பொசன் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை?

பொசன் போயாவை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப் புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் மிக நீண்ட காலம் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐ.நா இணைக்குழு அதிருப்தி

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு அமைய இணங்காணப்பட்ட மனித உரிமை விவகாரங்களில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான இணைக்குழுவினால் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்களின் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் உரிய முனைப்பு காண்பிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அண்மைய கால மனித உரிமை நிலைமைகள் குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆசிரியர் அனாப் ஜாசீம் ஆகியோர் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்களும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நேரிடும் மரணங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையுடன் தாமும் இணைந்து கொள்வதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த இணைக்குழு தெரிவித்துள்ளது.

46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அவர்களை தண்டிப்பதற்கும் விடுவிப்பதற்கும் ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வாவி துப்புரவுப் பணியில் சீன இராணுவமா: நடப்பது என்ன?

சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வித்தியாசமான ஆடைகள் அணிந்த சிலர் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது.

சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் இந்த ஆடைகளை ஒப்பிட்டுக் கூற முடியும்.

அமெரிக்க இராணுவம் இலங்கையில் கால்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய MCC உடன்படிக்கை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டது.

எனினும், தென் பகுதியில் இத்தகைய சீருடையினை அணிந்த வௌிநாட்டவர்களை வேலைத் தளங்களில் காண முடிகிறது.

திஸ்ஸமகாராமய வாவியில் சிவில் பணிகளே ஆரம்பமாகியுள்ளன.

நிலைமை அவ்வாறிருக்கும் போது, இராணுவ சீருடையினை ஒத்த ஆடையினை அணிந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள் யார்?

நடப்பது என்ன?

blob:https://www.facebook.com/f5ec205c-a65a-487a-a199-010a583186da

Posted in Uncategorized

200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காக 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு மாவட் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பிரச்சினைகள் தொடர்பாக : வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும், ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறு கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு இன்றைய தினம் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக என்னிடம் முறைப்பாடு செய்தமைக்கு தங்களின் மேலான கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வருகின்றேன்.

வடக்கு மாகாண சபையினால் வாகன தரிப்பிடத்துடன் கூடிய சாரதிகள் தங்குவதற்கான ஓய்வு விடுதி நிர்மாணிக்கவென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஆரம்பக்கட்ட வேலைகள் கூட தொடங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

நோயாளர் காவு வண்டிகள் எவ்வாறு விசேட கவனம் எடுத்து பராமறிக்கப்பட வேண்டுமோ அது போலவே அதன் சாரதிகளுக்கும் முறையான ஓய்வும் வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இவ்விடயமாக மாகாண சுகாதார திணைக்களம் உரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சாரதிகள் அனைவரும் வைத்தியசாலை பணிப்பாளரின் விடுதியிலேயே தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர். பல தடவைகள் வட மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் நிரந்தர வைத்தியசாலைப் பணிப்பாளரை நியமிக்கக் கோரியும்,நியமனம் செய்யப்படாமையினால் வைத்தியசாலை நிர்வாகம் செயலிழந்து காணப்படுகின்றது.

தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையில் தொடர்ந்தும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நேரடியாக வைத்திய சாலையையும் நிர்வகிப்பது இயலாததாகும். நிரந்தர வைத்தியசாலை பணிப்பாளர் நியமிக்கப்படுமிடத்து தற்காலிகமாக பணிப்பாளர் விடுதியில் தங்கியிருக்கும் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பார்கள்.

ஒரு மாவட்ட பொது வைத்தியசாலை சகல வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.நோயாளர்கள் சிரமம் இன்றி மருத்துவ வசதிகளை பெற வேண்டும். மத்திய அரசாங்கம் இம்மாவட்ட வைத்தியசாலையை பொறுப்பேற்க இருக்கும் காரணத்தை காட்டி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபை நிதியை மீளப் பெறவோ சாரதிகளின் அர்ப்பணிப்பான சேவையை கேள்விக்கு உற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே காலம் தாழ்த்தாது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளரை நியமிக்குமாறும்,சாரதிகளுக்கான ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறும் தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

Gallery

Posted in Uncategorized

இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பேச்சு; இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராய்வு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று திங்கட்கிழமை விரிவான பேச்சுக்களை நடத்தியதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்றிரவு தெரிவித்தது.

இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் சந்திப்பாக இது இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் மூலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு கரிசனை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பேச்சுக்கள் இடம் பெற்றிருப்பது முக்கியமானதாகும்.

“இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பானதாக அமைந்திருந்தது. இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது நாம் ஆராய்ந்தோம். பிராந்திய உறவுகள் குறித்தும் பேசினோம். நாம் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பில் இருப்போம்” என இந்தப் பேச்சுக்கள் குறித்து தனது ருவிட்டர் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிவு செய்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும், நடவடிக்கைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடைசட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் சூழமைவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனவர்கள் – இழப்பீட்டு அலுவலகங்களிற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன், கடந்தகாலகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்காத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைகளை மேலும் பாதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் குறித்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது கரிசனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் 300 முஸ்லீம்கள் தமிழர்களை தடுத்துவைக்க உதவியுள்ளன – இவை நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிக்கப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி இரண்டு வருடம் தடுத்து வைப்பதற்கு இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் என்கவுண்டர்ஸ் என்ற சூழமைவில் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள வேளை நிகழ்கின்ற உயிரிழப்புகள் தொடர்வது குறித்து தான் சுட்டிக்காட்ட விரும்புதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் 22 பில்லியனை அச்சிட்ட இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் கடந்த 18ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்திற்குள் 22 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டிருப்பதாக இக்கொனொமிக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 50 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான பிணைமுறிகளில் 60 சதவீதத்தையாகிலும் எவரும் கொள்வனவு செய்யவில்லை. அதன் காரணமாக குறைந்துள்ள நிதியை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் பணம் அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகையை அரசாங்கம் அச்சிடவிருந்தது.

இருப்பினும் 400 மில்லியன் டொலர்களை சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியிருந்த காரணத்தினால் அப்போது அச்சிடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்கள் ரெலோ செயலாளர் கருணாகரம் ஜனா பா.உ சந்திப்பு

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், கோரளைப்பற்றுப் பிரதேச அரசியற் பிரமுகர்கள், கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கோரளைப்பற்றில் நிலவுகின்ற முக்கிய சில பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரதான பிரச்சினைகளின் போது மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன் போது வாழைச்சேனை வைத்தியாசலையில் நிலவுகின்ற குறைபாடுகள், மற்றும் பிரதேசத்தில் நிலவுகின்ற காணிப்பிரச்சினைகள், பிரதேசத்தின் எல்லைகளில் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள், தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட தற்போது பேசுபொருளாக இருக்கின்ற வாழைச்சேனை வைத்தியசாலை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலக விடயம் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்நிற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. கட்சி நிலைமைகளுக்கப்பால் மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்காக ஒருமித்து நின்று செயற்படுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக நிற்கின்றோம். ஆனால் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. அவ்வாறு அவர்களும் முன்வருவார்களாக இருந்தால் நாங்களும் தயாராகவுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized