வாக ஒரு பிராந்தியத்தில் பெரியதொரு நாடு இருக்கின்றபோது, அந்த
பெரிய நாட்டை தவிர்த்து, புறம்தள்ளி உலக நாடுகள் செயல்பட முடியாது.
இந்த பின்புலத்தில்தான், இலங்கையின் மீதான அமெரிக்க ஈடுபாட்டை
நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயங்களை புரிந்து கொண்டு
தான், கொழும்பும் தற்போது, இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்
திக் கொள்வதில் கூடுதல் கரிசனையுடன் செயல்பட்டுவருகின்றது.

மக்கள் திண்டாட்டம் ! தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு : சமையல் எரிவாயுக்கு மக்கள் வரிசையில்

நாட்டில் பெற்றோல் , டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் என்று பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் தெரிவித்த போதிலும் , நாடளாவிய ரீதியில் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அனைத்து வகையான டீசலின் விலைகளை 75 ரூபாவாலும் , அனைத்து வகையான பெற்றோலின் விலைகளை 50 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவாலும் , ஒரு லீற்றர் பெற்றோல் விலை 20 ரூபாவாலும் ஐ.ஓ.சி. அதிகரித்தது.

பெப்ரவரியில் இரண்டாவது தடவையாக இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் பெப்ரவரி 6 ஆம் திகதியும் ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக இறக்குமதி நிறுவனங்களுக்கு கடன் கடிதங்கள் விடுவிக்கப்படாமையின் காரணமாக கடந்த இரு வாரங்களாக சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நாடளாவிய ரீதியிலுள்ள பல உணவகங்களுக்கும் , பேக்கரிகளும் , சிற்றுண்டிசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள், கடன் கடிதங்களை விடுவித்துக் கொள்வதில் காணப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றிலிருந்து கெரவலப்பிட்டி லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திலிருந்து இறக்குதல் , நிரப்;புதல் மற்றும் விநியோகம் ஆகியவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் வரிசைகளில் மாற்றம் இல்லை

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் , எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னாள் வாகனங்கள் நீண்ட வரிசை இன்னும் குறைவடையவில்லை.

நாட்டின் சில பிரதேசங்களில் நள்ளிரவு வேளைகளிலும் வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. சுமார் இரு கிலோ மீற்றரை விட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘எரிபொருள் விலை 254 ரூபாவாகக் காணப்படுகிறது. நாம் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு செல்வது?’ , ‘மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்து செல்வதே பொறுத்தமானதமாக இருக்கும்’ , ‘நாட்டின் பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே இதற்கான காரணமாகும்.’ , ‘இதே போன்ற ஆட்சி தொடர்ந்தால் யுத்தத்தை விட மோசமான நிலைமையே ஏற்படும்.’ என்று வாகனங்களில் வரிசையில் காத்திருந்த சாரதிகள் விசனம் வெளியிட்டனர்.

பொதுமக்கள் அசௌகரியம்

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாமையால் ஹோட்டல் உரிமையாளர்கள் மாத்திரமின்றி சாதாரண மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பெருநகர்ப்பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வாழும் மக்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்மாடி குடியிருப்புக்களில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் விறகு அடுப்பு பாவனைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் உணவு விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக சமைத்த உணவை கொள்வனவு செய்வதிலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி புறநகர் பகுதிகளில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு இன்மையின் காரணமாக விறகு அடுப்புக்களில் உணவை சமைப்பதால் , சில சந்தர்ப்பங்களில் புகை மணம் வருவதால் சுற்றுலாப்பயணிகள் உணவை வாங்குவதில் பின்வாங்குவதாக சுற்றுலாத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின்னரே அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அறிகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு முயற்சிக்கின்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தபோது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம்.

ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி இல்லை, பிறிதொரு திகதியைத் தருகின்றோம் என ஜனாதிபதி செயலகத்தினால் அன்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் காணி அபகரிப்பு தொடர்பில் பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேசவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பாக அவர் பேசவேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் மக்களுக்குக் கூறவேண்டும். இந்த ஜனாதிபதி எங்கு சென்றாலும் தான் 69இலட்சம் சிங்கள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி, தான் சிங்கள மக்களுக்காகக் கடமையாற்றக்கூடிய ஜனாதிபதி என்று கூறிவருகின்றார்.

கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற சிம்மாசன உரையில்கூட இந்த ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினையிருக்கின்றது, அதற்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்றுகூடக் கூறமுடியாதவர். இன்று ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல இடங்களில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையில்லை, அவர்களுக்குப் பொருளாதார பிரச்சினையென அவரின் பிரதிநிதிகள் கூறிவருகின்றனர்.

முதலில் அரசியல் தீர்வு, இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டுமாக இருந்தால் தமிழினத்திற்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அவர்களுக்குத் தேவையில்லை, பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று கூறிக்கொண்டு அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு கடற்றொழில் அமைச்சர் எதற்கு என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்கள்.

நீதியில்லாத இலங்கைக்கு நீதி அமைச்சர் எதற்கு என்பதைப் போல ஜனாதிபதி இங்கு இனப்பிரச்சினையில்லை என கூறிக்கொண்டு இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு தொடர்பில் பேசவேண்டிய தேவையில்லை. முதலில் ஜனாதிபதி இங்குள்ள தமிழர்களுக்குப் பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை முதலில் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டும். அதற்கும் மேலாகக் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவைகள் ஏமாற்றியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாகச் சென்று தீர்வினை வழங்குவேன் என்று கூறிக்கொண்டு 18சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தி அவர்களாகவே முறித்துக்கொண்டார்கள்.

அதனைப்போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அதன் காரணமாக ஜனாதிபதி இந்த இனப்பிரச்சினை தொடர்பாகத் தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக ஒரு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் 15 அடிப்படை பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது. காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை ஆகிய 15 பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினை விடுதலை செய்துவிட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவேன் என்ற உறுதிமொழியை வழங்கிவிட்டு, தொல்பொருள் திணைக்களம், வன இலாகா போன்ற திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்திவிட்டு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டிவிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் நியாயமாகும்.

அவ்வாறான நல்லெண்ணத்தினை அவர் வெளிப்படுத்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்வதுதான் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகவிருக்கும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.