உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகங்களை இல்லாது செய்ய வேண்டுமாக இருந்தால் அது குறித்த இறுதியறிக்கை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஆயர்கள் சங்கத் தலைவரும், பதுளை மறை மாவட்ட ஆயருமான விண்ஸ்டன் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆயர் இதனை கூறியுள்ளார்.

´தற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் தடம்புரண்டுள்ளது. 2 குழுக்களை அமைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் மொத்தமாக உயயிரிழந்தனர். இந்த இனப்படுகொலையின் மூலம் பலர் காயமடைந்தது மாத்திரம் அல்லாமல் 500 க்கும் அதிகமானவர்கள் அங்கவீனம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதாவது நீதிபதி மலல்கொடவின் அறிக்கை அதனையடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு பின்னர் ஜனாதிபதி ஆணைணக்குழுவின் பின்னர் சிறப்பான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது தாக்குதல் தொடர்பான இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சட்டமா அதிபரிடம் அந்த அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.

அவரே பொருத்தமான நடவக்கைகளை எடுக்க வேண்டும். இறுதியாக அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். அதனூடாக நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்போது விசாரணைகள் தடம்புரண்டுள்ளன. இரண்டு குழுக்கழை அமைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த நடவடிக்கை பொறுப்புடனும், வெளிப்படை தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றோம்.

எனவே கத்தோலிக்க மக்களிடத்தில் காணப்படும் சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்த அறிக்கை கர்தினாலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எமக்கும் சில விடயங்களை தெரிவிக்க முடியும். விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் அந்த அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆகவே இதனை பேராயரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியிடம் மிக தேவையோடு கேட்டுக் கொள்கின்றேன்.´ என்றார்.

Posted in Uncategorized

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்

குருந்தலூரில் ( குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்ற மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது

இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த குருந்தலூர் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்த்தை சூலவம்சமும்,இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில் தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டிட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

1870 போல் என்பவர் தான் இந்த இடத்துக்கு சென்ற பொழுது பௌத்த கட்டிட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.

அதில் அண்மையிலுள்ள பெரியகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் தமிழ் வணிகனான விசாகன் பௌத்த துறவிகளுக்கு புகை கற்படுக்கைகள் கொடுத்தது பற்றி கூறுகின்றது வன்னிப் பிரதேசத்தில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் வரிவடிவம் தமிழ் மொழிக்கு என்று தனித்துமான வரி வடிவம் தமிழ் பெயர்கள் தமிழ் உறவுமுறைகள் ராஜா என்ற அரச பட்டத்தை சமமான வேள் என்றபட்டம் கொண்ட பெயர்கள் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுகின்றன

எனவே இந்த குருந்தலூரில் (குருந்தூர்) 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் தேசியக் கட்சிகள் இணைவில் உருவாகிறது ‘தமிழ் தேசியப் பேரவை’!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்ட அதேவேளை, கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளவில்லை.

இன்றைய கூட்டம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், “தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முதலாவது வரைபு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல விடயங்களை ஆராய்ந்துள்ளோம்.

இந்தக் கூட்டத்தில், முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவுள்ளோம்.

அதில், முக்கியமாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.வின் முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கப்படவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே, வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள்.

ஆனால், அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, வரும் 26ஆம் திகதி அடுத்தக்கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள், பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையாக உணர்ந்து அந்த அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்தக் கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய கட்சிகள்கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்துக் கட்சிகளையும் மிகவிரைவாக, ஒரு தமிழ் தேசியப் பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்துக் கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே, இவ்விடயம் குறித்து பேசப்படவுள்ளதுடன், வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி தமிழ் தேசியப் பேரவை உருவாக்குவது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆகவே, வரும் 28ஆம் திகதி, ‘தமிழ் தேசியப் பேரவை’ உருவாக்கப்படுவதுடன், அந்தப் பேரவையானது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காகச் செயற்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடையுத்தரவு வழங்காமல் அழைப்பாணையா? மட்டு.மாவட்ட ரெலோ எம்.பி ஜனா ஆதங்கம்

எனக்கு கல்முனையில் பொலிசாரால் தடையுத்தரவு தரப்படாமல் தற்போது கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன். அதிருப்தியடைகின்றேன்.இது நீதிக்குப் புறம்பான செயல். இதற்கான பதிலை நான்நீதிமன்றில் எனது சட்டத்தரணி மூலமாக எடுத்துரைப்பேன்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

நீதிமன்றஅழைப்பாணை கிடைக்கப்பெற்றமை தொடர்பில் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
தமிழ்பேசும்மக்களின் பிரச்சினையை உலகிற்கு ஜனநாயகவழியில் உரத்துச்சொல்லிய பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் சட்டத்தையும் நீதியையும் மதித்து தடையுத்தரவு தரப்படாத பிரதேசங்களில் கலந்துகொண்டேன்.
அம்பாறை மாவட்டத்தைப்பொறுத்தவரை எனக்கு பொத்துவில் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றுப் பொலிசாரால் நீதிமன்ற தடையுத்தரவு தரப்பட்டது. ஆதலால் நான் அந்தப்பிரதேசத்தில் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.

அவை தவிர்ந்த சம்மாந்துறை கல்முனைப்பிரதேச பேரணியில் பங்கேற்றேன். ஏனெனில் சம்மாந்துறை மற்றும் கல்முனைப்பொலிசாரால் நீதிமன்ற தடையுத்தரவு எனக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளேன். தடையுத்தரவு தராமல் அழைப்பாணை வழங்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன்.

ஜனநாயக நாட்டில் ஜனநாயகமுறைப்படி அஹிம்சை வழியில் தமிழ்மக்கள் தமது உரிமைகளைப்பெற போராடினார்கள். அது பலனளிக்காதுவிடவே ஆயுதரீதியில் போராடினார்கள். 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்டபிற்பாடு மாறிமாறிவந்த சிங்கள அரசாங்கங்கள் எமக்கான நிரந்தரதீர்வைத்தரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

சிறுபான்மை மக்களால் ஆட்சிக்குவந்த நல்லாட்சிஅரசு கூட ரணிலின் நரித்தந்திரத்தால் ஏமாற்றியது. மஹிந்த நினைத்திருந்தால் தீர்வைத்திருக்கலாம். சிங்களமக்களும் ஏற்றிருப்பார்கள். அதுவும் நடக்கவில்லை.

ஆதலால் 12வருட ஏமாற்றத்தின்விளைவாக மீண்டும் தமிழ்த்தேசிய உணர்வோடு ஜனாயகவழியில் பேரணி நடாத்தப்புறப்பட்டபோது அரசு இரும்புக்கரம்கொண்டு நசுக்கமுற்பட்டது. வீறுகொண்ட தமிழினம் அதைப்பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக பேரணியை நடாத்திமுடித்தது.

சரி இவ் அழைப்பாணை ஜெனீவாமனித உரிமை பேரவை அமர்வு நிறைவுற்ற பிற்பாடு அதாவது ஏப்ரல் 30ஆம் திகதி மன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன்.

இலங்கைக்கு எதிராக ராஜபக்ஸ சகோதரர்களுக்கெதிராக பலநாடுகள் சேர்ந்து போர்க்குற்றம் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் தமது ஆடசேபங்களை தெரிவிக்கவிருக்கின்றன. அதற்குள் நீதிமன்ற அழைப்பைவிடுத்து சங்கடத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கவே இப்படி காலம்தாழ்த்தி அழைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்.

இது திட்டமிட்ட செயலாக இருக்கலாமெனக்கருதுகிறேன் என்றார்.

நீதிபதிகள் தயாரித்த அறிக்கையை சாதாரண தரம்கூட சித்தி பெறாதவர்கள் பரிசீலிப்பதா?

நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை கர்தினால் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் கருதினால் மெல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் சில தகவல்களை வெளிவிடுவதற்கு அஞ்சுகின்றது. ஆணைக்குழு சேகரித்த அனைத்து தகவல்களையும் ஆணைக்குழு தெரிவித்துள்ளவாறே வெளியிட வேண்டும் என கருதினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயங்களில் எவற்றையும் மறைக்க முடியாது அல்லது தெரிவு செய்த சில விடயங்களை மாத்திரம் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அச்சிட்டு வெளியிடுவது பெரிய விடயமல்ல முதுகெலும்புள்ள தலைவர்களை எங்களுக்கு அவசியம் எனவும் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த தேவாலயத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் நாங்கள் எங்கள் தலையை கவிழ்க்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்று அலட்சியமாகயிருந்தால் நாங்கள் எங்கள் வழிமுறைகளை பின்பற்றுவோம் என தெரிவித்துள்ள கருதினால் மெல்கம் ரஞ்சித் நாங்கள் சர்வதேச கத்தோலிக்க திருச்சபைக்கு சென்று போராடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்த ஐந்து நீதிபதிகள் தங்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். இதன் காரணமாக அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ள கருதினால் மெல்கம் ரஞ்சித் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்களை இந்த விடயம் குறித்து தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப் போகின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

வெளியக சுயநிர்ணயத்தினை நாடும் நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது வடக்கு கிழக்கினை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள் என்ற வகையில் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழ்வதற்காக சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படுவதன் ஊடாகவே நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படாது, அதிகாரங்கள் பகிரப்படாது உள்ளக சுயநிர்ணய உரிமை மறுதலிக்கப்பட்டு பெரும்பான்மையை மையப்படுத்தி பேரினவாதத்தினை தோற்றுவிக்கும் ஒற்றைஆட்சிமுறை தொடர்ந்தால் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் நிலைமைக்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள். அவ்விதமான நிலைமைகள் எமது மடிகளிலேயே இயல்பாகவே வந்து வீழ்ந்துவிடும். அதன் பின்னர் எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பழிகூறிவிடாதீர்கள் என்றும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பினை வரைவதற்கு முன்னதாக அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் பரிந்துரைகளை உள்ளடக்கிய உத்தேச வரைவொன்றை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றிருந்தது.

முற்பகல் 10.30மணியளவில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை.சோ.சேனாதிராஜா, தருமலிங்கம் சித்தார்த்தன், ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது புதிய அரசியலமைப்புக்கான தேவைப்பாடு, நாட்டின் தன்மை, அதிகாரப்பகிர்வின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தன.

குறிப்பாக, நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களால் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம், காணி அதிகாரங்கள் தொடர்பில் அதிகளவான வினாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடத்தில் வினப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமது இறுக்கமான நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நிபுணர்குழுவினருடனான இரண்டு மணிநேர சந்திப்பின்போது கூட்டமைப்பினரால் வலியுறுத்திக் கூறப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட முக்கிய விடயப்பரப்புக்கள் தொடர்பில் சுமந்திரன் வீரகேசரிக்கு தெரிவித்துள்ளதாவது,

அரசியலமைப்பின் அவசியம்

தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அவர்கள் வடக்கு கிழக்கினை தாயமாக கொண்ட பூர்விக இனத்தவர்கள். அத்தகைய இனக்குழுமத்தின் பங்கேற்பு இல்லாத நிலையிலேயே இந்த நாட்டில் இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு குடியரசு அரசியலமைப்புக்களும் காணப்படுகின்றன.

70 ஆண்டுகளுக்கு அதிகமாக தமது உரிமைகளுக்காக போராடிவரும் இனமொன்றின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப்படுவதற்கும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அந்த இனக்குழுமத்தினர் கௌரவமாக வாழ்வதற்கும் உரிய உறுதிப்பாடுகள் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள அரசியலமைப்பானது பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அது செல்லுபடியற்ற நிலையிலேயே உள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்கு தேவையாக உள்ளது.

அவ்வாறு உருவக்கப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் தரப்பினை புறமொதுக்கி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விடமுடியாது.

உள்ளக சுயநிர்ணயம்

தமிழ் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைகளைக் கொண்டவர்கள். அவர்களுக்கு மொழி, கலாசாரம், பண்பாடு, தேசம் என்பன தனித்துவமாக காணப்படுகின்றது. அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமாக வாழ்வதற்காகவும் ஏனைய இனங்களுக்கு காணப்படும் உரித்துக்களை கொண்ட சமத்துவமான இனக்குழுமமாக தமது பிரதேசங்களில் தமது விடயங்களை தாமே தீர்மானிக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றே கோருகின்றனர்.

அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பு காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் அந்த இனக்குழுமத்தினை புறமொதுக்கும் வகையிலோ அல்லது அவர்களின் பங்கேற்பினையே நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணய உரித்தை கோருவதற்கான முழுமையான உரிமைகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு வெளியக சுயநிர்ணய உரிமையை தமிழர்கள் கோருகின்றபோது அல்லது அவ்விதமான நிலைமையையொன்று எமது மடிகளில் இயல்பாகவே வந்து விழும். அப்போது நாம் அதனை எமது மக்களுக்காக கையிலெடுக்க வேண்டிய ஏற்படும். அவ்விதமான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஒருவேளை புதிய அரசியலமைப்புச் செயற்பாட்டிலும் நேர்மறையான நிலைமை ஏற்படுமாயின் அதன் பின்னர் மேற்கூறிய வெளிய சுயநிர்ணயத்தினை கோரும் நிலை உருவாகும் போது எம்மை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப பழிகூறிவிடாதீர்கள்.

ஒற்றை ஆட்சி

இந்த நாடு பல்லின சமூகங்கள் வாழும் நாடாகும். ஆகவே நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருக்க முடியாது. நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருக்கின்றபோது அது பெரும்பான்மையான இனத்தினை மையப்படுத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கே வழிசமைக்கும். இதன் காரணமாக பெரும்பான்மை வாதம் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் அது பேரினவாதமாக கூர்ப்படையும். சமகால நிலைமைகள் அவ்விதமாகவே செல்கின்றன. ஆகவே நாட்டின் தன்மையானது ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக இருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமஷ்டி கட்டமைப்பு

ஆகவே நாட்டின் தன்மையானது பிரிக்க முடியாதரூபவ் பிளவு படுத்த முடியாத வகையிலான ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலானதாக அமைய வேண்டும். சமஷ்டி என்பது பிரிவினை வாதம் அல்ல. இது உள்நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக்களிலேயே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதன் காரணமாக தம்மைத்தமே ஆளுவதற்கான உரித்தினையும் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் அதற்குரிய தீர்மானங்களை எடுக்கும் வகையிலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அவ்விதமான அதிகாரப்பகிர்வுவொன்று செய்யப்படுவதன் ஊடாகவே நீண்டகாலமாக விடுதலைக்காக போராடி வரும் இனக்குழுமத்தினது அபிலாஷைகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.

மேலும் மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருப்பதானது பல்லின நாட்டுக்கு பொருத்தமற்றதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதும் ஆகும். ஆகவே அதிகாரங்கள் பரந்து பட்ட அளவில் மக்கள் மட்டத்தில் பகிரப்பட வேண்டியது அவசியமாகும்.

13ஆவது திருத்தச்சட்டம்

13ஆவது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பது எமது ஆரம்பத்திலிருந்தான நிலைப்பாடாகும். மேலும் 13ஆவது திருத்தச்சட்டமான மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதுகுறித்த எமது நிலைப்பாட்டினை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கு எழுத்துமூலமாக அனுப்பி வைத்திருந்தோம்.

அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தவிடத்தில் எமது எழுத்துமூலமான விடயம் சம்பந்தமாக இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்தி கலந்துரையாடினார். அதன்போது 13இற்கு அப்பாற் சென்று தமிழர்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்போம் என்று ஜே.ஆர் உறுதிமொழி வழங்கியிருந்தார். இருப்பினும் அவர் அதனை நடைமுறைச் சாத்தியமாக்கவில்லை.

அதன் பின்னர் ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது 13ஆவது திருத்தத்திற்கு அப்பாற் சென்று அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் வாக்குறுதிகளை இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களும் வழங்கினார். ஆனால் அவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அதன்பின்னர் சந்திரிகா அம்மையாரும் அதனையொத்த வாக்குறுதியை வழங்கினார். அவர் அதுதொடர்பில் கரிசனை கொண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் அதிகாரப்பகிர்வுகள் அடங்கிய தீர்வுப் பொதியைத் தயாரித்தார். அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது.

அவ்வாறு அனுமதி அளித்த அமைச்சரவையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களாக நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பதும் முக்கியமான விடயம்.

துரதிஷ்டவசமாக அந்த தீர்வுப் பொதியை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது போய்விட்டது. அந்த தீர்வுப்பொதியானது 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாகவும் சமஷ்டித்தன்மைகள் நிறைந்ததாகவும் காணப்பட்டது.

அதன் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி ஆகியோருக்கும் ஏனைய பல தலைவர்களுக்கும் தனது கடந்த ஆட்சியின்போதும் தற்போதைய ஆட்சிக்காலத்திலும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று தீர்வு வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

2015இல் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த மைத்திரிபால – ரணில் கூட்டு அரசாங்கமும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று தீர்வளிப்பதாக கூறியதோடு புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுத்து இடைக்கால அறிக்கையொன்று வெளியாகும் வரையில் முன்னெடுத்திருந்தது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தின் அப்பாற் சென்று அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது.

காணி அதிகாரங்கள்

இதனைவிடவும் காணி அதிகாரங்கள் சம்பந்தமாக பண்டா – செல்வா ஒப்பந்தத்திலும் டட்லி செல்வா ஒப்பந்த்திலும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிராந்திய சபைகளின் கீழாக காணி அதிகாரங்கள் காணப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டட்லி – செல்வா ஒப்பந்தத்தில் அந்த விடயம் சற்று விரிவாக காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பண்டா-செல்வா ஒப்பந்த்தினை அடியொற்றியதாக காணி அதிகாரங்கள் பிராந்திய சபைகளித்தில் காணப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இதனையடுத்துரூபவ் இரண்டாவது சபை அல்லது செனட் சபை மொழிப்பயன்பாடுரூபவ் மாகாண சபை அதிகாரங்களுக்குள் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கூட்டமைப்பினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மனித உரிமைகள் சபை உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!!

எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்வில் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பில் புதிதாக கொண்டுவர இருக்கும் நகல் தீர்மான வரைபு வெளிவந்துள்ள நிலையில் இதுதொடர்பில் கடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள தமிழ்மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படி நிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது எனவும் கடும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரைபு தயாரிப்பதற்குப் பொறுப்பாகவிருந்த பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டி நீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேள்வி: ஜெனீவா தூதுக்குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைவை பார்த்தீர்களா? அதுபற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

பதில்: ஆம். பிரதி ஒன்று மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப்பட்டது. குறித்த வரைவானது குறைபாடு உள்ளதாகவும், ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர் ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.

குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக் கூட குறைவாக இருக்கின்றது. அத் தீர்மானமோ அதனுடைய குறைபாடுகளால் தான் தோல்வியடைந்தது. தமிழ் மக்களுக்குத் தேவையானதும், சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும் போது இவ்வாறான ஒரு வரைவு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது. தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே ஆறு வருடங்கள் சென்று விட்டன. இலங்கை அரசாங்கம் தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும், கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைவைத் தயாரித்தமை மன வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இது கண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறான வரைவானது போர்க் குற்றங்களையும், மனிதத்திற்கெதிரான குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும்.

மனித உரிமைகள் சம்பந்தமாகவும், அடிப்படை நன்நடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும்.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் இலங்கையின் வட- கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற P2P பேரணிகள் தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணுகின்றோம்.

புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ்மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும், நல உரித்துக்களையும், அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும்.

தமிழ்த் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ நான் அறியேன்.

இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.

சஹ்ரானின் போதனைகளில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட மொத்தம் 15 பெண்கள் கலந்து கொண்டதாக யுவதியொருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் விளக்கமறியலில் உள்ளதுடன், தான் உட்பட 7 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானின் தீவிரவாத் குறித்த போதனைகளில் கலந்து கொண்ட குற்றச்சாட்டுக்காக மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் சைதா என்ற யுவதியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை கைது செய்தது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.

குறித்த கடிதத்தில்,

20.02.2021

Hon.Ms.Michelle Bachelet Jeria.
The High Commissioner.
Human Rights Commission.
Geneva.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போராடத் தொடங்கிய போராட்டம் இன்று ஐந்தாவது வருடத்தை எட்டுகின்றது. 1,462 நாட்காளாக தொடர்ந்து போராடும் நாங்கள் எங்களுடன் சேர்ந்து போராடத்தொடங்கிய 83 தாய் தந்தையினரின் இறப்பையும் தாங்கியவண்ணம்; தொடர்கின்றது. இப்போராட்டமானது எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அல்லது எமது இறப்பு வரை தொடரும்.

சிறிலங்கா அரசின் கபடத்தனத்தைப் புரிந்துகொள்ளாத சர்வதேசம் எமது எதிர்ப்பையும் மீறி பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசங்களை நீடித்து சிறிலங்கா அரசிற்குத் துணைபோனது. சிறிலங்காவானது பொறுப்புக்கூறலுக்கான இணை அனுசரணையிலிருந்து தன்னிச்சையாக விலகியதுடன் “நாம் உள்ளகப் பொறிமுறையை மேற்கொள்வோம் உள்நாட்டுப் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்” என்று அறிவித்தவுடன் தான் சர்வதேசம் இலங்கையின் கபடத்தனத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றது.

எமதருமை உறவுகளான இளம்பிஞ்சுப் பாலகர்களும் மகன்களும், மகள்களும் கணவன்மார்களும், மதகுருக்களும், இளைஞர் யுவதிகளும் இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அரசபடைகளினாலும் வெள்ளை வான்களினாலும் பாதுகாப்பு அரண் பகுதிகளிலும், கடலிலும், வீடுகளிற்கு நேரடியாக வந்தும் கைதுசெய்து கொண்டுபோனது மட்டுமல்லாது யுத்த இறுதி நாட்களில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களையும், சரணடைந்தவர்களையும் இது நாள் வரை காணாது அவர்கள் நிலைகளை அறியாது வீதிகளில் அலைத்தழிக்கப்பட்டோம். 29 இற்கு மேற்பட்ட, பெற்றோருடன் சரணடைந்த, கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களையும், இவர்களின் பெற்றோரையும் மற்றும் உறவுகளையும் தேடிப் போராடிவரும் நாங்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறோம். இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தமிழனாகப் பிறந்ததா? இந்தப் பிள்ளைகளில் அக்கறை காட்ட எவரும் இல்லையா? சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட Save the Children, Children Fund, UNICEF என்பவற்றிற்கும் இவை தெரியாதா? இதுவரை இந்தச் சிறுவர்கள் பற்றி எவராவது அக்கறை கொண்டார்களா? உலகிலே மனிதம் மரணித்து விட்டதா?

யுத்தம் முடிவடைந்த பின் கையிலே ஒப்படைக்கப்பட்டவர்கள் போரிலே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள்வரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லைஇ அனைவரும் போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கையளிக்கப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் எப்படி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள்? உயிர் வாழும் சாட்சியங்களாக நாம் இருக்கும் போது, சிறிலங்கா அரசானது தொடர்ச்சியாக பொய் உரைப்பதின் காரணம் என்ன? தொடர்ச்சியாக எமது உறவுகளை எம்மிடமிருந்து பிரித்து வைப்பதற்காகவா?

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் பாராட்டப்பட்ட OMP சாதித்தது என்ன? கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகள் எவற்றையுமே உள்வாங்காமல் தன்னிச்சையாக ஸ்தாபிக்கப்பட்ட OMP யிற்கு செயல்திறன் அறவே இல்லை. எமது எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு 17.10.2019 அன்று OMP ஆணையாளரிடம் வலுவான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ள ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைக் கையளித்திருந்தது. அதில் ஒன்றுக்காவது மூன்று மாதத்திற்குள் தீர்வைக் கண்டு தந்தால் நாம் OMP-ஐ ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.

21 மாதங்கள் கடந்தும் கூட அவர்களால் ஒப்புக்கொண்டபடி நிருபிக்க முடியவில்லை என்றால் OMP-ஐ செயல்திறன் அற்றது என நிராகரிப்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.? OMP சிங்கள அரசின் ஒரு கண்துடைப்பு ஆணைக்குழுவாகவே இயங்குகின்றது. ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட பெரும்பான்மையாக சிங்கள ஆணையாளர்களை கொண்ட OMP ஒருபோதும் எமது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் எமது பிரச்சனைக்கான தீர்வு உள்ளுர் பொறிமுறைகளில் இல்லை என்பதையும் தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது.

