சிறிலங்கா அரசின் பழிவாங்கும் செயற்பாடு – கூட்டாக வெளியான கடும் கண்டனம்

மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கல்விசார் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக 09 அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, முன்னரங்க செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கையின் பிரசாரம், சித்திரவதைகளுக்கு எதிரான பூகோள அமைப்பு ஆகிய 9 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை, அமைதிவழியிலான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கு தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகளின் பணிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலித்தகவல்கள் ஆகியவற்றையே ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலாக வழங்கியிருக்கின்றது.

கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் உடலியல் மற்றும் உளவியல் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொது வெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டுமென 9 அமைப்புக்களின் அந்தக் கூட்டறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சரத்வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை- உலப்பனே சுமங்கல தேரர்

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் உலப்பனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் வீரசேகரபோன்ற முட்டாள்தனமான அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் காரணமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர்  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களைக் கொண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த நாட்டின் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் இந்த நாட்டை நிர்வகிக்க போதாதா? இவர்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை அடக்குவதற்கு புதிய சட்டத்தை இவர்கள் வேண்டுமென்கின்றனர். இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி மாபியாக்களுக்கு எதிராக இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? மாபியாக்காரர்களின் அருகில் சென்று மண்டியிட்டு, ஊடக நிறுவனங்களுக்குள் ஒழிந்துகொண்டு, கீழ்த்தரமான ஊடகப் பிரசாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள். இந்த விடயங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டால் சட்டத்தை மீறி இவர்கள் அடக்குகின்றனர். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சரத் வீரசேகர  போன்ற முட்டாள் அமைச்சர்களின் செயற்பாடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மட்டக்குளி இராணுவ முகாமின் அதிகாரிக்கு விளக்கமறியல்

மட்டக்குளி இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்படும் லெப்டினன் கேர்னல் சமந்த திலக்கரத்ன உள்ளிட்ட சந்கேநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

தொட்டலங்க – எல்ல விளையாட்டு கழக தலைவராக செயற்பட்ட அகில சம்பத் ரத்னசிறி எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒரு பெண்ணை தவிர்ந்த ஏனைய அனைவரும் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளாக செயற்படுபவர்கள் என்பதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு

உத்தரவிடுமாறு கோரி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்
மன்றில் இ கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர்கள், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் மாறாக நன்றாக திட்டமிட்டு, பொதுமகனொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதால், வரப்பிரசாதங்களை வழங்குமாறு
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு தம்மால் முடியாதென மேலதிக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

பூஜித், ஹேமசிறியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

போதிய சாட்சியங்கள் இருந்த போதும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கடமைகளை அலட்சியம் செய்தமை மற்றும் கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைகளை கையளித்துள்ளது.

மேற்படி வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (01) அழைக்கப்பட்டது. இதன்போது, அவ்விருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் போது குற்றப்பத்திரிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், ஒவ்வொருவருக்கும் எதிராக 864 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக 855 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முறைப்பாட்டின் சாட்சியாளர்களாக 1,215 நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் என்றார்.

திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் எழுத்துப்பூர்வமாக பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து தொடர பிரதம நீதியரசர் ஒப்புதல் அளித்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடற்படைக் கப்பல்கள் இலங்கையில்

page2image500824640

ஜப்பானிய கரையோர சுய-பாதுகாப்பு படையின் இந்தோ-பசுபிக் செயற்படுத்தல் 2021 (IPD21) அலகைச் சேர்ந்த மாபெரும் கப்பல்களில் ஒன்றான “JS KAGA (DDH-184)” மற்றும்  “JS MURASAME (DD-101)” ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு 2021 ஒக்டோபர் 2 முதல் 4 வரையான காலப்பகுதியில் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் முன்னர், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கு JMSDF கப்பல்கள் விஜயம் செய்துள்ளதுடன், பரஸ்பர மற்றும் பல்தேசிய கடல்சார் செயற்பாடுகளின் பங்கேற்றிருந்தன.

