கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – அரசாங்கம்

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன கப்பலில் உரங்களை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் குறித்த கப்பல் கடற்பரப்பில் பயணிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை என கூறினார்.

இதேவேளை மாகாண சபைகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராவணனிடம் விமானம் இருந்ததா – ஆரம்பமாகும் ஆய்வு

இலங்கை வேந்தன் இராவணனிடம் விமானம் இருந்தாகவும் அதில் இந்தியாவரை அவர் பறந்தாகவும் இராமாயணத்தில் உள்ள குறிப்புக்கள் தொடர்பாக இலங்கை அரசு ஆய்வுகளை நடாத்தவுள்ளது.

இந்த ஆய்வு பணிகளில் இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன.

இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, இராவணன் ஆட்சியின்போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

PTA மீளாய்வுக் குழுவால் ஜனாதிபதிக்கு அறிக்கை

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) கையளிக்கப்பட்டது.

அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021 ஜூன் 24ஆம் திகதியன்று, மேற்படி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சட்ட வரைவாளர் தில்ருக்ஷி சமரவீர, நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, வெளிவிவகார அமைச்சின் பிரதி சட்ட ஆலோசகர் திலானி சில்வா, வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மஹேஷா ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க, இந்த அதிகாரிகள் குழுவின்
செயலாளராகச் செயற்பட்டார்.

உயிர்தத ஞாயிறு தாக்குதல் – மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல முறை ஒத்தி வைக்கப்பட்ட குறித்து மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ்.துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் நீதியரசர்கள் குழாமின் உறுப்பினர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குண்டுத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்க்ளின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தை சிறில் காமினியிடம் இன்றும் 8 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவிடம் இன்று முற்பகல் முதல் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவிடம் 7 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவின் சின்தாவோ நகர் – கண்டி நகர் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் இன்று (15) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான சீனத் தூதுவரும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், கண்டி மற்றும் சிந்தோவோ மேயர்கள் Online ஊடாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

நகரங்களுக்கு இடையில் கல்வித்துறை, பொருளாதார தொடர்பு, தொழில்நுட்ப அறிவு, கலாசார மத விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கையூடாக எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள உயரதிகாரி உயர்மட்டத்தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருப்பதுடன் நாட்டின் உயர்மட்டத்தலைவர்களை பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

கெல்லி கெய்டர்லிங்கின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி மார்ட்டின் கெல்லி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அதில் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளரை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், கெல்லி இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் உயர்மட்டத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் தெற்று மற்றும் மத்திய ஆசிய விவகாரப்பணியகத்தின் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பொது இராஜதந்திர துணைச்செயலாளராவார்.

கடந்த 2016 – 2019 ஆம் ஆண்டுவரை உருகுவே நாட்டிற்கான அமெரிக்கத்தூதுவராகவும் 2019 – 2021 ஆம் ஆண்டுவரை தேசிய போர்க்கல்லூரியில் பிரதிக்கட்டளைத்தளபதியாகவும் சர்வதேச விவகார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கிப்பயணிப்பதற்கான பங்களிப்பை வழங்கிவரும் ‘குட் மார்க்கெட்’ முயற்சியாண்மையின் இணை ஸ்தாபகரை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(திங்கட்கிழமை) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் தடுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதான நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு  இன்று (திங்கட்கிழமை) தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது 30 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட 194.470 மின்லியன் பெறுமதியான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியதால் ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் 2 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

23 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை

இருபத்திமூன்று இந்திய மீனவர்களும், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன், இன்று, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு, இன்று (15), பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, இந்திய மீனவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பின்வரும் தகவல்களை தெரிவித்தனர். அதாவது, இருபத்தி மூன்று பேரும், தாங்கள் வேண்டுமென்று, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவில்லை எனவும் அவர்களின்  இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதியதன் காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் படகு வந்துவிட்டதாகவும் இதனால் தம்மை மன்னித்து விடுதலை செய்யுமாறும்  கோரினர்.

இதனை ஏற்றுக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை, இந்திய மீனவர்களின் இரண்டு டோலர்  படகு,  இழுவைமாடி, தொலைத்தொடர்பு சாதனம், எக்கோ சாதனம், ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், 23 பேருக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.