இலங்கை – இந்தியா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது – ஜனாதிபதி ரணில்

இலங்கை மற்றும் இந்தியா என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒரே குணாம்சங்களைக் கொண்ட நாடுகளாகும். எனவே இவ்விரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி , அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுவது பொதுவான குணாம்சங்களாகும். இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை.

வரலாறு இந்தியாவையும் இலங்கையையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடான இலங்கை, உலக வல்லரசாக முன்னேறி வருகின்ற இந்தியாவின் வகிபாகத்தை அவதானித்துக் கொண்டிருக்கிறது.

எனவே அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் திறன் அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன. இந்தியா, இராமனை மாவீரனாகக் கருதும் நிலையில் , இலங்கை இராமன், இராவணன் இருவரையும் மாவீரர்களாகக் கருதுகிறது என்றார்.

கடந்த 2018 ஜனவரி 9 ஆம் திகதி, புதுடில்லியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து இரண்டு டோனியர் ரக கடல்சார் கண்காணிப்பு விமானங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பின்னர், இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது. புதிய விமானம் தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

இந்த முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில், புதிய டோனியர் 228 கடல்சார் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு மற்றொரு புதிய விமானத்தை இந்தியா வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கியஸ்தர்கள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் ரோரி முங்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய இயக்குனர் டேவிட் வில்லியம் மெக்லாக்லான் ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்

ரோரி முங்கோவன் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை வரவுள்ளார். David William McLachlan நாளை மறுதினம் செவ்வாய்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரை ஐ.நா அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக ஜயநாத் கொலம்பகே

ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் ஒருவரை நியமிக்க உயர் பதவிகள் பற்றிய குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக அட்மிரல் (பேராசிரியர்)ஜயநாத் கொலம்பகேவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமாரவின் நியமனத்திற்கும், வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.சி.எம் ஹேரத்தின் நியமனத்திற்கும்,நிதி,பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளராக எம்.சிறிவர்தனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளராக எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த,தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சின் செயலாளராக ஆர்.பி.ஏ. விமலவீர ஆகியோரின் நியமினத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்

சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

நாளை(16) முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.

Posted in Uncategorized

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

Posted in Uncategorized

75வது சுதந்திர பவள விழாவை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கு

இன்றைை ஆவணி 15 வது நாளில் இந்திய மக்கள் கொண்டாடும் 75 வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில்உங்களுக்கும் இந்திய மக்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் எனது மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் மிகவும் உற்சாகத்துடனும் பெருமையுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

மொழி, கலாசாரம், இனம், மதம் மற்றும் பலவற்றில் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் ஒரே தேசமாக ஒரு நாடு எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியா இன்றுவரை “பெரிய ஜனநாயகம்” என்று கருதப்படுகிறது.

இந்திய மக்கள் இந்த நாளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கொண்டாடுகிறார்கள். இந்த மகத்தான வேளையில், ஒற்றுமை மற்றும் சிந்தனை எதிர்காலத்திலும் மேலும் தொடர தங்களுக்கும் இந்திய மக்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்புடன்

செல்வம் அடைக்கலநாதன் – பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ‘போர் பயிற்சி ’   – கடற்படை விளக்கம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) தைமூர் உடனான திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சி தொடர்பான சில தகவல்களுக்குப் பதிலளித்த இலங்கை கடற்படையினர், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் கடற்படைக் கப்பல்கள் நாட்டை விட்டுப் புறப்படும்போது வழக்கமான செயற்பாடாக பயிற்சிகளை மேற்கொள்வது சம்பிரதாயபூர்வமானது என தெரிவித்துள்ளது.

134 மீ. நீளமுள்ள PNS தைமூர் ஆகஸ்ட் 12 அன்று ஒரு உத்தியோகபூர்வமான பயணமாக கொழும்பு வந்தடைந்தது. இந்த கப்பல் ஆகஸ்ட் 15 வரை நாட்டில் இருக்கும் , மேலும் இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், பிஎன்எஸ் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் ‘போர் விளையாட்டு’ பற்றி பரப்பப்படும் சில ஊடகச் செய்திகள் தவறானவை” என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு கடற்படைகளுடன் செயல்படும் திறன், கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

”இந்தியாவுக்கு இலங்கை நம்பிக்கை துரோகமிழைத்துள்ளது”: ராமதாஸ் குற்றச்சாட்டு!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இலங்கை இந்தியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.´´ என்று தெரிவித்துள்ளார்.

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள்”: ஜனாதிபதியிடம் பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்தால் மட்டுமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய நிதி கையளிக்கப்பட்டது .

இதன்போது உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்வோம். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் சதி இருக்கலாம் என அறியப்படுகிறது. கூறியுள்ளது. இது குறித்த உண்மையை வெளிக்கொணர தற்போதைய ஜனாதிபதி உழைக்க வேண்டும்.

மேலும் 2019 ஏப்ரல் 21க்கு முன்னர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானைக் கைது செய்யவிருந்த பொலிஸ் அதிகாரியைத் தடுத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது அவசியமாகும். சஹ்ரானை கைது செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அவரும் சஹரானைப் போன்ற குற்றத்தை செய்துள்ளார். நாங்கள் யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை, ஆனால் உண்மையை மட்டுமே அறிய விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்

2500 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய வங்கி யோசனை!

இலங்கையில் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதியும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டியலில் 2500க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Posted in Uncategorized