ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானமும் முன்னோக்கிய பாதையும் -பிரித்தானிய தமிழர் பேரவை

முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி  அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.என பிரித்தானிய தமிழர்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானமும் முன்னோக்கிய பாதையும்என்ற தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

ஒவ்வொரு வகை குற்றங்கள் தொடர்பான தரவுகள் திரட்டல் மற்றும் நிரல்படுத்தப்பட்ட அறிக்கைகள் தாயகத்திலுள்ள அரசியல், சமூக மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகள் தொகுத்து வழங்குவது போதுமான அடிப்படையில் தொடர்ச்சியாக பொது வெளிக்கு வருவது இல்லை. குறிப்பாக உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான ஆதாரபூர்வமான தகவல் அறிக்கை மற்றும் நில ஆக்கிரமிப்பு போன்றன பதிவிடப்பட வேண்டியது தமிழ் மக்களின் நீதிக்காக உலகளாவியரீதியில் குரல் கொடுப்போருக்கு கை கொடுக்கும்.

சர்வதேச சட்டங்களுக்கெதிரான பாரதூரமான குற்றங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதனை ஆதாரபூர்வமான பதிவுகள் தொடர்ச்சியாக பொது வெளிக்கு கொண்டு வரப்படாவிடின் தமிழ் மக்களின் மீதான தொடரும் இனஅழிப்பு சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் பின் தள்ளி விடப்படும்..

இலங்கையின் தற்போதைய இக்கட்டான நிலைக்கான உண்மையான காரணத்தை அறியாமல், அது பாரதூரமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும்போது, அதற்கு எதிராக கடுமையான தீர்மானத்தை சுமத்துவது நியாயமற்றது என்ற இலங்கையின் பாசாங்குக்கு பெரும்பாலான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் (Developing countries) அனுதாபம் தெரிவித்தன.

ஏழு தசாப்தகால சிங்கள பௌத்த மேலாதிக்கம்,  தண்டனையிலிருந்து விடுபடுதல் (Impunity), தொடரும் வன்முறைச் சுழற்சிகள் (Cycles of Violence), மோதல்களை தூண்டி விடும் இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரல், இறுக்கமாக அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் போன்றன உள்ளிட்ட மூல காரணங்களே (root causes) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருப்பதை இந்த நாடுகள் புரிந்து கொள்ள தமிழர் தரப்பு காத்திரமான முறையில் செயல்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான சான்றுகள் இருந்தும் கூட அரசியல் விருப்பு (Political will) மற்றும் புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான வழிவகைகளை ஐநா உறுப்பு நாடுகள் முன்னெடுக்க தவறி வருகின்றன. ஐ.நா, உறுப்பு நாடுகள் (அ) இந்த குற்றங்களை ஏனைய ஐ.நா பொறிமுறைகளுக்கு அறிக்கையிடுதல் (ஆ)  பொதுச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான பரிந்துரையினை மேற்கொள்ளல் என்பனவற்றினை தாமதமின்றி நிறைவேற்றியிருக்க வேண்டும்.

பெரும்பாலும் நாடுகள் தம் தலைநகரத்தில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளின் அடிப்படையிலேயே மனித உரிமைக் கழக தீர்மானங்களில் வாக்குகள் பதியப்படுகின்றன. ஐ.நா.வின் பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை கழகத்தில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு தமிழர் தரப்பிற்கு திரட்டப்பட வேண்டும் என்ற மூலோபாயத் தெரிவொன்றினை கடந்த பத்தாண்டுகளாக தாயகப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் நாம் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். ஆயினும் இதனை புரிந்து கொண்டு வினைத்திறனுடன் செயல்படுவோர் ஒரு சிலர் மட்டுமே.

இந்த வகையில்   2022 செப்டம்பர் மாத கால மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னரும் கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையிலும், பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நாட்டு பிரதிநிதிகளையும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களையும் நேரடியாக சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த கோரி அதற்கான அடிப்படைகளை விளக்கியிருந்தனர்.

செப்டம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட புதிய தீர்மானத்தில் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவதாக 2021 மார்ச் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்கள் திரட்டடப்பட்டு அவை தொடர்பான குற்ற வழக்கு கோப்புகள் தயாரிக்கும் பொறிமுறை 2022 செப்டம்பரில் நீட்டிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக $6.09 மில்லியன் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதற்காக இரு வருட காலத்திற்கு இப் பொறிமுறை உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளது.

இரண்டாவது முக்கிய விடயமாக, செயற்பாட்டு பத்தியில் (Operative Paragraph) கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அதிகாரப் பகிர்வு குறித்த சர்வதேச தீர்மானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதால் எமக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைப்பதற்கான வழி முறைகளை சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் (arbitration) பலப்படுத்தி வெற்றி ஈட்டும் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழ் அமைப்புக்களிடமும் தமிழ் அரசியல் கடசிகளிடமும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கின்றது.

இன்னொரு முக்கிய விடயமாக, இந்தியா  இவ் வாக்கெடுப்பு தொடர்பில்  நடுநிலைமையான  முடிவை எடுத்திருப்பினும், தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்க்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தமை தமிழர்களை பொறுத்த வரையில் ஒரு முக்கிய விடயமாக அமைந்திருந்தது. இது தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவினையும் கோரி இந்திய அரசுக்கு மேலதிக அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

46/1 & 51/1 தீர்மானங்கள்

தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை பற்றி ஆர்வமாகக் கதைக்கும் பலர், 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களில் உள்ள சாட்சியங்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் எதிர்கால நீதி விசாரணைப் பொறிமுறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்குமான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (Sri Lanka Accountability Project) என்கின்ற பொறிமுறை பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை.

கடந்த மார்ச் 2021 ஐ.நா. மனித உரிமை கழக கூட்டத் தொடரில் இப் பொறிமுறையின் அத்தியாவசியத் தேவையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதன் சகோதர அமைப்புகளும் உறுப்பு நாடுகளுக்கு முன்மொழிந்து அதனை தீர்மானத்தில் கொண்டு வர எடுத்த பாரிய முன்னெடுப்பின் பயனாக சிறிலங்காவின் ஆதரவு நாடுகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து இப் பொறிமுறை 46/1 தீர்மானத்தில் முக்கிய செயல்பாட்டு விடயமாக கொண்டு வரப்பட்டது.

சிறிலங்கா சார்பு நாடுகள் ஐ.நா. நிதி ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தி இதற்கான நிதியை வழங்க விடாமல் இழுத்தடித்து கடந்த ஏப்ரல் மாதமளவிலேயே இப் பொறிமுறை செயல்படத் தொடங்கியது.

மார்ச் 2021 தீர்மானம் 46/1 இன் பிரதான உள்ளடக்கம்

ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல், எதிர்காலத்திற்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக (victims and survivors) வாதிடுவது, திறமையுள்ள அதிகார வரம்பு கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, உலகளாவிய நீதி விசாரணைகளை ஆதரித்து செயல்படுவது.

செப்டம்பர் 2022 தீர்மானம் 51/1 இக் குறிப்பிட்ட பொறிமுறிக்காக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் (extend and reinforce the capacity) என்ற முடிவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 2021, மார்ச் 2022 மற்றும் ஜூன் 2022 மனித உரிமைக் கழக கூட்டத் தொடர்களின் போதும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடனான எமது நேரடிப் பேச்சுவார்த்தைகளின் போதும் மேற்படி 46/1 தீர்மானத்தின் சரியான விளக்கம் குறித்து வலியுறுத்தி வாதாடினோம். இத் தீர்மானம் (i) முன்னைய தீர்மானங்கள் போல LLRC கமிஷன் விசாரணைக்கான 2002 – 2009 காலப் பகுதிக்குள் (Time limit) முடக்கப்படவில்லை. மாறாக இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இலிருந்தான தமிழ் மக்களுக்கெதிரான குற்றங்களை சாட்சியப்படுத்த வேண்டும், (ii) சர்வதேச சட்டங்களால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான அனைத்து விதமான குற்றங்கள், குறிப்பாக இன அழிப்பு குற்றங்கள் என்பன சாட்சிய திரட்டில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற எம் தரப்பு சட்ட வியாக்கியானம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே நீண்ட கடும் பிரயத்தங்களின் பின் 46/1 தீர்மானத்தில் எம்மால் கொண்டு வரப்பட்ட சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உலகளாவிப் பரந்து வாழும் எம் தமிழ் மக்கள் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையை பயன்படுத்தி எம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஆதாரபூர்வமான முக்கியமான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டி வழங்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.  பல்வேறு கொடுமைகளை அனுபவித்த எம் இனத்தின் ஆயிரக்கணக்கான உண்மைப் பதிவுகள் இருக்கையிலே, பொய்யான விடயங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

தமக்கு நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு சாட்சியங்களை திரட்ட யூத மக்கள் எவ்வாறு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை ஏற்படுத்தினார்களோ அது போன்ற நிறுவனம் ஒன்றினை தமிழர் தரப்பு ஒருங்கினைத்து வினைத்திறனாக செயல்பட முன்வர வேண்டும்.

முன்னோக்கி செல்லும் வழித் தடம் 

எதிர் வரும் ஐ.நா. கூட்டத் தொடர்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கழக ஆணையாளரின் வாய்மூல மற்றும் எழுத்து மூல அறிக்கைகைகளிலே (Oral and Written reports)  இப் பொறிமுறையின் உள்ளீடு மிகக் காத்திரமானதாக அமைவதனை செயல் திறமையுள்ள தமிழ் அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக இவ் வேலைத் திட்டங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். பாரதூரமான குற்றங்களை இப் பொறிமுறை சட்டரீதியாக ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதன் மூலம்  சர்வதேச நீதி விசாரனைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான அடிப்படையை வலுப்படுத்த முடியும்.

முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி  அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்-அமெரிக்கா

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கயை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர் பிரச்சினை தொடர்பில் சீமானுடன் சிறீதரன் கலந்துரையாடல்!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது, நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான திரு.சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் திரு.மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கை வருகிறார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

Posted in Uncategorized

ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை கோரும் ஐநா தலைவர்!

கடனில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகளுக்கு உதவ ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கோரியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் மூன்று அண்டை நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாயண நிதியத்தின் கடனை எதிர்ப்பார்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 பாதிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சேதங்களில் இருந்து மீள்வதற்காக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கடந்த சில மாதங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனை கோரி வருகின்ற நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு இந்தோனேசியாவிடம் இருந்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”நேரடி வரிகளை உயர்த்த வேண்டும் – கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்”

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரியில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே அசர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட அறிக்கை வருமாறு,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்டத்தில், எமது நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவொன்று பங்குபற்றியது. அதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

75க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகவும், சூம் தொழில்நுட்பம் மூலமாகவும் கலந்து கொண்டனர். இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 03 பிரதான நாடுகளுடன், பொதுவான ஒரு இடத்தில் கூடி, சலுகை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இச்சந்திப்பில், பொதுவான மேடை ஒன்றின் அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் சுட்டிக்காட்டியிருந்தன. இந்தியாவும் சீனாவும் இது தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக அறிவித்துள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் பல நாடுகள் கலந்து கொண்டன. குறிப்பாக அமெரிக்க திறைசேரியின் உதவிச் செயலாளர் இங்கு வருகை தந்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து அங்கு எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதால் தான் எமக்கு இவற்றை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் முக்கிய விடயமொன்று இருக்கிறது. 2015ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தபோது ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தில் மிகையிருக்க வேண்டும் என எமக்குக் கூறப்பட்டது. அந்த மிகையை 2017-2018ல் காண்பித்தோம். எனினும், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் அது குறைவடைந்தது. எனினும், அதனால் பாரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஆரம்ப வரவு செலவுத்திட்டத்தில் மிகையிருப்பதால் எமது வருவாயை அதிகரிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.
அந்த சமயம் நமது வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% – 15% வரை இருந்தது. ஆனால் இதை படிப்படியாக 17%-18% ஆக அதிகரிக்க முடியுமென்று நாம் அறிவித்தோம்.
எனினும், 2019 நவம்பர் மாதமளவில் நமது நாட்டில் வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. இதனால் அரசின் வருவாய் 8.5% மாக குறைவடைந்தது. ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டதால் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது.

அந்த ஆண்டு சுமார் 600, 700 பில்லியன் ரூபாய்களை இழக்க நேரிட்டது. அதே நேரத்தில், நாங்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணிகளாக அமைந்தன.

நமது ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு அறிவித்திருந்தது. அவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை என்பதால் நாங்கள் அதற்கு உடன்பட்டிருந்தோம்.

அடுத்து, நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% இல் இருந்து 14.5% ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனை ஒரேயடியாகச் செய்வது சாத்தியமில்லை. 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

முதலில் நமது வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். வருமானம் குறைந்ததால்தான் பணம் அச்சடிக்கப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 70% – 75% வரை உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பணவீக்கம் அதனை விடவும் அதிகரித்துள்ளது.

இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று வருமானத்தை ஈட்டவும் வேண்டும். எனவே, இந்த பேச்சுவார்த்தைகளின் போது புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, ஏற்றுமதி பொருளாதாரம் உள்ள நாடுகளில் வரி செலுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் எமது பிரதான ஏற்றுமதிப் பொருளாதாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் என அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தேயிலை, தேங்காய், இறப்பர் போன்றவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
எனவே, அந்த இலக்கை நோக்கி செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஏற்றுமதி துறை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. அவ்விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் விளக்கமளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.

இரண்டாவது விடயம் தனிநபர் வரி. நாம் பெரும்பாலும் மறைமுகமாகவே வரியைப் பெற்றிருந்தோம். நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போது நமது நேரடி வரி வருமானம் 20 சதவீதம் ஆகும். 80 சதவீதம் மறைமுகமான வரி வருமானமாகப் பெறப்படுகிறது.

எனினும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளது. நேரடி வரி மூலம் பெறப்படும் வருமானம் 20 சதவீதத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்லையேல் எமது இலக்கு வெற்றியளிக்காது என்றும் இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை.

விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன். எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

Posted in Uncategorized

புலம் பெயர்ந்தவர்களிடத்தில் காணப்படும் கலைகள் மீதான ஈடுபாடு இனத்தின் அடிப்படைகளை வலுப்படுத்துகின்றது கனடாவில் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ்

புலம்பெயர் தேசத்தில் கூட இனத்தின் அடையாளங்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் எமது மக்கள் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா ஸ்காபரோ கந்தசாமி ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிறிபின் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், இலங்கையில் இனவாத ரீதியில் நாம் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டமையினால் நாம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறாகப் புலம்பெயந்த நிலையிலும் எமது தலைமுறைகள் கல்வி ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நிபுணத்துவ ரீதியிலும் சிறந்து விளங்குகின்றது. நாங்கள் வசிக்கும் நாடுகளில் பல்கலாசாரத்தன்மையை மதிப்பவர்களாக மிளிர்கின்றோம்.

அடிப்படையில் ஓர் இனத்தின் இருப்பு என்பது அரசியலில் மாத்திரம் கட்டமைக்கப்பட்டதல்ல. இனத்தினுடைய அரசியல், சமூக, பொருளாதார கலாசாரத்தினை ஸ்திரமாகக் கொண்டு வாழ்வதில் தங்கியுள்ளது. இந்த இடத்தில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழக்கூடிய மாணவர்களின் கலை நிகழ்வுகளை இரசிக்கக் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதில் தாய் மொழி மீதும் தாயகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் பற்றை பறை சாற்றியிருந்தீர்கள்.

அடிப்படையில் தாயகத்தில் இருக்கும் நம்வர்கள் கொண்டிருக்கும் கலை ஆற்றல்களை ஒத்ததாக அதன் நீட்சியாக உங்கள் கலை ஆர்வம் உள்ளது. புலம்பெயர்ந்து வாழக்கூடிய புதிய தலைமுறைக்கும் தாயகத்தில் வாழக்கூடிய புதிய தலைமுறையினருக்கும் இடையில் உறவினை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இன்று உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு தூரம் தயாகத்தில் வாழும் தமது உறவினர்களுடன் உறவினைக் கொண்டிருக்கின்றார்களோ அதை வலுப்படுத்தும் முகமாக புலம் பெயர் தேசத்திலேயே பிறந்து வாழக்கூடிய புதிய தலைமுறைகளிடத்தில் ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது கலைகள் இன ஒடுக்கு முறை ரீதியிலும் உலக மயமாக்கத்தின் ஆதிகரித்த தாக்கங்களினாலும் கேள்விக்கு உள்ளாகக் கூடிய ஓர் சூழ்நிலையில் உங்கள் பற்றுறுதி தமிழ்க் கலைகள் என்றும் வாழும் என்ற உத்தரiவாதத்தினைத் தருகின்றது. இவ்வாறு வலிகாணம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சீனர்களின் நடமாட்டத்தைக் குறைத்து இந்திய முதலீட்டாளர்களைப் பயன்படுத்த வேண்டும் – பா.உ. ஜனா

கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தது. அப்படியானவர்களைப் பகைத்க் கொள்ளாமல், வடக்கில் சீனர்கள் நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னுடைய மட்டக்களப்பு மாவட்டம் குறிப்பாக, மீன்பிடி, விவசாயம், கால்நடை போன்றவற்றை கூடுதலாக செய்து அவைகளில் தங்கிவாழும் மாவட்டம். முதலாவதாக அமைச்சர் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். விவசாயத்துக்குத் தேவையான டீசல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விநியோகிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கடந்த போகத்தில் கூட விவசாயிகள் பெருமளவில் நஸ்டமடைந்திருந்தாலும், அந்த அறுவடைக்குத் தேவையான டீசல் கூட சிரமம் இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

நீண்ட நெடிய கடல் பரப்பைக் கொண்ட எங்களது மாவட்டத்தில் மீன்பிடிக்குச் செல்லும் எங்களது மீனவர்கள் மண்ணெண்ணை இல்லாத காரணத்தினால் மிகவும் கஸ்ரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் மண்ணெண்ணை கோட்டாவின் அடிப்படையினால் ஒரு வாரத்தில் இரண்டு நாள், அல்லது மூன்று நாட்களுக்கு மேல் தொழிலைச் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கு மண்ணெண்ணை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யக் கூடியதாக இல்லாத நிலையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், களுவன்கேணி மீன்பிடி சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டாலும் போதுமான அளவு அங்கு விநியோகம் இடம்பெறாமலிருப்பதை அமைச்சர் கவனத்திலெடுத்து சீராக மண்ணெண்ணை விநியோகத்தைச் செய்வதற்கு முயற்சி எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர், விவசாய் சம்பந்தமாக 27-2 கீழான பிரேரணையின் மூலமாகச் சுட்டிக் காட்டியிருந்தார். உண்மையில் கடந்த போகங்களில் எங்களது விவசாயிகள் மிகவும் நஸ்டமடைந்த விவசாயிகளாக, அந்த சிறுபோகத்தில் கிடைத்த விளைச்சல்களை கூட நெல் சந்தைப்படுத்தும் சபை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்குரிய பணம் முழுமையாக வழங்கப்படாமலிருக்கும் அதே வேளை, தற்போது மேலதிகமான நெற்களை அவர்கள் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லையென்று தயங்குகின்றார்கள்.

ஆனால், விவசாயிகள் தங்களது நெல்லை விற்றால்தான் விவசாயத்தை தங்களினால் செய்ய முடியும். கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் எமது மட்டக்களப்பு அமைச்சர் நசீர் அகமட் உட்பட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட விவசாய அமைச்சில் அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், மட்டக்களப்பிலிருந்து வருகைதந்த விவசாயிகளுடன் யூரியா விநியோகம் தொடர்பில் பேசியிருந்தோம். அதன்போது 2500 மெக்ரிக்தொன் தருவதாக கூறியிருந்தார்கள், ஆனால் விவசாயிகள் 5000 மெக்றிக்தொன் கோரியிருந்தார்கள். இடையில் 4000 மெக்றிக்தொன் உடனடியாக விநியோகிப்பதாக ஒரு உடன்பாடு வந்தது. ஆனால், இதுவரை 1840 மெக்றிக்தொன் மட்டக்களப்பு வந்திருக்கிறது. அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் முதல் தடவை பாவிப்பதற்குரிய யூரியா 1943 மெக்றிக் தொன். ஆனால், 1840 மெக்றிக் தொன் தான் இதுவரை கிடைத்திருக்கிறது. 70 வீதம் யூரியாவும், 30 வீதம் சேதனப்பசளையும் வயல்களுக்கு இடவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் போது அந்த 70 வீதமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9785 மெக்றிக்தொன் தேவையாக இருக்கிறது.

ஆனால் காலையில் விவசாய இராஜாங்க அமைச்சர் கூறும் போது ஒருலட்சத்து 20 ஆயிரம் மெக்றிக் தொன் யூரியா நவம்பர் மற்றும் டிசம்பரில் வர இருப்பதாகக் கூறுகின்றார். ஆனால் நான் வேண்டிக் கொள்வது மட்டக்களப்பு, அம்பாரை – கிழக்கு விவசாயிகள் பொலநறுவை, அனுராதபுரம் குருநாகல் விசாயிகளை விட ஒரு மாதம் முன்னதாக விதைப்பைத் தொடங்குவதனால் டிசம்பரில் வர இருக்கும் யூரியா அவர்களுக்குப் பிரயோசனமற்றதாக இருக்கும். எனவே நவம்பரில் வர இருக்கும் யூரியாவில் தேவையான யூரியாவை மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே வேளையில் சேதனப் பசளையைப் பொறுத்தமட்டில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்களுக்கு சேதனப் பசளை வேண்டாமென்று கூறுகின்றார்கள். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதற்குரிய நிவாரணப்பணத்தைக் கொடுப்பனவாக வழங்குமாறு கோருகின்றார்கள். அதே போல நெற்களுக்கு நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்ற வேளையில் அதற்கான உள்ளீடான யூரியாவுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது எங்களுடைய அவா.

அமைச்சர் அவர்கள் கூறும் போதும் கூறியிருந்தார். திருகோணமலையிலிருக்கும் எண்ணைத் தாங்கிகளை ஐந்து வருடத்துக்கு முன்னரே இந்தியாவுக்குக் கொடுத்திருந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் எண்ணைத் தட்டுப்பாடு இருந்திருக்காது என்று ஜனாதிபதி அவர்கள் திருகோணமலைக்குச் செல்லும் போதும் கூறியிருந்தார்கள்.
ஆனால் வடக்கில் இந்தியாவுக்கெதிராக சீனர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். ஊர்காவல் துறையில் பருத்தித் தீவு என்னும் இடத்தில் சட்ட விரோதமாக கடலட்டைப் பண்ணை சீனர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக வடக்கு மீனவர் சங்கத் தலைவர் கூறியிருக்கின்றார். இது இந்தியாவுக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டுப் புலனாய்வுத் துறையினர் கூறியிருக்கின்றனர். சீனர்கள் செய்யும் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள். கடந்த வாரம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தவானந்தா அவர்கள் இந்திய தமிழ் நாட்டு முதலீட்டாளர்களை அழைத்துவந்து அங்கு கடலட்டைப் பண்ணைகளைச் செய்ய முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை செய்திருந்தார். ஆனால் தற்போது அனுமதியில்லாமல் சீனர்கள் அங்கு நிரம்பி வழிவதாகவும், புதிய புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார்கள். கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தார்கள். அப்படியானவர்களைப் பகைத்க் கொள்ளாமல், சீனர்கள் அங்கு நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடன் வழங்கிய நாடுகளிடம் இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை

கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கை பெருமளவிலான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுல்ளதால் அது பற்றியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் சீன நிதி அமைச்சருடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய பிரதான மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், இந்த பேச்சுவார்த்தைகளை கடந்த 15ம் திகதி ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு கருத்துரைத்த போதே இந்த விடயங்களை தெளிவூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வறுமை-இறைச்சி மீன்களை தவிர்க்கும் குடும்பங்கள்

இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏனைய பொருட்களின் விலை 70 வீதத்தாலும், உயர்ந்துள்ளன.

50 வீதமான குடும்பங்கள் தமது உணவில் இறைச்சி மற்றும் மீன்களை கைவிட்டுள்ளன.

11 வீதமானோர் புரத உணவை முற்றிலும் தவிர்த்துள்ளனர். இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள். கடற்றொழில் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized