யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காததாலேயே, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நடந்தது -ரெலோ ஜனா

அரச மரம் எந்தளவிற்கு புத்த பெருமானுடன் தொடர்புபட்டதோ, எங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்த சிலை வைக்கின்றீர்களோ, அதேபோல் குருந்தைமரம் சிவபெருமானுக்கு உரிய மரம் என்பதே வரலாறு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் நேற்று (11) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த நாட்டில் ஏற்றுமதி நடக்கின்றதோ, இல்லையோ ஆனால், இறக்குமதியை நிறுத்தியிருப்பது முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் 1970 ஆம் ஆண்டு மூடிய பொருளாதாரக் கொள்கையாக நாங்கள் பார்த்தாலும், இந்த அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியையும் நிறுத்தியிருப்பது பொது மக்களின் மீது விலைச் சுமையைக் கூட்டுவதாகத் தான் நாங்கள் அறிகின்றோம்.

குறிப்பாகத் தமிழ் மக்கள் அதிகளவில் பாவிக்கும் மஞ்சள், உழுந்து போன்றவற்றின் விலைகள் மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் கூடுதலான விலையில் இங்கு விற்கப்படுவது மாத்திரமல்லாமல், பொருட்களின் கள்ளக் கடத்தலை ஊக்குவிப்பதாகவும் இங்கு அமைகின்றது.

மஞ்சள் என்பது மருத்துவப் பொருள் மாத்திரமன்றி, இந்த கொவிட் 19 கால கட்டத்திலே பலர் மஞ்சளை ஒரு தொற்று நீக்கியாகப் பாவிக்கும் இந்த நேரத்தில் அதன் விலை ரூபா 5,000 ஐத் தாண்டியிருப்பது மாத்திரமல்லாமல் கள்ளக் கடத்தல் மூலமாகப் பிடிபடும் மஞ்சள் கூட போதைப் பொருட்களைப் போன்று எரியூட்டுவதையும் நாங்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டி இருக்கின்றது. சுமார் 1,000 கிலோ பிடிபட்டால் 100 கிலோவை எரித்து விட்டு ஏனையவை எங்கு செல்கின்றதோ என்றும் சந்தேகம் எழும் அளவிற்கு இந்த நாடு இருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் உணவுப் பொருட்களில் சேர்க்கக் கூடிய உழுந்து ரூபா 1,000 ஐத் தாண்டி விற்கப்படும் போது அதனால் தயாரிக்கப்படும் பொருட்கள் விலையும் அதிகரித்து விற்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமரால் இந்த நாட்டு மக்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் மலசலகூடப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு மேற்கொள்ளப்பட்டும் 4 மணித்தியாலத்திலே அந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டது.

ஏழை மக்களுக்கு மலசலகூடம் அமைத்துக் கொடுத்தாலும் அதற்கான கொமட்டுகள் இல்லாத நிலைதான் இந்த நாட்டிலே நிலவுகின்றது.

1970 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்த மூடிய பொருளாதாரக் கொள்கையினால் அதனை அடுத்து 77 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வெறுமனே 10 ஆசனங்கள் பெறுமளவிலான நிலைமையே அந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதே நிலைமை அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலே தற்போதைய அரசாங்கத்திற்கும் ஏற்படுமா என்ற சந்தேகமே மக்கள் மத்தியில் இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, இன்று இந்த நாட்டிலே தொல்பொருள் ஆராய்ச்சி என்ற செயலணிகள் உருவாக்கப்பட்டு அதிலும் கிழக்கில் ஒன்று, வடக்கில் ஒன்று விதத்தில் உருவாக்கி அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குருந்தூர் மலையிலே என்ன நடைபெற்றது. அங்கு அகழ்வாராய்ச்சி நடாத்தும் போது தாராலிங்கம் என்ற சிவலிங்கக் கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியினர் கூறியிருக்கின்றார்கள்.

குருந்தை மரங்கள் நிறைந்த அந்த குருந்தூர் மலையிலே சிவனின் திருவுருவங்கள் தான் கிடைக்கும். ஏனெனில் அரச மரம் எந்தளவிற்கு புத்த பெருமானுடன் தொடர்பு பட்டதோ, எங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்த சிலை வைக்கின்றீர்களோ, அதேபோல் குருந்தைமரம் சிவபெருமானுக்கு உரிய மரம். குருந்தை மர நிழலில் இருந்து தான் சிவபெருமான் மாணிக்கவாசககரை ஆட்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன், குசலானன்மலை, வெடுக்குநாறி, பங்குடாவெளி, கன்னியா போன்று இந்துக்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ரீதியில் பறிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அகிம்சை வழி, ஆயுதவழிப் போராட்டங்கள் நடத்தினோம். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து 12 வருடங்களாக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எங்களது உரிமைகளைத் தருவார்கள், அதிகாரங்களைப் பரவலாக்குவார்கள், வடகிழக்கை இணைப்பார்கள், அங்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியை அமைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். நடக்கவில்லை, ஏமாற்றப்பட்டோம்.

தற்போது மீண்டும் ஒரு அகிம்சைப் போராட்டம் நடாத்தப்பட்டிருக்கின்றது. பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி வரை ஒரு பேரணி நடைபெற்றிக்கின்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பேரணி மக்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு ஜனநாயக நாட்டிலே ஒரு இனம் தங்களது ஜனநாயக உரிமையைக் கேட்டு ஜனநாயகப் பேரணியை நடாத்தும் போது ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய பண்போடு எமது மக்களைக் கவனிக்கின்றார்களா? ஒவ்வொரு பொலிஸ் பிரதேசங்களிலும் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் எதிராகத் தடையுத்தரவினைப் பெறுகின்றார்கள். போராட்டத்திலே பங்குபற்றிய அரசியற் பிரமுகர்கள், பாராளுமன்ற உரிப்பினர்களின் சிறப்புரிமைகளை நீங்கள் பறிக்கின்றீர்கள்.

குறிப்பாக எமது சக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதை ஏற்றுக் கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் முடிவுற்றதும் அந்தப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காததாலேயே, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நடந்தது. அது நீங்கள் எதிர்பாராதது.

இந்தியா இந்த நாட்டிற்கு பல உதவிகளை செய்தது. ஜேவிபியின் போராட்டத்தை கட்டுப்படுத்த, 2009 ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, நாட்டில் புகையிரத கட்டமைப்புக்களை இந்தியாவே உருவாக்கியது. யப்பானும் நாட்டிற்கு பல உதவிகளை செய்தது. இந்த பாராளுமன்ற கட்டடத்தையும் யப்பானே அன்பளிப்பு செய்தது.

பாகிஸ்தான் பிரதமர் இந்த பாராளுமன்றத்தில் பேசவுள்ளார். அவர் இந்தியாவிற்கு எதிராக பேசவுள்ளார். ஏன் இந்தியாவை நீங்கள் சீண்டுகிறீர்கள்? தூரத்து தண்ணீர் ஆபத்திற்கு உதவாது. இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை தீர்மானியுங்கள் என்றார்.

நாங்கள் ஒருமித்த நாட்டுக்குள்ளே சந்தோசமாக வாழ்வதற்கே விரும்புகின்றோம். எங்களை இந்த நாட்டின் பிரஜைகளாக மதித்து ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அதிகாரப் பரவலாக்களை செய்து இந்த நாட்டை வளம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாஸா அடக்கத்தை, நிராகரித்தது யார் ? (Exclusive News)

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் மகிந்த பாராளுமன்றத்தில் (10.02.2021) கூறியிருந்தார்.

அன்றைய தினம் (10.02.2021) பாராளுமன்ற அமர்வு முடிந்து, சபையில் இருந்து வெளியேறிய பிரதமர் மகிந்த, கூறிய விடயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

“ஜெனீவாவில் எங்களுக்கு 6 அல்லது 7 முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவை. ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக ஜனாதிபதியிடம் கேட்காமலேயே கூறிவிட்டேன். இதனால் மற்றுமொரு பிரச்சினை ஏற்படுமோ எனத் தெரியாது” என பிரதமர் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த இப்படிக் கூறும்போது, அருகில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் இருந்துள்ளார். ஆளுங்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தானும் உடனிருந்துள்ளார்.

எனினும் பிரதமர் மகிந்த கூறிய இந்தத் தகவலை, சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மூலமாகவே இத்தகவல் Jaffna Muslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

Covid தடுப்பு மற்றும் ஆரம்ப வைத்திய சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயை அப்பதவிக்கு ஜனாதிபதியே நியமித்திருந்தார்.

11.02.2021. அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் இருக்கத்தக்கதாக, “சுகாதார அமைச்சின் தீர்மானங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்படமாட்டாது. தொழில்நுட்பக்குழு ஊடாக அது எடுக்கப்படும். எனவே தொழில்நுட்பக் குழுவே அந்த யோசனையைக் கொண்டுவந்தன. அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நாம் எதனையும் செய்ய முடியும்” என அவர் குறிப்பிட்டு ஜனாஸா அடக்கலாமென பிரதமர் மகிந்த வெளியிட்ட அறிவிப்பை முற்றாக நிராகரித்திருந்தார்.

இதன்போது பிரதமர் மகிந்த பாராளுமன்றத்திற்கு உள்ளே இருந்தபோதும், எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கு கடுமையாக எதிர்ப்பு! முடிவுக்காக காத்திருக்கும் இந்தியா

கடந்த மாதம் இலங்கை கடற்படைக்கு இடையே மோதியதில் நான்கு இந்திய மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பாக இந்தியா இலங்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது இந்திய மீனவர்கள் யாரும் இலங்கையின் காவலில் இல்லை . இந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, நான்கு மீனவர்கள் தங்கள் கப்பலுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து உயிர் இழந்தனர்.

“இந்த விஷயத்தில் இலங்கையர்களுக்கு நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். விசாரணையின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால், நான் உறுதியளிக்க விரும்புகிறேன்… இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் வலுவான பார்வையை எடுப்போம்,

இந்த சம்பவம் தொடர்பாக வலுவான கருத்தை இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு தெரிவித்தார். புதுடில்லியில் உள்ள இலங்கை செயல் உயர் ஸ்தானிகருக்கும் வலுவான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது இலங்கையின் காவலில் இந்திய மீனவர்கள் யாரும் இல்லை” சமீபத்தில் வரை ஒன்பது பேர் இருந்தனர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். “இப்போதைக்கு, 62 இந்திய படகுகள் உள்ளன, அவை இலங்கை காவலில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறோம்.

முன்னதாக, 173 படகுகள் இருந்தன, அவற்றில் 36 படகுகள் மீட்கக்கூடியவை. “எனவே, மீட்க முடியாத படகுகளுக்கான ஏல நடைமுறைகள் தற்போது விவாதத்தில் உள்ளன. எங்கள் முயற்சி என்னவென்றால், எதைத் திருப்பித் தர முடியுமோ, நாங்கள் அவர்களைத் திரும்பப் பெறுவோம், எதை மீட்க முடியுமோ, நாங்கள் மீட்பை விரைவுபடுத்துவோம், ”என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கிறது . இந்திய மீனவர்கள் அச்சம் அடைந்ததாக தகவல்கள் வந்தவுடன், அரசாங்கம், இராஜதந்திர சேனல்கள் மூலம், இலங்கை அரசாங்கத்துடன் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்கிறது, என்றார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதியில் மேலும் சில பெட்டிகள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் ஈடுபடும் தொடருந்தில் புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை கொழும்பிலிருந்து புறப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த சேவை தினமும் இடம்பெறும் என யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்.

கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை புறக்கோட்டையில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் தொடருந்து யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும்.

இந்த சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் இன்று முதல் இந்த சேவையில் இரண்டாம் வகுப்பில் 2 பெட்டிகளும், மூன்றாம் வகுப்பில் ஒரு பெட்டியுமாக 3 மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டு 7 பெட்டிகளில் பயணிகள் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்புக்கு ஆயிரத்து 700 ரூபாயும் இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாயும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாயும் கட்டணமாக அறவிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கோரிக்கை?

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத மற்றும் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையின் துரும்புச் சீட்டு ‘ஆப்பாக’ மாறுகிறதா? சி.அ.யோதிலிங்கம்

“தமிழ் மக்களின் இருப்பே கிழக்கு முனையத்தில் தான் தங்கியுள்ள நிலையில் அதுபற்றி கவலைகொள்ளாது தமிழ்த் தரப்புக்கள் இருக்கின்றமை துரதிஷ்டவசமானது”

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய நெருக்கடி இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கோட்டாபய அரசிற்கும் பெருந்தேசியவாதத்திற்கும் இடையிலான போர் தற்போது பெருந்தேசியவாதத்திற்கும் இந்திய தேசிய அக்கறைக்குமிடையிலான போராக பரிணாமமடைந்துள்ளது.

இரண்டு தரப்புமே சிறிய விட்டுக்கொடுப்புக்கும் தயாராகவில்லை. இந்தியா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முறையாக அமுல்படுத்தும்படி கோரியுள்ளது.

முன்னர் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தபோதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அது துறைமுக அதிகாரசபையின் முழுப்பொறுப்பில் இருக்கும் எந்த வெளிநாட்டிற்கும் வழங்கப்படமாட்டாது எனக் கூறியிருக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கம் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் பங்கு விகிதாசாரம் பற்றி எதுவும் கூறவில்லை. பங்கு விகிதாசாரம் துறைமுக அதிகார சபைக்கு 51 சதவீதம் என்றும், இந்தியாவுக்கு 49 சதவீதம் என்றும் தெளிவாக வரையறுத்தது கோட்டாபய அரசாங்கம்தான்.

உண்மையில் கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனையத்தை துரும்புச் சீட்டாக முன்வைத்து ஜெனிவாவில் பாதுகாப்பு அரணைத்தேட முற்பட்டது. அதற்கு அரசே வளர்த்தெடுத்த பெருந்தேசிய வாதம் தற்போது ஆப்பு வைக்கிறது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்” என்ற நிலைமையே கோட்டாபய அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது கிழக்கு முனையத்திற்கு மாற்றாக மேற்கு முனையத்தில் 85 சதவீதத்தினை இந்தியாவுக்கு தரலாம் எனக் கூறியபோதும் பெருந்தேசிய வாதம் அதையும் ஏற்கவில்லை. இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டவில்லை. தம்முடன் இலங்கை அரசு எதனையுமே பேசவில்லை என்றுதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தில் கோட்டாபய அரசு, இந்தியா, அமெரிக்கா தலமையிலான மேற்குலகம், சீனா, பெருந்தேசிய வாதம் என்பன தத்தம் நலன்களிலிருந்தே நகர முற்படுகின்றன. அனைத்து தரப்பினரின் நலன்களுக்கான பொதுப்புள்ளி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒவ்வொரு தரப்பும் தத்தமது நலன்களில் விடாப்பிடியாக இருப்பதால் பொதுப்புள்ளியை கண்டுபிடிப்பதும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஏனெனில் இந்த நலன்கள் என்பவை அந்தந்த தரப்புக்களின் இருதரப்புகளுடன் தொடர்பு பட்டதாக இருக்கின்றன. இதனால் அனைத்து தரப்பிற்குமே “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலைதான் உள்ளது.

கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனைய விடயத்தில் தனது வழமையான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றப் பார்க்கிறது. அதாவது, நிலைமைகளை அப்போதைக்கு சரிசெய்யும் நிலையற்ற கொள்கையையே பின்பற்றப் பார்க்கின்றது.

ராஜபக்ஷக்களுக்கு இந்தியாவுடன் காணப்படும் உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அழுத்தம் உச்சமாக இருக்கும்போது, பணிந்துபோவது; பின்னர் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது; சந்தர்ப்பம் கிடைத்தால் எதையாவது சாட்டாக வைத்து அதனை இரத்துச் செய்வது; இதுவே பொதுப்படையான மரபாக உள்ளது.

இதற்கான அனுபவத்தை தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களிலிருந்தே இந்திய அரசு கற்றுக் கொண்டிருக்கலாம்.

தமிழ் மக்களின் விவகாரத்தைப் பொறுத்தவரை அழுத்தங்கள் உச்சமாக வரும்போது தமிழர் நலன்களை எழுத்தில் வழங்குவது, பின்னர் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது, எழுத்தில் வழங்கியவற்றை மீறுவது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரத்துச் செய்வது அல்லது கிழித்தெறிவது என்கின்ற அணுகுமுறையையே காலம் காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு தொடக்கம் தமிழ் மொழி அரசகரும மொழியாக பயன்படுத்தல் வடக்கு – கிழக்கு பிரிப்பு வரை அவ்விதமாகவே இலங்கையின் ஆட்சியாளர்கள் நடந்துகொண்டிருக்கின்றாகள்.

சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ, சமூகத்திற்கோ வழங்காத சலுகைகளை இன்னோர் இனத்திற்கோ சமூகத்திற்கோ வழங்கக்கூடாது எனக் கூறியிருந்தது.

இதன் சாராம்சம் ஒரு இனத்தையோ, மதத்தையோ, சமூகத்தையோ பாதிக்கக்கூடிய சட்ட நிர்வாக, நீதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பது தான். ஆனால், சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த வருடமே (1948இல்) அது மீறப்பட்டது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் பிரஜாவுரிமைச்சட்டம் அவ்வாண்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்திய, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் (1949) தேர்தல்கள் திருத்தச் சட்டம் (1949), தனிச்சிங்களச் சட்டம் (1956), சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் (1967) என்பன நிறைவேற்றப்பட்டு சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவே கேலிக்குள்ளாக்கப்பட்டது.

இறுதியில் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு 29ஆவது பிரிவையே இல்லாமல் செய்தது. அதேபோன்றுதான் தமிழ் மொழி அரச கரும மொழி என்ற விடயத்திலும் சரி வடக்கு – கிழக்கு இணைப்பும் பின்னர் அதனை நீதிமன்றத்தின் ஊடாக பிரிப்பது வரையில் நடைபெற்ற விடயங்கள் எம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

பெருந்தேசியவாதமானது மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றிலேயே கட்டியெழுப்பப்பட்டது. தற்போது தமிழின எதிர்ப்பு சிங்களவரல்லாத ஏனைய இனங்களுக்கு எதிரான எதிர்ப்பு என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கள சமூக உருவாக்கம் பெருந்தேசியவாத கருத்துநிலைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதால் இலங்கை அரச உருவாக்கத்திலும் பெருந்தேசியவாதமே அடிப்படையாக உள்ளது.

அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாகவே அரசாங்கம் இருப்பதனால் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் பெருந்தேசியவாதமே அதன் அடித்தள ஆதாரமாக இருக்கும்.

இந்த விடயத்தில் பிரதான அரசியல் தரப்புக்களாக காண்பிக்கும் நீல அணிக்கும், பச்சை அணிக்கும் அளவு வேறுபாடுகள் மட்டும் இருக்கலாம். பச்சை அணி லிபரல் தளத்தினதும், பெருந்தேசியவாதத் தளத்தினதும் கூட்டாக இருப்பதால் ‘பச்சைப்’ பெருந்தேசியவாதத்தினை அதனால் பின்பற்ற முடியாது. அது வடிகட்டிய பெருந்தேசியவாதத்தையே பின்பற்றும். சுருக்கமாககூறினால் அதனை லிபரல் முலாம் பூசப்பட்ட பெருந்தேசியவாதம் எனலாம்.

ஆனால், நீல அணியின் நிலைமை அவ்வாறானது அல்ல. அதுபெருந்தேசியவாதத்தளத்தை மட்டுமே கொண்டிருப்பதால் அது ‘பச்சையாகவே’ பெருந்தேசிய வாதத்தைக் கக்கும். இரட்டை வேடம் என்பது அங்கு இல்லை. இந்த நீல அணி தற்போது ‘கடுஞ் சிவப்பு’ அணியாக உருவெடுத்திருகின்றமை மட்டுமே மாற்றம். மற்றையபடி நிலைப்பாடும் செயற்பாடும் ஒன்றாகத்தான் உள்ளது.

இவ்வாறான நிலையில், அரசாங்க நிறுவனங்கள் அரசின் அங்கங்களாகும். இதனால் அவை அனைத்தும் பெருந்தேசிய வாதத்தின் நலன்களையே பிரதிபலிக்கும். நீதித்துறைகூட அதற்கு விதிவிலக்காக இருக்காது. பெருந்தேசியவாத நலன்களுக்காக நீதிமன்றத் தீர்ப்புக்கள் மீறப்பட்டால் நீதித்துறை மௌனமாகவே இருக்கும்.

தொல்பொருள் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் அனைத்துமே பெருந்தேசிவாத நிறுவனங்கள் தான். அவற்றிடம் இருந்து ஒதுக்கப்பட்ட தரப்புக்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே விவகாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் ஒடுக்கப்படும் தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தொடர்பாக பின்பற்றிய மேற்கூறிய அணுகு முறைகளையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நலன்களுக்காக முழு இலங்கைத்தீவுமே தேவை. அதனால் இலங்கைக்கு ஓர் எல்லை வரை விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு அது தயாராகவே இருக்கும். இந்தியாவின் இந்த விட்டுக்கொடுக்கும் பலவீனத்தை இலங்கை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. இந்தப் பலவீனத்தை நன்கு தெரிந்த படியால் இந்தியாவின் பொறுமை எல்லைவரை இலங்கை செல்கிறது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுகிறது.

எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டவுடன் இலங்கை சாஸ்டாங்கமாக இந்தியாவின் காலில் விழுந்துவிடும். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கான உத்தரவாதங்களை எழுத்தில் வழங்கும். எனினும், பின்னாளில் நிலைமகள் சுமூகமடைந்தவுடன் இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும். இலங்கை, இந்திய ஒப்பந்தம் தொடக்கம் சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமான நிலையம் வரை இந்த நிலைமையே நீடிக்கின்றது.

இந்தியா, இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் வகையில் செயற்பட்டு 1987ஆம் ஆண்டு 25 தொன் உணவுப் பொதியினை யாழ்ப்பாணத்தில் போட்டது. உடனே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியின் காலில் விழுந்தார். அதன் விளைவாகத்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த சர்வதேச ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் இலங்கை பெரிதாக அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் கண்ணுக்கு முன்னாலேயே தேசிய கொள்கை வகுப்பு என்ற பெயரிலும், பாராளுமன்ற சட்டவாக்க உரிமை என்ற பெயரிலும், மாகாணசபையின் அதிகாரங்களை பறித்த போதும், வடக்கு-கிழக்கு இணைப்பை இரத்துச் செய்தபோதும் இந்தியா வேடிக்கையே பார்த்தது. முறையான அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை.

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு சமிக்ஞை கொடுத்த இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இறுதியில் தமிழ்த்தரப்பு எதிர்க்கின்றது எனக்கூறி அதனை இரத்துச் செய்தது.

பலாலி விமான நிலையத்தை இந்தியா புனரமைப்புச் செய்ததே தனது தேசிய பாதுகாப்பிற்காகத்தான். தற்போது கொரோனாவை பயன்படுத்தி பாலாலி விமான நிலையத் தளபாடங்கள் மத்தள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று சீனாவின் உள்நுழைவு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது. இவை ஒப்பந்த பின் இணைப்பில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த விடயத்தில்கூட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இந்தியா கேள்விகளைக் தொடுப்பதற்கு தயாரில்லாமல் இருக்கின்றது.

பெருந்தேசியவாதம் இந்திய எதிர்ப்பில் கட்டப்பட்டுள்ளதே தவிர, சீன எதிர்ப்பில் கட்டப்படவில்லை. மாறாக அது சீனச் சார்புநிலையில் கட்டப்பட்டது எனக் கூறலாம்.

இந்தியா-சீனப் போரின்போதுகூட அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க இந்திய சார்புநிலை எடுக்கவில்லை. நடுநிலையே வகித்தார். இரண்டு நாடுகளுக்கிடையே இணக்கத்தைக் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநாட்டையும் நடத்தினர்.

ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய சார்பு நிலையை எடுத்தது. இந்தியாவைப் பாதுகாக்க போராளிகளை அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தது. கிழக்கு முனையம் தொடர்பாக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் பெருந்தேசியவாதம் சீனாவின் துறைமுக நகர் தொடர்பாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இந்தியாவிற்கும் அதிகளவான கரிசனை உள்ளது. அதேபோன்று இலங்கைக்கும் அந்த முனையத்தில் அதிகளவு கரிசனையும் தேவையும் உள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் பறிபோன நிலையிலும், கொழும்பு துறைமுக நகரும், தெற்கு முனையமும் சீனாவின் வசமாகியுள்ளநிலையிலும், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திலாவது தனது இருப்பைப் பேண வேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்கு உண்டு.

ஏனென்றால் கொழும்புத்துறைமுகத்தில் இடம்பிடிப்பது என்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாக உள்ளது. ஆகவே, இதில் எந்தவித விட்டுக் கொடுப்பையும் செய்ய இந்தியாவால் முடியாது. ஆரம்பத்தில் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்த ஜப்பானும் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருந்தது.

ஆனாலும், இலகுரயில் திட்டத்தினை முன்னெடுக்கும் விடயத்தில் ஆட்சியாளர்கள் குறித்து ஜப்பான் பெற்றுள்ள அனுபவம் தற்போது வெறுமனே ‘கவலை’ என்ற வார்த்தைக்குள் அதனைக் கட்டிப் போட்டுவிட்டது.

தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஜெனிவாவில் தம்மை பிணையெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது. அதற்கான மூக்கணாம் கயிறு இந்தியாவிடம் தான் உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா.கட்டமைப்பில் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றினாலும் சர்வதேச நாடுகளில் உள்ள, உள்ளக நீதிமன்றங்களில் விசாரணை, பயணத்தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் சிபார்சு செய்துள்ளார்.

இந்த நெருக்கடிகளிலிருந்து இலங்கையால் தப்ப முடியாது. ஆகவே, இந்த விடயத்தில் இந்தியாவின் காலில் விழுவதைத் தவிர வேறு தெரிவு இலங்கைக்கு இல்லை.

இதற்காக இந்திய – இலங்கை நலன்கள் சந்திக்கும் பொதுப்புள்ளியாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தற்போது காணப்படுகின்றது. அதற்காகவே இலங்கை மேற்கு முனையத்தினை சிபார்சு செய்துள்ளது. இந்த மேற்குமுனைய பொதுப்புள்ளியை இந்தியா ஏற்குமா? என்று தற்போதைக்கு கூற முடியாது. இதனை ஏற்பதில் இந்தியாவிற்கு இரண்டு பிரச்சினைகள் உண்டு.

முதலாவது இந்தியாவுக்கு இதுவொரு சுய மரியாதைப் பிரச்சினை. ஏனென்றால் பெருந்தேசிய வாதத்திற்கும், சீனாவின் வியூகங்களுக்கும் ஒரு பிராந்திய வல்லரசு பணிந்துப்போனது என்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஆபத்துள்ளது. இவ்விதமான நிலைமைகள் இந்திய விம்பத்திற்கு எதிரானது.

இரண்டாவது, மேற்கு முனையம் கிழக்கு முனையத்தைப் போல முக்கியமானதல்ல. இந்தியாவின் நூற்றுக்கணக்கான கொள்கலன்கள்; கிழக்குமுனையத்திற்கே வருகின்றன. ஆகவே அவ்விதமான ஒரு கட்டமைப்பை விட்டுக்கொடுப்பதை இந்தியா விரும்பாது.

அதேநேரம் இந்த முனையத்தினை பெற்றுக்கொள்வதன் மூலமே துறைமுக நகரத்தினையும், தெற்கு முனையத்தினையும் மிகவும் துல்லியமாக அவதானிக்க முடியும். ஏனென்றால் இந்த இரண்டு கட்டமைப்புக்களும் சீனா வசம் உள்ளன. ஆகவே, இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தால் கிழக்கு முனையமே சாலப் பொருத்தமானது.

ஆகவே, கற்பனைத் திட்டமாக உள்ள மேற்கு முனையத்தில் 85 பங்குகளுக்காக கிழக்கு முனையத்தினை இந்தியா இலகுவாக விட்டுக்கொடுத்துவிடும் என்று கருத முடியாது. நிச்சயமாக தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இந்தியாவை ஏதோ ஒரு வகையில் இலங்கை திருப்திப்படுத்திவிட்டால் ஜெனிவாவில் தமிழ் மக்களின் நிலை அந்தோகதிதான். அனைத்து முயற்சிகளையும் இந்தியா கவிழ்த்து இலங்கையை பிணையெடுத்துவிடும். ஆகவே, இந்தியாவை தமிழர்களின் பக்கம் வைத்திருப்பதற்கு தற்போதைக்கு தமிழத் தரப்பிற்கு உதவப்போவது பெருந்தேசியவாதமும், சீனாவும் தான்.

மேலும், இந்தியா கிழக்கு முனைய விடயத்தில் இரண்டு வடிவங்களில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க முனைகின்றது. ஒன்று ஜெனிவா மூலமான அழுத்தம். அது ஏற்கனவே ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மூலம் இலங்கைக்கு வழங்கியாயிற்று.

இரண்டாவது தமிழ்த்தரப்பினூடாக அழுத்தம். இதற்காக தமிழ்த் தரப்பிலிருந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்த்தரப்பின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்திற்கு இந்திய ஆசீர்வாதம் வலுவாக உண்டு.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும் தமிழர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்குபற்றியமையும் மலையக மக்களையும் அதில் உள்ளீர்த்து அவர்கள் பிரச்சினைகளைப்பற்றி கோசங்கள் எழுப்பப் படுவதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இரட்டை நன்மையே.

மேலும் சீனா கிழக்கு முனைய விவகாரத்தில் தெளிவாகவே நகர்கின்கிறது. துறைமுகம் எல்லைக்குள் இந்தியா கால் பதிக்கக்கூடாது என்பதில் அது மிகக் கவனமாக உள்ளது. சீனாவின் ஒரேபட்டி ஒரேபாதை திட்டத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போலவே கொழும்புத்துறைமுகமும் மிகவும் முக்கியமானது.

அதனால் துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், தெற்கு முனையம் ஆகியவற்றை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது திரைமறைவில் செயற்பட்டு கிழக்கு முனையத்தினை இந்தியாவிடம் செல்லாது பார்த்துக்கொண்டு தனது காலை வலுவாக ஊன்றியுள்ளது.

அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் பின்னாலேயே நிற்கின்றது. தெற்காசிய விவகாரத்தில் தனித்துச் செயற்பட மேற்குலகம் விரும்பவில்லை.

இந்தியாவிற்கு பின்னாலேயே ஓடுவதற்கே விரும்புகின்றது. இந்தியா இல்லாவிட்டால் மேற்குலக நலன்களை தெற்காசியாவில் பேணுவதே கடினமாக இருக்கும் நிலைமைதான் உள்ளது.

எவ்வாறாயினும், கிழக்கு முனைய விவகாரத்தில் துரதிஸ்டம் பிடித்த தரப்பாக இருப்பது தமிழ்த் தரப்புத்தான். தமிழ்த்தரப்பின் இருப்பே கிழக்கு முனையத்தில்தான் தங்கியிருக்கிறது என்கின்றபோதும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரியளவிற்கு பேசுபொருளாக வரவில்லை.

இந்தவிடயத்தில் மூலோபாய தந்திரோபாய நகர்வுகள் தமிழ்த்தரப்பிற்கும் தேவை. தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் குடுமிச் சண்டைபிடிப்பதை நிறுத்தி இந்த விவகாரத்திலும் கவனத்தைக் குவிப்பது அவசியம். இந்த விவகாரத்தில் தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி இலங்கையின் துரும்புச் சீட்டு வெற்றிபெறுமா? தோல்வியடையுமா? என்பதாகும்.

Posted in Uncategorized

விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சியினர் கலந்துரையாடல்

அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கைக்குள் நீதி கிடைக்கா விட்டால் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்ல தயார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் நகலை தாம் கோரியுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை என்றும், உயிர்த்த ஞாயறு தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டம் இலங்கையில் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச தீர்ப்பாயத்திற்கு செல்ல அவர் தயாராக இருப்பதாகவும் பேராயர் மல்கம் கர்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (11) பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறினார்.

“நாம் சில விஷயங்களில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே இதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. விரைவில் ஒரு நகலை எங்களுக்கு அனுப்புங்கள். பின்னர் அந்த பிரச்சினைக்கு நாம் தீர்வுகளைக் காணலாம். நான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தேன். தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மட்டுமல்லாமல், இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அந்த நேரத்தில் நானும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை வைத்தேன். எனவே அந்த கோரிக்கைக்கு ஆணைக்குழு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்புகிறேன். ”

கேள்வி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இலங்கையில் சட்டப்பூர்வமாக நீதி செய்யப்படாவிட்டால், நீங்கள் ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்று நீதி தேட விரும்புகிறீர்களா?

“தயார். எங்கள் தலைவர்கள் அதை நடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த வழக்கு மற்றும் அறிக்கைகளிலிருந்து அவர்கள் நல்ல பதிலை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். அறிக்கைக்குப் பிறகு அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நாம் காண வேண்டும். இல்லையென்றால், எங்களிடம் சர்வதேச அமைப்புகள் உள்ளன, வெளிநாடுகளில் அந்த அமைப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

‘பிரதமரின் அறிவிப்பில் 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் துள்ளுகின்றனர்’

ஜனாஸா நல்லடத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பிரதமரின் ஒரேயொரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, அதற்குக் கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்றும் 20க்குக் கை உயர்த்திய இந்தச் சமூகத் துரோகிகள், இவ்வளவு காலமும் “மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு” போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.

தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷர்களை மிக மோசமாக விமர்சித்து மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளைச் சூறையாடி வெற்றி பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே இவர்கள் பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று (2021.01.10 ) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே என சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார்.

இத்தீர்மானத்திற்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மங்கள சமரவீர அவர்கள் ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், அத்தீர்மானத்திற்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இத்தீர்மானத்திற்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால் இந்த தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.