வியாழேந்திரன் எம்.பி வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி; மக்கள் கூடியதால் பதட்டம்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு-ரெலோ செயலாளர் கருணாகரம் ஜனா

மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட பணயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மேய்ச்சற்தரைப் பிரச்சினை மிகப் பேசு பொருளாக இருந்த விடயம். அதிலும் மட்டக்களப்பில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை பெரிய பிரதேசமாகவும், கடும் பிரச்சினைக்குரிய பிரதேசமாகவும் இருந்தது.

கடந்த காலங்களில் நாங்கள் பல முறை இந்தப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றோம். மட்டக்களப்பில் அதிக மாடுகளை மேய்க்கின்ற மேய்ச்சற்தரையாக இது காண்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் அத்துமீறிச் சேனைப் பயிர்ச்செய்கை செய்பவர்களை வெளியேற்றுவதற்காக பண்ணையாளர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம்.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதிக்கு முன்னதாக இங்கு சேனைப் பயிர்செய்கை செய்பவர்கள் அனைவரும் வெளியேறி மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்துவதற்கு விடவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு கடந்த மே மாதம் 12ம் திகதி தவணையிடப்பட்டு, பயிர்ச்செய்கையாளர்கள் இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களா என்று உறுதிப்படுத்தும் படியாகவும் அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிக்கப்டடது. மே 12ம் திகதி நாட்டின் அசாதாரண நிலைமையினால் வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் இப்பிரதேசத்தில் மீண்டும் அத்துமீறிய சேனைப்பயிர்ச் செய்கைக்கான நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரியபப்படுத்தியதற்கமைவாக அந்த நிலைமையை வாழக்காளிகளாக இருக்கும் நாங்கள் நேரில் வந்து பார்வையிட்டோம்.

இந்கு வந்து பார்க்கும் போது இங்கு நீதிமன்ற உத்தரவுக்கமைவாக முற்றாக சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் வெளியேறியதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே பள்ளப் பிரதேசங்களில் தற்போதும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவதானித்தோம். அதற்கும் மேலாக எதிர்வரும் மாரி காலத்தில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை நாங்கள் அடுத்துவரும் வழக்குத் தவணையிலே எமது சட்டத்தரணிக்கூடாக நீதிமன்றுக்குத் தெரியப்படுத்த இருக்கின்றோம்.

தற்போதைய இந்த அரசின் காலத்தில் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தினூடாகவும் தீர்க்க முடியுமா என்ற சந்தேகமே ஜதார்த்த பூர்வமாக எங்கள் மத்தியில் இருக்கின்றது. ஏனெனில் இந்த அரசு திட்டமிட்டு இந்த வேலையை ஆளுநருக்கூடாக ஊக்குவிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கு தமிழ் மக்களை எந்தளவுக்கு அடிமைப்படுத்த, துன்புறுத்த முடியுமே அந்தளவிற்குத் துன்புறுத்துகின்றது இந்த அரசு.

மேய்ச்சற்தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. மாவட்டத்தில் நிலவுகின்ற தொல்பொருள், மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் இவர்கள் இருவரும் தலையிடாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும்.

ஆனால், நாங்கள் அவ்வாறிருக்க மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசினால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநியாயங்களை எப்போதும் தட்டிக் கேட்கும்” என்றார்.

Posted in Uncategorized

வவுனியாவில் 5000 குடும்பங்களுக்கு நிவாரண பணி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஆரம்பம்

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் பணிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பயணத்தடையினால் தொழில் வாய்ப்பினை இழந்த குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கே இந்த நிவாரணப் பொதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியாவில் நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டினை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா உதவி மாவட்ட அமைப்பாளர் ராஜனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று கையளித்தார்.

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளரான வி.யோகநாதனின் நிதிப் பங்களிப்பில் இந்த நிவாரணம் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஒரு காய்ந்த மரம், நாம் அவரை கணக்கெடுப்பதில்லை, பின்னால் ஓட எம்மில் எவருக்கும் பைத்தியம் இல்லை – பொன்சேகா

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு காய்ந்த மரம் போன்றவர் என்பதுடன், காணாமற்போன அரசியல்வாதி என்ற நினைப்பே எம்மிடம் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் சொல்லும் கருத்துகள் செய்யும் செயற்பாடுகள் குறித்து நாம் கணக்கெடுப்பதில்லை; எமக்கு அக்கறையும் இல்லை என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், எமது கட்சியிலிருந்து 60 பேர், ரணிலுடன் சென்றுவிடுகின்றனர் என்கிறார்கள் எம்மிடம் 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர்,ஒருவர் பின்னால் ஓடும் அளவுக்கு எமது உறுப்பினர்களின் நிலை மாறிவிடவில்லை.

நாம் வேண்டாமென்று ஒதுக்கிய ஒருவர் பின்னால் மீண்டும் ஓடும் அளவுக்கு எம்மில் எவருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை என்றார். இதேவேளை,நாட்டின் தற்போதைய நிலையில், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் போதுமானதாக இல்லை என்பதுடன், அவை பிழையான தீர்மானங்களாகும்.

அதனால் தான் சர்வகட்சி மாநாட்டை நடத்த வேண்டுமென நாம் நினைக்கிறோம் இவ்வாறான

நேரத்தில் தான் அரசாங்கம் நாட்டிலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி அவர்களது அபிப்ராயங்களையும் செவிமடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

“எனவே, இந்த அரசாங்கம் அதனை செய்யத் தயாரில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சர்வகட்சி மாநாடு குறித்து மீண்டும் அரசாங்கத்துக்கு நினைவுப்படுத்தினார்” என்றார்.

Posted in Uncategorized

கொழும்பில் சீனமொழி பத்திரிகைகள்!

சீனமொழி பத்திரிகைகள் ஒரு தொகுதி கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் இருந்தமை சமூகவலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

குறித்த பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான விவரங்கள் மற்றும் சீன தொடர்பான விவரங்கள் உள்ளடக்கியதான பதிப்புக்கள் வெளிவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் அனேகமான பகுதிகளை சீனா குத்தகைக்கு பொறுப்பேற்ற நிலையில் கொழும்பு துறைமுக நகர் சீனக் கொலனியாக மாறிவிட்டதாக அரசியல் அரங்கில் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பிரதேசங்களில் இடம்பெறும் கட்டுமானங்களுக்காக அதிகமான சீனர்கள் பல வருடங்களாக தங்கியிருந்து இலங்கையில் வேலை செய்கின்றமையும் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் சீன மொழி பத்திரிகைகள் ஒரு தொகுதி இலங்கை உணவகம் ஒன்றில் இருந்தமை இலங்கையில் உள்ள தமது சீனர்கள் வாசிப்பதற்கு விமானம் மூலம் அனுப்பப்படுகிறதா? அல்லது இலங்கையிலே தமதுகட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் வைத்து அச்சுப்பதிப்பு செய்யப்படுகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

Posted in Uncategorized

ஆளுந்தரப்புக்கள் இழுபறி ! ஜனாதிபதி , பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இன்று முக்கிய சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினர் எரிபொருள் விலையேற்றத்தை சுட்டிக்காட்டி வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ள நிலையில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ள து .

ஜனாதிபதி தலைமையில் இடம் பெறும் இப்பேச்சுவார்த்தையில் போது அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர் தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணை, பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கும்,,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசவததிற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக ஆளும் தரப்பிற்குள் இரு வேறுப்பட்ட குழுக்கள் உருவாகியுள்ளன.

எரிபொருள் விலை கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதுகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலை அதிகரித்தமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடு,

எரிபொருள் விலையேற்றத்தை பொறுப்பேற்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாரக காரியசம் அறிக்கை வெளியிட்டார்.

எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை தான் தனித்து எடுக்கவில்லை. ஜனாதிபதி , பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. ஆகவே தான் பதவி விலக வேண்டிய தேவை கிடையாது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு பதிலளித்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், பல சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டன. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள்.

அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவிற்கு பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பிரதான 8 பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டார்கள்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்க்ப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பட்டமை பொருத்தமற்றது என ஆளும் தரப்பின் ஒரு சிலரும், எரிபொருள் விலை பொருளாதார காரணிகளை கருத்திற் கொண்டு அதிகரிக்கப்பட்டது என ஆளும் தரப்பின் பிறிதொரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டது. இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினை சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியினர் அமைசசர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளார்கள.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு வழங்குகின்றன நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசத்திற்கு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து இவ்விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

மக்களின் அரசியல் சிந்தனையை திசைதிருப்பும் நோக்கில் எரிபொருள் விலையேற்றத்தை கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் குற்றஞ்சாட்டினர். எரிபொருள் விலை அதிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என எதிர் தரப்பினர் ஆளும் தரப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

பொதுஜன பெரமுனவிற்கும், ஆளும் தரப்பின் கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

Posted in Uncategorized

வட,கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம் பெயர் உறவுகள் உதவி ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது ஏமாற்றி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் பலம்பெயர் உறவு ஒருவரால் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மன்னாரில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், உலர் உணவு பொருட்களை வழங்குவதாகவும் கூறி ஏமாற்றுகின்ற நிலையில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையேந்தக் கூடாது என்பதற்காக புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அதே போல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பாக பிரித்தானியாவில் வாழும் நண்பரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஆரம்ப பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

அவருக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்.

பாரிய நிதி உதவியை வழங்கி ஏழை மக்களினுடைய பசியை போக்க ஒரு தர்மத்தை செய்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பாகவும் வன்னி மாவட்ட மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எமது மக்கள் அரசிடம் கையேந்தும் நிலையை மாற்ற புலம் பெயர்ந்த உறவுகள் எம் மக்களுக்கு கை கொடுக்க வேண்டும்.

நாட்டில் பயணத்தை ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூர்த்தி பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சமூர்த்தி பெற்றுக்கொள்ளுகின்றவர்களுக்கு மாத்திரமே குறித்த 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கத்தினால் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படவில்லை.
அந்த வகையில் அரசாங்கம் பாதீக்கப்பட்ட மக்களை ஏமாற்றியுள்ளது.
அன்றாட கூலித் தொழிலை மேற்கொள்ளுகின்றவர்களின் குடும்பங்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையிலே அனைத்துக் கட்சிகளும் இணைந்து புலம் பெயர் மக்களின் உதவிகளுடன் நிவாரண உதவியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கம் தவறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்.
என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் 1.2 மில்லியன் உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளாந்தம் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு உலர் உணவு பொதிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்னும் பல குடும்பங்கள் நாளாந்த உணவுக்காக அல்லல்படுகின்ற நிலைமை நீடித்து வருகின்றது.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று புலம்பெயர் தேசத்தில் வாழுகின்ற திருவாளர் யோகன் விஸ்வநாதன் அவர்களுடைய நிதிப் பங்களிப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குகிற நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ரெலோ முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஆன ஆண்டிஐயா புவனேஸ்வரன் மற்றும் ரெலோ புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிவாரண நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்காக பிரித்தானியா கரினையுடன் செயற்படுகிறது: வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிற்காக ஆதரங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களில் பிரித்தானியா தொடர்ச்சியாக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது என அந்நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின் ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய கார்ஷால்டன் மற்றும் வொலிங்டன் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான எலியட் கோல்பேர்ன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்விருவருக்கும் இடையில் இடம்பெற்ற கேள்வி பதில்கள் வருமாறு,

எலியட் கோல்பேர்ன்:- இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைத் வெளிப்படுத்தவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளை அவர் (அமைச்சர் நைஜல் அடம்ஸ்) எடுத்துள்ளார்?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு ஐ.நா.வின் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையிலான புதியதொரு புதிய தீர்மானத்தை வெற்றிகரமாக வழிநடத்தி நிறைவேற்றியுள்ளோம்.

அத்தீர்மானத்தில் முதன்முறையாக, எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு தேவையான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.

எலியட் கோல்பேர்ன்:- போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நம்பத்தகுந்த இலங்கை அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை விதிப்பதற்கு, தேவையான சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளதா?

அமைச்சர் நைஜல் அடம்ஸ்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக பிரித்தானிய அரசாங்கம் பல ஆண்டுகளாக சர்வதேச ரீதியாக நடவடிக்கைகளை எடுத்துவருவது நண்பருக்குதெரியும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் “மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல்” இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை ஆதரிக்கப் பயன்படும். என்ற விடயம் உள்ளீர்க்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.

நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும்.

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது.

அதனபடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்கள் இடையே பயணிக்க முடியும்.

உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.

பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.

Posted in Uncategorized