அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு: சர்வதேச மன்னிப்புச்சபை

கொவிட் – 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதில் இலங்கை திணறிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி வழங்கலின்போது உரிய செயற்திட்டமொன்று பின்பற்றப்படவில்லை என தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மேலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம், நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதில் திணறும் இலங்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளில் முடக்கம் தளர்த்தப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவதுடன் இந்த நோய்த்தொற்றிலிருந்து அவை மீள்வதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இருப்பினும் இந்த கொவிட் – 19 வைரஸ் பரவலால் இன்னமும் தெற்காசிய நாடுகள் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அந்த சவாலில் இருந்து விலகிச்செல்ல முடியாது என்பதை இலங்கை நிரூபித்திருக்கிறது. இலங்கையில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பின்பற்றப்படும் செயற்திட்டம், தேவையானளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சவால் மற்றும் தடுப்பூசி வழங்கலின்போது தொற்றினால் உயர் அச்சுறுத்தல் காணப்படும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

வெறுமனே 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. 23 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தாய்வானில் நாளொன்றுக்கு சுமார் 218 தொற்றாளர்களே இனங்காணப்பட்டுவருவதுடன், 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட புர்கினா பாஸோவில் தற்போது நாளாந்தம் பதவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை பூச்சியம் என்ற நிலையை அடைந்துள்ளது.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம், எவ்வித வேறுபாடுகளுமின்றி நாட்டுமக்கள் அனைவரும் தரமான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தொடக்கத்தில் ஆரம்பமான இந்த வைரஸ் பரவலால் தற்போதுவரை (இன்றைய தினம் வரை) இலங்கையில் 213,396 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 1,843 பேர் அதனால் உயிரிழந்திருக்கின்றார்கள். தமிழ், சிங்களப்புது வருடத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அலையொன்று உருவாகலாம் என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இலங்கையின் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை முறையான திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படுவதுடன் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின்கீழ் இந்தியாவினால் 500,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர், கடந்த ஜனவரி 29 ஆம் திகதியிலிருந்தே இலங்கை அதன் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது. அந்தத் தடுப்பூசிகள் கொவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெப்ரவரிமாத இறுதியில் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தன. மேலும் 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் 10 மில்லியன் அஸ்ரா செனேகா தடுப்பூசிகளை சீரம் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக இலங்கை மருந்தாக்கக்கூட்டுத்தாபனம் பதிவுசெய்திருந்தபோதிலும், அது கிடைக்கப்பெறுவதில் தாமதமேற்பட்டது.

அதன் தாமதத்தைத் தொடர்ந்து சினோபாம் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தது. அதேவேளை கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகள் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி இலங்கையிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி மொத்தமாக 925,242 பேர் அஸ்ரா செனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தற்போதுவரை அவர்களில் 353,789 பேர் மாத்திரமே இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள். மேலும் 1,033,028 பேர் சினோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றிருப்பதுடன் அவர்களில் 166 பேர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றிருக்கிறார்கள்.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யக்கூடியவாறான கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையானது தேசிய ரீதியான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமொன்றைத் தயாரிக்கவேண்டும். இந்த நடைமுறை தொடர்பான தகவல்கள் உரியவாறு பொதுமக்களைச் சென்றடைவது அவசியம் என்பதுடன், இதில் முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். இந்தத் திட்டமானது எவ்விதத்திலும் பாரபட்சமானதாகவோ அல்லது எந்தவொரு தரப்பினரையேனும் ஒதுக்கும் வகையிலோ அமையக்ககூடாது. மேலும் நாட்டுமக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் .

ஐ.நா பொதுச்சபையின் தலைவராக அப்துல்லா ஷாஹிட் தெரிவு

மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், 76 ஆவது ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுச்சபையில் தலைவர் தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர், டொக்டர் ட்சல்மாலி ரசோல் 48 வாக்குகளை மாத்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநிலையில், மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சரின் புதிய நியமனத்திற்கு இந்திய அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை மீது மீள அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதா அமெரிக்கா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

அமெரிக்க இலங்கை உறவில் மீண்டுமொரு நெருக்கடி ஆரம்பித்திருக்கின்றதென ஊடகங்களின் தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் இலங்கை தமிழர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானமே அத்தகைய பதட்டத்துக்கும் குழப்பத்துக்கும் காரணமாக தெரிகிறது. இலங்கையின் அமெரிக்காவுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க முன்னெடுக்கும் நகர்வுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சு பதட்டத்தை எதிர்நோக்குகின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இத்தகைய குழப்பம் ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம்சத்தை நோக்குவோம். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் 2009 மே 18 போர் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் இறந்த உறவுகளை கௌரவித்தலும் மரியாதை செலுத்தலும் மற்றும் நீடித்த இலங்கை மக்களின் செழிப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு, மறுசீரமைப்புக்கான ஆதவை வெளிப்படுத்தல் என்பதை வலியுறுத்திய விடயமாக அமைந்துள்ளது. அதில் மிகப்பிரதானமாக விடுதலைப்புலிகளினை தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய ஓர் அமைப்பாக குறிப்பிட்டதோடு, வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் முன்மொழிகளின் உளளடக்கம் அமைந்திருந்தது. இத்தகைய பிரேரணை அமெரிக்க வெளியுறவுக்குழுவின் அனுமதியை பெறும்பட்சத்தில் அமெரிக்க செனட்சபை ஏற்றுக்கொள்ளப்படும். அத்தகைய அங்கீகாரம் சாத்தியப்படுமாயின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் இலங்கை தமிழ் விடயம் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பிரதான இடம்பெறும் அம்சமாக விளங்கும்.

இவ்வாறு இக்காலப்பகுதியில் அமெரிக்கா நடந்து கொண்டதுக்கு காரணங்களை புரிதல் அவசியமாகும். அதேநேரத்தில் கோவிட் தடுப்பூசி மற்றும் அதற்கான மருத்துவ உதவிகளை வழங்கும் விதத்தில் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கான மேற்கொண்டுவரும் அமெரிக்கா இலங்கையை அதில் இணைத்து கொண்டிருப்பதோடு இலங்கைக்கான மருத்தவ அவசர உதவிகளோடு விமானமொன்று இலங்கையை வந்தடைந்தது. USAID நிறுவனத்தினூடாக அத்தகைய உதவியை வழங்குவதாகவும் அமெரிக்க அறிவித்தது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமாகிய USAID இலங்கைக்கு அனுப்பியுள்ள அவசர உதவியுடன் 880 000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் 1200 துடிப்பு ஒப்சி மீற்றர்களும் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளும், மற்றும் படுக்கைகளும் உள்ளடங்களாக பல மில்லியனுக்கான பெறுமானமுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

மேற்குறித்த இரு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரணானதாக அமைந்திருந்தாலும் USAID இனுடைய உதவிகள் தென்னாசிய நாடுகளையே அதிகம் இலக்கு வைத்ததாக அவதானிக்க முடிகிறது. USAID உதவியும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் என்பனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதுடன் இவை அனைத்தும் சீனா சார்பு நாடுகள் என்ற அடிப்படையிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உலகளாவியரீதியில் தடுப்பூசி இராஜதந்திரத்தை (Vaccine Diplomacy) உருவாக்கியது என்றும் கருதுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு வலுவான இன்னொரு காரணி ஜூன்-06, 2021 அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு வந்த அன்றய தினத்தில் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியும் இலங்கையை வந்தடைந்துள்ளன. இத்தகைய இராஜதந்திர நகர்வை முதலில் தொடக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நகர்வு தீவிரம் பெற ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணங்களை விளங்கி கொள்ளுதல் அவசியமாகிறது.

முதலாவது, வெளிப்படையாக பார்த்தால் சீன – இலங்கை உறவின் மீதான பதில் நடவடிக்கையாகவே தெரிகிறது. குறிப்பாக கொழுப்பு நகர சட்டமூலம் அதிக ஆபத்தை பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அமெரிக்க , இந்திய நலக்களுக்கு பாதிப்பை ஏற்படத்தக் கூடியதென்பது மதிப்பீடாக உள்ளது. சீனாவின் இலங்கை மீதான நிரந்தரமான செல்வாக்கிகை தடுக்கும் விதத்தில் இத்தகைய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு சீனா சார்பானதாக அமைந்திருப்பதனால் அமெரிக்கா இந்தியா என்பன அதிருப்தி அடைந்துள்ளன.