ஐ.நா ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) பாரப்படுத்துவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் வரவேற்பதுடன், இணைத்தலைமை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மொண்டினிகிக்றோ, வட மாசடோனிய ஆகிய நாடுகளிடம், நீங்கள் சமர்ப்பிக்கும் வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றதிற்கான (ICC) பரிந்துரையை உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பாக வேண்டி நிற்கின்றோம்.

கடந்த பெப்ரவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி முடிவுற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துவதை வலியுறுத்தியவர்களே. எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசமும் ஐ.நாவும் விரைந்து செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். எமது உறவுகளைத் தேடும் போராட்டம் கூட அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கின்றோம்.

கோவிட்-19ஐக் காரணம் காட்டி எம்மை ஒன்றுகூட விடாது தடுக்கின்றனர். மீறினால் தனிமைப்படுத்தல் என்று அச்சுறுத்துகின்றனர். நினைவுகூரல், தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குக் கலந்துகொள்ள தடைவிதித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று வழங்குகின்றனர். அதற்கு மேலாக காரணம் எதுவுமின்றி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு பணிக்கின்றர்கள். இதனாலே எமக்கு மன உளைச்சல் அதிகரிக்கின்றது.

இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்தப் போராட்டத்தைப் பயங்காட்டி நிறுத்த வேண்டும் என்ற நோக்கமே. தொடர்ச்சியாக இராணுவமயப்படும் தற்போதைய சிறிலங்கா ஆட்சி அதிகாரம், சிவில் நிர்வாகங்களை இனவழிப்பிலும், போர்குற்றங்களிலும் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கொண்டு நிரப்பி வருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுப்பத்துடன் ஜனநாயக வெளிகளை ஒடுக்கி வருகின்றது.

உதாரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் கடற்படை அட்மிரல் பொது ஊடகங்களில் தமிழர் விரோத இனவாதத்தை கக்குவதுடன், ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் தமிழர்களை மட்டும் நோக்கி நேரடியாகவே அச்சுறுத்தல் விடுகின்றார். ஆகவே இவரால் வழிநடத்தப்படும் சிறிலங்கா போலீசாரும், மற்றய அரச படைகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாக கரிசனை செலுத்த வேண்டும்.

எனவே நாம் சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கோருவதாவது, எமது உறவுகளுக்கான நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும். உறவுகளைத் தேடும் எமக்கு அரச புலனாய்வினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டு எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கம் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தியாக்கிய பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை(20.02.2021)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து, கடன் பட்டு நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களிடம் உரமானியத்தை காரணம் காட்டி குறிப்பிட்ட அளவு நெல் கொள்வனவு செய்வது விவசாயிகளை மீண்டும் எழ்மை நிலைக்கு தள்ளி விடும் செயற்பாடாகும்.

விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் உரமானியத்தை காரணம் காட்டி அவர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது தற்போது கைவிடப்பட வேண்டும். ஏனெனில் விவசாய பயிர்ச் செய்கையின் ஆரம்ப காலங்களில் பெய்த மழை காரணமாக அதிக அளவில் அழிவுகளும் இழப்புக்களும் விவசாய செய்கைக்கு ஏற்பட்டுள்ளது.

-எதிர்பார்த்த அளவில் விளைச்சலும் இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை கேட்பது போல் காய வைக்கும் அளவிற்கு தள வசதிகள் இல்லை. அதிகளவான விவசாயிகள் வீதி ஓரங்களிலே நெல்லை காய வைக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

அத்துடன் அதிகளவான நெல்லை பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்கள் இல்லை. மேலும் விவசாயிகள் நெல் வைக்கப்பட்ட இடத்திலிருந்து நெல் கொடுக்கப்படும் இடங்கள் வெகு தூரத்தில் உள்ளது.

இதனால் போக்குவரத்து செலவு இரட்டிப்பாகின்றது. இதே நேரம் தனியார் அறுவடை செய்யும் வயல் அருகில் வந்து பச்சையாக நெல் கொள்வனவு செய்வதால் விவசாயிகளின் சுமை ஓரளவிற்கேனும் குறைக்கப்படுவதாக பெருமளவிலான விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.