யாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 300 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் மாத்திரம் கொரோனா கண்காணிப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள திரையரங்குகள் அனைத்தும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் குறிப்பிட்டார்.

மேலும் பிரத்தியேக வகுப்புகள், திருமண நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை இன்று திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் கடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் : யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்துக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம் என்பதை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.

ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே இராணுவத்துக்கு எதிராக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இராணுவம் கொடுமையான இராணுவம். இங்கே தேவையற்றது என பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப்படுகின்றது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக்கொடுத்ததையிட்டு இலங்கை இராணுவத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.

அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன்.

எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசுக்குள் சூடுபிடிக்கும் முரண்பாடு : அவசரமாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புதிய சட்டமூல வரைபின் யோசனைக்கு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை நிர்ணய விவகாரம் குறித்தும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் கேள்வியெழுப்பினர்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளின் முக்கிய பகுதியாகவே புதிய தேர்தல் சட்டமூல விவகாரம் அமைந்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் மாகாண சபை தேர்தலை நடத்துவதனை தேர்தல் முறைமையை மையப்படுத்தி புதிய சட்டமூல வரைபை அமைச்சரவையில் சமர்பித்திருந்த நிலையில் அது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சட்ட மூல வரைபில் காணப்பட்ட ஒருசில யோசணைகளுக்கு ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அமைச்சரவை பத்திரத்தை வெளியிடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். எவ்வாறாயினும் உத்தேச மாகாண சபை தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறையில் நடாத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் தெரிவில் 70 வீதம் தொகுவாரி முறைமையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையிலும் தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளை தீர்த்து அடுத்த தேர்தல்களுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் பெசில் ராஜபக்ஷ பொதுஜன கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் இறுதிக்கட்டமாக ஜனாதிபதியுடன் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறும். எனவே தான் இதன் உறுதியான நிலைப்பாடு ஜனாதிபதியுடனான கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தெரியவரும் என ஆளும் கட்சி உறுப்பினரொருவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த மாகாண சபை தேர்தலுக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இருவாரத்திற்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிரிட்டனின் தடைகள் தொடர்பான திணைக்களத்திடம் கையளித்தது சர்வதேச அமைப்பு

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு தொடுநர்களினால் சேகரி;க்கப்பட்டவையே இந்த ஆதாரங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்கள் இந்த ஆவணங்களின் முக்கியமானவையாக காணப்படுகின்றன எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் முடிவில் இடமபெற்றதாக தெரிவிக்கப்படும் மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் தொடர்பிற்காக 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்தது என ஜஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரிட்டனின் தடை தொடர்பான செயற்பாடுகளின் எல்லை பரந்துபட்டது, இராணுவநடவடிக்கைகளின்போது மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தடை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் – சமீபத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதாக அமையும், பிரிட்டனே இதில் முக்கிய பங்கு வகித்தது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் பாரிய மனித உரிமைமீறல்கள் இழைக்கப்படுவதில் சவேந்திரசில்வாவின் பங்களிப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் மருத்துவமனைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் எறிகணை வீச்சிலிருந்து உயிர்தப்பிய தமிழர்களின் கண்ணால் கண்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை. இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் வசிக்கின்றனர்.

Posted in Uncategorized

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து

இலங்கை சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கொஹன்ன இந்த ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அந்திய செலாவநியை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடன் தொகை தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வொப்பந்தம் தொட்பில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன குறிப்பிடுவதாவது,

இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கில் சீனா அரசாங்கம் இக்கடன் தொகையினை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இக்கடன்தொகை பெறுவதன் ஊடாக இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதுடன், டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நெருக்கடியான சூழ்நிலையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கைக்க இக்கடன் தொகையினை வழங்கவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6 இலட்சம் கொவிட்-19 வைரஷ் தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

சந்தைப்படுத்தல், முதலீடு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ,கல்வி ஆகிய துறைகள். ஊடாக இரு நாடுகளுக்கிடையில் இரு தரப்பு உறவினை மேம்படுத்த இலங்கையுடன் தொடர்புக் கொள்ள தூதுவர் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சீன நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள்.

சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரக காரியாலயத்தில் இலங்கை உற்பத்திகளை சீன நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தல், சீன நாட்டு முதலீடுகளை இலங்கையில் துரிதப்படுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.

இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவினால் கடந்த வருடம் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாம் பகுதியாகும். இந்நிதியை பெற்றுக் கொள்வதற்கு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் உரிய சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

தனித்து போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம்

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனி கட்சியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.க.வை வலுப்படுத்த கிராம மட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

“ஒரு கட்சியாக எங்களுக்கு முக்கிய தேவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மாகாண சபைத் தேர்தல் வரும்போது, ​​நாங்கள் ஒரு கட்சியாக போட்டியிட தயாராக இருக்கிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் கேள்வி

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் முதல் தடவை மன்னிப்பாக ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு, மீன்பிடித்துறை அமைச்சரின் சிபாரிசில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வரை விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அவ்வாறான சிபாரிசில் மன்னித்து ஏன் விடுதலை செய்ய முடியாது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

மைத்திரி – மகிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தி​ல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தற்​போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சிமுறையின் ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கிறது என்றார்.

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 6 மில்லியன் டொலர்களை செலவிட்ட சிறீலங்கா

சிறீலங்காவுக்கு ஆதரவான நிலை ஒன்றை அமெரிக்காவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் தொழிலதிபர் ஒருவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசு வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சிறீலங்காவின் மத்திய வங்கி ஊடாக இந்த பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவினால் இந்த பணிக்கு அமர்த்தப்பட்ட இமாட் சூபேரி என்ற தொழிலதிபர் ஒரு புலனாய்வு அதிகாரியாவார்.

தற்போது அமெரிக்காவின் நீதி மன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரி புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாகவே சிறீலங்காவில் இருந்து பணத்தை பெற்றதாகவும், அதில் பெரும்பகுதியை அவரும் அவரின் மனைவியும் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.