புர்கா தடை குறித்து பேச்சு வார்த்தை தொடர்கிறது – கெஹெலிய

புர்கா தடை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை மதரீதியானதாக மாத்திரம் அவதானிக்கக் கூடாது. தேசிய பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புர்கா தடை விவகாரத்தை மத ரீதியான விடயமாக மாத்திரம் பார்க்கக் கூடாது. தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டும்.

ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடுகள் கூட புர்காவிற்கு தடை விதித்துள்ளன. அவ்வாறான நாடுகள் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

உலகில் இதுவரையில் 16 நாடுகள் புர்காவிற்கு தடை விதித்துள்ளன. அவற்றில் 3 முஸ்லிம் நாடுகளும் உள்ளடங்குகின்றன. எனவே இது இலங்கையில் மாத்திரம் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எவ்வாறிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடை கலாசாரம் காணப்பட்டது. எனினும் தற்போது கலாசார மாற்றத்துடன் அவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் சுமூகமான நடவடிக்கைகள் நிதானமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு தரும் அதிகாரங்கள் என்ன?

இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் மிஷேல் பாசிலெட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் கருதுகிறது.

ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசு “பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக” இருப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானம் ‘எந்த வகையிலும் உதவிகரமானதாக இல்லை’ என்றும் ‘பிரிவினையைத் தூண்டும்’ வகையிலும் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறுகிறது.

நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேறிய தீர்மானம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் மீது வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியது.

இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் கொடுமைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

“இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிக்கப்படுவது மற்றும் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கான பொறுப்பேற்க வேண்டியதை வலியுறுத்துவது ஆகியவற்றைத் தொடர ஐநா மனித உரிமைகள் கவுன்சில் எடுத்துள்ள முடிவை நான் வரவேற்கிறேன். உண்மை மற்றும் நீதிக்கான தங்கள் பயணத்தில் துணிச்சலுடனும் உறுதியாகவும் இருந்த இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்,” என்று செவ்வாய்க்கிழமை அன்று பிபிசியிடம் பேசிய மிஷேல் பாசிலெட் தெரிவித்தார்.

இலங்கை அரசு தற்போதைய கொள்கைகளிலிருந்து பாதை மாறி, சிறுபான்மையினர், மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இலங்கையின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் முடக்கியது. அப்பகுதியில் ஆயிரக் கணக்கான குடி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தி, உயிரிழப்புகளை அதிகப்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும் போர் குற்ற வழக்கு தொடர்புடைய வழக்கறிஞர் யாஸ்மின் சூகா இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது “பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டில் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளது என்பதையும், பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்க எந்த நம்பிக்கையும் இல்லை என்பதையும் இந்தத் தீர்மானம் உண்மையில் அங்கீகரிக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் யாஸ்மின் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளை பிரிட்டன் மேற்கொண்டது. 22க்கு 11 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் நிறைவேறியது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

இலங்கையிலுள்ள பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சிங்களர்கள் அல்லது தமிழர்கள் என அனைத்து சமூகத்தினரின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை தாங்கள் கொண்டு வருவதாக வாக்கெடுப்புக்கு முன்பு பிரிட்டன் தூதர் ஜூலியன் ப்ரையத்வெய்ட் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க மிஷேல் பாசிலெட் அலுவலகத்துக்கு கூடுதல் பணியாளர்கள், அதிகாரங்கள் மற்றும் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி ஆகியவற்றை வழங்க இந்தத் தீர்மானத்தின் வெற்றி வழிவகை செய்துள்ளது.

ஆனால் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளைவிட எதிராக வாக்களித்த நாடுகள் மற்றும் வாக்களிக்காத நாடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த அதிகாரமும் இல்லை என்று இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“உலகின் தெற்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மேற்குலக சக்திகளின் ஆதரவு பெற்றுள்ள நாடுகளால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது,” என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமை அரசின் நடவடிக்கைகள் ஆழமாகவும் வேகமாகவும் ராணுவ மயமாக்கப்படுவது, நீதித் துறையின் சுதந்திரம் குறைந்து வருவது, தமிழ் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினர் ஒதுக்கப்படும் நடவடிக்கைகள் அதிகரிப்பது உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான சூழ்நிலை குறித்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு, தமிழ் சமூகத்தின் கவலைகள்

திரை மறைவாக, வாரக் கணக்கில் நடந்த ராஜாங்க ரீதியிலான ஆதரவு திரட்டல் நடவடிக்கைகளுக்கு பின்பும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக முடிந்துள்ளது.

2009ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதலின் போது நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பானவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கு ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவருக்கு இந்த தீர்மானம் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் திரட்டப்படும் ஆதாரங்களும் எதிர்காலத்தில் தண்டனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படலாம்.

போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவ மற்றும் குடிமை அதிகாரிகளுக்கு எதிர்காலங்களில் பயணம் மற்றும் பிற தடைகள் விதிக்கப்படலாம் என்று இலங்கை அரசு கவலைப்படுகிறது.

தொடர்புடைய நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று இலங்கை அரசு தொடர்ந்து வாதிட்டு வந்தது.

ஆனால் ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை மீதான மீது கடுமையான தடைகளை விதிக்கப் போதுமானதாக இல்லை என்று தமிழ் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்கள் கருதுகிறார்கள்.

போர்க் காலத்தின் போது காணாமல் போன தங்களது உறவினர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான அவர்களது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.

ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்படவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தீர்மானம் திருப்தி அளிக்காமல் போகலாம்.

ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்ததாக குற்றம் சாட்டப்படும் உரிமை மீறல்கள் மறக்கப்படவோ, கண்டுகொள்ளாப்படாமல் போகவோ செய்யாது என்று இந்தத் தீர்மானம் மூலம் சர்வதேச சமூகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

பிபிசி தமிழ்

Posted in Uncategorized

சிறீலங்கா விவகாரம் 2 மில்லியன் டொலர்கள் தேவை – ஐ.நா

சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக புதிய அதிகாரிகளை நியமிப்பது மற்றும் சாட்சியங்களை சேரித்து பாதுகாப்பது தொடர்பாக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான நிதியை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு திட்டமிடப்படவில்லை, எனினும் அதற்கான விண்ணப்பத்தை ஐ.நாவின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைய தீர்மானம் சிறீலங்காவுக்கு உடனடியாக பாதிப்புக்களை ஏற்படுத்தாதுவிட்டாலும், காலப்போக்கில் அது சிறீலங்காவை கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ள உறுப்பு மற்றும் உறுப்புரிமை அற்ற 40 நாடுகளுடனான உறவுகள் சிறீலங்காவுக்கு எதிர்காலத்தில் ஆபத்தாக மாற்றம் பெறலாம் என ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும் – தினேஷ் குணவர்தன

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

எனவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப்பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று செவ்வாய்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகத் தெரிவானார்.

அதனைத்தொடர்ந்து ஏற்கனவே எமது நாடு மிகமோசமான பாதையில் பயணிப்பதற்குக் காரணமாக அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தோம்.

உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலினால் பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான உதவிகளே வழங்கப்பட வேண்டும்.

மாறாக ஒவ்வொரு நாடுகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்குமாறு நாம் ஏனைய நாடுகளை வலியுறுத்தியிருந்தோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தமட்டில், அது அதன் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட முடியாது.

குறிப்பாக ஒவ்வொரு நாடுகளையும் மையப்படுத்திய தனித்த தீர்மானங்களை முன்வைத்து, அவற்றை நிறைவேற்ற முடியாது.

எனினும் அதற்கு முரணாகவே பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை முன்வைத்தன.

இருப்பினும் அதன் மீதான வாக்கெடுப்பின் போது அந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆகவே மொத்தமாக 47 உறுப்புநாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருப்பதுடன் ஏனைய 25 நாடுகள் அதனை நிராகரித்திருக்கின்றன.

இந்நிலையில் ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

அதேவேளை ஏற்கனவே கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைய தொடர்பில் ஆராய்வதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசேட ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருக்கிறார்.

அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இதுவிடயத்தில் நாட்டின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப்பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதேவேளை எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருக்கின்றது. முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் அவ்வமைப்பினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் நாம் போரை முடிவிற்குக்கொண்டுவந்து, அனைத்து இனமக்களும் அமைதியாக வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

வெளிநாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதருவதற்குப் பெரிதும் விரும்புகின்றார்கள். எனினும் எமக்கெதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கும் நாடுகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த அரசாங்கத்திலேயே மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மீண்டும் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஜெனிவா தீர்மானம் சம்பந்தமாக ரெலோ அதிருப்தி – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

இன்று மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தரும் முகமாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அங்கத்துவ நாடுகளில் பெரும்பான்மை அனுசரணையோடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தப் பிரேரணையில் உள்வாங்கப்பட்ட விடயங்கள் நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியிலே பரிகார நீதியை பெற்றுக்கொள்ள வழி அமைத்திருக்கவில்லை என்பதை நாம் ஆழ்ந்த கவலையோடு அவதானிக்கிறோம்.

தமிழ் தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வலுசேர்க்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் முன்வைத்த கோரிக்கைகளை இந்த பிரேரணை கருத்தில் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

தொடர்ந்தும் இந்த பிரேரணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தினால் அவை இணை அனுசரணை வழங்க படாமலும், வழங்கினாலும் அவை நிறைவேற்ற படாமலும் இழுத்தடிப்பு செய்கின்ற நிலைமை கடந்த பல வருடங்களாக காணப்படுகிறது. ஆகவே மேலும் மனித உரிமைச் பேரவையில் இந்த நீதியை பெற்றுத் தருவதற்கான பிரேரணையை நிறைவேற்றும் முகமாக சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து ஐநா செயலாளரிடம் நாயகத்திடம் கையளிப்பதன் மூலமே எமது மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கொண்டு மனித உரிமைப் பேரவையில் இந்த விடயத்தினை இழுத்தடிப்பு செய்வது எம் மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களை அரிதாக்கிக் கொண்டு செல்வதை நாம் அவதானிக்கிறோம்.

அதே நேரம் இந்தியா எமது அண்மையில் இருக்கும் எங்கள் நலன்களில் அக்கறை கொண்ட நாடாக நாம் நம்பி வந்ததோடு இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தோம். இந்த சந்தர்ப்பத்தில் , எமது மக்களுக்கான நீதியைப் பெற சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு நடுநிலைமை போக்கானது எமது தமிழ்த் தேசிய இனம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் எம்மக்களுக்கான நீதியை சர்வதேச சமுகத்தின் நேர்மையான ஆதரவோடு, இந்தியாவின் காத்திரமான பங்களிப்பின் மூலமாக எங்களுக்கான பரிகார நீதி, புலன் விசாரணை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் பரிபூரண இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவதற்கும் அரசியல் ரீதியான நகர்வினை மேற்கொள்ள நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

இதன் முதல்படியாக இந்திய பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

பூகோள நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளில் நம் மக்களுக்கான நீதியையும் தீர்வினையும் பெற்றுக்கொள்ள எமது கட்சி முன்னெடுக்கவிருக்கும் முயற்சிகளுக்கு நம் தேசத்திலும் புலம்பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பரிபூரண ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது.

மேலும் இந்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை வாக்களிப்பில் இருந்து விலகுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு!

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் ஏதுவான வகையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்தோடு பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிக்கின்றோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம் 22 ஆதரவு: 11 எதிர்ப்பு: 14 தவிர்த்தது

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் இலங்கை அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல்மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

நடுநிலையற்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தான்,பங்களதேஷ்,கியூபா,ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் இலங்கையை சீனா ஆதரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பாக இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு சிறீலங்காவுக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்ட தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், சிறீலங்காவில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு சிறீலங்கா அரசை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

சிறீலங்காவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized