அமைதியான போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை, ஆயுதபடையினரை பயன்படுத்த கூடாது-BASL வலியுறுத்தல்

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை   ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை நேற்று (ஜூன் 29) காலி முகத்திடல் பகுதியில் இருந்து காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை BASL வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “காலி  முகத்திடல் பொது பகுதி என்பதனால்  அங்கு கூடும்  போராட்டக்காரர்களை கலைக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை. மக்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை   தொடர்ந்து நினைவூட்டுகிறோம். கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமை உட்பட எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நசுக்குவது நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாகாது, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சொல்லொணா இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை-மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது.

7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளது.

Posted in Uncategorized

யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது. யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இன்று எரிபொருள், பசளை, உணவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்றைய போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையு்ம, கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இன்று 1932 நாட்களாக தீர்வின்றி போராடி வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய்மார் அன்றாட உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடராது எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.எமது பிள்ளைகளை காணாமல் செய்த கோட்டாவின் அரசு இன்று எமக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் தலையீடு செய்து எம்மையும், எமது பிள்ளைகளையும் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கான சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடி – வவுனியாவில் இருந்து நான்கு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸ் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.(

Posted in Uncategorized

”பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க உதவுவோம்”: அமெரிக்க தூதுவர்!

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில்  ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்  இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டு வருமென நம்புவதாகவும்  ஜூலி சன்ங் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு

தூதரக சேவைகளை வழங்குவது இன்று முதல் ஜூலை 10 வரை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தூதரகப் பிரிவு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இந்த நாட்களில் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு

IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 10 பேர் கொண்ட IMF குழு கடந்த ஜூன் 20 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்தது.

பிணைமுறிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக IMF பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்புகளுடன் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இலங்கை உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறிய 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் குழுவில் உள்ளனர்.

இன்று காலை 8:40 மணிக்கு விமானத்தில் கொக்கோஸ் தீவில் இருந்து இலங்கையர்கள் குழு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.விமானத்தில் 100 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.

குறித்த நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளால் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து 46 இலங்கையர்களும் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல! – சபா குகதாஸ்

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுiகிலேயே இதனை அழவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் அமைப்புத் திருத்தம் என்பது மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள மேற் கொள்ளப்படுகிறதே தவிர மக்களின் அல்லது நாட்டின் நலன்கள் கருதியவை அல்ல இதற்கு கடந்தகால திருத்தங்கள் சிறந்த உதாரணங்களாகும்.

1978 ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது இதன்ஆரம்பப் பிரசவமே சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மக்களின் கருத்துக்களை உள்வாங்காது உருவாக்கப்பட்டது இந்த அரசியலமைப்பு 44 ஆண்டுகளில் 21 திருத்தத்தை கடந்து செல்கின்றது.

பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் ஏகபோக சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் ஊழல்ச் செயற்பாடுகளை மேற் கொள்வதற்காகவும் அவற்றில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காகவும் குடும்ப ஆட்சியை மேற் கொள்வதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை மாறி மாறி வந்த ஆட்சியில் அரங்கேற்றினார்கள் இதுதான் உண்மை நிதர்சனம்.

இதுவரை வந்த திருத்தங்களால் நாடு தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை மட்டுமல்ல நாட்டின் அத்தனை அபிவிருத்திக் குறிகாட்டிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன நாடு தொடர்ந்தும் அமைதியற்ற நவ காலணித்துவத்துள் விழுங்கப்பட்டு வருகின்றது.

19 திருத்தம் ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்களை பகிர்ந்தது ஆனால் ஐனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு கட்சி சார்ந்தவர்களாக இருந்தமையால் இருவரும் மாறி மாறி அதிகாரங்களை பயன்படுத்தி முரண்பட ஆட்சி சீரழிந்து ஏப்ரல் 21 குண்டு வெடித்ததுடன் பெரும் ஊழல்களும் அறுவடையாகியது.

20 திருத்தம் அபரி மிதமான அதிகாரங்களை ஐனாதிபதிக்கு கொடுத்தது பாராளுமன்றத்தை கபினட்ரை கணக்கில் எடுக்காது நடத்திய காட்டுத் தர்பார் இரண்டரை ஆண்டில் பெற்றல் இல்லாமல் டோக்கன் கொடுக்கும் கொடுமைக்கு நாடு வங்குறோத்தாகியது.

21 திருத்தமும் ஐனாதிபதியிடம் இருந்து அதிகாரங்களை பிரதமர் மற்றும் ஏனைய தரப்பும் பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாடகமே தவிர நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். மீண்டும் நல்லாட்சியின் கயிறு இழுத்தல் போட்டிதான்.

ஆகவே அரசியலமைப்பு திருத்தங்களால் இலங்கை மக்களுக்கு விமோசனம் கிடைக்க வாய்ப்பு இல்லை மாறாக இந்த நாட்டில் உள்ள சகல இனங்களையும் மதிக்கின்ற சமஷ்டி அடிப்படையிலான பண்புகளைக் கொண்ட அதிகாரப் பகிர்வினைக் கொண்ட புதிய அரசியலமைப்பு மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி அமைக்கப்படும் போதே நாடு முன்னோக்கி பயணிக்கவும் நிரந்தர அமைதி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

Posted in Uncategorized

சமஷ்டி அரசியல் தீர்வே தேவை; ஜப்பான் தூதுவரிடம் வலியுறுத்தல்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்றது.

இந்நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.