இரண்டாவது, இலங்கை – சீன உறவு சீனாவின் பொருளாதார செழிப்பையும் அவ்வாறே ஒரே சுற்று ஒரே பாதை என்ற சீனாவின் வியூகத்தையும் வெற்றிகரமாக நகர்த்த உதவும் என்பது அவதானிக்க் கூடியதாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் மையத்தில் விளங்கும் இலங்கையுடனான உறவை, சீனாவின் வர்த்தக மார்க்கங்களுக்கு பெரும் உந்துதலான அமையும் என்றும் கருதப்படுகிறது. கொழும்பை மையப்படுத்தியே பிரித்தானியரும் பின்னர் அமெரிக்காவும் இந்து சமுத்திர பிராந்தியம் மீது பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ நலன்களை அடைந்திருந்தன. இலங்கையை இழத்தல் என்பது இந்துசமுத்திர இழப்பதற்கு சமனானது என்ற வாதம் பிரித்தானிய காலத்திலேயே உரையாடப்பட்டு வந்துள்ளது. தொழில்நுட்பங்கள் பாரிய அளவில் வளர்ந்த பின்பும் இலங்கையின் முக்கியத்தவம் அற்றுப்போகவில்லை. எனவே தான் இலங்கை – சீனா உறவு அமெரிக்க மற்றும் மேற்கு நலன்களை பாதகமான சூழலுக்கு கொண்டுசெல்லும் என அமெரிக்கர்கள் அச்சமடைகிறார்கள்.

மூன்றாவது, இலங்கை – சீனா உறவென்பது இந்தோ – பசுபிக் மூலோபாய திட்டமிடல்களை அதற்கான நகர்வுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் இந்தோ – பசுபிக் உபாயத்தின் முக்கிய நாடுகளில் ஒள்றான இந்தியா, இலங்கை – சீனா உறவினால் இரு கடலுக்குமான இணைப்பினை சாத்தியமற்றதாக்குவதோடு அத்தகைய உபாயம் முடிவுக்கு வரும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. அதாவது இந்தோ – பசுபிக் கடலை இணைக்கும் பிரதான நாடுகள் அனைத்தும் சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதைக்குள் இணங்கி செயற்படுகின்றது. அதனால் கொழும்பு துறைமுகம் அமெரிக்கா செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அதற்கு பதிலீடான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உணர்த்துகின்றது.

நான்காவது, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலோ அல்லது தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதிலீடாகவோ அமைந்திருக்கின்றது என்பதற்கு அப்பால் அமெரிக்க நலன்களை அடைவதற்கான உத்திகளாக அதன் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள அமெரிக்க மற்றும் அத்தகைய தடையை மீள மீள தொடரும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணும் அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை முன்வைத்தள்ளது என்பது அதன் அரசியல் பொருளாதார இராணுவ நலனுக்கானதேயாகும். அத்தகைய நலனை அமெரிக்க எட்டவதற்கு மேற்குறித்த இரு விடயங்களை வெறும் அரசியல் சுலோகமாக அன்றி நிரந்தரமான கோட்பாடாக ஆக்குவதற்கும் அமெரிக்கா தயாராகவே இருக்கும். இங்கு முக்கியம் அமெரிக்க நலன்களேயாகும்.

எனவே அமெரிக்காவின் நகர்வு அமெரிக்க நலனுக்கு உட்பட்டதென்பது உலகம் முழுவதும் கண்டுகொள்ளக்கூடிய ஒர் அம்சமாகும். எனினும் அத்தகைய நலன்களுக்குள் தமிழர்களுடைய அபிலாசைகளும் நலன்களும் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய வாய்ப்பு சரியாக அடையாளம் காண்பதுவும் அதனை நோக்கி நகருவதும் இன்றைய தமிழரசியல் பரப்பில் அவசியமான பொறிமுறையாகும். மீளவும் அறிக்கைகளையும், வாதங்களையும் முன்வைப்பதை விடுத்து அமெரிக்காவின் தளர்ச்சியான போக்கினை அடையாளம் கண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை கண்டறிதல் அதற்கன நகர்வினை மேற்கொள்ளல் அவசியமானதொன்றாக உள்ளது.

பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகரும், முன்னாள் பொருளாதார அமைச்சரும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளருமாகிய பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதென்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். அவருடைய மருத்துவ தேவை மாத்திரமின்றி இலங்கையர்களின் மருத்துவ தேவையும், இலங்கை – சீனா உறவின் பிரதிபலிப்பும் காங்கிரஸ் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதென்பது கவனிக்க வேண்டிய விடயமகும். இதேநேரம் இலங்கை, அமெரிக்காவிற்கான தூதரினூடாக அமெரிக்காவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் இரு விடயங்கள் முதன்மை பெறுகிறது. ஒன்று, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாதென விண்ணப்பித்துள்ளது. இரண்டு, இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீரமானத்தை அடுத்து கடந்த 2021ஜனவரி மாதத்திலிருந்து அதற்கான செயலணிகளை உருவாக்கி செயற்பட்டுவருவதாகவும் அத்தகைய பணிகள் கோவிட் தொற்றினால் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவத்துள்ளதுடன், பெரியளவில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே இதனை அவதானிக்கும் போது, இலங்கை விடயத்தில் அமெரிக்கா மீளவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. இதன்மூலம் தமிழ் மக்களின் நலன்களை அமெரிக்கா தனக்கு ஏற்ற வகையில் கையாள முயன்றிருப்பதையும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக வேண்டுமெனவும் தற்போதைய அரசியலாக உள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

22ஆம் திகதி ரணில் நாடாளுமன்ற பிரவேசம்: 21ஆம் திகதி சஜித் தலைமையில் அவசர கலந்துரையாடல்!

எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்க நாடாளுமன்ற பிரவேசம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் 21ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.

ஆளும் கட்சி சந்தித்து வரும் உள்ளக – வெளியக நெருக்குவாரங்கள், அதனால் பௌத்த பேரினவாதிகள் தரப்பு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசு தொடர்பான அதிருப்தி அத்துடன் எதிர்க்கட்டிசிக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து முரண்பாடுகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு ரணிலின் மீள் பிரவேசம் முக்கியம் பெறத்தொடங்கியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வரும் போது அவர்தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற கருத்தை ஆளும் கட்சியின் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து அரசியல் அரங்கை மேலும் சூடாக்கியுள்ளது.

இந்த பின்னணியில் தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா சிகிச்சை நிறைவு செய்யும் அதே நாளில் எதிர்வரும் ஜூன்-21 அன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டத்தை அவசரமாக கூட்ட ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் கூடினர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை நிறைவேற்றியிருந்தனர்.

இதனையடுத்து அந்த விடயம் அரசியலில் பேசும் பொருளாக மாறியது.

கட்சியினுள் காணப்படும் நெருக்கடி நிலையால் இவ்வாறு யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் மீள் பிரவேசம் கொழும்பு அரசியலை பெரும் பரபரப்பாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 67 பேர் பலி இதுவரை 1,910 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அதுரலிய ரத்தன தேரர், அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனவரி 5 ஆம் திகதி பதவியேற்றார்.

இந்நிலையில் அவர் பதவியேற்று எதிர்வரும் ஜூலை 5 அன்று 6 மாதங்கள் முடிவடையும் நிலையில், அவர் பதவி விலகியதும் ஞானசார தேரரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சி தயாராகி வருவதாக எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாம் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் செயற்பட்டார் என தெரிவித்து அவருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் என்றும் தயார்: இந்திய உயர்ஸ்தானிகர்

எமது கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவதும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.

இதுவிடயத்தில் இலங்கையும் இந்தியாவும் மிகநெருங்கிச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை அண்மையில் நியூ டயமன்ட் கப்பல் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப்பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப்பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் நல்வாழ்வையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பது இந்த மாநாட்டின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏனைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவசியமான வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனூடாக இலங்கையினால் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி மற்றும் பொருளாதார இலக்குகளையும் அடைந்துகொள்ள முடியும்.

இலங்கையில் நீண்டகால, நெருங்கிய நட்புறவு நாடாக இந்தியா இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது முதலீட்டுப்பேரவை மாநாட்டில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கையுடன் மேலும் நெருக்கமான ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும் இந்தியா தயாராக இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு நேர்மறையான முயற்சி இன்றியமையாததாகும். ஏனெனில் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்தும், வெவ்வேறு நாடுகளைப் பங்காளிகளாக ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் முன்னேற்றமடைவது என்பது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடியின்போதும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக வெளிப்பாய்ச்சல்கள் நிலைத்த மட்டத்தில் பேணப்பட்டமையானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான வணிகத்தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் தேசிய வர்த்தகக்கொள்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தொடர்புகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று நம்புகின்றோம் என்றார்.

மேலும், இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் அதேவேளை, எமது பொதுவான கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது.

உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு, அவற்றைப் பரப்புவோரை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்தகைய போலித் தகவல்களால் ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது, இனங்களுக்கு இடையே அல்லது மதங்களுக்கு இடையே விரிசல் ஏற்படுத்துவது, சிறுவர்கள் அல்லது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, பல்வேறு மோசடிகளுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவது என்பன அந்த குற்றங்களாகும்.

அத்துடன், போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்பட தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துகள், சிவில் மற்றும் அரசியல் சமவாயத்திற்கான சட்டங்கள், கணினி குற்றங்கள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவதூறு கருத்துக்கள் சட்டம் ஆகியவற்றுக்கு அமைய இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிடியாணை இன்றி சந்தேகநபர்களை கைது செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பொய்த் தகவல்களை பரப்புதல் அல்லது அதற்கு உடந்தையாக செயற்படுதலை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எனும் அமைப்பின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, நாளை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 210,516 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,214 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized