2021இல் 120,000 இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

2021ஆம் ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 30,000 பேர் கட்டாருக்கும், 27,000 பேர் சவுதி அரேபியாவுக்கும், 20,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், 1,400 பேர் தென் கொரியாவுக்கும், 1,100 பேர் சிங்கப்பூருக்கும், 1,600 பேர் சைப்ரஸுக்கும், 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு புதிய நகல்; கட்சிகள் இணக்கம்

வடக்கு – கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு – பொதுவான அபிலாசைகளைப் பிரதி பலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று நேற்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.

நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரனின் இல் லத்திலுள்ள அவரின் அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக் கும் முயற்சியில் தலைவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி., ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம். பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சி யின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம். பி. அனுப்பி வைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதி மொழிகள் நினைவூட்டப் பட்டுள்ளன.

13ஆவது திருத்தத்தில் வழங்கப் பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடை முறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என் பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

நேற்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக் கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம். பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது

Posted in Uncategorized

வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக வரைபு உள்ளது

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இலங்கை வந்திருந்த பாரதப் பிரதமர் என்னுடைய 13 வருட முதலமைச்சர் கால அனுபவத்தில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு கூட்டு சமஸ்டி முறையே பொருத்தமானதென இலங்கை நாடாளுமன்றத்தில் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். அவ்வாறு கூறுபவரிடம் 13ஆம் திருத்தத்தை அமல்படுத்த கோரி நாம் கடிதம் எழுதுவது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்கள். இதன்போது முஸ்லிம் தரப்புகள் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் அபிலாஷைகள் வித்தியாசமானது. அதேபோல மலையக தமிழர்களது அபிலாஷைகள் வித்தியாசமானது. வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களது அரசியல் அபிலாசைகள் வித்தியாசமானது.

ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு வரைவு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வாரத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரைபை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இரண்டாவது வரைபு பற்றியும் இதன்போது விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாவது வரைபில் உள்ள பல விடயங்கள் இல்லாமலாக்கப்பட்டு வெறும் கண்துடைப்புக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுவதாக அந்த வரைவு காணப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு சமஸ்டியையே முன்வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை. அதேபோல நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்தவும் கூறத் தேவையில்லை. தேர்தல் சட்டங்களின் படி நடத்தியிருக்க வேண்டும். இந்திய பிரதமரிடம் தேர்தலை நடத்துங்கள் என்று கட்சிகள் கோருவதில் நியாயம் இல்லை. அதை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

வெளியில் ஓர் மாயை உண்டு அதாவது ரெலோ கொண்டு வந்த நல்ல விடயத்தை தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பதாக எண்ணுகின்றனர் அது தவறு.

இந்தியாவின் கொல்லைப்புறம் வரையில் இன்னுமோர் நாடு வந்த பின்பும் அயல் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என இந்தியா தொடர்ந்தும் கூறப்போகின்றதா என்பதனை இந்தியாதான் சிந்திக்க வேண்டும் என்றார்.

“2022 இல் இலங்கைக்கு பாரிய அழிவு” எதிரணி அபாய மணி!!

இலங்கையை சிறப்பாக நிர்வகிப்போம் எனத் தெரிவித்த கோட்டாபய – மஹிந்த தரப்பினர், அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, புத்தாண்டில் பாரிய அழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த 2022 ஆம் ஆண்டில் பாரிய அழிவொன்று ஏற்படப்போகிறது. விவசாய பிரச்சினைக்கு ஒமைக்ரோன், டெல்டா என்பவை காரணம் அல்ல. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளாக அரிசி ஆலைகள் செயற்பட்டன. விவசாயிகளும் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள், அவர்கள் வீட்டில் இருக்கவில்லை.

நாம் தான் சிறப்பாக செய்தோம், எனக்குத் தான் அனைத்தும் தெரியும் எனக் கூறி அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர்.

இந்த உணவு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 100 வீதம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தான் காரணம்.

அரச தலைவர் அவர்களே, மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உள்ளார்கள். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர். மக்களின் நிலைமையை நேரில் சென்று பாருங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் -சம்பந்தன் வெளியிட்ட தகவல்

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.

அந்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் இன்று (02)கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாகவும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் சகல விடயங்களும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வாய்ப்பினை நழுவ விட்டால்!! தமிழினத்தின் எதிர்காலம் மோசடையும் – பகிரங்க அறைகூவல்

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது ‘வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன’ என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்.

அவர் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றில்,

குறிப்பறிந்து, தீர்க்கமான தீர்மானத்தினை எடுக்கும் அதேநேரம், தொடர் தாமதங்களை தவிர்த்து மிகமிக விரைவாக கூட்டு ஆவணத்தினை ஏகோபித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.

சிங்கள, பௌத்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 69இலட்சம் தென்னிலங்கை மக்களே ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கின்ற அளவிற்கு வெறுப்பை காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று தமக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் பூகோளப்போட்டியின் பங்குதாரர்களான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியன தன்னலன்களை மையப்படுத்தி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதில் அமெரிக்கா, இந்தியாவை முன்னிலைப்படுத்திய நகர்வினை இலங்கை விடயத்தில் கையாள்கின்றது. அதேபோன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் அவ்விதமான நகர்வினையே பின்பற்றுகின்றது. இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன்களை பெறுவதற்கு தயாராகியுள்ளது.

மறுபக்கத்தில் சீனாவிடத்திலும் கடன்களை, நன்கொடைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தப் பின்னணியில், எதிர்வரும் எட்டாம், ஒன்பதாம் திகதிகளில் சீன வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகின்றார்.

அவர் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதையே பிரதான விடயமாக கொண்டிருக்கின்றார்.

அதேநேரம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்கு தயாராக வருகின்றார். குஜராத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது காரணமாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடியைச் சந்திப்பது, இந்தியாவிடமிருந்து பெறக்கூடிய டொலர்களை விரைவுபடுத்துவது என்பன அந்தப் பயணத்தின் பின்னணிகளாக உள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தினை விரைவு படுத்த வேண்டியுள்ளது.

குறித்த ஆவணத்தினை அனுப்புவதன் ஊடாக, இந்தியா இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

அதிகாரப் பகிர்வுக்கான முதற்படியாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமானதாக இருக்கும். ஆட்சியில் உள்ள தரப்பினர் புதிய அரசியலமைப்பினை முன்னகர்த்துவதற்குரிய நடவடிக்கைளை கையிலெடுத்துள்ள நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அகற்றப்படும் அபாயமுள்ளது.

தமிழர்களின் அபிலாஷைகளை 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட முதலில் இருப்பதைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆகவே 34 ஆண்டுகளுக்கு முன்னதாக 1987இல் தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறினால் ஏற்பட்ட விளைவுகள் (உயிரிழப்பு,சொத்தளிவு) அந்த நிலை மீண்டும் இழைத்துவிடக் கூடாது.

தமிழின விடுதலைப்போராட்டத்தில் சமர்களமாடிய தரப்புக்களே முதலில் 13ஐ பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அறவழியில் வந்த தலைமைகள் அதனை புறமொதுக்காது சிந்தித்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகின்றது” என்றுள்ளது.

Posted in Uncategorized

ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறு முக்கிய அமைச்சர்களில் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச  நேற்றைய தினம் நாடு திரும்பினார்.

அவரது வருகையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

புதிய ஆண்டில், புதிய மாற்றங்களுடன் புதிய பயணத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,  ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரவை மாற்றமும் இதன் பிரதிபலனே எனக் கூறப்படுகிறது.

இதனிடையே செயற்திறனில் பலவீனமாக இருக்கும் அரசாங்கத்தின் 8 முன்னணி நிறுவனங்களின் தலைமை பதவிகளிலும் மாற்றங்களை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம், புதிய ஆண்டில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் அடிப்படை நடவடிக்கையாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படடவுள்ளன.

கோவிலில் சிலைகள் உடைப்பு! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : இராதாகிருஷ்ணன்

அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று (02.01.2022) தலவாக்கலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“புதுவருடம் பிறந்தாலும் இன்னமும் வழி பிறக்கவில்லை. இன்று எந்த வரிசையில் நிற்கவேண்டி வருமோ என்ற அச்சத்துடன் தான் பொழுது விடிகின்றது. அரசு வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது 32 வருடகால அரசியல் வாழ்வில் எந்தவொரு அரசும், இப்படியானதொரு வீழ்ச்சியைக் கண்டதில்லை. ஜனாதிபதி செயலாளரை மாற்றினர். தற்போது மேலும் பல அரச அதிகாரிகளை மாற்ற தயாராகிவருகின்றனர். இதற்கிடையில் அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம். இப்படி ஆட்சிகளை மாற்றிக்கொண்டிருந்தால் தீர்வு கிட்டுமா?

அக்கரப்பத்தனையில் உள்ள கோவில் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 60, 70 சிலைகள் இனந்தெரியாத நபர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். இதற்கு முன்னர் லிந்துலை பகுதியில் மாதா கோவிலின் சிலை சேதமாக்கப்பட்டது. தற்போது இந்து கோவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவா இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும். அரவிந்தகுமார் நல்லவர் தான். ஆனால் அவர் இருக்கும் இடம்தான் சரியில்லை. 2013 இல் மாகாணசபைத் தேர்தலில் தோற்றார்.

ஆனால் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதற்கு அவர் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியுமே காரணம். 2020 இலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கும் அவர் மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்ததே காரணம்.

செந்தில் தொண்டமானுக்கு செல்வாக்கு இருந்தும், பண பலம் இருந்தும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. ஏனெனில் அவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம் இருக்கின்றது. இந்நிலையில் நுவரெலியாவில் வந்து போட்டியிடுவேன் என அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். வரட்டும் பார்ப்போம்.

தமிழக மீனவர்களுக்கும், யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் தமிழர். அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்கள் தமிழர்.

எனவே, தமிழர்கள் மோதிக்கொண்டால் அதன்மூலம் மற்றைய தரப்புக்குதான் நன்மை. இந்த விடயத்தையும் அரசு திட்டமிட்டு செய்கின்றதா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு – அநீதிக்கெதிரான ஒரு குரல் மௌனித்தது

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளியின் பயண நிறைவில் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் வடக்கு-கிழக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“’அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.’ -டெஸ்மண்ட் டுட்டு

நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது.

தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட மக்களின் அரசியல் வேணவாவை விளங்கிக் கொண்டு அதற்காகவே கொள்கை ரீதியான நிலை எடுத்து தன்னை அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பொதுப்படிமமாக கட்டமைத்துக் கொண்டவர். டுட்டுவின் அரசியல், அடக்குமுறைக்கெதிராக பல்வகை உத்திகளை விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு கையாண்டாலும் அவரது விமர்சனப் பகுப்பாய்வு நகைச்சுவையும், வன்முறையற்ற அணுகுமுறையும் மிகவும் முக்கியமானது. அதே உத்தியை விடுதலைக்குப் பின்னர் தென்னாபிரக்க தலைவர்கள் ஊழல்களில் சிக்கிய போதும் கையாண்டார் என்பது அவரது தலைமைத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிறவெறி, கிட்லரின் நாசிசத்திற்கு சமமானது எனக் குறிப்பிடடு;, ஐ.நா.சபையில் (1988) நிறவெறிக்கெதிராக தண்டனை அமுல்படுத்தாத மேற்குலக அரசியல்வாதிகளை நிறவெறியவர்கள் என சாடியதையும் வரலாறு நினைவு கூரும். பாதிக்கப்பட்ட-மக்கள்-மைய நீதிப் பொறிமுறை அணுகுமுறையே எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் என்பது அவரது பட்டறிவாக இருந்ததை அவருடைய கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச மூதவையின் தலைவராக இருந்த போது 2013 நவம்பரில் பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தமுடியாது என குரல் கொடுத்தவர்களில் டெஸ்மன் டுட்டுவும் ஒருவர். ]தமிழ்த்தேசிய நோக்கில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ‘தான் வழிநடத்தப்பட விரும்புவதாக’ குறிப்பிட்டு அவ்வாறே ஏனைய அரசாங்க தலைவர்களும் பொதுநலவாய மாநாட்டிற்கு போகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பொதுநலவாய மாநாடு சிறிலங்காவில் நடத்தப்படக்கூடாது என்ற பகிஸ்கரிப்புக்கு சர்வதேச மூதவை ஊடாக வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்காது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ‘சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லையெனில் சர்வதேச சமூகம் தன்னாலான முழு முயற்சிகளையும் முடுக்கி விட வேண்டும்’ என ஆணித்தரமாக இடித்துரைத்தவர். ‘அவ் உத்திகளில் பொதுநலவாய மாநாட்டு பகிஸ்கரிப்பும் ஒரு தந்திரோபாயம்’ எனக் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்கா நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் தலைவராய் இருந்த போது, நிறுவனமயப்படுத்தப்பட்ட நிறவெறியில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ளுதலே எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கான ஒரே வழி எனக் குறிப்பிட்டதை தென்னாபிரிக்க வரலாறு சொல்லித் தந்திருக்கின்றது.

ஈழத்தமிழினப்படுகொலை மறுப்பு ஒரு போதுமே நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்லமுடியாது. ஏனெனில் இனப்படுகொலை மறுப்பில் உண்மை சாகடிக்கப்படுகின்றது. உண்மையை ஏற்றுக் கொள்வதோடு அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்பதில் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த பேராயர், பல அரசியல் தலைவர்கள் நிறவெறி அரசோடு கைகோர்த்த போது அதை கடுமையாகச் சாடினார் என்பதற்கு 1984ல் அப்போதை ஐக்கிய இராச்சிய பிரதமராகவிருந்த மார்கிரட் தட்சருக்கு அவர் எழுதிய கடிதம் முழுச்சான்றாக அமையும். ‘ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிகக் பிரதமரை அரசியல் நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வமாக அழைத்திருப்பது, நாளாந்தம் நிறவெறி வன்முறைக்குப் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் முகத்திலடிப்பதைப் போன்றது’ எனக் குறிப்பிட்டார்.

நடுநிலை அரசியலில் நம்பிக்கை இழந்த அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார். ஈழத்தமிழினப்படுகொலைக்கு சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்க முடியும் என்ற ஈழத்தமிழரின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்ததையும் ஈழத்தமிழினம் நினைவுகூரும்.

குறுகிய வரையறைகளைக் கடந்து மதத்திற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஈழத் தமிழருக்காக செயற்பட்ட ஒரு நண்பரை ஈழத்தமிழினம் இழந்து நிற்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக எழுந்த ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது.”

புதிய ஆவண நகல் இன்று தயார்! – தலைவர்களின் முடிவுக்கு காத்திருப்பு

வடக்கு – கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை, பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். இன்று எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அனுப்பிவைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

* இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.

* 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன் று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இன்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம்.பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது.