சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்: இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு திட்டம்

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

NTPC நிறுவனம் இந்தியாவில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்டை விட அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கம்பி கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது பாரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

பகிர்தல்:

Posted in Uncategorized

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்தார்.

மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்.. இந்த உத்தரவாதம் மிக அவசியம்! செல்வப்பெருந்தகை செக்!

சென்னை: இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்பு, 13 -வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை அந்நாட்டு அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுவதாவது;

ராஜீவ்காந்தி

முன்னாள் பாரத பிரதமர் தலைவர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் ஏற்பட்டது. தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருகிறது.

அதிகாரப் பகிர்வு

முழு அளவிலான உள்நாட்டுப் போர் உருவாகியிருந்த நேரத்தில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்திற்கும், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது. கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் இன்றளவும் தரப்படவில்லை.

இலங்கைக்கு கடன்

தற்போது, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கடன் தரப் போகும் இந்தியா, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும்.

13-வது சட்டத்திருத்தம்

மேலும், இலங்கைத் தமிழருக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.

பெப்ரவரியில் வருகிறார் புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தினை இராஜாங்கத்தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதேநேரம், அமெரிக்க தூதரகம் புதிய தூதுவரை வரவேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜுன் 15ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.

அதன் பின்னர் அவர் தனது சமர்ப்பணங்களை செனட் சபையில் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 20 இல் அமெரிக்க செனட் சபையினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் எதிர்வரும் பெப்பரவரியில் இலங்கைக்கு வருகை தந்து பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

ஜூலி ஜியூன் சுங், இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங்ரூபவ் கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்ரூபவ் அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராக கடமையாற்றியுள்ளர்.

இதற்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுடனான பேச்சில் பங்கேற்பதா? கூட்டமைப்பின் நிலைப்பாடு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சில் பங்கேற்பதா? இல்லையா? என்பதை தாம் பரிசீலித்து முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரையைக் காட்டமாக விமர்சித்துள்ள நிலையில், அரச தலைவருடனான பேச்சுக்களில் கூட்டமைப்பு பங்கேற்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் பதிலளிக்கையில்,

“அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 18ஆம் திகதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்திலேயே அமைந்துள்ளது. பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அவர் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், அவர் தலைமையிலான அரசாங்கம் எம்மைப் பேச்சு மேசைக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால், அதில் நாம் பங்கேற்பதா அல்லது சர்வதேச மத்தியஸ்தத்துடன் பங்கேற்பதா என்று மிகவும் கவனமாகப் பரிசீலித்து முடிவெடுப்போம்.

ஏனெனில், இந்தக் கருமம் மிகவும் முக்கியமானது. நாம் எதனையும் குழப்பவும் விரும்பமாட்டோம் – அதேவேளை ஏமாறவும் தயாராக இருக்கமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு – நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச

திறந்த மனதுடன் தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது. அந்தப் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் காரசாரமாக விமர்சித்துள்ள நிலையில், கூட்டமைப்புடன் பேச்சு முன்னெடுக்கப்படுமா? என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,

“அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. அதைவிட அவர்களின் அத்தியாவசிய தேவைகளே முக்கியம்.

எனவே, முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு, அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதுவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக உள்ளது.

இவற்றுக்கு முதலில் தீர்வு கண்டால் அரசியல் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணமுடியும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நாட்டைப் பிளவுபடுத்தி இனவாத ரீதியில் செயற்பட அவர்கள் முற்படக்கூடாது. நாட்டை முன்நகர்த்தும் செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

Posted in Uncategorized

அரச தலைவரின் கரங்களுக்கு செல்கிறது அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபு

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை, அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது இதுவரை 20 தடவை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான வரைபை உருவாக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.

அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் அரச தலைவர் சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோகரா டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த ஆகியோரும், பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், குறித்த நிபுணர்கள் குழு பல்வேறு தரப்புக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை இறுதி செய்துள்ளதாக அறியமுடிகிறது.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது வரைபினை இறுதி செய்துள்ளது.

இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் ஆகியன உள்ளடக்கத்தில் உள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழர் தரப்பின் நகர்வுகள் சாதாரணமானவை அல்ல!! அரசாங்கத்திற்கு ஆலோசனை

தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் முரண்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இனியும் தவறான கொள்கையில் அரசாங்கம் பயணித்தால் ஒட்டுமொத்த நாடும் அதளபாதாளத்தில் விழும் எனக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழர் தரப்பு வலியுறுத்தியுள்ளமை, வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது.

பூகோள அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வெவ்வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

பேரறிவாளனுக்கு 9-வது முறையாக பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாகசிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். முதல்வர் இதை பரிசீலித்து,பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

பேரறிவாளன் கடந்த மே 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பரோலில் சென்றார். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றுசிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

அவரது பரோல் நாளையுடன் (ஜன.24) முடிவடையும் நிலையில், 9-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை அரசாங்கம் நிராகரிக்காது- டலஸ் அழகப்பெரும

உலகளாவிய நிதி நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை அரசாங்கம் என்றென்றும் நிராகரிக்காது. ஆனால் தற்போது இலங்கை தனது கடன் சேவையை வேறு முறையின் கீழ் மறுசீரமைக்க எதிர்பார்க்கிறது என வெகுஜன ஊடக அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருங்கிய உறவைப் பேணுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை 16 தடவைகள் பெற்றுள்ளது. சமீப காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரும் 2008 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரும் கடனாகப் பெற்றுள்ளோம்.

எதிர்காலத்தில் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் எந்த நேரத்திலும் நிராகரிக்கவில்லை.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பெறும் உறுப்பு நாடாகும். எனவே சர்வதேச நிதி நிறுவனம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை சேதப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பற்றி அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதித்துள்ளதாகவும் இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.