முரசாமே மற்றும் காகா ஆகிய இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

2022 ஆண்டுக்குள் இலங்கை புதிய பொருளாதார பாதையில் பயணிக்கும் – அஜித் நிவாட் கப்ரால்

2022 ஆண்டுக்குள் இலங்கை புதிய பொருளாதார பாதையில் பயணிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நேற்று (01) மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 6 மாதங்களுக்கான மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

இதுதெடார்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இவ்வருட முடிவில் 5 சதவீதமாகவும் 2022 இன் முதற்காலாண்டில் 6.5 சதவீதமாகவும் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், NRFC மற்றும் RFC கணக்குகள் தொடர்பில் எந்தவொரு பீதியும் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

இந்த கணக்குகள் தொடர்பில் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தினதோ, இலங்கை மத்திய வங்கியினதோ அபிப்பிராயம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர் ,குறித்த கட்டமைப்பின் கீழ் முதலீடு செய்த எவருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. அந்த நிதி பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து நிதியை அனுப்பும் போது இலங்கையிலுள்ள பொதுவான வங்கிக் கட்டமைப்பைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கொவிட் தொற்றின் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய மத்திய வங்கி தீர்மானித்திருப்பதாக தெரிவித்த அவர் ,அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகள் தொடர்பான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட 100% எல்லை வைப்புத் தொகை கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படுவதாகவும் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி, மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் 100% நிதி வைப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறு தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மற்றும் செலாவணி வெளியேற்றத்தினை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மிகையான இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்குமதியாளர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் ´ஆசியாவின் ஆச்சரியம்´ என்றும் ´ஆசியாவின் அடுத்த அதிசயம்´ என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மறையான துலங்கலைக் காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புக்கள் உரியவாறான அங்கீகாரத்தைப் பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும். குறிப்பாக கொவிட் – 19 சௌபாக்கிய மீள்நிதி வழங்கல் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கென இரண்டாயிரத்து 2 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டது.

எனினும் இவ்வாறான சவால்களின் போது அரசாங்கமோ அல்லது மத்தியவங்கியோ மாத்திரம் தனித்துச்செயற்பட்டு, அதனை வெற்றிகொள்ள முடியாது. மாறாக வங்கிக் கட்டமைப்புக்கள், வங்கியல்லாக் கட்டமைப்புக்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்ததாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பு குறித்து வெளிநாட்டமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

2021 அக்டோபர் 01ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ்-ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் (2020 இல்), ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்தது.

இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி. + வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை (2020ஃ2021) தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது. இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்

இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட பங்கேற்பாளர்களையும் இந்தத் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் அழைப்பின் பேரில்  இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 2 – 5 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை வெளியுறவுச் செயலாளருடனான இருதரப்புக் கலந்துரையாடலுக்கும் மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர்  மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி,  திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்  முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

 

ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களை மீறி அடக்குவதாக தேரர் குற்றஞ்சாட்டு

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் வீரசேகர  போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் காரணமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர்  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களைக் கொண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த நாட்டின் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் இந்த நாட்டை நிர்வகிக்க போதாதா? இவர்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை அடக்குவதற்கு புதிய சட்டத்தை இவர்கள் வேண்டுமென்கின்றனர். இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி மாபியாக்களுக்கு எதிராக இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? மாபியாக்காரர்களின் அருகில் சென்று மண்டியிட்டு, ஊடக நிறுவனங்களுக்குள் ஒழிந்துகொண்டு, கீழ்த்தரமான ஊடகப் பிரசாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள். இந்த விடயங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டால் சட்டத்தை மீறி இவர்கள் அடக்குகின்றனர். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சரத் வீரசேகர (sarath weerasekara) போன்ற முட்டாள் அமைச்சர்களின் செயற்பாடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபம் பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு மீளத் திறக்கப்படும் செயற்பாடுகளின்போது, அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, கடமைக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஊழியர்களைச் சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமை போலக் கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் என்றும், கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியல்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படும்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும் அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், சுகாதாரத்துறை ஊழியர்களைக் கடமைக்கு அழைக்கும் விதம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.