பல வருடங்களாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் அவலம்! க.வி.விக்னேஸ்வரன்

பல வருடங்களாகவே எமது கடற்தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில் கடல் வளங்கள் பலவற்றையும் இல்லாமல் ஆக்கியவர்களே இப்போது இழுவைப் படகுகள் மூலம் எமது வளங்களையும் சூறையாடி வருகின்றார்கள்.

இவ்வாறு தொடர்ந்தால் அது எமது மீனவர்களையே வெகுவாகப் பாதிக்கும். ஆனால் இதே நேரத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் யார், எதற்காக அவ்வாறு ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாந் தரப்பாரின் உள்ளீடுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதோ என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

எமது கடற்தொழிலாளர்களின் வலைகள், படகுகள் போன்ற உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு எம்மவர்களின் வாழ்வாதாரமே அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவை போதாதென்று எம்மவர்களின் உயிரிழப்புக்களும் தாங்கொண்ணாத விதமாக அதிகரித்து வருகின்றன. நான் முதலமைச்சராக இருந்த போது டெல்லியிலிருந்து இங்கு வந்த உயர் அதிகாரியுடன் இது பற்றி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தியா – இலங்கை மத்தியில் இருக்கும் கடலில் இழுவைப் படகுகள் பாவிக்கப்படக் கூடாது என்றும் அவை யாவும் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் சென்று பல நாட்கள் இருந்து மீன் பிடித்து வர ஆவன செய்ய வேண்டும் என்றும் ஆழ் கடலுக்குச் செல்லும் இழுவைப் படகுகள் அதற்கேற்றவாறு இரு அரசாங்கங்களினாலும் மாற்றி அமைக்க உதவப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எமது அரசாங்கம் இனிமேலும் பராமுகமாக இருக்காது எமது கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு உறைக்கும் விதமாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனோர் விவகாரம்! இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள பதில்

காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விடயத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் எவ்வித தடைகளோ அல்லது புதிய சட்ட விதிமுறைகளோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் மற்றும் அது தொடர்பான அலுவலக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்து வருகின்றார்.

அதற்கமைய நீதி அமைச்சரின் வடக்கு விஜயத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமான விடயமாகவுள்ளது.

மேலும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையின் பிரதான வேலைத்திட்டம் காணிகள் உள்ளிட்ட சட்ட ரீதியான விடயங்களைப் போன்றே காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகும்.

அந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படக் கூடிய உச்சபட்ச ஒத்துழைப்பினை வழங்க தொடர்ந்தும் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.
இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன.இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார். உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.

அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும்.அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார்

பாகிஸ்தானை விட அதிகரித்து வரும் இலங்கையின் பணவீக்கம்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் பணவீக்கம் பாகிஸ்தானை விட வேகமாக அதிகரித்து வருவதாக இந்தியாவின் Business Standard இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 22.1 ஆக பதிவாகியிருந்தது.

மக்களின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பணவீக்கம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளமை அரசாங்கம் வௌியிட்டுள்ள புதிய தரவுகள் மூலம் உறுதியாகின்றது.

டிசம்பர் மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வேகம் 12 .1 ஆக அமைந்திருந்ததுடன், ஜனவரி மாதம் அது 14.2 ஆக அதிகரித்தது.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையே பணவீக்கத்திற்கான முக்கிய காரணம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அரிசி, பால் மா, சீனி, பழ வகைகள், பாண் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

உணவுப்பொருட்கள் அல்லாத எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டணங்கள், எரிவாயு விலை, வீட்டு வாடகை, கல்வி, உணவக மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரிப்பு என்பனவும் ஜனவரி மாதம் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த ஒரு வருட காலத்தில் ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசியின் விலை 65 ரூபாவால் அதாவது 68 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அரிசிக்கான மாற்றீடாக அமைந்துள்ள கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையும் 60 ரூபாவால் அதிகரித்துள்ளது. அது 57 வீத அதிகரிப்பாகும்.

நாட்டின் அநேகமானவர்களின் உணவில் முக்கிய அங்கமாக உள்ள பருப்பின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 98 ரூபாவால் அதிகரித்துள்ளது. பருப்பின் விலையில் சுமார் 57 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் சீனி விலையும் 28 ரூபாவால் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயின் விலையும் 32 ரூபாவால் அதிகரித்துள்ளது.

பிள்ளைகள் உள்ள வீடுகளின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பால் மா விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட்டின் விலை 160 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், பட்டர் விலை 60 ரூபாவால் அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

இந்திய மீனவர்களால் யாழ் மீனவர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு- மீனவர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களால் யாழ் மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கத் தீர்மானித்துள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரை இந்திய மீனவர்கள் படகுகளால் மோதிப் படுகொலை செய்யப்பட்டமையின் தொடராக யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு உட்பட்ட கரையோரப் பகுதிகளில் மீனவர்களின் போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது.
குறித்த பகுதிகளில் வீதிகள் முடக்கப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் பருத்தித்துறையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஒன்று கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.

அவற்றின் அடிப்படையில்,’இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினர் உத்தரவாதம் வழங்கவேண்டும், அதேபோல கடற்றொழில் அமைச்சரும் வாக்குறுதி வழங்கவேண்டும். வழமைபோல வாக்குறுதி வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அடாவடி நடவடிக்கைகள் தொடர்ந்தால் தொழில் முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும், அதேபோல பிரதேச செயலகங்கள், கச்சேரி உட்பட்ட அரச திணைக்களங்களை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மருதங்கேணியில் பிரதேச செயலகத்தினை முடக்கி போராட்டம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள்,

‘எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா’ – ‘உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து’ – ‘இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா’ – ‘வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்’ – ‘எமது கடல் எமக்கு வேண்டும்’ – ‘கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார்’ – ‘மீனவர்களை கொல்லாதே’ போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றனர்.v

Posted in Uncategorized

மற்றுமொரு வழக்கில் இருந்து பஸில் விடுதலை!

2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் திவிநெகும நிதியை பயன்படுத்தி கலண்டர்களை அச்சிட்டு பகிர்ந்தளித்தமை தொடர்பான வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட இருவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் 29.4 மில்லியன் ரூபா செலவில் கையேடுகளை அச்சிட்டு பகிர்ந்தளித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையினால் இவர்களை விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

மன்னாரில் அவுஸ்ரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்

ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவுபடுத்தலை உடனடியாக நிறுத்துவததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் நெறிப்படுத்தலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கனிய மண் ஆய்வு என்ற போர்வையில் பேசாலைஇ நடுக்குடாஇ கட்டுக்காரன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நிலத்தின் ஆழத்திற்கு துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற ஆய்வு மற்றும் அகழ்வை உடனடியாக நிறுத்திவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம்இ மன்னாரில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தையும் நிறுத்துவதற்கு அபிவிருத்தி குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்வி,னோ நோகராதலிங்கம், நகர பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா?

-யதீந்திரா

அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இது பல கேள்விகளை முன்வைத்திருந்தது. ஏனெனில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் வழக்கத்திற்கு மாறான ஒன்று. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் தொடர்பில் வடக்கு மீனவர்கள் மத்தியில் அதிருப்திகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் இடம்பெற்றிருந்தது. கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் பின்னர்தான் சீனத் தூதுவர், யாழ் மீனவர்களை நோக்கி உணவுப் பொதிகளோடு வந்திருந்தார். இருபது மில்லியன்கள் நிதியையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக வழங்கியிருந்தார். யாழ். தீவகப் பகுதிகளில் சீனாவின் நிதியாதரவுடன் கலப்பு மின்-உற்பத்தி திட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதான செய்திகளும் வெளியாகியிருந்தன. பின்னர் இந்த திட்டம் கிடப்பிற்கு சென்றது. தாம் அந்த திட்டத்தை கைவிடவில்லையென்று, யாழ்;ப்பாண விஜயத்தின் போது, சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்பாண விஜயத்தின் போது – வடக்கு தமிழர்களின் கலாசார குறியீடாக நோக்கப்படும், நல்லூர் கோவிலில் சீனத் தூதுவர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாண கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஸ்டியுடன் சீன அதிகாரிகள் காட்சியளித்தனர். தமிழ் மக்களுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது? ஏனெனில் சீனா தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்தை ஒரு உள்நாட்டு விவகாரமாக நோக்குகின்றது. தாம் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் வெளிவிவகாரக் கொள்கையை கொண்டிருக்கவில்லை – என்பதே சீனாவின் ஒரு வரிப்பதிலாகும். அவ்வாறு கூறும் சீனாவோ – மறுபுறமாக, ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. உண்மையிலேயே நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாக் கொள்கையை சீனா கொண்டிருந்தால் – தர்க்கரீதியில் தமிழர் விவகாரத்தில் ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை என்னும் நடுநிலை அணுகுமுறையைத்தான் சீனா கைக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் சீனா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்பு கூறலை வலியுறுத்தும் பிரேரணைகளின் போது, சீனா எப்போதும் இலங்கையின் பக்கமாகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் பொறுப்பு கூறலையும் நீதியையும் எதிர்பார்த்திருக்கின்ற போது – சீனாவின் கொள்கை நடுநிலை என்றால், எந்தவொரு பக்கத்திலும் சீனா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆனால் சீனா அவ்வாறு செயற்படவில்லை. இந்த அடிப்படையில் சீனாவின் தலையிடாக் கொள்கை கேள்விக்குள்ளாகின்றது. ஒரு வகையில் மேற்குலகின் மனித உரிமைகள்சார் தலையீட்டை எதிர்கொள்வதற்கான ஒரு பதில் தந்திரோபாயமாகவே, தலையிடாக் கொள்கையை சீனா கைக்கொண்டுவருகின்றது. தர்க்கரீதியில் சீனா, தலையிடாக் கொள்கை என்னும் பெயரில், நாடுகளில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான தலையீடுகளையே செய்கின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மனித உரிமைகள் சார்ந்து தலையீடுகளை செய்கின்ற போது, அதற்கு எதிராக நிற்பதன் மூலம்- குறித்த நாடுகளின் அதிகாரத்தில், செல்வாக்குச் செலுத்தும் மக்களின் ஆதரவை சீனா சம்பாதித்துக் கொள்கின்றது. பின்னர் அதனையே தனது விரிவாக்கலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றது.

சீனா இன்று வலுவாக காலூன்றியிருக்கும் நாடுகள் அனைத்திலும் இதனை நாம் காணலாம். ஆபிரிக்க நாடுகள் – அதிகம் மனித உரிமை சார்ந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. அங்கு சீனா தனது செல்வாக்கை அதிகளவில் பெருக்கியிருக்கின்றது. எனவே சீனா ஒரு இடத்தை அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை தெரிவு செய்யும் போது, அங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்றே திட்டமிடும். இந்த இடத்தில் ஒருவர் எதிர்வாதம் புரியலாம். ஏனைய நாடுகளும் அவ்வாறுதானே செய்கின்றன. பலம்பொருந்திய நாடுகள் தங்களுடைய நலன்களை நிறுத்துப் பார்த்துத்தானே எந்தவொரு தலையீட்டையும் செய்யும். நிச்சமாக – அதில் என்னிடம் மாற்று கருத்தில்லை.

ஆனால் இந்;தியா, அமெரிக்கா மற்றும் இன்னும் பல மேற்கு நாடுகளும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் கரிசனைகளை காண்பிக்கின்றன. தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான ஒரு அரசியல் தீர்வே, தமது கொள்கை நிலைப்பாடென்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அமெரிக்கா மனித உரிமைகள் என்னுமடிப்படையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறலுக்கான பொறுப்பு கூறலை வலியுறுத்துகின்றது. எனவே அவர்களின் தலையீடு தமிழ் மக்களுக்கு சாதகமானது. ஆனால் சீனாவோ, சர்வதேச அரங்குகளில் இலங்கையை காப்பாற்றிக் கொண்டு, இலங்கை அரசுக்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமலேயே, தமிழ் மக்களை நோக்கி வருகின்றது.

இந்த அடிப்படையில்தான், இந்திய – ஈழ மீனர்களின் பிரச்சினையை பயன்படுத்தி வடக்கில் காலூன்றுவதற்கான பரிசோதனை முயற்சியில் சீனா ஒரு முறை சுழியோடிப் பார்த்தது. வடக்கில் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ – அங்கெல்லாம் காலூன்றலாம் என்பதற்கான ஒத்திகையாவே வடக்கை நோக்கி சீனா வந்தது.

மீனவர் பிரச்சினையை முன்வைத்து வடக்கை அளவிட்ட சீனாவிற்கு பிறிதொரு அழைப்பும் தற்போது விடுக்கப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்தல் என்னுமடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது. நிச்சயம் இதனையும் சீனா பயன்படுத்திக் கொள்ளும். தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான கோரிக்கையென்பது, தற்போதிருக்கின்ற மாகாண சபையை வலுவுள்ள ஒன்றாக மாற்றுதற்கான கோரிக்கையாகும். இப்போதுதிருக்கின்ற ஒன்றை மேலும் பலப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையானது – எப்படி தமிழ் மக்களுக்கு எதிரான ஒன்றாக இருக்க முடியும். இந்தக் கோரிக்கையை எதிர்த்தே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசி மக்கள் முன்னணி) நல்லூர் கோவிலடியில் குறிப்பிட்டளவான மக்களை திரட்டி, எதிர்பை வெளியிட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் எந்த கோவிலுக்கு முன்னால் நின்று இந்தியாவிற்கு செய்தி சொன்னாரோ – அந்த இடத்திலிருந்துதான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற 13வது திருத்தச்சட்டத்தை கொழுத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி சூழுரைத்திருக்கின்றது.

இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதிலிருந்து, குறித்த கட்சிகளின் தலைவர்களை இந்திய முகவர்களென்றும், அடிமைகளென்றும் பொது வெளிகளில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். எனவே இவர்களது எதிர்ப்பு அடிப்படையில் 13 தொடர்பானதல்ல மாறாக, இந்தியாவோடு நிற்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டிற்கு எதிரானது, அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிரானது. இதன் மூலம் தாங்கள் இந்தியாவோடு இல்லையென்பதையும் இவர்கள் கூற முற்படுகின்றனர். அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான மனோநிலையை யாழ் மக்கள் மீது விதைப்பதுதான் இதன் பின்னாலுள்ள உண்மையான இலக்கு. வடக்கிலிருந்து இந்தியாவை எதிர்ப்பது அடிப்படையில் யாருக்கான செய்தி? யாருக்கான அழைப்பு?

தர்க்க ரீதியில் 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பது என்பதே தவறானது. அத்துடன், அது ஒரு அரசியல் நேர்மையற்ற செயலாகும். ஏனெனில், 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு 13ஜை (மாகாண சபையை) தீண்டுவதில்லை என்னும் விரதத்திற்கு முற்றுபுள்ளியிட்டது. அதன் பின்னர் 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் இரண்டு தேர்தல்களிலும் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர். எனவே, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டுவிட்டு, 13வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என்று கூறமுடியுமா? இப்போது 13ஜை எதிர்க்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் கஜன் பொன்னம்பலமும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறுகின்றார். இது எவ்வாறான அரசியல் நேர்மை? அங்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே தாம் போட்டியிடவுள்ளதாக கூறுகின்றார்? ஒரிடத்தில் ஒன்றுமில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டால் – அதனை நிரூபிப்பதற்காக அங்கு ஏன் செல்ல வேண்டும்? கஜன் பொன்னம்பலத்தின் வாதம் தர்க்கரீதியில் பொருளற்றது. எனவே இங்கு பிரச்சினை 13வது திருத்தச்சட்டம் இல்லை. விடயம் அதனைவிடவும் பாரதூரமானது.

ஒரு புறம் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அணியினர் பௌத்த அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவர முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு யாப்பை கொண்டுவர வேண்டுமென்றால் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கின்ற மாகாண சபையை இல்லாமலாக்க வேண்டும். ஆனால் 13 விடயத்தில் இந்தியா தலையீடு செய்தால் அது புதிய நெருக்கடியை தோற்றுவிக்கும். ஆனால் தமிழர்களும் 13இல் ஒன்றுமில்லை – அது தேவையற்ற ஒன்று – என்று கூறினால், அதன் பின்னர் சிங்கள கடும்போக்கு பௌத்த தேசியவாதிகளின் பணி சுலபமாகும். ஒரு வேளை, கஜன் பொன்னம்பலம் அணியினர் இதனை அறியாமலும் இருக்கலாம். 13ஜை இல்லாமலாக்க வேண்டும் அல்லது, பலவீனப்படுத்த வேண்டுமென்று, சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு பின்னாலும் இந்திய எதிர்;ப்புத்தான் மறைமுகமாக தொழிற்படுகின்றது. ஏனெனில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எல்லாக் காலத்திலும் தமிழரின் பெயரால் இலங்கையில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது.

13வது திருத்தச்சட்டத்திலுள்ள போதாமைகளை தமிழ் பரப்பில் உரையாடுவது என்பது வேறு, அதனை வீதிகளில் நின்று எதிர்ப்பதென்பது வேறு. வீதிகளில் நின்று 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக கோசமிடுவதும் – அதனை பாதுகாக்க வேண்டுமென்று கூறுபவர்களை இந்திய முகவர்கள், இந்திய அடிமைகள் என்றும் கோசமிடுவதானது – அடிப்படையில் இந்தியாவிற்கான எதிர்ப்பை வடக்கில் அடையாளப்படுத்துவதும், மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை பரவல்படுத்துவதும் நோக்கத்தையுமே கொண்டதாகும். இவ்வாறான இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையே, மறுபுறமாக, சீனா தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. 13 எதிர்ப்பின் மூலம், சீனாவிற்கு வடக்கில் பிறிதொரு கதவு திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இனி அவர்கள் அதனை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.

யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு வழங்க பணமில்லை! அரசாங்கம் அறிவிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திடம் பணமில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்து குறித்து, நிலைமாற்று கால நீதிப் பொறிமுறையை எதிர்பார்த்து கடந்த ஒரு தசாப்தகாலமாக வீதிகளிலும் சர்வதேச அரங்குகளிலும் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்ற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதன் மற்றும் வடபகுதியில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்,

அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது எனவும் அபிவிருத்தியின் ஒரு பங்காளியாக இணைந்து செயற்படுமாறு அரச சார்பற்ற நிறுவனங்களை கோரியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஜெனீவா அமர்வு தொடர்பான நிலைப்பாடு என்னவென்றால், கடந்த சில மாதங்களாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள எண்ணில் அடங்கா முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து உள்நோக்கத்துடன் அல்லாமல் புறநிலையில் இருந்து சர்வதேச சமூக சமூகம் பார்வையை செலுத்த வேண்டும். இவை பல வருடங்களாக மீதமாக உள்ள பிரச்சினைகள்.

அதனை நாம் உருவாக்கவில்லை. தற்போதுள்ள நிலைமைகளை மதீப்பீடு செய்யும் போது முன்னோக்கு மற்றும் சமநிலை காணப்பட வேண்டும். உலகில் இருக்கும் மிகவும் பிரச்சினைக்குரிய நாடாக இலங்கை இருக்கவில்லை.

பிரச்சினைகள் காணப்படும் இடங்களை பாருங்கள். நேரம், வளம், சக்தியை இதற்கு பயன்படுத்துவதில் அர்த்தம் இருக்கின்றதா? உலகில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகள், உயிர்காப்பு தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.

கோவிட் தொற்றுக்கு எதிராக போராடும் அரைவாசி நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளே இல்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வாய்மொழி மூல அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கும், எழுத்துமூலம் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும், விசேட பொறிமுறைகளுக்கும் பல மில்லியன் கணக்கான டொலர் பணத்தை செலவிடுவதில் அர்த்தம் இருக்கின்றதா ?

சூழ்நிலை மற்றும் பதில் நடவடிக்கை என்ற இரண்டு விடயங்கள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. களத்தில் உள்நாட்டு பொறிமுறையானது செயற்றிறன்மிக்கதாக காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணகத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்குகள், ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர் நீதிமன்ற நீதியரசரின் கீழான ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு என பல்வேறு பொறிமுறைகள் காணப்படுகின்றன. இந்த அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து சுப்பர்மடத்தில் போராட்டம்

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள்  அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம். இது எதற்குமே பயனில்லை.
மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.
அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.
அத்துமீறும் மீனவர்களை , அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது என தெரிவித்தனர்.

Posted in Uncategorized