தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த இன்று யாழில் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் தலைவர் செல்வம் சந்திப்பு

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை அரசாங்கம் கையகப் படுத்தி வருகின்ற சூழலை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டி ஆரம்பகட்ட மெய்நிகர் இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் கூடிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று காலை மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இந்த சந்திப்பு நடந்த நிலையில் 6 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் விடுத்த அறிவிப்பு தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகளின் கூட்டு பேச்சு பாதி வழியில் நிற்கும் போது, ரெலோ திடீரென விடுத்த இந்த முயற்சி ஏற்படுத்திய சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகள் கூட்டு பேச்சு நடந்திருப்பதால், அந்த கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஒற்றுமை முயற்சியை மேற்கொள்வதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நாளைய தினம் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இதில் சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக கூறியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது என தெரியவருகிறது. எனினும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதி வருவதால், நாளைய சந்திப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூட்டமைப்பாக புதிய கூட்டு முயற்சியை முன்னெடுப்பதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நயினாதீவுக்கு வருவதனை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு கோரிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அபிசேகங்கள், அடியவர்களின் நேர்த்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

ஆகவே பக்தர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து, உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகணத்திற்கு விஜயம் : பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கும் உதவிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகணத்திற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச மக்களுக்கு உலருணவுகள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் அடையாளமாக 02-07-21 பொத்துவில் தனியார் விடுதியில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபினின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாட் ஹட்டக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பொருட்களை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அனுராத, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம். ஜஹ்பர், உட்பட பல முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கொரோணா தொற்றிலிருந்து நாடு விடுபடவும், கொரோணா தொற்றாளர்கள் விரைவில் குணமாகவும் வேண்டி பொத்துவில் சிங்கபுர சமுத்ரகிரி விகாராதிபதி இந்திரி உபனந்த, சாளம்படிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கான்டிபன் சர்மா, மேதடிஸ் தேவாலய போதகர் அருட்தந்தை பிலிப்குமார் , மௌலவி சுபைர் அகில் முகம்மட் (சித்திக்கி) ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

வருட இறுதியில் அல்லது ஜனவரியில் மாகாண சபை தேர்தல்?

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மற்றுமொரு தகவலும் கூறுகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. முறைப்படி வருகின்ற ஜனவரி மாதத்திலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று பரவலை 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அதனூடாக மக்களின் மனங்களை வென்றெடுக்கவும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் பல நிவாரணங்களை அறிவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதனூடாக தேர்தல் வெற்றியைப் பதிவுசெய்ய வாய்ப்பிருப்பதாக அரச உயர்மட்டத்திற்கு ஆலோசனையும் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,

பஷில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாக இந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருப்பதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- ரெலோ செயலாளர் ஜனா எம்.பிசாடல் !

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.

இதேவேளை முதலாவது, இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தினை மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டவில்லை.

மேலும் இத்தகைய கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்யமுடியாத வகையில் அவர்களின் கைகள் கூட இராணுவத்தினரால் கட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.

மத்திய அரசாங்கத்தில் கூட துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள், கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் உள்ளனர்.

கொவிட் செயலணிக்கு பொறுப்பாக இராணுவத் தளபதியை நியமித்தது மாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டத்தினையும் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சில தடைகளும் ஏற்பட்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நாயாற்றில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்-சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தல்-ரெலோ விஜிந்தன்!

நாயாற்று பகுதியில் பருவகால கடற்தொழிலுக்காக வந்த மீனவர்கள் சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் சவாலினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயநிலையினையும் தோற்றிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று 02.07.21 முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர்தெரிவிக்கையில்

சபையின் எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருவது வளமையாக மாறிவிட்டது.
இவர்களில் 5பேருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கொவிட் 19 இன் உச்சம் எங்கள் பிரதேசங்களை பாதிப்படைய வைக்கின்ற நேரங்களில் நாங்கள் பயணங்களை மேற்கொண்டுள்ளோம் ஆயிரம் வரையான சிறுவர்கள் தொடக்கம் பெண்கள் முதியவர்கள் வரை எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றோம் ஆனால் சுகாதார துறைக்கு அச்சுறுத்தலான நிலமையாகவே காணப்படுகின்றது.
அங்கு உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்கின்ற நிலையும் காணப்படவில்லை சமூக இடைவெளியும் காணப்படவில்லை அங்கு பல்வேறு பட்ட மாவட்டங்களில் இருந்து மாகாணங்களில் இருந்தும் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

சுகாதார துறையினரால் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் குறித்த பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது இது முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு அச்சுறுத்தலாக காண்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டவிரோதமான மீன்பிடி நடைபெற்று வருகின்றது அங்கு எந்த பாதுகாப்பும் அற்றநிலையில் நெருக்கமாக வாடிகள் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் தொடர்பில் எந்த அமைப்புக்களிடமும் பதிவுகள் எதுவும் இல்லை சுகாதாரதுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாகத்தான் காணப்படுகின்றது.

இதனை உடனடியாக அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் வழங்க வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்பி

கொரோனா தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் இதுவரை வன்னி மக்களுக்கு ஏற்றப்படாமை தொடர்பாக அவர் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்று நாட்டில் பரவலாக காணப்படும் நிலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் தற்போது இந்நடவடிக்கையில் அரசின்ற ஈடுபாடு போதுமானதாக காணப்படாமையினாலேயே பல பகுதிகளிலும் மக்கள் முதலாவது தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு பொது மகனுக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சுகாதார பகுதியினருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பொது மக்களுக்கு வழங்க பாரபட்சம் காட்டி வரும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தின் நுழைவாயிலாக காணப்படும் வவுனியா மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவது கட்டாயமாகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்குமப்பால் இன்று வவுனியாவில் கொரனா தொற்றாளர்கள் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்ற போது அதிகமாக காணப்படுகின்றனர். கொரனா மரணங்கள் 19 வரை அதிகரித்துள்ளது. இது அம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று மன்னார் மாவட்டமும் இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வைரஸ் பரவல் மீனவர்கள் மூலம் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள மாவட்டமாக காணப்படுகின்றது. ஏனவே இங்குள்ள மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

முல்லைத்தீவில் மீன் வியாபாரத்திற்காக பல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து செல்வதனாலும் குறித்த மாவட்டம் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண எல்லைகளை கொண்டு காணப்படுவதனாலும் ஏனைய மாகாண மக்கள் பல்வேறு தேவைகளின் பொருட்டு இங்கு வந்து செல்வதனாலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு குறித்த தடுப்பூசி கட்டாயமாக செல்லுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையின்றி காணப்படுகின்றமையை பார்க்கும்போது பாரபட்சமாக செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவில் என்றுமில்லாத வகையில் சீனாவின் உட் பிரவேசம் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கேள்விக்குள்ளாக்கும் என்ற அபாயம் உருவாகி வருகின்றது. காரணம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் கடந்த காலங்களை விட ஏற்பட்ட பாரிய மாற்றம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்தகாலங்களில் அணிசேராக் கொள்கையின் கீழ் இந்திய மேற்குலக நாடுகளை அனுசரித்த வெளியுறவுக் கொள்கையில் இருந்தனர் ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சீன சார்புக் கொள்கையை முதன்மைப் படுத்தியுள்ளனர். இதனால் இந்திய அமெரிக்க நாடுகள் இலங்கை தொடர்பாக புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தி உள்ளது என இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட பலர் வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். .

அந்த வகையில் இலங்கையின் செயற்பாடுகளை அவதானிப்பதாக தற்போது சிறிது காலமாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தலைவர்கள் கூறி வருகின்றனர் அவர்களின் உரைகளின் வெளிப்பாடு இந்தியா இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் ஈடுபட்டுள்ளது என்பதை உணர முடிகின்றது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மத்திய அரசை முழுமையாக தாம் கையாள வேண்டும் என்ற வகையிலேதான் நகர்வுகள் இருக்கின்றன. தமிழர் விடையத்தை அரசியல் அழுத்தங்களுக்கு இடை இடையே உச்சரிப்பதாகவே உள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்கள் பக்கம் இலங்கை அரசாங்கத்தை வளைத்துப் போடும் வியூகத்தில் அழுத்தங்கள்,திட்டங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தென்னிலங்கையில் இருந்து தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு நோக்கி மிக வேகமாக நகர்த்தப்படுகின்றன இத் திட்டங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப் பட்டதுடன் சீன தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதுடன் சீன நிறுவனங்களின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாறுவதால் நீண்ட காலத்தில் தமிழர்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவிடம் பெற்ற நீண்டகாலக் கடன்கள் 99 வருட குத்தகைத் திட்டங்கள் யாவும் நான்கு தலைமுறைக்கு சீனர்களை இலங்கைத் தீவில் நிலைபெறச் செய்யவுள்ளது.

இவ்வாறு சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பெரும் தலை வலியாக மாறி உள்ளமையால் இலங்கை அரசுடன் இணைந்து பயணிக்கும் வியூகங்களையே இந்திய நகர்த்த ஆரம்பித்துள்ளது உதாரணமாக கடந்த மாதம் இலங்கை இந்திய வர்த்தக உறவுகளை விரிவாக்குதல் தொடர்பான மெய்நகர் உரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடையங்கள்.

எனவே சீனாவின் இலங்கை மீதான அகலக்கால் பதிப்பு எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களின் மறுக்கப்பட்ட அரசியல் அபிலாசைகள் சிதைத்துவிடும் அபாயநிலை உள்ளது” என்றார்.

Posted in Uncategorized

பணம் வெளியேறுவதை தடுக்க அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் மஹிந்த !

இலங்கையில் இருந்து பணம் வெளியேற்றப்படுவதை தடுக்க நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால், அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவை அவர்களின் நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதை மீளாய்வு செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தெரிவித்துள்ளது என்ன ?

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்காகவும் ஜூன் 21 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24 ஆம் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் படி ஜூன் 24 ஆம் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29 ஆம் திகதி ஒதுக்கப்பட்டது.

வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது.

27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.

இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது.

இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.

இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.