விசேட குற்றப்பிரிவு காரியாலயத்திற்கு வருகை தருமாறு- ரெலோ உப தலைவர் பிரசன்னாவிற்கு அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னாவை விசாரணைக்கு உட்படுத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இ.பிரசன்னா தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது வீட்டுக்கு வருகை தந்த இரண்டு புலனாய்வுத்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக நாளை அவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் அமைந்துள்ள குற்றப்புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முகநூல் போராளிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், அச்சுறுத்தும் நிலைமையும் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சரை விடைபெறும் நிமித்தம் சந்திப்பு

வெளிச்செல்லும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும் நிமித்தம் சந்தித்தார்.

உறுதியான வரலாற்று மரபின் மீது கட்டியெழுப்பப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை நினைவுகூர்ந்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் வெளிச்செல்லும் தூதுவரின் உறுதியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், கடினமான காலங்களில் ஜப்பான் இலங்கையின் உண்மையான  நண்பராக இருந்ததாகக் குறிப்பிட்டதுடன், கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவை வழங்குவதில் தூதுவர் சுகியாமாவின் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டினார். ஜப்பானிய அபிவிருத்தி உதவியின் கீழ் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற துறைகளில் ஜப்பானின் பங்களிப்பை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். ஜப்பானிய உதவி எப்போதும் நாட்டின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்ததுடன், அவை ஒருபோதும் முன்நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டதாக அமையவில்லை எனக் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கையின் அடிப்படை  யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதிலும் இலங்கை மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் நிலவும் பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதிலுமான ஆக்கபூர்வமான ஈடுபாடுகளுக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். தூதுவர் சுகியாமா இலங்கையில் பதவி வகித்த காலத்தில் அவரது செயலூக்கமான வகிபாகத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

தூதுவர் சுகியாமா தனது உத்தியோகபூர்வ ஆணையை உயர் திருப்திகரமானதாக வழங்குவதற்காக நிபந்தனையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற அணுகலை வழங்கியமைக்காக, இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், வெளிநாட்டு அமைச்சருக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், தற்போதுள்ள விரிவான இலங்கை – ஜப்பான் பங்காளித்துவத்தை மேலும்  உயர்த்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமாக அமையும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு அமைச்சில் உயர் பதவியை ஏற்கவுள்ள தூதுவர் சுகியாமாவுக்கு பேராசிரியர் பீரிஸ்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தூதுவர் சுகியாமா 2018 நவம்பர் முதல் மூன்று வருடங்கள் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராகப்  பணியாற்றியுள்ளார்.

Posted in Uncategorized

பைடனின் சிறப்பு செய்தியுடன் இலங்கை விரையும் அமெரிக்க உயரதிகாரி

அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எனினும் அவர் முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனிடமிருந்து ஒரு சிறப்பு செய்தியை கொண்டு வர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ அதிகாரியாக மக்களின் கழுத்தைப்பிடித்து ஆட்சி செய்ய முடியும் என்ற கருத்திற்கு வன்மையான கண்டனம்!

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதனப்பசளையைப் பயப்படுத்தி விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும் என்று கோட்பாய ராஜபக்ஸ தெரிவித்திருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசிய இனத்திற்கான தீர்வினைப் பெற்றுத்தரும் ஜனநாயகப் பாதையில் இருந்து சிங்களப் பேரினவாதம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதையும் எடுத்துக்காட்டுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி இ.சிறீஞானேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ ஆட்சி தொடர்பில் கோட்டாபய கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் தான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்ற எதிர்பார்த்தே மக்கள் தனக்கு வாக்களித்தாகவும், ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களைக் கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் தான் அப்படி இல்லை என்றும் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான மனநிலை ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் மக்களுக்குத் தீர்வைக்கொண்டு வரப்போவதில்லை என்பதுடன் சிங்கள தேசத்து மக்களையும் இராணுவக் காட்டாட்சிக்குள் கொண்டுவரும் மனநிலையையே பிரதிபலிப்பதாக உணர முடிகின்றது.

பொருளாதார பிரச்சனைகளைக் கடுமையாக எதிர்கொண்டுள்ள மக்கள் தற்போதைய அரசின் மீது நெருக்கடியை ஏற்படுத்தத் துணிவர் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச முன்னெச்சரிக்கையாக இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அதனை நியாயப்படுத்துவதற்காக தான் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரக்கூடியவர் என்று தெரிந்தே மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்பதைச் சொல்வதன் ஊடாக மக்கள இராணுவ ஆட்சிக்குத் தயாராக இருப்பதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான மனநிலை தமிழ் மக்களின் வாழ்வியலைக் கடுமையாக குழப்பப்போவதுடன் அவர்களை அச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவின் மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார்.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (10) காலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஜயதர்மா கேதீஸ்வரன் உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவிக்கான வெற்றிடத்திற்கு குறித்த தெரிவு இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆ. விஜயராசாவின் பெயரும் சுயேட்சை குழு சார்பில் மயிலன் அப்புத்துரையின் பெயரும் முன்மொழியப்பட்டன.

உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து, மயிலன் அப்புத்துரைக்கு ஆதரவாக 5 வாக்குகளும் ஆ. விஜயராசாவுக்கு ஆதரவாக 3 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில் காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

பாட்டலிக்கு எதிராக சீ.ஐ.டி சென்றார் மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக  சம்பிக்க ரணவக்க எம்.பி, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு லீற்றர் உரம்  டொலர் என்றும் ஒரு லீற்றருக்கு 20 டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சம்பிக்க தெரிவித்ததாக மஹிந்தானந்த சுட்டிக்காட்டினார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் முதலில் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நாங்கள் இந்தியாவில் இருந்து திரவ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்யவில்லை. நாங்கள் கொண்டு வருவது யூரியா நைட்ரஜன் உரம் என்றார்.

எங்களுக்கு யூரியா நனோ உரம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்த அவர், இந்த ஊழலுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் அதற்கெதிராகவே முறைப்பாடளித்துள்ளேன் என்றும் இதைத்ததான் எப்போதும் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சம்பளப் பிரச்சினையை தீர்க்க இணக்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை மூன்று தவணைகளில் வழங்காமல், ஒரே தடவையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள், இன்று (10) தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த முரண்பாடுகளை ஒரே தடவையில் தீர்த்து வைப்போம் என, தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

எங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான 160 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்த அவர், பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவரும் அரசாங்கத்தின் முடிவை எமக்கு தெரிவித்தனர் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் இதே கருத்துக்களைத் தெரிவித்ததுடன், எங்கள் முக்கிய கோரிக்கையை நாங்கள் வென்றுள்ளோம். எமது போராட்டம் ஒரு மகத்தான வெற்றியாக மதிப்பிடப்பட்டது என்றார்.

மற்ற கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் போராட்டத்தை தொடரப்போவதாக இரு தொழிற்சங்க தலைவர்களும் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

பென்டோரா விசாரணையின் முன்னேற்றம் பற்றி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்பு, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களால், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதியன்று, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டப்ளிய.கே.டி.விஜேரத்னவினால் 2021.11.08ஆம் திகதியன்று அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வறிக்கைகள் தற்போது கிடைத்தவண்ணம் காணப்படுவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்   தெரிவித்தார்.

விசாரணைகள் முடிவடையாதுள்ளமையால், கோரப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் 3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதவான் நீதிமன்றத்தால் பொலிஸில் முறைப்பாடு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (09) அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதியற்ற வகையில் செயற்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் குறித்த நடத்தை காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized