இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைச் சீண்டுகின்றது ரெலோ ஜனா

வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தற்போது என்ன நடக்கின்றது. நான்கு தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையம் தொடர்பாக போராட்டம் நடத்துகின்றன என்பதற்காக இலங்கை, இந்தியா, ஜப்பான் போன்ற மூன்று நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுகின்றது. இந்தியா இந்த நாட்டிற்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கின்றது. ஜே.வி.பி காலகட்டத்திலே 1971ம் அண்டு நடந்த கிளர்ச்சியின் போது இந்தியா தான் இந்த நாட்டைக் காப்பாற்றியது. 2009ல் கூட இங்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இந்தியா இந்த அரசிற்கு உதவியது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதத் தண்டவாளங்களை அமைத்துத் தந்தது.

அதே போல் ஜப்பான் என்பதும் இன்னுமொரு ஜனநாயக நாடு. இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் கூட ஜப்பானால் இந்த நாட்டிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்து. அவ்வாறான நாடுகளை ஏன் வெறுக்கின்றீர்கள். எதிர்வரும் 22ம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இந் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும், 23ம் திகதி அவர் இந்தாப் பாராளுமன்றத்திலே உரையாற்ற இருப்பதாகவும் செய்திகள் மூலம் நாங்கள் அறிகின்றோம். இதன்மூலம் என்ன நடக்கப் போகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து உரையாற்றும் போது இந்தியாவிற்கு எதிராகத் தான் உரையாற்றப் போகின்றார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கேள்வி. இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்

Posted in Uncategorized

ஜெனீவா விடயம் – வடக்கில் நுழையும் சீனக் கம்பனிகள் விடயம்: தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்நிலையில், குறித்த பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.

இந்தக் குழுவை இணைத்துச் செயற்படுத்துவதற்கான இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்.

அத்துடன், ஜெனீவா விடயம் தொடர்பாகவும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளோர், கூட்டாக பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் குறுகிய நாட்களுக்குள் உரையாடவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலை தீவு, நயினாதீவு, போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், வடக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும்.

எனவே, அவ்வாறான சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன” என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் விதமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு தற்போதே அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் கடந்த கால பொறுப்புக்கூறல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ள நிலையில், இம்முறை இலங்கைக்கு நெருக்கடியான நிலைமை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

ஜெனிவாவில் கொண்டுவரப்போகும் புதிய பிரேரணையை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இப்போது வரையில் சீனாவின் முழுமையான ஆதரவுடன் ரஷ்யா, கியூபா நாடுகளின் ஒத்துழைப்புகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் 30/1 பிரேரணையை கொண்டுவந்த வேளையில் அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை புதிய நகர்வுகளை கையளவே ஆராய்ந்து வருவதுடன், அதிகளவில் இலங்கையின் சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் புதிய பிரேரணை அடிப்படையற்ற ஒன்றாக முன்வைக்கப்படவுள்ளது.

எனவே இது குறித்து வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.

இந்நிலையில் ஜெனிவா பிரேரணையில் இலங்கையின் பக்கம் ஆதரவை தக்கவைத்துக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். தற்போது பல நாடுகளுடன் பேசியுள்ளதாகவும், 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுவார்த்தை நகர்வுகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸை கட்டுப்பாடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் மக்கள் நீதி கோரி வீதியில் இறங்க ராஜபக்சக்களே காரணம் – சந்திரிகா அம்மையார் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கை அரசின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கான நிலையை ஏற்படுத்தியமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, தமது கடந்த ஆட்சியில் ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்கள் இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்க வேண்டிய நிலை வந்திருக்கமாட்டாது.

இந்த ஆட்சியிலும் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச, தனது ஜனாதிபதி பதவியைத் துஷ்பிரயோகப்படுத்தி வருகின்றார்.

சிவில் நிர்வாகச் செயற்பாடுகளின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன் மட்டுமன்றி வடக்கு, கிழக்கில் தமிழர்களைப் பழிவாங்கும் வகையிலும் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான மோசமான செயற்பாடுகளே தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது” – என்றார்

Posted in Uncategorized

இலங்கையின் பிரச்சினைக்கு ஐ.நா நீதியை பெற்றுத்தரும் என நம்ப வேண்டாம் – ஐ.நா முன்னாள் அதிகாரி

இலங்கையின் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அமையம் நீதியை பெற்றுத்தரும் என்று நம்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சினையில் செயற்பட ஐக்கிய நாடுகள் அமையத்துக்கு தைரியம் இல்லை என்று முன்னாள் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னாள் தலைவருமான சார்லஸ் பெட்ரி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் உலகளாவிய தமிழ் மன்றம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான மையம் ஆகியன ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அமைப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறமுடியாது. எனினும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தைரியம் இல்லை, எனவே இலங்கை பொதுமக்கள் ஐக்கிய நாடுகள் சபையை சார்ந்து இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கை பொதுமக்கள் ஐக்கிய நாடுகளை சபையை நம்பியிருந்தால் அவர்கள் அதிருப்தி அடையக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து விரிவான மறு ஆய்வு செய்ய அப்போதைய ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவுக்கு பெட்ரி தலைமை தாங்கினார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பெட்ரி தலைமையிலான குழு கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது தாராலிங்கம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் N.K.S. திருச்செல்வம்

முல்லைத்தீவு – தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர காலத்தை ஒத்த சின்னம் என தொல்பொருட்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், அவை வேறு காலத்திற்கு உட்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசியர் அநுர மனதுங்க தெரிவித்திருந்தார்.

அநுராதபுரம் காலத்திற்குரிய பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த அகழ்வுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது தொல்பொருள் சின்னமாக கிடைக்கப்பெற்றிருப்பது 8 பட்டைகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் N.K.S. திருச்செல்வம் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர், இராமநாதபுரம் தொல்லியல் துறை தலைவர் ராஜகுரு என்பவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டதாக N.K.S. திருச்செல்வம் கூறினார்.

இதேவேளை, பொலன்னறுவை 13 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, வன்னி பிரதேச நிலப்பரப்பு பெருமளவிற்கு தமிழர்களின் ஆதிக்கத்திற்கு பின்னர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. இங்குள்ள பௌத்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருந்திருக்கும் என்பது வரலாற்று உண்மை. ஆயினும், பௌத்த ஆலயம் தமிழ் மக்களுக்கு உரியதா, சிங்கள மக்களுக்கு உரியதா என்பதனை ஆய்வுகளில் கிடைக்கின்ற நம்பகரமான கல்வெட்டு, நாணயங்களைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.

இதனிடையே தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த முடிவுகளை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரெலோ ஜனா கருணாகரம் , சாணக்கியன்,உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா),தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி, கல்முனை பொலிஸ் நிலையத்தினால், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

ஆனாலும் பேரணி இடம்பெற்றதுடன், நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர், அதனை மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று, கல்முனை பொலிஸாரினால் கடந்த 5ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வழக்கு இடம்பெற்றதுடன் நீதிமன்ற தடையுத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதில் ஆளும் கட்சிக்குள் முரண்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் ஆளுங்கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எனினும் வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது, ‘கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் தொழிநுட்ப குழுவின் தீர்மானமே இறுதியானது.’ என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே பிரதமரின் வாக்குறுதியை நிராகரித்து மாற்றுக் கருத்தை முன்வைத்தார்.

இதேவேளை ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவிலுள்ள பலரும் பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை என்பவற்றை மையமாகக் கொண்டு கொரோனா சடலங்கள் தொடர்பான சர்ச்சைக்கு சிறந்ததொரு தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் , ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதனை இலக்காகக் கொண்டதாகவே பிரதமரின் அறிவிப்பு அமைந்திருந்துள்ளது என்று கூறப்பட்ட போதிலும் , தற்போது இவ்விடயத்தில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே இருவேறு நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன.

எவ்வாறிருப்பினும் கலந்துரையாடல்கள் உள்ளிட்டவற்றினூடாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கு முன்னராகவே சடலங்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் அரசாங்கம் தீவிர முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

Share

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈ.பி.டி.பி அமைப்பின் யோகேஸ்வரி!

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியால் அதிசிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தை பிரதிபலிக்க வேண்டியதனை கவனத்தில் கொண்டு திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.