வடக்கு ஆளுநர் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு – சிறிதரன் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக இந்த கோரிக்கை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தாம் அந்த கூட்டத்தில் இருந்து இடைநடுவே வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பூர் இளைஞன் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் (வயது 28) என்பவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.

மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த நபர் மாவீரர் நாளை முன்னிட்டு கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக 27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நானாட்டான் பிரதேச சபையின்  பாதீடு குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது!

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம்,   தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த சபை அமர்வு, தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு கூட்டம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. ஆனாலும் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம் பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.

அதாவது, தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்களாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அந்தவகையில் தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது.

குறித்த வரவு- செலவு திட்டத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உதய சூரியன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பி.கட்சி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Posted in Uncategorized

யாழ். மாநகர சபை அரசின் கீழ் செல்லும் நிலை ஏற்படும் – எச்சரிக்கின்றார் அனந்தி

தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். நகரை ஒரு அழகிய நகரமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் வடக்கு மாகாண சபையினால் அது முடியாது போனது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நகரை அழகாகக் கொண்டு வருவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனிப்பட்ட அல்லது அரசியல் கட்சி ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாக நல்ல விடயங்களை செய்வதற்கு தடையை ஏற்படுத்தக் கூடாது என அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

எனவே மீண்டும் ஒருமுறை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிடும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்தி​க்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Posted in Uncategorized

சாணக்கியன்,சுமந்திரன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது – செல்வராசா கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை  ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர்  சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என   என பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான  செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  அலுவலகத்தில்   இன்று   இடம்பெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம்.அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும்.ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது.இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது.இச்சபை இணைந்தும் இருந்தது.குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது.அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.இது தான் உண்மையான விடயம்.சாணக்கியன் எம்.பி  மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.அதாவது வடக்கு கிழக்கு இணைந்த  தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று  கூறினார்கள்.ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள்.இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள்.இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன.மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
Posted in Uncategorized

எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில் கிளிநொச்சி நீதவான்

எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியினை நேற்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் பார்வையிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (10) வெடிபொருட்களை அகற்றி கொண்டு செல்லும் போது மண் அணை பகுதியில் இருந்து துப்பாக்கிகளும் எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இடம்பெற்ற துப்பரவு பணியை நிறுத்துமாறு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த பகுதி பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த விடயம் பாரப்படுத்தபட்டது.

இந்த நிலையில் நேற்று குறித்த இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன், பளை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் இராணுவத்தினர் கலோரஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டனர்.

துப்பரவு செய்யப்பட்ட பகுதியில் உள்ள எச்சங்களை பகுப்பாய்வு செய்ததன் பின்னர் மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் காலை 8 மணிக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பா?

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி   பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார்  செவ்வாய்க்கிழமை மாலை  மீட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம்.  கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில்  உள்ள வீடொன்றில் பொலிஸ்  குழுவினர் தேடுதலை மேற்கொண்டு   இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை  மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டினுள்  குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக  தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து  கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை  பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராகவும் விடுதலைப்புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும்-சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலை புரியவேண்டுமென்பதுடன், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் குறித்தும் தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1987ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே இப்பொழுது அனைவராலும் பேசப்படும் 13ஆவது திருத்தமாகும். பதின்மூன்றாவது திருத்தம் வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாகவும் ஏனைய ஏழு மாகாணங்களை உள்ளடக்கி எட்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக டெல்லியில் தமிழ் தரப்புகளுடனான பேச்சுவார்த்தையில் வடக்கு-கிழக்கு என்பது எப்போதும் இணைந்திருக்கும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தமிழர் தரப்புகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. பின்னர், பதின்மூன்றாவது திருத்தத்தைக் கொண்டுவந்தபொழுது இந்தியாவுடனோ தமிழர் தரப்புகளுடனோ சரியான பேச்சுவார்த்தைகளை நடாத்தாமல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தான் விரும்பியவாறு அரைகுறை அதிகாரப்பரவலாக்கலுடன் தமக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றினார்.

அப்பொழுது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபையை உருவாக்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பதின்மூன்றாவது திருத்தத்தில் இருக்கின்ற குறைகளைச் சுட்டிக்காட்டி அவை எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஓர் ஆவணத்தைத் தயார்செய்து அன்றைய ஜனாதிபதி திரு.பிரேமதாச அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கும் அனுப்பிவைத்தனர். அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் பதின்மூன்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆகவே, பதின்மூன்றாவது திருத்தம் என்பது முழுமையான அதிகாரப்பகிர்வு அல்ல என்பதை தமிழர் தரப்பு அன்றே ஏற்றுக்கொண்டது. ஆனால் அது ஒன்று மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்டபூர்வமான, அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களாக இருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்தும்படிதான் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

1950களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாகிய பொழுது, தந்தை செல்வா அவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார். 1976ஆம் ஆண்டுவரையில், அவரது சமஷ்டி கோரிக்கையில் எத்தகைய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. தந்தை செல்வாவிற்கும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் அரசதரப்பால் கிழித்தெறியப்பட்டன. இதன் காரணமாக பிரித்தானியரிடம் தமிழர்கள் இழந்த இறையாண்மையை மீளப்பெறுவதற்கான தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றபபட்டது. ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எத்தகைய பொறிமுறைகளோ, திட்டங்களோ, மூலோபாய,தந்திரோபாயங்களோ அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடம் இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தமிழ் இளைஞர்களை ஒரு தற்காப்பு நிலைக்குத் தூண்டியது. இதன் காரணமாக, பல்வேறுபட்ட ஆயுத அமைப்புகள் தோற்றம் பெற்று, தமழின விடுதலைக்காக போராடின.

இந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லாதவர்கள், தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் என்று ஒருவருக்கொருவர் பட்டம் சூட்டிக்கொண்டும் புகழாரம் சூட்டிக்கொண்டும் தவறான கருத்துகளையும் அணுகுமுறைகளையும் தமிழ் மக்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கின்றனர். “பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி சில கட்சித் தலைவர்கள் பேசுவதாகவும் மகிந்த ராஜபக்சேவே பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலே சென்று இந்த பிரச்சினையைத் தீர்ப்பேனென்று பலமுறை கூறியதாகவும் ஆனால் அவற்றையெல்லாம் மறந்துபோன சில தமிழ்த் தலைமைகள் பதின்மூன்றை நிறைவேற்றும்படி இப்பொழுது கோரிக்கைகளை முன்வைப்பது என்பது தமிழருக்குச் செய்யும் துரோகம்” என்றும் இந்த சாணக்கியர்கள் 11.12.2021 அன்று சுண்ணாகத்தில் நடந்த சாணக்கியர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதே விடயத்தை இவர்கள் இலண்டனிலும் தெரிவித்திருந்தனர்.மாகாணசபைகளுக்கு அரசியல் சாசன ரீதியில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது தீருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திக்கொண்டு அதன் பிறகு சமஷ்டியை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் தலைமைகளின் இன்றைய நிலை. ஆனால் அரசாங்கம் அதனையே நடைமுறைப்படுத்த முடியாதென பிடிவாதம் பிடிக்கிறது. இந்த நிலையில் இந்த சாணக்கியர்களும் பதின்மூன்றை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்கள் யாருடைய நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த சாணக்கியர்களின் சாணக்கியத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் அவசர அவசரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளை சூட்டோடு சூடாக பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்கள் அனுபவித்த கொடுமைகளை நேரடியாகவே கேட்டறிந்ததுடன், இது குறித்து ஐ.நாவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கொடுப்பதற்காக விரிவான அறிக்கை ஒன்றையும் தயார் செய்திருந்தனர். இதனைக் கையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஐ.நாவிற்குச் செல்லுமென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று கூட்டமைப்பின் பேச்சாளராகவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் இருந்த நான் இலங்கைக்கு வெளியில் இருந்த நேரத்தில் அமெரிக்கா ஜெனிவாவிற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது பயணத்தை ஒத்திவைத்ததாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தார். ஆயினும் அதனை ஏற்க மறுத்து நாம் ஜெனிவா சென்று பல நாட்டு ராஜதந்திரிகளைச் சந்தித்து மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தினோம்.

2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாகத் திகழ்ந்த ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஐ.நாவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட காத்திரமான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்டவர்கள் இந்த சாணக்கியர்கள். இதற்கு இவர்கள் சொன்ன காரணம் விசித்திரமானது. சர்வதேச விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது. இனி அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியதுதான் வேலை. எனவே நாம் பொறுமையுடன் இருந்து அதற்கான காரியம் ஆற்ற வேண்டும் என்று கூறியதுடன் சர்வதேச விசாரணையில் உள்ளுர் நபர்களும் இருப்பார்கள். அதே போன்று உள்ளக விசாரணைகளிலும் சர்வதேசத்தவர்களும் இருப்பார்கள் என்று வியாக்கியானம் அளித்தவர்கள். 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டாண்டுகள் அவகாசத்தையும் பெற்றுக்கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் 2017இல் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் மூலம்தான் நாம் அதனை சர்வதேசத்தின் பிடியில் வைத்திருக்க முடியும் என்று சொல்லி மீண்டும் காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்தவர்கள்.

2018ஆம் ஆண்டில் அடுத்த சில மாதங்களில் புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது. அதில் ஈழம் என்ற சொல்லைத் தவிர ஏனைய அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று கூறியதுடன் இந்த நேரத்தில் காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது என்று சொல்லி அன்றைய அரசாங்கத்தைக் காப்பாறற்றியவர்கள். அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் யாப்பின் நகலை அனைவரும் அறிவோம். இதற்கு சமஷ்டிக்குள்ளும் ஒற்றையாட்சி அடங்கியிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்ளும் சமஷ்டி ஒளிந்திருக்கிறது என்று வியாக்கியானம் கூறியவர்கள்தான் இன்று தமிழ்த் தலைமைகளைவிமர்சிக்கின்றனர்.

புதிய அரசியல் சாசன வரைபு தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நாங்கள் அதுபற்றி பேசவில்லை என்றும் வடக்கு-கிழக்கை மதச்சார்பற்ற பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரினால் சிங்கள பௌத்த மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் ஆகவே அந்த விடயங்கள் தொடர்பாக பேசவில்லை என்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பதில் சொல்லப்பட்டது.

யுத்தத்திற்குப் பிற்பாடு வந்த முதலாவது பாராளுமன்றத்தில், மகிந்தராஜபக்ச அரசுடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். இந்தக் கூட்டங்கள் தோல்வியிலேயே முடிந்தன. ரணில்-மைத்திரி ஆட்சியில் பங்காளியாக இருந்துகொண்டு ஒவ்வொரு வருடமும் புதிய அரசியல் சாசனம் வருமென்றும் பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு என்று உறுதிமொழி வழங்கிவந்தீர்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இப்பொழுது கோத்தபாய அரசுடனும் பேசுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். ஆனால் சிங்கள பௌத்த தீவிரவாத எண்ணங்களைக் கொண்ட கோத்தபாய அரசு அதற்கான நேரத்தை இன்னமும்; உங்களுக்கு ஒதுக்கவில்லை. ஆனாலும் அவர்களுடன்கூட நீங்கள் பேசுவதற்குத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள். இப்பொழுது இறுதியாக நீங்கள் அமெரிக்கா, கனடா, இலண்டன் போய்வந்து “2022இல் மாற்றங்கள் நிகழலாம்…ம்…ம்” என்று கயிறு திரிக்கிறீர்கள். இந்த நிலையில்தான் விடுதலைப் புலிகள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்குப் பின்னர் நடந்த யுத்தத்தில் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்காத நீங்களே இப்பொழுது அவர்களைத் துணைக்கு அழைக்கிறீர்கள். ஒரு இலட்சம்பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லும் நீங்கள் ஒரு இனவழிப்பு நடந்ததாகச் சொல்ல முடியாதென்றும் சொல்கிறீர்கள். இந்த சாணக்கியர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவை மேவி வேறு எந்தவொரு நாடும் தலையிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரவிருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் பதின்மூன்றை முற்றாகவே நீக்கப்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே எமக்குக் கிடைத்த அதிகாரங்களை விட்டுக்கொடுப்பது என்ற முட்டாள்தனத்தை நாங்கள் செய்ய இயலாது. செய்யக்கூடாது.

கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று இதுவரை காலமும் கூறி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த இந்த சாணக்கியர்கள் இப்பொழுது அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்களது சுயமுரணைக் காட்டுகிறது. இவர்களின் செயற்பாடுகள் இவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளின் நிகழ்ச்சிநிரலையும் முன்னெடுத்துச் செல்லும் தரகர்களாகவே முன்னிலைப்படுத்தியிருக்கிறது. எனவே எமது மக்கள் இத்தகைய அரசியல் தரகர்களிடம் விழிப்புடன் செயற்பட்டு எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் பா.உ கோ.கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் தங்கள் நியமனங்களை நிரந்தரமாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பிலும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் உட்பட மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் புஸ்பலிங்கம், போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ரஜனி, முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபைத் தவிசாளர்களான புஸ்பலிங்கம் மற்றும் ரஜனி ஆகியோரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் 2015ம் ஆண்டு தற்காலிக அமைய அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் இன்னமும் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் தாங்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை மெற்கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, உருக்கமான வேண்டுகோளினையும் விடுத்தாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடும் முகமாக இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறப்பினர் தெரிவிக்கையில்,

கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கையும் ஒன்று சேர்த்து ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளுக்கும் தாம் ஆதரவு வழங்குவதாகவும், எப்போதும் ஊழியர்களின் நியமனத்தை நிரந்தரமாக்கும் விடயத்தில் தங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சுகளுடன் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized