இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கனிமொழியுடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை  தூதுவர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி  மக்களவை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை புது தில்லியில் வைத்து சந்தித்துள்ளதாக, புது டில்லியிலுள்ள, இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், கடந்த  வியாழக்கிழமை (04) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது,

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக தமிழ் நாடு மக்கள் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்கு மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான மிக நெருக்கமான இன, மத, கலாச்சார தொடர்புகள் குறித்து கருத்துக்களை  இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மிராக் ரஹீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு மாறாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை தற்காலிகமாக இரகசிய காவலில் வைத்திருப்பதற்கான நிர்வாக நடைமுறையின் சட்டபூர்வ தன்மையை மனுதார்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபர், நீதி அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

தமது அடையாளத்தை காட்டாத, காவல்துறையினருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்படாத வாகனங்களில் போராட்டக்காரர்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன் சில நேரங்களில் நீதிவான் ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்படாமல் பல மணி நேரம் அடையாளம் தெரியாத இடங்களில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதியை சந்திக்கிறது ஜே.வி.பி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் பல்வேறு கட்சிகள் கடந்த வாரங்களில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

இந்நிலையில் தாமும் நாளைய தினத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சர்வகட்சி தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என அந்தக் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டனர்!

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதனுடன் தெதாடர்புடைய சந்தேக நபர்கள் பலரின் படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591559, 0718 085585, 0112 2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

நாளைய போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

நாளைய தினம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாளைய தினம் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் பல அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.

இந்நிலையில் பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய போது, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், போராட்டக்காரர்கள் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் பொலிஸார் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் பெறுவது குறித்து சஜித் பிரேமதாஸ கருத்து

ஜனநாயகம் தார்மீகத்தை மறந்து நாகரீகமற்ற முறையில் முடிவுகளை எடுத்திருந்தால் இன்று தான் ஜனாதிபதியாகியிருக்க முடியும் எனவும், ஆனால் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக ஆகாமல்,மக்களின் விருப்பின்றி எந்தவொரு பதவிகளையும் எடுப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்டு அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் எனவும், இதில் அமைச்சுப் பதவிகளை வகிக்காமல் பாராளுமன்றக் குழு முறையின் ஊடாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என்றார்.

அரநாயக்க தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று மக்கள் மிகுந்த துக்கத்திலும் வேதனையில் உள்ளனர் எனவும், 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எத்தகைய வரிசைகளும் இருக்கவில்லை எனவும், குறைந்த பணவீக்கத்துடன் சுயமரியாதையுடன் வாழ்ந்ததாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்‌ஷ பரம்பரையின் மொட்டுக் குடும்ப ஆட்சியின் கவனக்குறைவான நிர்வாகத்தால்,தற்போது உலகம் முழுவதும் சென்று டொலர் தேடி பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே தற்போதைய அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரப்பித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தொழிற்சங்க தலைவர்களைக் கூட வேட்டையாடுகின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க   கூட ஒருமுறை பாராளுமன்றத்தில் ஜோசப் ஸ்டாலினின் கைதும் ஜிஎஸ்பி பிளஸ் இழப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினாலும்,அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் எனவும்,இது முறையற்ற செயல் எனவும் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கொலைகள் போலவே வீடுகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்ததாகவும், இத்தகைய செயல்களையும் போலவே அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மிலேச்சத்தனத்தையும் தான் நிராகரிப்பதாகவும், அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை மீற முடியாது என்றார்.

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Posted in Uncategorized

இந்திய தூதரகம் எரிபொருள் வழங்கி உதவ வேண்டுமென்று அ.அன்னராசா கோரிக்கை

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் என அண்ணளவாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த பாதிப்பு கடற்றொழில் சமூகத்தை பட்டினியை நோக்கி தள்ளுகின்றது.

கடந்த 60 நாட்களுக்கு மேல் எமக்குரிய மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. நூற்றுக்கு எண்பது வீதமான கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மண்ணெண்ணெய் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று சொல்லி ஏக்கத்தோடு இரண்டு மாதங்களை கடந்து விட்டோம். மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. எங்கள் சமூகம் பட்டினியை நோக்கி நகர்கின்றது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை இன்றளவில் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் கூட கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த வாரம் 6600 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதை ஆறு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு பகிர்ந்தளித்திருக்கின்றோம். நூற்றுக்கணக்கான சங்கங்கள் எரிபொருளின்மையால் தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதி, எரிசக்தி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் விரைவாக வழங்க நடவடிக்கை வேண்டும்

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற நல்லூர் மகோற்சவம் இடம்பெற்று வருவதனால் மீன் உண்பவர்களின் தேவை குறைந்து இருக்கின்றது. அதனால் எங்கள் பாதிப்பு வெளித்தெரியவில்லை.அதனை தாண்டி நாங்களே உணவை உண்ண முடியாத நிலையில் இருக்கின்றோம். எங்கள் பிரச்சினை தொடர்பான விடங்களை மாவட்ட நிர்வாகம் உரிய தரப்புகளுக்கு அனுப்பவேண்டும்.

நாங்கள் யாரிடம் நிவாரணம் கேட்கவில்லை. உதவி கேட்கவில்லை மண்ணெண்ணெய் தந்தால் போதும் கடற்றொழில் சமூகம் அதற்கான பணத்தை வழங்கும். இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவிடமும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடமும் நான் ஒரு பகிரங்க கோரிக்கையை விடுக்கின்றேன்.

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோம். வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீது கருணை காட்டி இந்தியத் தூதரகம் விரைந்து செயற்பட வேண்டும்- என்றார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க இடையூறு – உண்மையை சொல்கிறார் மைத்திரி

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் செயற்பாடுகள் தடைப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேள்வி – சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான ஏற்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்– “பேச்சுவார்த்தைக்கு வரும்படி எங்களைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் சென்றோம். இப்போது அதைச் செய்வதற்கு அரசாங்கமே பொறுப்பு. ஆனால் இப்போது ஒரு தடை இருப்பதாக நான் நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் உள்ள பலருக்கு இது பிடிக்கும், சிலருக்கு சர்வகட்சி ஆட்சி பிடிக்கவில்லை.

கேள்வி – இந்த சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு குழு இழுத்தடிக்கிறதா?

பதில்– “அப்படித்தான் தெரிகிறது”

கேள்வி – இவர்கள் மொட்டுவில் உள்ளவர்களா?

பதில்– யாருக்கும் தெரியாது எனவே நீங்கள் அதை கண்டுபிடிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கைது செய்யப்பட்டுள்ள “ஜோசப் ஸ்டாலின்” உட்பட அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும், இந்த இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவருவம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி அக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையிலேயே கஜேந்திரகுமார் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமராக இருந்த போது ரணில் கூறியதற்கும், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் காலி முகத்திடல் போராட்டத்தை நசுக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.